நித்ய சைதன்யா கவிதைகள்

 

1.

சிறைகளுக்குள் அகப்பட்டு

உறைந்து நிற்கும் போதம்

தடுப்பரண்களை மீறி

வந்து சேர்கின்றவை

என்னை வளர்க்கிறது

என் தேடலின் ஊடாக

பெற்றுக்கொண்டவற்றின் மீது

மயக்கங்களின் படுதாக்கள்

பதறும் தீபச்சுடரை விழுங்க விழையும்

மனமாயை

படகினை கரையில் கட்டி

தரை ஏறி  விடுகிறேன்

நதியின் இழுவைக்கு

படகின் எதிர்வினை

அச்சமூட்டுகிறது

கடந்து கரையேறிவிட்டேனா

குழப்பமும் தயக்கமும்

உன் மடியில் துயிலும் காலத்தை

மீட்டுத்தருவாயா

2.

பறவையின் பின்னே விரிந்த வெளி

புள்ளியாக முன்தோன்றி

பறவையாக மரக்கிளையில் வந்தமர்கிறது

என் இன்றில் அது இல்லை

என் வரையறைகள் அதற்கு ஒரு பொருட்டன்று

கூர் அலகினை கிளைத் தண்டில் உரசிக்கொள்கிறது

றெக்கைகளை விரைந்து உதறி ஒலி எழுப்புகிறது

பறந்து செல்ல தடைகள் எதுவுமில்லை

ஒட்டுமொத்த உலகத்தையும் பறவையின் சிறகுகள் அறியும்

பறவை என்னைப் பார்க்கிறது

பறத்தல் அதன் சுதந்திரம் என நான் எண்ணிக்கொண்டிருப்பதைப் போல

உழன்று திரிந்து மட்கி மண்ணாகும் பிறவி என

அது எண்ணக் கூடுந்தானே

பழத்தின் ரசத்தை உருவாக்கும் வித்தையை

கற்றுக்கொண்டிருக்கிறேன்

பழரசம் காலத்தை கண்ணடித்துப் பார்த்துச் சிரிக்கும்

வயதாகி எங்கோ விழுந்து மறைய நேரிடலாம்

என் பழரசத்தின் ஒரு துளியை அன்று உனக்கு அளிப்பேன்

3.

கடலின் அலை அல்ல

அலையின் துமி நான்

எனக்குள்ளும் கடல் இருக்கிறது

என்னைப் பிரித்து காற்றில் அனுப்பும் வித்தையை

சதா நிகழ்த்தும் மாயக் கரத்தை

நான் அறிவேன்

கடலென நான் சலித்துக்கிடந்ததை

அலையென புது உற்சாகம் பீறிட

பாசிப்பாறைகளில் மோதிச் சிதறியதை

அவனின் விளையாட்டு என்பேன்

துமியென காற்றில் ஒரு கணம் இருந்துவிட்டு

இதோ கீழ்நோக்கி விழுகிறேன்

மேலே எழுந்து பறந்தபோது

கண்டு கொண்டதை

மீண்டும் கீழே இருந்து

கற்பனை செய்வேன்

அதே கடல்

அதே அலை

அதே பாறை

அதே துமி

என்றுதான் சொல்ல வாய்க்கிறது

இக்கணம் என்பது நிகழின் ரூபம்

மாற்றங்களை ரத்துசெய்யும்சொற்களால்

குறைபட்ட அனுபவங்களைப் பகிர நேரிடுகிறது

இன்னும் எத்தனைக் காலத்திற்கு

அவன் இருக்கிறானா என்று ஐயங்கொள்வேன் நான்

4.

அனுமதிக்கப்பட்டவைகளால் ஆனது எனது ஞானம்

ஒலிகளின் கார்வை சில கணக்குகளில் உள்ளது

பார்வையின் திறனும் அளந்து தரப்பட்டுள்ளது

என் அறிதல்கள் மிகவும் கட்டுப்பட்டவை

இக்கட்டுப்பாடுகள் எனக்கு ஏன் விதிக்கப்பட்டது

வானம் என்பதை ஒட்டுமொத்த உத்தேசமாகவே பார்க்க நேரிடுகிறது

என்னை வந்தடையும் ஒளிக்கு பயணகாலம் பல ஒளியாண்டுகள்

என் முன்னே தோன்றும் நட்சத்திரத்திற்கும் எனக்கும் இடையில் உள்ள தொலைவு

மலைக்க வைக்கிறது

எத்தனை உறுதியாக

என் நம்பிக்கைகளை

உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்

அனுமதிக்கப்பட்டவைகளின் அவதானிப்புகள்

இப்பிரபஞ்சத்தை விளக்கப் போதுமா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *