முள் அங்கியின் சிநேகச் சிராய்ப்புகள்
மழித்தலும்
நீட்டலுமான
பழித்துவிடாத வாழ்வில்
பருகிய உணவிற்கு
கவிச்சி வாடை.
சற்றேனும் ஏறுக்கு மாறாய்
அமைந்த தருண
சரசப் பூத்திருப்பின்
சுருங்கிய தோலில் தெரிகிறது
சிராய்த்த அன்பு.
சகாய கௌரவத்தின்
இரு முனை
இருப்பு வேதனையிலும்
விடாது மலர்கிறது
நேசம்
விளங்க முடியாத
வீடு பேற்றில்.
எத்தனைதான்
எள்ளி நகையாடி
இடைஞ்சல்கள்
இருந்தாலும்
ஏதோ
இருக்கத்தான் செய்கிறது
பெண்ணுடனான
இந்தப் பெருவாழ்வில்
மகிழ்வதற்கு.
***
உன்னத உருகல்.
கடந்து போன எல்லா இரவுகளிலும்
நினைவுகள்
ஊஞ்சலாட தூக்கத்தைத்
தூளியாக்கொண்டது
உயரழுத்தத் துடிப்பில்.
ஓய்விற்காய்
முயன்றுத் தோற்ற
இன்ப வலி
இன்னுமிருக்கிறது
படுத்திய
முதுகு நோவில்
பாய்த் தடத்தின்
பாரமாக.
பகல் பொழுதுகள்
யாவிலும்
விட்டகளாத வேதனைகள்
உன்னால் மட்டுமென்று
சொல்ல முடியாது
எனக்குள்ளாக
நீ இருந்தாலும்.
தொட்டுணர்ந்த கைகள்
தூரத்தை மறக்கிறது
கிட்டி விடும்
சந்தர்ப்பத்தை
எதிர்நோக்கி.
உன்னை மறக்க
ஓராயிரம் உபாயங்கள்
இங்கு இருந்தாலும்
எண்ணமெல்லாம்
நீயான பின்பு
எப்படி
மறப்பேன்
இப்பிறவி
உனக்கானதென்பதை
பொங்கி வழியும்
நேசத்தில்.
***
-ரவி அல்லது.
