நித்ய சைதன்யா கவிதைகள்

 

1.

பறவை  என்னில் இருந்து பறந்து சென்றது

நான்

மேலும்  உள்ளீடற்றவன் ஆனேன்

பரு வடிவ உடல் காற்றில் அலைவுற்றது,

அல்லல் பட்டது.

அஞ்சி   நடுங்கியது.

அப்பறவை வாழ்ந்திருந்த பாதச்சுவடுகள்

கரைந்து  காணாமல் ஆகின்றன.

இன்னும்  கொஞ்சக்காலம் பறந்திருக்கலாம்.

.

மண்ணில் அலுத்துப் போவதன்  அர்த்தமின்மையே  பறத்தல்.

தன்னை  நிகழ்த்திக்  கொள்ளுதலே பறத்தல்.

பரிமாணங்களை கலைத்தடுக்குதலே பறத்தல் .

காலமென்னும் நதியில் நிலைத்திருத்தலே பறத்தல்.

 

விதைக்குள்  கேட்கிறது சலிப்பின் முணுமுணுப்பு.

விதைக்குள் கேட்கிறது விடுதலைக்கான அறைகூவல்,

விதைக்குள் கேட்கிறது மண்மீது பற்றிப்படர விதிக்கப்பட்ட

ஊழ்வினையின் பெருங்குரல்,

 

விதை  சன்னலாக  திறக்கட்டும்,

விதை  ஒரு வாழ்த்தாக  அமையட்டும்,

விதை  ஒலியடிங்கி  மோனத்தவம் புரியட்டும்,

விதை  கிளம்பிச்  சென்ற  பறவை

மீண்டும் வந்தமர  ஒருவரமாக மாறட்டும்.

 

 

நிசிகள் விடாயற்றுப் போயின.

நிசிகள் துல்லியம் கூடிய மெல்லொலிகளின்  சுமையென்றாகிப் போயின.

நிசிகள் புணர்ந்து களைத்து

ஆழந்த துயிலுக்கு அழைத்துச் செல்லும் உற்சவங்கள்அற்றுப்போயின.     நிசிகள் எண்ணி எண்ணி

மின்விசிறியின் இறக்கைகளை வெறிக்கும் விழிகள் ஆயின.

 

நிசி  முன்பு அருவியாக இருந்தது.

நிசி  முன்பு பெருக்கெடுத்தோடும் காட்டாறாக இருந்தது.

நிசி  பூரித்து ஒளிரும் வளரிளம் பெண்ணின் உடலாக இருந்தது.

நிசி  இருள் உறையும் அகாலமாக இருந்தது.

நிசியில்  அன்றெல்லாம் நீயும் இருந்தாய்.

2.

கனவான்களே  உங்களுக்கு ஒருவாசம் இருக்கிறது.

உங்களுக்கென்று  ஒரு ருசி இருக்கிறது.

ஞாபக  அடுக்குகளில்  நிலைக்கச் செய்யும் சொற்கள் இருக்கின்றன.  கண்ணாடியில்  பிரதிபலிப்பது இடவலமாக  திரிபடைந்த  உங்கள் பிம்பம். பிம்பங்களை  நீங்கள்  உற்பத்தி செய்கிறீர்கள்.

பிம்பங்களை  நீங்கள்  காதலுற்று  கலவி கொள்ளுகிறீர்கள்.

பிம்பங்களின் பாதச்சுவடுகளை

உங்களின் எழுதப்பட்ட வரலாறு என்றெண்ணி பெருமை கொள்கிறீர்கள் .

பிம்பங்களுக்கு மலர்களின் ஆயுட்காலம்.

ஒரு மாலையும் ஒரு யாமமும் அவற்றை அர்த்தமிழக்கச் செய்கின்றன.

கூதிர் காலத்தில் உங்கள் பிம்பங்களை தணுமை நடுங்கச் செய்கிறது.

பிம்பங்கள்  நீங்கள் கண்ட அதிகாலைக் கனவு.

3.

நிலம்  இருக்கிறது. மலையாக  திரண்டிருக்கிறது. காற்று  வந்து மோதுகிறது. நெகிழ்ந்து  மணல் என்றாகிறது.  அண்மை  நீங்கி  சேய்மையில் விதைகளை கண்டறிகிறது .பச்சை துளிர்க்கிறது. வித்திலைகள்  வானத்தை அகலக்கண் கொண்டு  லயிக்கின்றன. அடர்வனத்தை  காலம் வெளிப்படுத்துகிறது. ஏதுமற்ற வெளியில்  பறவைகளின் அரவம். கிளைகள்தோறும் அ ணில்கள் விரைந்தோடுகின்றன. பறவைகளின் கூரலகுகள் கனித்திரட்சியின் சதைக்குள் லயித்துப்போகின்றன. மண்  இருக்கிறது. மணல்  என்றாகிறது. மலை கரைந்து பொட்டல் காடு எழுகிறது. சினந்து  எழும் சூரியன் வரவேற்க யாருமற்று விரைந்து  ஓடுகிறான்.

 

இடையனின்  துயிலில்  ஓநாய்கள்  வந்து போகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *