இராயகிரி சங்கர் கவிதைகள்

1.
அவை சற்று விநோதமானவை
முதலாவதாக அவை உன்னை முறைப்பதில்லை
மண்மூடியிருக்கும் தாது போன்றவை
நீ தேடித் தோண்டாத வரை
உன்னைப் பொருட்படுத்துவதில்லை
கண்ணாடி போன்றவை
பிம்பங்கள் எல்லாம் உன்னுடையதே
பச்சோந்தி கொள்ளும்
பலவண்ண மாற்றம் அவற்றின் இயல்பு
நீ சினந்திருந்தால் அவை எரிகின்றன
கனிந்திருக்கும் சமயம் உறைகின்றன
உற்சாகம் மிகும்போது
அணை தாண்டும் நதியாகின்றன
அவை உன்னிடம் கோருபவை
கொஞ்சம் கவனமும்
கொஞ்சம் கருணையும்
மாறாக
அவை பேசிக்கொண்டுருப்பது
நிச்சயம் உன்னைப் பற்றியல்ல

2.
இறந்தவன் எழுதிய கவிதை
படிமங்கள் அற்றது
நிலத்தின் மீது அக்கவிதையின் ரூபக் கால்கள்
படிவதே இல்லை
பகல்நேரத்தில் வெளிறியும்
இருளுக்குள் பேருருக்கொண்டும்
இறந்தவன் எழுதிய கவிதை
பலவேசம் கொள்கிறது
இறந்தவனைப் போல
அவன் கவிதையும் போதை மிகுதியில்
கூடுதல் அர்த்தங்களும் சொற்களும் ததும்பி
குழப்புகிறது
இறந்தவனின் கவிதை பற்றி பேசப்படும்
ஒவ்வொரு சொல்லும்
அச்சம் அளிக்க
அவன் கவிதை
சாகா வரம் பெறுகிறது

3.
மொழி தெரிந்தும்
சொல்ல சில இருந்தும்
பேசும் திறன் அமைந்தும்
மௌனியாக இருக்க
விரும்புவதேன்
பேசுவது
ஞானிக்கு பகிர்தல்
பைத்தியத்திற்கு இளைப்பாறுதல்
குழந்தைக்கு திறன் வளர்த்தல்
எனக்கோ
லகுவாதல்

4.
கணந்தோறும் நினைவாக இருந்தவளை
நீண்ட நாட்களுக்குப்பின் பார்த்தேன்
நடை உடை பேசும் பாவனை என அனைத்தும்
அவளின் அம்மாவைப் போலவே இருந்தன
பால்யத்தில் என்னை விரும்பிய
அவளின் அம்மாவின் பார்வையை
அவளில் அறிந்த பின்
எதிர் வீட்டில் வாழ்ந்த
என் அப்பாவைப்போல
நான் மாறிப்போனேன்

5.
உனது கைகளின் தங்கநிற முடிகளை
மடிமேல் ஏந்தி
வீணையின் நரம்பினை மீட்டும்
வா’ஞ்சையில் வருட அனுமதிப்பாயா?
உன் கண்களைப் பார்த்து
நான் அடையும் பதற்றம்
தங்கநிற முடிகள் அளிக்கும் தண்டனை பெண்ணே
காலம் மிக பின் தங்கி வந்திருக்கிறேன்
உன்னைப் பிணைத்திருக்கும் சரடின் சுமையறிவேன்
இரு ஆண்பிள்ளைகளின் அன்னை நீ
ஆயினும்
தொலைவில் இருந்து ஒரு கணமேனும் உற்று நோக்கி
கண்டு களிக்க வாய்த்தால் போதும்
அலுப்பின் நுரை தளும்பிய என் அகத்தில்
ஏழு வர்ணங்களாக நிறப்பிரிகை கொள்பவள் நீ
ஒளிவு மறைவின்றி நீ அனுமதிக்கும்
தங்கநிற முடிகள்
தின்றும் தீரா பசும்புற்கள்

6.
மறுபடியும் அதே இருள்
அதன் ஆழத்தில் இருந்து
கிளைத்து எடுக்கிறேன்
தாகம் தணித்த நீரூற்றின் முதல் துளியை
குப்பையாகிப்போன திட்டக்குறிப்புகளை
ஒளித்துவிட்டு
மீண்டும் மிக விரிவாய் வரையத் தொடங்குகிறேன்
எனக்கு மிகப் பிரியமான ஒன்றாய்
அது மின்னத்தொடங்கும்போது
எனது நிழல் விரிந்து
வனமொன்றின் விருட்சமாகிறது
எனது நடையில் அவசர மிடுக்கு
தோள்கள் நிமிர்ந்து
யாரையும் பொருட்படுத்தா பெருங்கூட்டத்தின் உள்
ஒருவனாக வாழ்கிறேன்
நன்கறிவேன்
நீ பரிகசித்து புன்னகைக்கக் கூடும்

7.
இதுவே
கடைசிக்கணம்
மறுவாய்ப்பு
மண்ணில் இல்லை
காலக்கரம்
அள்ளிச்செல்ல
விரைந்து வருகிறது
நான் நான் என்றே
நிலம் வாழ்ந்த சீக்கு
விட்டு விலகும்
கொஞ்சம்
உனக்காக
கவிதை எழுது
உன் ஓவியத்தை
திரைச்சீலையில் தீட்டு
உன் பாடலை
ஆடலோடு பாடு
பொழுது விடிந்து விட்டது
இப்போதாவது
கண்டுகொள்
காத்திருந்து
நதி சிதைத்தது
கரையை அல்ல
உள் ஒளி

8.
உடல் கற்கோட்டை
உள்நடப்பவை
என் விருப்பக் கற்பனை
வெளி சேமித்த
நினைவுகளில் இருந்து
ஒவ்வொன்றாய் எடுத்துக்கொள்கிறேன்
அஞ்ச வேண்டியவற்றினை
கை குலுக்கி உரையாடியும்
வணங்க வேண்டியவற்றினை
அஞ்சி நடுங்கி ஒளிந்தும்
கடந்து வருகிறேன்
கோட்டைச்சுவர்
என்கீழ் தாழ்ந்த நாளில்
எல்லாமே
எளிதாய் மாறின
புரிதலுக்கும்
அறிதலுக்கும்
கொஞ்சமே இடைவெளி

9.
திரும்பி வரும்போது
தெரியாமல்
கூட்டி வந்து விட்டேன்
சங்கிலித் தொடரென
பின்தொடர்ந்து
வீடடைந்து
பசியோடமர்ந்தன
எனக்கான
இரவுணவினைப் பகிர்ந்தேன்
வெட்டவெளியில்
தனித்திருந்து
இரவைக்கழித்த அவற்றிற்கு
மொட்டைமாடியே விருப்பம்
விருந்தினரைப் பேணும் மரபு
அமைதியோடு
உறங்கச்சொன்னது
அடங்கா வெறியோடு
அவை இட்ட கூச்சலில்
இரவின் வெளி உள்வாங்க
விரைந்து
விடிந்திடாதா என ஏங்கினேன்
முதல்கீற்றின் வெப்பம் படர
வான்நோக்கி
அவை செல்லக் கண்டேன்

10.
கருப்பனின் விழிப்பில்
ஊன்விரும்பும் வெறிப்பு
பொட்டைக் காட்டிற்குள்
புதர்கள்தோறும் நுகர்ந்தலையும்
வேட்டைநாயின் பின்செல்கிறது
எச்சில் தடம்
கானலை உண்டு
தன்னிழலில் தவிப்பாறும்
பனைகளின் சலம்பல்
சதா
பரிகசிக்கிறது
குத்தீட்டி எடுத்து
பீடம் விட்டிறங்கிய கருப்பனை
வாலாட்டி அழைத்துச் செல்லும்
வேட்டைநாயின் வாயில்
கவிச்சி நாறும் பச்சிளம் சிசு
காடெங்கும் திரிந்தபின்னும்
உயிரரவம் சிக்காமல்
சினம்மிகுந்து
ஊரேகினான் கருப்பன்
வீடுகள்தோறும் மாமிசம் மணக்க
யாசித்து
காத்திருந்தான்
பொல்லாக் கருப்பன்களின்
பொல்லாக் கருணையை நம்பி

11.
விரைந்து சுண்டியிழுக்க
நீரற்ற வெளியில்
தவித்தலைகிறது
கண்ணாடித்தாளிற்குள்
செதில்களறிந்த வழிப்பாதையை
நதியின் குளுமையை
நிழலாடும் நீர்ப்பரப்பை
முட்டிமோதி தேடுகிறது
அசையா விழியோடு
வெறிக்கிறது
கடந்து செல்லும் வீதிகளை
வாசனை ஊற்றுவிக்கும்
உமிழ்நதியில் பாய்ந்து
இரத்த நாளங்களெங்கும்
நீந்திச் செல்கிறது
மீனிசைத்த சங்கீதம்

