1.ஆத்திரச் சொட்டின் தித்திப்பு.
சற்றே சுட்டெரிக்கும்
உன்
சொல்லிடம்
எவ்வளவோ
சொல்லிப் பார்த்துவிட்டேன்
படிகளெடுப்பதை
நிறுத்த மறுக்கிறது
பாதகம் செய்யுமாறு.
உன் கரிசனங்களை இட்டபொழுது
எரியூக்கியாக
பெரும் பிழம்பில்
தகிக்கிறது
பொசுக்கிப் புறந்தள்ளி.
என் தோல்வியை ஒப்புக்கொண்டு
உருவிய வாளில்
என்னையே சிதைத்தபொழுது
உள்ளத்திலிருந்து
சொட்டுகிறது
உதிரம்
நேற்றைய நேசிப்பின்
வாடையில்
நெருங்கிவிட.
***
2.ஏற்காமையின் இன்னொரு ஓட்டம்.
பகலைச் சிறை வைத்து
இமைகள் இரவிற்குள் அநேகங்களை தந்த வண்ணமிருந்தது
அசலைப்போல.
முண்டியடித்து வெளிவந்த பகல் உற்சாகத்தை விட்டுச் சென்றது ஒரு சமாதான உடன்பாட்டிற்கு. அனிச்சையாக எப்பொழுதும் இடைவிடாத சிமிட்டலில்
சிக்கிடாதப் பகல்
அந்தியின் ஓய்வில்
சிறைபட்டாலும்
இமைகளுக்குதான்
ஓய்வு கொடுத்தது
பாரிய இயலில்.
பாவம்
அந்தியின்
சமாதானப் புறா
தோல்லியில் வெட்கி
இரத்தம் கக்கிச் சாவுகிறது
அடி வானத்தை சிவப்பாக்கி.
****
3.துளியின் தேக்கப்பொழுது.
அதன் ஓய்வின் காத்திருப்பு
எதனாலென
எனக்குத் தெரியாது.
அதன் போக்கில்
ஏதோவொரு பெயர் தாங்கி
சேர்மான சகாக்கள்
இங்கு வராமல் விட்டகழ்ந்திருக்கலாம்.
சற்றே மனத்திடத்தின்
பிடிமானத்தில்
கடந்துவிட
நேற்று முயன்றதில்
கனம் கூடிய ஆடைகள்
கயிற்றில்
காற்றாடிக்கிடக்கிறது.
அழைப்பு நேரத்திற்குள் போகவேண்டிய
கட்டாயத்தில்
வெளிச் சீதோசனங்களின்
பொழிவுக் குறிப்புகளின் சகாயம்
படிக்கும் பிள்ளைகளுக்குப் பயன்பட்டது.
உட்காரும் இடத்தில்
ஒய்யாராமாக
வலு கூட்டிப்
பற்றி
வழுக்கி நலுவாமல்
இருப்பதும்
இயற்கையின் அதிசயம்தான்.
உள்ளன்பின் உறவாடலுக்கு
கைபேசி பிரித்து
இழுத்து விடும்
இம்சை தான் எப்பொழுதும்.
துணி எடுத்து
துடைத்துவிட்டு
எண்ணமொன்றைப் பற்றி
எடுத்திருக்கலாம்
இரு சக்கர வாகனத்தை
துயரப் பாடில்
சொற்களைச் சுவைத்த வண்ணம்.
கௌரவ ஆடையை
விலக்கி
பார்வை தூரத்தில்
யாருமற்ற உறுதியில்
குனிந்து
நாக்கில் ஒத்தியெடுத்த
மழைத்துளி
எனக்குள் எங்கு
பயணித்துக் கொண்டிருகுமென்பதை
இக் கவிதைனூடாக
தேட முயல்கிறேன்
தெரிந்துவிடும் ஆசையில்.
***
4.வண்ணக்கலவை நிரம்பியதான வெறும் கோப்பை.
நம்பகத்தன்மைகள் யாவையும் பொதி பஞ்சுகள் அறியாப்புறத்திலிருந்து உறிஞ்சிய நாளில் விடிவெள்ளி தோன்றி வெளிச்சமிடுவதாக சொல்லப் பட்டது.
எதேச்சையின் சாய்வில் எட்டிப்பிடித்த கொடி கொல்லைப் புற அரியணையென அவதானிக்க முடியாத மெனக்கெடலில் ஆராய்ச்சி அறத்தில் மண் மூடி மகிழலாம் வென்று.
எதிர்பார்ப்பின் கட்டமைப்பில் சொற்பக் கீற்று சுருங்கி புள்ளியில் மறைந்து வழக்கசாலிகளின் பெருத்த எலியாக வர்ணசாலம் கூட்டுவதை ஆசுவாச காலமெனும் கரகோசம் தொண்டையில் இறங்காமல் வயிறுகள் ஒட்டிக் கிடக்கிறது துளிர்த்தப் பொய்யால் துவண்டு.
****
-ரவி அல்லது.
