இராயகிரி சங்கர் கவிதைகள்

1.
பெரிதோ சிறிதோ
விதையென்றால் உயிர்
நிலம் பிளக்கும் ஆவேசம்
நீ அள்ளிக்குவித்து
பரிவோடு பாய்ச்சியதனால்
என்றா
நினைக்கிறாய்
உனக்கிருக்கும் உரிமை
அப்போது வந்தமரும் அப்பறவைக்கும்
கைகளை ஒலித்து விரட்டாதே
உன் தோட்டமென்பது
முலைத்துவாரம் மீறி
உன் நாவினைத் தீண்டிய நல்லுாழ்

2.
ஆற்றின் நடுவே
வாளிப்பான தனங்கள்
ஏந்திய பாதத்தின்கீழ்
கோரைப்பற்கள் துருத்தி நிற்கும் அசுர முகம்
தண்டைகள் ஒலிக்கும் ஓசையை
அன்றிரவு
ஆழ் துயிலில் கேட்டேன்
கைவிடப்பட்ட தெய்வம் என்றெண்ணி
நீராடிய வணங்கி வந்தேன்
மறுநாள்
தலையற்ற அதன் விகாரம்
சிலையை வெறுங்கல்லென்றாக்கிற்று
செதுக்கியவனின் உத்தேசம்
கல்லுக்குள் உறைந்த கனவாகி
மொட்டைப்பாறையின் மீது
தனித்து ஆடாமல் அசையாமல்
பிள்ளைகள் பால்மணம் துறந்து
பள்ளிகளுக்கு கிளம்பிச் சென்றுவிட்டனர்
உச்சிவெயிலில்
செய்ய ஒன்றுமற்று
உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்

3.
ஒரு விடியல்
சில பறவைகளை கொண்டு வருகிறது
கூடவே பறக்க முயலும் மனிதர்களை
சுவர்களும் அறைகளும் வாசல்களும்
எனக்குப் போதாமல் ஆனபோது
பறவையென்று
என்னை நம்பத் தொடங்கினேன்
கைகளை அகல விரித்து
மொட்டை மாடியில் நின்று
சதா பறக்க முயன்ற ஒருவனாக
நானிருந்தேன்
கூரலகுகளில் கசிந்த பறவைகளின் மொழி
கால்களை உதைத்து காற்றில் ஏறும்
சூட்சுமத்தை எனக்களித்தது
தொடுவானம் நோக்கி பறந்தோடும் என்னை
தொட்டுவிட வருகிறது சுடரொளி

4.
வறட்சி ஏறிய இலைக் குடுவைக்குள்
நீண்ட நாட்களுக்குப் பின்னர்
குன்னிமுத்துவை பார்த்தேன்
ஒட்டிப்பிணைந்து
செவ்விழி உருட்டி
வைரமணிகளைப்போல ஒளிர்ந்தன
மனித முகங்களை அஞ்சி
விச்ராந்தி தேடிய அலைதலில்
இடையர்கள் அச்சத்தோடு உற்று நோக்கினர்
பகல் முழுக்க
மஞ்சனத்தியின் உயர்ந்த கிளையில் துாக்கில் தொங்கினேன்
பால்டாயில் அருந்தி
வாய் நுரைப்புடன் வாகையின் அடியில் வீழ்ந்தேன்
மணிக்கட்டில் அறுத்து நினைவிழந்தேன்
தவிட்டுக்குருவி நான் அமரச்சென்ற
தோதகத்தி மரத்தின் புதரில் இருந்து
தன் குஞ்சுகளை முன்விரட்டி ஓடியது
மரங்களெல்லாம் கோடை எப்போது முடியும் என
தீனக்குரலில் புலம்பின
கைவிடப்பட்ட பாழுங்கிணற்றின் படிகளில்
சுருண்டு கிடந்த சாரைக்கு நான் பொருட்டில்லை

பிரபஞ்சமே உடனிருக்க உடைந்து அழுதேன்
பை நிறைய குன்னிமுத்துவை பறித்து
வீடு திரும்பினேன்

என் குழுந்தைகள் அன்று என்னிடம் ஏமாறவில்லை

5.
இந்தமுறை
ஒரு மதுக்கோப்பையில் இருந்து
இவ்வுலகம் எழுந்து வரட்டும்
அன்றொரு நாள்
இவ்வுலகம்
சினைப்பட்ட கருநாகத்தின்
வடிவாக நகர்ந்து
குறும் கணத்தை அச்சப்படுத்தியது
சுற்றிப்பறந்த பட்சிகளின் சிறகசைப்பில்
ஊற்றெடுத்தன ஊழிக்காலத்தின் நீரொழுக்கு
பிம்பங்களென நீர்ப்பரப்பில் மிதந்த
மற்றொரு பிரபஞ்சம் புலனாயிற்று
என்னுடலை இழந்து
நீ சபித்த வேறொரு உரு அணிந்து
சொற்களோடு உறவாடும்
வயோதிகத் தனியனானேன்
எனது நோவாக்கப்பலில்
பிறஉயிர்கள் அனைத்தையும் ஏற்றி
பெருவெள்ளத்திற்காக காத்திருந்தேன்
முதல் துளி என் நாவில் சுரக்க
நீர்ப்பெருக்கின் ஊற்றுமுகமானேன்
என்னையே அழித்து
என்னையே நிரப்பி
என்னையே அதில் மிதக்கவிட்டேன்
சஞ்சலங்களற்ற இருப்பில்
ஒன்றாகிப் போயின பெருந்துயர்களின் காலம்
கீழ்மைகளின் நதிமுகத்தை நான் தீண்டியபோது
உருவானது வேறொரு உலகம்.

6.
நேற்று
வரலாற்றை
எழுதும்
ஆற்றலாக
இருந்தாய்.
முன்பு
குலக்கதைகளைப் பாடும்
பாணனாக
இருந்தாய்.
கொஞ்சக்காலம்
அமுதுாட்டும்
அன்னையாக
இருந்தாய்.

பிற்பாடு
கனிந்து
சித்து வேலைகள்
செய்யும்
அற்பத்
துறவியானாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *