யாமார்க்கும் குடியல்லோம்

பூமிக்கு அடியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்ற கருத்தாக்கத்தை முதன்முதலாக ஓரிகன் மாகாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல் ஆய்வாளரும் வானியல் நிபுணருமானரிக் கால்டுவெல் என்ற அமெரிக்க விஞ்ஞானி முன்வைத்தார். மிகக் குறைவான வளர்சிதை மாற்றங்களுடன், கிட்டத்தட்ட ஒன்றும் செய்யாமல் அவை நடைபிணங்களாகக் கிடக்கின்றன என்றார். இதைத் தொடர்ந்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின் ஏரியல் ஸ்மித் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இயற்பியலாளர் பூமிக்கு அடியில் மனித உயிர்களும் இருக்கக்கூடும் என்ற கருத்தை முன்வைத்தார்.

புவி வெப்பமடைதல் அதிகரித்து வந்த காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது. காற்று மாசுபாட்டினால் பிராணவாயுவின் அளவும் குறைவுபட்டு ஐநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆக்சிஜன் குறைவாக இருந்த காலத்தில் உயிர்வாழ்ந்த உயிரினங்கள் திரும்ப உயிர்க்கத் தொடங்கியதாக அவர் கருதுகிறார். இந்த நிலத்தடி நீர்மட்டம் குறைவுபட்டதால் அவை இயற்கையான சுரங்கங்களாக மாறி அங்கு பல்வேறு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற நிலை உருவானதாகக் குறிப்பிடுகிறார். மனித உயிர்களைப் பொறுத்தவரை குறைவான பிராணவாயுவைக் கொண்டு உயிர் வாழத்தக்க ஓர் உடற்கட்டமைப்பு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகிவிட்டதாகவும் அதற்கான சான்றுகளையும் முன்வைக்கிறார். சூழல் மாசுபாட்டின் காரணமாகச் சுவாசிக்கும் காற்றின் அளவு குறைவுபட்டு, வளர்சிதை மாற்றங்களில் மாற்றம் ஏற்பட்டு நிலத்துக்கடியில் வாழ்வதற்கான உடலமைப்பை இவர்கள் பெற்றிருக்கலாம் என்கிறார். எங்கோ ஓரிடத்தில் மனித இனம் தொடர் மரணங்களைச் சந்திக்க, அதிலிருந்து தப்பிப்பதற்காக இப்படியொரு பிழைத்திருக்கும் வழியை அவர்கள் கண்டடைந்திருக்கலாம் என்கிறார். இதற்கு ஆதாரமாக ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் ஆப்பிரிக்க மலைப் பகுதிகளில் ஏற்படும் அதிர்வுகளைக் காட்டுகிறார்.

சென்ற மாதம் இந்தக் கட்டுரையை வாசித்ததிலிருந்து என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. என் காலுக்கடியில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யார் கண்டது எனக்கும் அவர்களுக்கும் இரத்த உறவு இருக்கலாம். இது என்னைத் தூங்கவிடாமல் பண்ணியது. வார இறுதி ஓய்வு நாட்களில் புவி அதிர்வுமானியை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு மலையாகத் தேட ஆரம்பித்தேன். முதலில் புதை படிவங்கள் அதிகம் கிடைத்த பகுதிகளில் தேடத் தொடங்கினேன். எந்த அறிகுறிகளும் தென்படவில்லை.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தேடியும் எந்த விடையும் கிடைக்கவில்லை. தி ஜர்னல் ஆஃப் பிசிக்ஸ் இதழைத் தொடர்ந்து வாசித்து வந்தேன். ஏரியல் ஸ்மித்தின் ஆய்வில் ஏதும் முன்னேற்றம் இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கவனித்து வந்தேன். ஆனால் ஆரம்பகட்டத்திலேயே பல்வேறு இயற்பியலாளர்கள் அவரது ஆய்வை எதிர்த்துக் காட்டமாக எழுதினர். அதாவது பாறைகளில் ஏற்படும் அதிர்வை வைத்து நிலத்தடியில் மனித உயிர் வாழ்வதாகச் சொல்வது அபத்தம். இந்த அதிர்வுகள் அமாவாசையில் மட்டுமின்றி பௌர்ணமியிலும் நிகழ்வதை உறுதிப்படுத்தியிருந்தார்கள். இது நிலவுக்கும் பூமிக் கிரகத்துக்கும் உள்ள தொடர்பினால் ஏற்படுவதாகக் கூறினர். நிலத்தடியில் உள்ளவர்கள் வாழ சாத்தியமில்லை; காரணம் அங்கு பிராண வாயு கிடைப்பதில்லை. பல்வேறு நச்சு வாயுக்கள் நிறைந்திருப்பதால் இப்படியொரு கருத்தை எண்ணிப் பார்க்கவும் முடியாது என்றனர். இதன்பின் இது குறித்துக் கட்டுரைகள் எதுவும் இதழில் வெளிவரவில்லை.

