இராயகிரி சங்கர் கவிதைகள்

1.

அவசியம் என்றால் மட்டுமே நீங்கள் ஜன்னல்களைத் திறக்க வேண்டும்
விரிந்த வானம் உண்டென்றாலும் உங்களுக்கு அனுமதி வெண்டிலேட்டர் அளவே
சத்தம்போட்டு பேசவோ அதிக ஒலியில் பாடல்கள் கேட்கவோ அனுமதியில்லை
உணவில் உப்பு புளிக்காரம் குறைத்துக்கொண்டு வல்லாரைக்கீரையும் வெந்தயமும் அதிகம் எடுத்துக்கொள்வது உத்தமம்
மாதத்திற்கு நான்குநாட்கள் அனுமதி உண்டு
அதிகரித்தால் சுக்கில மோசம் 
இடைவிடாமல் வெளியே பறக்கத்தோன்றும்
அந்நாட்களில் ஒரு செம்பருத்தி மலரைக்கொய்து
நிதானமாக ஒவ்வொரு இதழ்களாகப் பிய்த்து

உள்ளங்கைக்குள் கசக்கிஆவேசமாக வீசியெறியலாம்
மாதாந்திர விடாயின்போது இரண்டுதடவை நீராடலாம்
குழந்தைகளையோ கவிதைகளையோ தவிர்க்க விரும்புகிறோம்
எழுதப்படாத தாள்களும் எழுதும் பேனாவும் உங்களிடம் இருப்பது நன்று
உறவினர்களில் கணவர்களோ மனைவிகளோ சந்திக்க மறுப்போம்
பெற்றோர்கள் அரைமணிநேரம் தங்கள் பிள்ளைகளை மடியில் கிடத்தி
பாட்டி வடை சுட்டு நரியிடம் ஏமாந்த கதையினை கட்டாயம் சொல்லவேண்டும்
கதறி அழத்தோன்றினால் எங்களிடம் தெரியப்படுத்தினால் போதும்
மின்சார அதிர்ச்சிகளை அன்றெல்லாம் தொடர்ந்து அளிக்க ஏதுவாக இருக்கும்
கடவுள்கள் உங்களோடு உரையாடுவதை உவந்து வரவேற்கிறோம்
நான் கடவுள் என்று நீங்கள் நம்பினால் மட்டும் உங்களை விடுதிக்குள் வைத்துக்கொள்வதில்லை.

2.

நவீன மனிதனின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றாக
இட்லிகள் இருக்கின்றன
அன்றாடம் 
இட்லிகளை எடுத்துக்கொள்வது சார்ந்து
நமக்கு புகார்கள் ஏதுமில்லை
நம் புரட்சிகர சிந்தனைகளை
நம் இலட்சியவாதங்களை
நம் நல்லுணர்வுகளை
நம் கற்பனைத்திறன்களை
நம் உச்சபட்ச பரவசங்களை
இட்லிகளே இல்லாமல் ஆக்குகின்றன

அம்மாக்களின் விரல்கள் வழியாக
சுவை மண்டலத்திற்குள் திணிக்கப்படும் இட்லிகளே
குழந்தைகளை
இட்லிகளைபோன்ற
குழந்தைகளாக ஆக்குகின்றன
இட்லிகளை வலிந்து புகட்டுவதன் மூலம்
குழந்தைகளிடம் இருந்து
பிற ருசிகளுக்கான தேடலை
முடமாக்கிப்போடுகிறோம்
இட்லிகளை தட்டுகளில் ஏந்தி
நம் இல்லத்தரசிகள்
நம்மை
வளர்ப்பு நாய்களைப்போன்று ஆக்கிவைத்திருக்கின்றனர்.
ஒவ்வொரு நாள் காலையிலும்
பல்லாயிரக்கணக்கான இட்லிகள்
இப்புவியெங்கும்
அவிந்து எழுகின்றன
தேவலோக கன்னிகளைப்போல
வெண்ணிறப் புகைகளில் இருந்து
அவைகள் எழுந்துவரும் சித்திரங்களே
நம் காலத்தின் மகத்தான துயர ஓவியம்
இட்லிகள் கச்சிதமான வடிவ ஒழுங்குடனும்
ஆகிவந்த பாரம்பரியச் சுவையுடனும்
மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத
இரும்பு மனதுடனும்
இருக்கின்றன.
இட்லிகள் இதமானவை என்றோ
எளிதில் செரிமானம் ஆகிவிடுபவை என்றோ
இட்லிகளில் கொழுப்போ சர்க்கரையோ கிடையாது என்றோ
நீங்கள் வரவேற்பதில் எனக்கு சங்கடங்களே இல்லை
ஏனெனில் இட்லிகள் உங்களை ஆள்கின்றன
இட்லிகளை விமர்சிக்கும் மூளை நரம்பினை
இட்லிகள் சதா போதையில் ஆழ்த்தியிருக்கின்றன

இட்லிகளில் ஞானமடைந்த .இட்லி ஓன்றினை
இன்று என் சாப்பாட்டுத்தட்டினில் சந்திக்க நேரிட்டது
ஞானமடைதல் இட்லிக்கும் ஆகாத ஒன்றுதான் போலும்
தனிமைத்துயர் தாளாமல்
உரையாடத்தொடங்கியது
ஞானமடைந்த இட்லியின் எச்சரிக்கையே
இங்கு நான் சொல்லியிருப்பது
இட்லிகளில் இருந்து
ஒரு நுாற்றாண்டாவது
விலகியிருப்போம்

நம் பொன்னுலகை இட்லிகளே ஒளித்து வைத்திருக்கின்றன.

3.

மண் மூடிப்போன நகரம் என்கிறார்
புனைகதையாளர்
காட்டாற்று வெள்ளத்தின்
திசைமாறிய பயணத்தால் விளைந்த கேடு
என்கிறது வரலாற்று ஆய்வாளரின் துணிபு
கொள்ளைநோய் கொண்டு போயிருக்கலாம்
என்கிறார்கள் நடுநிலையாளர்கள்
வந்தேறிகளின் கொலைவெறித்தாக்குதல்
என்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள்
அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்நகரொன்றின்
படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறேன்
என் மணிக்கட்டில் வந்துவிழுகிறது
ஒரு சொட்டு கண்ணீர்த்துளி
வரலாற்றில் வெளிப்படும் தருணம் ஏங்கி
யுகங்கள் காத்திருந்த வெக்கை 
அந்த ஒரு சொட்டுகண்ணீர்த்துளியில்
நாகரீகம் பண்பாடு கட்டிடக்கலை மாண்பு
என பல்லாயிரம் பக்கங்களில் எழுதப்பட உள்ளது
அகழ்ந்தெடுக்கப்பட்ட நகரின் வரலாறு
தொல் நகரம் ஆயினும்கூட
அதன் பூர்வ கதையில்
கைவிடப்பட்டவர்களின்
வேட்டையாடப்பட்டவர்களின்
காலால் அழுந்த மிதித்து மண்ணிற்குள் புதைக்கப்பட்டவர்களின்
கதைகளின்றிப் போவது 
மகத்தான மனிதர்களை அசிங்கப்படுத்தவது ஆகாதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *