இராயகிரி சங்கர் கவிதைகள்

 

1.

மாதவிடாயைப் போல

ஈ.எம்.ஐ.கள்

நாள்கள் நெருங்கியதும்

கால்களில் வலியெடுக்கும்

தொடைகள் சுமைதாளாமல் சோர்ந்து போகும்

ஒரே தவணையில் வாங்கிய ஒன்றை

ஆயுட்காலம் முழுக்க நகர்த்தும் எத்தனிப்பு

கணக்கிட்டுப் பார்த்தால்

சட்டப்பூர்வமான வழிப்பறி

 

ஒரு வீடும்

வீட்டிற்குத் தேவையான  தட்டுமுட்டுச்சாமான்களும்தான்

இதோ இப்பிறவியை மாதங்களாகத் தரித்து

தொலைத்துக் கொண்டிருக்கிறேன்

2.

ஒரே பாதை

சலித்துவிடுகிறது

சலிப்பு  தொண்டைவரை பரவுகிறது

நெஞ்சில் வெறுமையின் கொத்துச்சளி

தீர்ந்து கொண்டிருக்கும் நாட்களைக் குறித்த போதம்

உடனிருக்கும் நிரந்தர பதற்றம்

ஏங்கியவைகள் குறித்தும்

அடைந்தவைகள் சார்ந்தும்

ஐந்தொகையிட்டால் மிஞ்சுவது ஏக்கங்கள்

வீணே கழிந்துவிட்டது என்பதற்காக

யாரை நோவ

உள்ளொலியை புறக்கணித்தேன்

இச்சைகளின் பின்னே அலைந்து திரிந்தேன்

முடிவற்று நீளும் இரவும் பகலும் ஒன்றே

பின்னப்பட்டு நிற்பது

நானும் என்னுடையதும் ஆன பிம்பங்கள்

உடைத்து நொறுக்கி அள்ளி

உள் பைக்குள் சேகரித்துக்கொண்டேன்

இருத்தலியல்  கேள்விகளால் என்னை விரட்டிவரும்போது

கைகள் நடுங்க ஒரு சில்லுவை எடுத்து

உற்று நோக்கினால்

எனக்கு மிக விருப்பமான நான்

பல நுாறு நான்களில் ஒன்றான நான்

3.

இறுதியில் விலைபோகும் சாத்தியமே உள்ளது

இளமையில் இலட்சியவாதம் மலிவானது

உடல் வலுவா உள்ளம் பற்றிய சரியான புரிதலின்மையா

பெருந்திரளின் திசைவழியை கைவிட்டு

தனி ஒருவனின் பயணமாக அமைத்துக்கொள்கிறோம்

தனித்த பயணியின் நிழல் கூட அத்தனை துயரம் படிந்து தவழ்கிறது

ஒற்றைப் பாதச்சுவடுகளை காணும் போது

நெஞ்சில் துக்கம் பீறிடுகிறது

ஒன்றில் இருந்து ஒன்றாகப் பிரிந்து

நீண்ட பாதையாக விரிந்து கிடந்தாலும்

தனியர்களை காலம் கைப்பற்றிவிடுகிறது

நரம்புகள் தளரும் காலத்தில்

லட்சியவாதம் பேசியவர்களின் சொற்களில் பாசி படர்ந்துவிடுகிறது

நம்பி அவர்களைத் தொட முடிவதில்லை

வழுக்கித் தரையில் விழவேண்டும்

அடியோ விதைப்பை வரை வீங்கச் செய்கிறது

4.

மொழி புரியாத நிலம்

பரந்து கிடந்தென்ன

மரங்களும் விலங்குகளும் மனிதர்களும்

அந்நியமல்ல

உருவங்கள் ஏற்கனவே அறிமுகம் ஆனவைதான்

உணவுகளும் உணர்வுகளும் ஏகதேசம் ஒன்றே

உதடுகள் ஒட்டாமல் பேசினாலும்

உணர்ச்சித் தெறிக்க கத்தினாலும்

சொற்கள் திறந்து கொள்வதில்லை என்பதுதான் துயரம்

கண்கள் மட்டுமே ஆறுதல்

அவை காற்றில் வழிகாட்டி கூட்டிச் செல்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *