சொல் உடையார் கவிதைகள்

1.
சித்தார்த்தனும் சீவகனும் வந்து சென்றார்கள்
வன்முறை வழக்கமற்றுப் போயிற்று
ஜீவகாருண்யம் ஜீவநதியாகி
அருட்பெருங் கருணையே
தனிப்பெருஞ் சலனம்
அரைப்பாலைக் குடிகளின் மூர்க்கமோ
குலமூப்பன்களின் வாய் முகூர்த்தமோ
வரிசைப்படுத்தப்பட்டவர்கள்
மீண்டும் தங்களின் படிநிலைகளை கலைத்து
தங்களைத் தாங்களே தரப்படுத்திக்கொண்டார்கள்
அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்றார்கள்
யுகங்கள் மாறின
இன்னும் ஒலிப்பது
இவ்விதம் இங்கே அமைவது
யாரோ ஒருவர்தான் என
குற்றஞ்சாட்டும் குரல்த்தொகை மட்டுமே
மண்ணில் மனிதன் உள்ள மட்டும்
ஒலிக்கும் நித்தியம் அதுவென்றால்
மனிதனுக்கு மீட்சி
பிறகெப்படி

2.
அந்தி நிகழும்போது
உனக்கு நரையேறுகிறது
ஒவ்வொரு அந்திக்குப் பின்னரும்
வருவது நற்பேற்றின் ஒளிக்கீற்றாக இருக்கக்கூடும்
நடுப்பகல்களைப் போல அந்திகள் இருப்பதில்லை
அவை கவித்துவம் கொள்கின்றன
கவலைகள் அளிக்கின்றன
பிரிந்த காதலிகளை நினைவூட்டுகின்றன
கடந்து சென்றவைகளின் மீது காவியச்சுவையை ஏற்றுகின்றன
அந்தியில் மனிதர்களைக் காண்பது
அனைத்தையும் எளிதாக்கிவிடுகிறது
கொலை செய்யும் உத்தேசம் கொண்டிருந்தவனைக் கூட
பொன்னிற அந்தி
சாந்தம் கொள்ளச் செய்கிறது
அந்திகளை அநீதிகள் வெறுக்கின்றன
அநீதிக்கு இருளே உற்ற துணை
அந்தி விரைவில் முடிய
அநீதி வேண்டிக்கொள்கிறது
இரவுக்கு முன் வரும் அந்தியை அறிந்திருந்தாலும்
கால்களை மாற்றி நின்று கவலைக்கொள்கிறது
அந்தியைத் தொட்டுத்துாக்கி
இடுப்பில் வைத்து பாலுாட்டும் அன்னையே
இருளை கைக்கொண்டு புலரியை அனுப்பிவை
ஒளித்தீற்றலாய் உன் துாரிகை வரைவது
நாள்தோறும் தனித்த விடியலாய் இருக்கட்டும்.

3.
ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை
ஊடாடிக் கலப்பதனால் தனித்துவம் மங்கிவிடும்
காற்றடித்த போது கலையும் வடிவங்களை
இலைகள் கட்டுப்படுத்துவதில்லை
துருவத்தில் உருகும் பனிப்பாறை
உண்டாக்கிவிடுகிறது
ஒற்றைப்பனையில் உராய்ந்து
சாமத்தில் கீச்சிடும் கிடுகின் ஓசையை
தொப்பென்று விழுவது பேயாகவோ
ஆங்காரம் அடங்காத முனியாகவோ
தலைச்சன் பலிகொண்ட காளியாகவோ
இருக்கலாம்.
இருந்தாலும்
மண்ணோடு வேர்களுக்கு என்ன பிணக்கு
காற்றில் மிதந்து காற்றை ருசித்து
காற்றாகிவிடும் பேறு வாய்த்த பிறகு
மண் ஒரு பொருட்டா

4.
பித்தனின் மௌனம் வலியால் உறைந்தது
தவமோ வேள்விகளை மறுப்பது
அகம் குழைந்து விழி நீர்க்க
வெற்றுடலில் படிவது காலத்தின் சாம்பல்
ஊழித்தீயில் சுடரும் ஒளிர்வில்
தரைவீழும் பிம்பங்களில்
தனித்தலைகிறது தலைமுறைகளின் சாபம்
உடுக்கை இழந்தவனின் இடுக்கண் களைய
யாருமில்லை இங்கு
ஈரேழ் உலகும் நடுங்க
நகைக்கிறான் பித்தன்.
பிறைசூடிய போதும் சுடலையாகும் பேறு பெற்றவன்
லலிதத்தில் சுழன்றாடும் பாதச்சுவடுகளை
பின்தொடர்ந்து செல்லும் புதியவனே
பித்தனின் சொற்களுக்கு திக்கில்லை
காரண காரியங்களை தாண்டிக்குதித்தலே
பித்தனாதல்.
தாண்டிக்குதி அல்லது சுடலையாகு
மறுப்பாய் எனில்
நீறாவது திண்ணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *