ரவி அல்லது கவிதைகள்:

பார்க்கலாமெனும் 

தள்ளி வைப்பு.

எத்தனையோ

தடங்களை

இந்த மழை

கழுவிக் காணமலாக்குகிறது

யுக தசாப்தங்களாக.

 

என்னை முன்னிருந்தும்

பிரயத்தனங்கள்

யாவும்

வலுவிழந்து

உதிரும் போது

என் அடையாளம்

ஒளிரத் தொடங்குகிறது.

நானாகவும்

நானில்லை என்பதாகவும்.

 

இப்பொழுதாவது

நனைந்துவிடத்தான்

எழு முயல்கிறேன்.

எனக்கு முன்

ஏன்

இத்தனை தடுப்புகள்

திறக்கும் சாத்தியத்திலும்

திறக்க முடியாத சோர்விலும்.

 

என் கூரையின்

மேலான பொழிதலில்

நனையாமல்

பாதுகாப்பெனும்

காரணமொன்றில்

கண்ணயற நினைக்கிறேன்

எப்பொழுதும்.

********

எதுக்களிக்காத 

ஏழாவது சுவை.

 

வார்த்தைகளில்

வழுக்கி விழுகிறவர்களை

பற்றிய

வாஞ்சைகள் நின்றபாடில்லை.

இந்நேர 

அவதானிப்பில்

இரவு

தன்னை மாற்றி

பாகலாக உருமாறும் 

வெளிச்சம் 

அடிவானத்தை அடையாளமாக்க

துவங்கிவிட்டது.

அந்த குருவிகளின் கீச்சல்கள் எப்பொழுதும் நிராகரிப்பதாகவே மனம் திரும்பிக் கிடக்கிறது.

தூறலில் நனைந்த இலைகளில் சொட்டும் நீரின் ஒலி ஏதோ ராகத்தை தேட அழைக்கிறது.

யாவும் 

ஓய்ந்த தருணத்தில் 

நான் காணமல் போகும் வேலையில்

சிறகசைத்து 

உழுப்பிவிட்ட பறவையின் மேல் வருத்தமில்லை.

வெளி நாய்கள் கும்பலாக ஓடுவதில் ஒன்றிரண்டு கத்தத்தான் செய்கிறது.

போதுமடா. ..

உங்கள் வார்த்தைகளுடலான என் புலக்கம்.

இனியொரு வார்த்தை உதிர்க்காமல்

உங்கள் 

வார்த்தைகளை கொல்வதே

என் யாவும்.

அதுவரை

நீங்கள் 

எந்த எச்சத்தையும்

சுவைத்து மகிழலாம்

அவபவத்திற்குள் தள்ளாத

யாரின்

எப் பிரயோகமாக இருந்தாலும்.

******

சுவைகளற்ற சொற்கட்டுகள்

 

உலுக்கிவிட்டுப்போனதைப் பொருட்படுத்தாமல்

குலுங்கிக் கிடக்கிறது

மனம்

சீராக சுற்றாமல்.

 

அநேக

வார்த்தைகளின்

பொக்கிசம்

மீளாத் துயருக்கு

வழி செய்கிறது

நம்பிக்கைகளை

வளரவிட்டு.

 

சுவையற்ற சொற்களைப்பற்றிய

அக்கரை

எப்பொழுதும்

எனக்கில்லை

வேத பாராயணமாக

இருந்தாலும்

வெறுத்தொதுக்குவதைத் 

தவிர.

*******

நித்திய வெளிச்சம்

 

சூழ்ந்திருக்கும் நினைவுகள்

வெளிச்சத்தை

கபளீகரம் செய்துவிட்டது

புயல் நாளின்

முடக்கமாக.

காற்றொன்று வந்து

கரை கடக்கும்

வாய்ப்புகளற்ற

தருணங்கள்

அச்சமூட்டுகிறது

ஒவ்வொன்றையும் பற்றி

உபாயம் தேடி.

மகிழ்வான ஒளியொன்று

வந்து

மனம் மறைய

பிரகாச சூரியனாக

உன் முகம் தவிர

எனக்கு

யாதொன்றும் இல்லை

இவ் வாழ்வு

மேன்மையுற.

*****

பார்க்க முடியாத பருகல்

 

மௌனமான

வானத்தைக் கிழித்து

அதன்

அந்தகாரத்தை

அருந்த நினைக்கிறேன்

பொழிதலைக் கடந்து.

போகமுடியாது

திளைத்துக் கிடக்கிறது

கணங்கள்

பாரிய பூரித்தலில்

நனைய வைத்து.

****

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *