1.
பெருந் துயர் தருணமொன்றில்
சுட்ட ரொட்டி கருகி விடும்
அபாயமற்ற எரிதணலின்
சொற்பச் சுல்லிகளால்
மிதமாகவே புகைந்தது.
வழக்கத்தின் சத்த மிகைப்பால்
பலர்
அபய இடக் குழிகளுக்குள்
பதுங்களாயினர்.
அவசரமற்று
சென்ற
கடைசியாளுக்கு
குடும்பத்துடன் கூடி வாழ
பழகியக் குழிக்குள்
கொஞ்சம் இடம் இருந்தது.
கூட்டக் குருவிகளின்
இரைச்சலாக
பயிலும் பிள்ளைகளும்
பதுங்கு குழிகளின்
பயிற்சியால்
ஒளிந்து விளையாடி
தஞ்சமானார்கள்.
சற்றைக்குப் பிறகு
சாலையில் கேட்கும்
சலசலப்பின் இயல்பான
பெருமூச்சிற்கிடையில்
தூரத்தில் கேட்ட சத்தங்களில்
தெரிந்தவர்களின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளவதாக இருக்குமோவென்று எழுந்த எண்ணம் எப்பொழுதும் தோன்றுவது தான்.
கருகாத ரொட்டியைப் பிய்ந்து உண்ணும்
சகாயத்தில்
அடுத்த வேலைக்கு
தயாராகிவிடுவதாக இருக்கிறது
பயம் கூட
அன்றாடங்களின்
அனிச்சையாக.
***
2.நேற்றின் நாளை.
நாளை யாவும் சரியாகிவிடும் என்றாள் அம்மா.
அவரின் அம்மா அவளுக்கு சொல்லி இருக்க வேண்டும்.
நானும் என் குழந்தைகளுக்குச் சொன்னேன்.
அவர்களும் அவர்களின் குழந்தைகளுக்கு சொல்லாதிருக்க
நான் என்ன செய்ய வேண்டுமென்றுதான்
தெரியவில்லை.
***
3.சிலுவையில் அறையச்சொல்லும் புத்தரும்.சிரித்து மகிழும் பிக்குகளும்.
புத்தரை நாட்டிற்குள் தேடியவர்கள் கௌதமர்களாகி பிக்கு வேடம் தரித்தனர்.
ஏதோவொரு சந்தர்ப்பத்தில்
கிட்டிய சகாய தரிசனத்தில்
சந்தித்தப் புத்தரிடம்
புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி என்றபொழுது அவர் சிரித்தபடி
நகர்ந்துவிட்டார்
வனத்தை நோக்கி.
நாடெங்கும் முளைத்தது
வானுயர புத்தர் சிலைகள்
வனக் காடாக.
****
