நித்ய சைதன்யா கவிதைகள்

 

1.

இழப்பதற்கு எதுவும் இல்லை என்று அறிந்த பின்னும்

சதா நடுக்கமுறும் மனம்

எப்படி பார்த்தாலும்

இப்பிறவி ஒரு வாய்ப்பு என்பதற்கு மேல்

வருத்தம் கொள்ள ஒன்றுமில்லை

கடவுள் கருணை மிகுந்தவர்

இதுவரை அள்ளித் தந்திருக்கிறார்

இனியும் அவரிடம் அதிகம் எதிர்பார்க்கலாம்

அறிதலின் பொருட்டே

இவ்வளவும்

அறிந்ததில் இருந்து விடுதலை கிட்டும்

அறிந்ததை அறியாமல் ஆக்கும் வித்தையும் கிட்டும்

எண்ணி வருந்தி

உரம்கொள்ளும் எண்ணங்களும் அபத்தமே

துயர்கப்ப முகம் இறுக்கம் கொள்ளவும் வேண்டாம்

கண்களில் நீர்பூக்க உல்லாசம் கொள்ளவும் வேண்டாம்

வாழ்வென்பது வெறும் வாய்ப்பு

பலமுறை வழங்கப்பட்டதுதான்

இன்னும் வழங்கப்பட்டுக்கொண்ருப்பதுதான்

இங்குள்ளவை அனைத்தும்

செப்புச்சாமான்களை ஒத்தவையே

 

2.

என்னிடம் கருணை இல்லை

உள்ளம் நெகிழும் உன்மத்த தருணங்கள் இல்லை

இயற்கையின் முன் கண்ணீர் வடிக்கும் பாவனைகள் இல்லை

குழந்தையின் கண்களை நான் பொருட்படுத்துவதும் இல்லை

புலரியோ அந்தியோ நிசியோ

என்னுடல் ஓர் இயந்திரம் அதன் விதிகளைப் பாவிக்கிறேன்

உற்சாகம் தருவது

இவ்வாழ்வில் அதிகம் அக்கறைகொள்ள எதுவுமில்லை என்ற எண்ணம்தான்

கட்டிக்காத்து விட்டுச் செல்வதெல்லாம்

காற்றில் கரைந்தே போகும்

மாயை என நிகழ்காலத்தில் ஒன்றும் செய்யாமல் ஓய்ந்திருப்பதும் இல்லை

உடலில் உணவு சென்று ஆற்றலாக தேங்கி கிடைக்கிறது

உணவிற்கும் இன்னபிற வசதிகளுக்கும்

ஏதேனும்  செய்து ஆக வேண்டி உள்ளது

உடல் தளையும் இல்லை மீட்பின் வழியும் அன்று

என்னை இயற்கையில் காண்கிறேன்

கடலை அறியும் அவசியம் மீன்களுக்கு இல்லை என்பதைப்போல

இந்த பிரபஞ்சத்தை அறிந்துகொள்வதும்

எனக்கு அநாவசியமே

நான் அறிந்த மொழிகளும்

மொழிகளின் வழியே பெற்றுக்கொண்ட சிந்தனைகளும்

என் மூளையின் சிறுபகுதியை மட்டுமே எடுத்துக்கொண்டன

பெரும்பகுதி வெற்றிடத்தை பாதுகாத்து வைத்திருக்கிறேன்

வெற்றிடம் என்பதும் இயற்கையின் ஒரு இருப்புநிலை

இன்மையின் மகத்துவம் வெற்றிடம்

 

3.

நான் சிறுவனாக இருந்தபோது

இந்த உலகம் அதிசயங்களால் ததும்பி இருந்தது

அப்பாவின் தோளின் மீதேறி

சதா நான் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும்

நாளடைவில் என்னிடமிருந்து நீங்கின

கல்வி கற்று பணியில்சேர்ந்து

கலவியும் களவும்கொண்டு

வாழ்வின் சாத்தியங்களில் உருண்டுபுரண்டு

முடிவாக நான் நம்புவது

இந்த சிறிய வாழ்வில்

நமக்கு அளிக்கப்பட்டுள்ளவை அனைத்தும் மிகச்சிறியவை என்பதே

இந்த பிரபஞ்சமும்

உடுமண்டலங்களும்

எண்ணித் தொலையாத எண்ணவோட்டங்களும்

மிக மிக சிறியவையே

சிறியன அளிக்கும் அறிதல்களும் சிறியன.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *