இராயகிரி சங்கர் கவிதைகள்

 

1..இன்றைய கவலைகள்

தோள் மீதேறி அமர்ந்துகொள்ளும்போது

நான் எடையிழந்து மிதக்கிறேன்

புதிய ஒன்றைக் கண்டடைந்த பரவசத்தால்

ஓரடி ஆழம் புதைகிறேன்

அலுவலகம் சென்று வரும் வழியில்

அன்றாடம் உயிர்ப்பலிகள்

சிலபோது கொலைவாளினை ஏந்தும் துர்ப்பாக்கியம்

செஞ்சுடர் எரியும் இசைக்கி அம்மனின் சந்நிதியில்

விழிகள் உறைந்த பித்தனின் இருப்பு

சடை மண்டிய செம்பட்டைக் கூந்தலில்

சிதறிய ரோமங்கள்தான் என்னை சஞ்சலப்படுத்துகின்றன

சாலையின் அவசரம் சாலையோர மரங்களிலும்

அவை உற்சாகத்தில் ஆடுகின்றன என்றேன்

அச்சத்தில் நடுங்குகின்றன என்றான் பித்தன்

அழுக்கேறிய அனைத்திலும் புராதனச் சாயல்

காலம் திரண்டு உறைந்துள்ள உருக்களில்

காற்று இன்றைக் கொண்டுவந்து வீசிவிட்டுச் செல்கிறது

பயணவெளியில் ஒரு புள்ளியாக கடந்து சென்றாலும்

கட்டுடல் கொண்டவளின் முலைகள்

நீண்ட தொலைவு கூடவே வருகின்றன

நாளொன்றுக்கு இருமுறை சென்று திரும்புகிறேன்

ஒவ்வொருமுறையும் புத்தம் புதியதே அந்த ஒற்றை புளியமரம்

சாலைகள் அகலித்து நீள்கின்றன

நீண்ட பயணங்களோ சடுதியில் முடிகின்றன

சன்னல் மோதும் காற்றில் கொஞ்சக்காலமாக தணுமை இல்லை

பெரும் கனவுகள் கொண்ட கண்களைப் பார்த்தும் கணகாலம் ஆயிற்று

சிறிய மனங்களில் சில்லரைச் சிக்கல்கள்

பகிர்ந்து கொள்ளும் பாடுகளும் தேய்வழக்கானவை

எந்த ஒருநாளும் நேற்றைப் போல இல்லை

எந்த ஒரு புலரிக்கும் பழமையின் சாயல் இல்லை

ஆனாலும் யாவும் அலுத்துப்போகின்றன

2.

கனவுகளை இழப்பதுதான் வயதாதல்

முன்பெல்லாம் உள்ளே ஒன்று என்னை இயக்கியது

நான் இதுவல்ல என்ற குரலில் ஓயாத உச்சாடனம்

கையில் கிடைத்தவை பொருளற்றுப் போக

தொடுவானத்தில் தொங்கியது வாழ்நாள் இலக்கு

இரத்தம் சுண்டினால் பேருருக்கொண்ட

இந்த பிரபஞ்சமும் சுருங்கக் கூடுமோ

எனக்கென

இப்பெரிய உலகத்தை அளித்திருக்கிறாய்

அதன் ஒரு அணுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

உன் கருணையை

வீணடித்து வருகிறேன்

என்னைப் பொறுத்துக்கொள்

என் வீணடிப்பு மகத்தானது

உன் உத்தேசத்தை மீறியது

3.

இம்முறை உன்னை எதிர்கொண்டபோது

நானில்லை

ஓராயிரம் கோலங்களில் கண்டவன்தான்

அசந்து விட்டேன்

என் நாள் அந்தியைத் தீண்டிவிட்டது

இரவுகளில் மாத்திரைகள் துயிலச் செய்கின்றன

முதல் முறை வரப்போகும் தாக்குதலுக்கு

நாள்தோறும் காத்திருக்கிறேன்

பிள்ளைகள் வளர்ந்து வருகிறார்கள்

வங்கி இருப்பில் முன்னேற்றம் இல்லை

நரை கூடிக்கூடி வருகிறது

இரத்தச் சர்க்கரை சிலபோது அச்சுறுத்துகிறது

அலுவலக நாளில் ஒவ்வொரு மாலையும்

அசதியில் உடல் துவண்டு விடுகிறது

குறுக்கும் தோள்பட்டையும் நிரந்தர குடைச்சலில்

என் இருப்பின் மீது நிழலைப் பாய்ச்சும் தருவாக நீ

கற்றல் குறைபாடு கொண்ட உன் மகளை நான் பார்த்திருக்கக் கூடாது

4.

எங்கு சென்றாலும் அலுவலகத்தையும்

துாக்கிச் செல்கிறேன்

ஒரு குமாஸ்தா

குமாஸ்தாவாக வாழ சபிக்கப்பட்டவன்

அவன் சிந்தனைக் குறுகல்களுக்காக

நன்னடத்தை விதிகளை குற்றஞ்சாட்டுவது பிழை

குமாஸ்தா மனநிலையோடு

கவிதை வாசிக்கிறேன்

கவிதை எழுதுகிறேன்

என் சொற்களும் குமாஸ்தாக்களைப் போல

கூனிக்குறுகி நடுங்கி நிற்கின்றன

சத்தியம் கொண்ட சொற்களை

பாரதுாரமாக ஒதுக்கி வைக்கிறேன்

சஞ்சலம் தாராத கவித்துவங்களை மட்டுமே

பொதுவெளிக்கு அனுமதிக்கிறேன்

என் அந்தரங்கத்தில் ஆயிரம் காதலிகள்

நான் கவிஞன் என்றாலும்

கலைஞன் என்றாலும்

குமாஸ்தா ஆகவே எஞ்சுகிறேன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *