ஷேக்ஸ்பியர் கவிதைகள்

[1]

 

ஆகச்சிறந்தவர்கள் பெருக வேண்டுமென விழைகிறோம்  

ஏனெனில் பெருக்கத்தின்வழி  

அழகின் ரோஜா என்றும் அழியாதிருக்கும்.  

அவர்கள் காலத்தில் மறைகையில்

அவர்களது நினைவு  

இளமையின் அழகாய் மகன்களில் திகழும்

 

ஆனால் நீயோ ஒளிரும் உன் கண்களை மட்டுமே கருதி

வாழ்வின் தீபத்தை தன்விருப்பால் எரிக்கிறாய்  

வளங்களின் மிகுதி மேல் பஞ்சத்தைப் போர்த்துகிறாய்  

எனவே உனக்கு நீயே எதிரி  

இனிய உனக்கு நீயே கொடூரன்.

 

உலகின் மிகஅழகிய அணி நீ 

வசந்தத்தின் தலைமைத் தூதனும் நீயே  

உன் அழகின் பரிசிலை உனக்குள் புதைத்து,  

உலோபத்தினால் செல்வத்தை அழிக்கிறாய்.

 

உலகிற்காக தயை கொள்க!  

மறுத்தால், உலகுக்கு உரியதை  

உன் கல்லறையால் உண்டு முடிப்பாய்.

 

[2]

 

கூதற்காலம் பல உன் நெற்றியைத் தாக்குகையில்  

உன் அழகின் களத்தில் அகழிகள் நெளியும்

இன்று மெச்சப்படும் உன் இளமையின்  

பெருமைச் சின்னங்கள் எல்லாம்  

அன்று மதிப்பை இழந்து சிதைந்த குப்பையாகும்.

 

எங்கே உனது அழகு?  

எங்கே உனது பழைய நாட்களின் செல்வக்குவை?  

என்று கேட்கப்படும்போது  

தன்விழைவின் பேராசையினால் நீ கொள்ளும் அவமானத்தை  

உன் குழிவிழுந்த கண்கள் மட்டுமே சொல்லும்.

 

அக்கேள்விகளுக்கு எல்லாம் ஒரே விடையாக

உன் அழகின் வழித்தோன்றலான 

உன் மகனை நிறுத்தி

“என் வாழ்வின் குறிப்பு: முதுமைக்கு ஈடு”

என்று சொல்வாய் எனில்

நீ பெறும் புகழை நினைத்திடுக

 

நீ முதிர்ந்தாலும் உனது மகன் இளமையோடு இருப்பான்;  

உனது ரத்தம் குளிரும்போதும்  

வெம்மையோடிருப்பதைக் காண்பாய்

 

[3]

 

இன்னொரு முகத்தை உருவாக்கும் நேரமிதுவென  

ஆடியில் நீ பார்க்கும் முகத்திடம் சொல்லிடு  

உன் அழகின் புத்துருவாக்கம் நிகழாவிடில்  

உலகை வஞ்சிக்கிறாய்  

அன்னையாகப் போகும் ஒரு பெண்ணைத் தடுக்கிறாய்.

 

தன் தொடப்படாத சூலகம்  

நீ செய்யும் வேளாண்மையைப்போல்  

பொலிய வேண்டுமென விரும்பாத அழகி யார்?  

அல்லது  

தன்விருப்பின் கல்லறையில் சந்ததி இன்றி  

கிடக்க விரும்பும் மூடன்தான் யார்?

 

உன் அன்னையின் ஆடி நீ  

அவள் உன்னிலேயே தன்  

இளமையின் வசந்ததைப் பார்க்கிறாள்  

அதைப்போலவே நீயும்  

உன் முகத்தில் சுருக்கங்கள் நிறையும்போதும்  

உன் மகனிடம் உன் இளமையின் அழகைக் காண்பாய்

 

இல்லையெனில் வாழும்போதே மறக்கப்படுவாய்  

தனித்து நீ இறக்கும்போதே  

உன்னுடன் உன் அழகும் இறக்கும்.

 

[4]

 

அழகை வீணாக்குபவனே

உன் அழகின் அழியாத் தொடர்ச்சியை

உன்னில் மட்டும் வைத்துக்கொள்வது ஏன்?

இயற்கையின் கொடையென எதுவுமில்லை

எல்லாம் வெறும் கடன்தான்

இன்னும் சொன்னால்

அவள் பகிர்பவர்களுக்கே மேலும் தருகிறாள்.

 

அழகிய கருமியே,

வள்ளல்தனத்திற்கு வழங்கப்பட்ட பெருநிதியை 

வீணாக்குவது ஏன்?

லாபம் கொள்ளாத வட்டிக்காரனே,

குவிந்த பெருஞ்செல்வம் முதலாக இருந்தும்

அதை உன்னிலேயே பூட்டி வைப்பது ஏன்?

 

உன் வணிகம் எல்லாம் உன்னோடு மட்டும் –

உன்னை நீயே ஏமாளி ஆக்குகிறாய்

இயற்கையின் ஓலை அழைத்த பின்பு

பேரேட்டின் செலவுப் பக்கத்திற்கு 

என்ன பதில் சொல்லுவாய்?

 

பயனாகாத உன் அழகெல்லாம்

உன்னோடு கல்லறையில் –

பயன்பட்டிருந்தாலோ உனக்குப் பின்னும்

உன் அழகு ஆளப்படும்.

 

[5]

காலத்திற்கு 

இப்போது கனிவின் முகம்

உன் கண்ணோட்டத்தை அழகாக்கி

பிற கண்களை அதற்காக ஏங்க வைக்கிறது

பின்பு ஒரு நாளில்

காலம் ஏந்தும் கொடுங்கோலை

மிகத் திறத்துடன்

இன்றைய அழகை 

கோரமாய் மாற்றும்

 

வசந்ததை ஓட்டிச் செல்லும் ஓய்வறியாத காலம்

கொடுமையான பனிக்குள்

அதைப் புதைக்கிறது

குருத்துகளை பனி உண்ணும்

இலையெல்லாம் உதிர்ந்து போகும்

அழகின்மீது பரவும் வெள்ளைப்பனி

வெறுமை வெறுமை எங்கும் வெறுமை

 

கண்ணாடிக்குடுவையின் சிறையில்

கோடையில் வாற்றிய

பன்னீர் மட்டும் இல்லாவிடில்

அழகும் அழகின் விளைச்சலும்

பறிக்கப்பட்ட பின்பு

அழகும் இல்லை

அழகின் நினைவும் இல்லை

 

வாற்றி எடுத்தபின் 

மலரைப் பனி சூழ்கையில்

வடிவம் அழிந்தாலும்

மலரின் சாரம் என்றும் வாழும்

 

[6] 

வாற்றப்படுவதற்கு முன்னர்

பனியின் வெறிகொண்ட கரம்

உன்  வசந்தத்தை அழிக்க விடாதே

நிரப்பு சில பன்னீர்க் குடங்களை – அவையே

அழகின் பெருஞ்செல்வம்

தன்னைத்தானே அழிப்பதற்கு முன்னர்

நீ எடுத்து வைக்கும் பொற்குவை

 

நீ எடுத்துவைத்த செல்வம் ஒன்றும்

விலக்கப்பட்ட கந்துவட்டிக்கல்ல – கடனாளி மகிழ்ந்திருக்கையில் மட்டும்

உன்னால் இன்னுமொரு நீ விளைந்தால் –

மகிழ்வு மட்டுமே கடனாளிக்கு

ஒன்றுக்கு பத்தாக நீ விளைந்தால்

மகிழ்வும் பெருகும் பத்தின் மடங்கில்

 

நீ மட்டும் இருப்பதைவிட

நீங்கள் பத்துபேர் இருப்பின் மகிழ்வே

பத்துபேரும் இன்னும் பதின்மரைத் தந்தால்

உன் வம்சவெளிக்கு முன்பு

உன்னைக் கொல்லும் இறப்பு என்ன செய்யும்?

 

நீ உன்னை மட்டும் கருதும் அடம் 

கொஞ்சமும் வேண்டாம்

இறப்பு உன்னை வாகைசூடி 

புழுக்களை உன் வம்சமாய் நிரப்புவதற்கு

உன் அழகோ மிகவும் மிகவும் மிகவும் அதிகம்.