தக்கையின் ஆட்டம்
மீனின் வாழ்வாசை

12.
இரவின் ஒலியில்
உன் மூச்சு
இசை

இவ்விரவு
ஒரு மலையாகி
கனக்கிறது
நினைவெனும்
உளிகொண்டு
செதுக்கித் தள்ளுகிறேன்
முதலில் காட்டைப் பிளந்தேன்
அதன்பின் சுழித்தோடிய நதியை
இறுதியாக வனத்தின் விலங்குகளை
மரங்களை மலர்களை அழித்த பின்
பச்சைக் கண்கள் ஒளிரும் வனப்பேச்சியை
நெருங்கப் பயந்து
போர்வையை மூடிக்கொள்கிறேன்
குளிர்ந்த நதியென
என்னை உள்ளிழுத்துக்கொள்கிறது
துயில்

இரவின் நெருப்பு
பற்றியெரிய
இருளைப் பிளந்து
புலனாகும் சிற்பம்
முத்திரை காட்டி
இசை உறைந்த விரல்களில்
கசிந்து வழிகிறது
மோகத்தின் ஊற்று
நதிமுகம் ஏங்கி
தவித்த உதடுகளில்
இச்சை வேர்கள்
உடலாடி
உள்ளிசைந்து
நதி கூடிய நதி மீது
படிந்து மிதக்கின்றன
உச்சத்தின் நிழல்கள்
பெருந்தனங்கள் பாய்ச்சிய
நீர்மை
மழையென பெய்கிறது
குளிர் நடுக்க
உன்னை அணைத்துக் கொள்கிறேன்

இரவினை
சொற்களாக்கினால்
விட்டு விட்டு
ஒளிர்கின்றன
நிசியின் மௌனத்தை
உண்ணத் தயங்கிய
நாய்கள்
இரவின் சொற்களை
விரட்டி அலைகின்றன
கன்னியின் கனவிற்குள்
காதலனின் நாவென
தீண்டி ருசிக்கின்றன
இதழசைய சிரிக்கும்
குழந்தையின் உதடுகளில்
அன்னையாகின்றன
விம்மிப் புடைத்த குறிகளுக்கு
தாபம் தணிக்கும்
இணையாகின்றன
தனித்த மனங்களுக்கு
நினைவில் நிற்கும்
துணையாகின்றன
இரவினைப் போல அன்றி
இதமளிக்கின்றன

அன்பினை சுமந்து
அவளைத் தேடும் பறவை
இரவினில் மட்டுமே
விழித்திருக்கும்
முழு இரவென
நீளும் நினைவினை
அவளுக்கென அளிப்பேன்
அவள் வாழும் ஊரினை
ஒளிப்புள்ளிகளென
அச்சமற்று களிப்பேன்
நரம்பினை மீட்டி
அவளற்ற பிரிவினை
இசையென பாடுவேன்
மலர்களைப் போன்ற சொற்களை
பறித்து
அதிகாலையில் காத்திப்பேன்
காதலை வளர்ப்பது
இரவென்னும் அன்னையே

13.
அடங்க மறுக்கும் அழுகை
உன்னழகை மெருகேற்றும் துாரிகை
கண்களும் மூக்கின் நுனியும்
போட்டிபோட்டு சிவந்துகொள்கின்றன
சன்னலோரம் அமர்ந்து
பேருந்துப் பயணத்தில் காணும்
நிலக்காட்சியில் அல்ல
நீ பயணிப்பது
நீ ஏங்கியதெல்லாம்
சிறிய புன்னகையை
எளிய புரிதலை
சன்னல் வழி மோதும் காற்றை
நன்றாக ஏற்றுக்கொள்
உனக்கிருப்பது
ஒரு சன்னலும்
அதில் பீறிடும் கொஞ்சம் காற்றுமே

14.
தாளிட்டுக்கொண்ட பின்
இன்னும் என்ன தயக்கம்
உன் மூதாதையின் ஒரு நாள்
ஓரிரவு
இதைவிட மிக மோசம்
ஆறுதல் சொல்ல அன்றெல்லாம்
யாருமில்லை அவளுக்கு
வெளியே வீடென
வாய்க்கப்பெற்றவள்
உன் நிலைமை அதைவிட சற்றே மேலானது
ஒன்றும் செய்துவிட முடியாது
காலத்தின் முன் நீ துமி
அதனால் கதறி அழுதுவிடு
நீ அழுவதை
இங்கே யாரும் ஆட்சேபிப்பதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *