இராயகிரி சங்கர் கவிதைகள்

1.

இன்றும் வாசித்து தெரிந்து கொண்டேன்

ஓர் இளம் பெண் வன் புணர்வுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்டதை

இலஞ்சம் வாங்கியதனால் கைதான கிராம நிர்வாக அதிகாரியின் கைக்குட்டை மூடிய முகத்தை

இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்று பலியான ஒரு சதை யானைகளின் ஊதிப்பெருத்த சடலங்களை

குடிநீருக்காக குடங்களோடு குழந்தைகளையும் ஒக்கலில் வைத்திருந்த பெண்களை

வியாழனை நோக்கி சீறிப் பாய்ந்த மற்றொரு விண்கலத்தை

அரசூழியர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலைப்படி உயர்வினை

தொற்றுநோய் மீண்டும் தீவிரப்படலாம் என்கிற ஆருடத்தை

தங்கம் சவரனுக்கு நானுாற்றி நாற்பத்தெட்டு அதிகரித்து விட்டதை

இன்றிரவு என் மகள்களுக்கு சளித்தொந்தரவு இல்லை

மூத்தவள் மணிக்கொருதரம் சிணுங்கி அழாமல் சீராகத் துயில்கிறாள்

நுாலாம்படையைத் தேடிய எட்டுக்காலிப் பூச்சி ஏமாந்து எதிர்சுவர்களில்  அலைகிறது.

2.

என் பொன்னுலகத்தில்

குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லை

காய்கறிகள் தங்கத்தைப் போல விலை ஏறியிருக்காது

ரேசன் கடையில் உடனே பொருள்கள் கிடைத்திடும்

மீதிச்சில்லறையை மறக்காமல் எண்ணித் தருவார் அரசுப்பேருந்து நடத்துநர்

மேலதிகாரி என்னைப் பார்த்து நட்போடு புன்னகைக்கிறார்

வாடகை வீட்டின் உரிமையாளர் வெள்ளையடிக்க என்னிடம் பணம் கேட்பதில்லை

எதிர்த்த வீட்டு முறுக்கு மீசைக் காரர் என் ஜன்னல் முன் நீண்ட நேரம் நிற்பதில்லை

பிள்ளைகளுக்கு காய்ச்சும் பாலில் அளவான தண்ணீர் கலந்திருக்கும்

கழிவறையில் அதிக பிரயத்தனத்தோடு செல்போனை நோண்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை

தத்துவம் தரிசனம் உள்ளுறை உவமம் என்று மெனக்கெடாமலே கவிதை வாய்த்துவிடுகிறது

இதுநாள் வரை தள்ளிப்போயிருந்த என் பொன்னுலகத்தை

அடையாளம் கண்டு கொள்ள

சற்று தாமதம் ஆகிவிட்டது.

3.

சென்ற ஆண்டு திருவில்லிபுத்துார் ஆண்டாளைக் காணச் சென்றேன்

ஆண்டாளும் கவி நானும் எதிர்காலத்தில் கவி

நீண்ட வரிசை புதிர் வழிப் பாதை

கோயில் பிரகாரங்களில் ஆழ்வாரின் பாசுரங்கள்

எங்கிருந்தாலும் காட்சிக்குத் தெரிந்த தங்க கோபுரம்

நல்ல பசியில் கால்கடுத்தது

அல்சரின் மேல்வயிற்றுக் குடைச்சல் வேறு

முன்னேயும் பின்னேயும் பக்தர்கள் இடித்தார்கள்

தள்ளினார்கள் நெம்பினார்கள்

கணநேரத் தரிசனம் காவல்துறை தன் கடமையைச் செய்தது

ஓராண்டு  ஓடியே விட்டது

இந்த முறை திருமலைக்கோவிலுக்குச் சென்றேன்

சென்ற ஆண்டைப்போலவே அத்தனையும்

திரும்ப நடக்க இருந்தன

அதே மக்கள் அதே நீண்ட வரிசை

கோவில் வாசல்வரை சென்றவன் திரும்பினேன்

ரஹ்மத் புரோட்டாக்கடையில் பாதிவெந்த ஆம்ளேட்டோடு

பத்துப் புரோட்டாக்கள் தின்றேன்.

அடுத்த வருடப் பிறப்பைப் பொறுத்துதான்

என் தீர்த்த யாத்திரை

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *