ஒளியாகாரம்.
இரவிற்குள் முங்கி எடுத்த விண் மீன்கள்தான் இன்றைய ஆகாரம்.
பசியாறிய பிறகான தூக்கத்தில் அநேகம் துடிப்படங்க மறுத்து மின்னியது.
இடைவிடாது இருப்பதைப் பார்த்தால் என்னைப்போல எவரும் பிடிக்கவில்லை போலும்.
யாவருக்கும் என்ன விதமானத் தூக்கமோ.
ஒழுங்கில் ஒவ்வொன்றும் பேச முயன்று கொண்டிருந்தது. சுவையில் திளைத்த நான் உண்பதில் குறியாகவே இருந்தேன்.
நாளை மட்டும் என்ன நடந்து விடப் போகிறது அது பேச முயலும். நான் பிடித்து உண்ண முயல்வேன்.
இந்த இரவோட இருக்கும் சங்காத்தத்தில் இது தவிர வேறென்ன நிகழ்ந்துவிடப்போகிறது.
வெளிச்சத்தைப் பருகினாலும் விழிப்படையாத வேதனையில் உணர்வையழித்த ஒருவனால்.
***
துவளுவதான துல்லிய எதிரொலிப்பு.
பாரியப் பிரார்த்தனையில் நினைவூட்டும் ஒன்றை நிறுத்தச் சொல்லி மன்றாடிக் கொண்டு இருக்கிறேன்.
என் போதாமையின் வலிகள் அறிய முடியாத அணுக்கத்தில் நாம் தூரக் கிடக்கிறோம்.
நேசித்தலைக் கொத்திய சொட்டில் அக்கரை நிரம்பி வழிகிறது.
இலையுதிரும் மரத்திற்கு அதற்கு தேவையான பொழுதில் நீர் வார்த்திருக்கிறேன்.
அதன் கனிச்சுவையின் சாறு இரத்தமாக ஓடுவதைப் பற்றி சொன்னதில் யாதொரு சிக்கலுமில்லை.
நேற்று சாலையில் வாகனத்தை நிறுத்தி துடித்துக் கிடந்த அணில் குஞ்சின் காலில் மருந்திட்டு மர நிழலில் விட்டபொழுது கல்விச் சென்ற தாய் அணில் கிறீச்சிட்டதை இப்பொழுதும் ஒலிக்க விடுவதில் ஒரு சிக்கலுமில்லை.
மாறாக சிரிப்பைப் போர்த்தி சிலாகிக்கும் உங்களின் கபடத்தைக் காட்டும் சித்தரவதையை என்ன செய்யலாம் இப்பொழுது நீங்களே சொல்லுங்கள்.
***
வாழ்ந்ததன் பொருட்டானப் பொருமல்.
உதாசீனத்தின் ஒவ்வொரு முறையும் கண் முன் வருகிறார்கள் பேசி முடித்தப் பெற்றோர்கள்.
விட்டுக்கொடுத்தலை அறியாத பேதமை பேடியென பொருள் கொள்ள வைக்கிறது நிரப்பி இருக்கும் கற்றலால்.
ஒன்று கூடலின் தழுவலில் இத்தனை அன்னியத்தன்மை இருக்குமாவென எவரிடம் உறுதிகள் செய்வது சுற்றத்தாருக்கான சுகமெனும் பாவனையில்.
ஆள்க் காட்டி விரலைத் தாண்டாத கணக்கில் ஜனித்துவிட்ட பொறுப்பு நம் இருவரையும் சார்ந்ததல்ல சோர்விலும் சுகம் துய்க்காததால்.
தலை முறைகள் தழைத்த தலை முடி வெளுப்பில் விரிசல் பட்ட இதயத்தை ஒட்ட விருப்பப் பசையைக் காய்ச்சவே இல்லை.
கிடத்தப்பட்ட அஃறிணைப் பொழுதுகளில் வழுத் திரட்டி முகத்தில் உமிழ்ந்துவிடும் எச்சிலைத் துடைக்கும் தருணம் வாய்க்காது போய் வழிகிறது பொறுத்த இயலாமை பிறர் துடைக்குமாறு துயர அவலத்தில்.
***