பூமிக்குமேல் வாழும் உயிர்களில் எண்பது சதவீதத்துக்கும் மேல் இன்னும் இனம் காணப்படவில்லை. உங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் நீங்கள் பார்க்கும் ஒரு பூச்சிக்கு இதுவரை ஒரு பெயர் இல்லாமல் இருக்கலாம். இது வேடிக்கையானது. அறிவியல் இந்த நிலையில்தான் இருக்கிறது. இதில் எங்கு பூமிக்கு அடியில் இவர்கள் ஆராயப் போகிறார்கள். ஆனால் இதற்குள் பல கோடிகள் செலவில் ஒருசிலர் செவ்வாய்க்கிரகத்தில் குடியேறியிருந்தனர். அவர்களுக்குத் தேவையான பிராணவாயுவை உற்பத்தி செய்ய செவ்வாய்க் கிரகத்தில் சில உற்பத்தி ஆலைகளும் ஏற்படுத்தப்பட்டன. தண்ணீர் மறுசுழற்சியைச் சகிக்கமுடியாமல் பலர் திரும்பி வரவும் செய்தனர்.

கழுகுமலையில் உள்ள மலையடிவாரத்தில் ஒரேயொருமுறை 3.2 அளவில் அதிர்வை உணர்ந்தேன். ஆனாலும் இது அர்த்தமில்லாததாக இருக்கலாம் என்ற விரக்தி என்னைத் தளரச் செய்தது. எதற்கு இப்படித் தேடுகிறேன்? சூரிய ஒளி படாமல் பிராணவாயு இல்லாத அல்லது குறைந்த பகுதிகளில் மனிதன் வாழ முடியுமா? ஆனால் முந்நூறு ஆண்டுகளுக்குமுன் ஆப்பிரிக்காவில் இலட்சக்கணக்கில் மக்கள் காணாமல் போயினர். அவர்கள் இருந்த தடமே இல்லை. இறந்து போனதற்கு அடையாளமாக உடல்கள் ஏதும் கிடைக்கவும் இல்லை. அரசாங்கம் விரிவான தேடலை மேற்கொண்டும் எதையும் கண்டறிய முடியவில்லை. பக்கத்துக் கிராமங்களுக்கும் சில குடும்பங்களைத் தவிர யாரும் குடிபெயர்ந்திருக்கவில்லை. அந்த மக்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து எந்தத் தடயமும் இல்லை.

இந்த நேரத்தில்தான் இந்தத் தேடலையே கைவிட்டுவிடத் தோன்றும்படி இடியாக அந்தச் செய்தி வந்தது. ஏரியல் ஸ்மித் இறந்துவிட்டார். ஆப்பிரிக்காவில் ஒரு மலையடிவாரத்தில் ஓநாய்களால் குதறப்பட்டுச் சிதிலமடைந்த நிலையில் அவரது உடலைக் கண்டெடுத்திருந்தார்கள். இதற்குப் பின்பு ஏற்பட்ட விரக்தியும் மனச்சோர்வும் தாங்க முடியாததாய் இருந்தது. எனது தேடலை அப்படியே மூட்டைகட்டி வைத்துவிட்டேன்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாயிற்று. நான் இது விசயங்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட நினைப்பதுகூட இல்லை என்கிற நிலையில் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. எனக்கும் மனைவி இருக்கிறாள்; இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கை வழக்கம்போல ஓடியது. பிள்ளைகளுக்கு வரலாற்று நினைவுச்சின்னங்கள் உள்ள இடங்களுக்குக் கூட்டிப் போக எனக்கு ஆர்வமிருந்தாலும் ஆளைவிடு என்று ஓடுகிறார்கள். எக்ஸ்பாக்சில் விளையாட்டு, காணொளிகள், தொலைக்காட்சி, இணைய உலாவல், கைபேசி என்று கண்விழித்ததிலிருந்து எப்போதும் ஏதாவதொரு பெட்டிக்குள் அவர்கள் நுழைந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் என் அம்மா ஊரில் அவர் சிறுவயதில் வாழ்ந்த வீடு விலைக்கு வருவதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்றேன். வீடு எப்போதோ இடிந்துவிட்டது. அந்த இடத்தை வாங்கி அம்மாவுக்குத் திரும்பப் பரிசளிக்க ஓர் ஆசை. சித்திரைத் திருவிழா நேரம் வேறு. அங்கேயே பத்துநாட்கள் தங்கியிருந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுப் போகலாம் என்று எண்ணமிருந்தது.

கூட்டுறவுச் சங்கத்துக்கு எதிரில் நியாயவிலைக்கடை இருக்கிறது. அதன் மேல் ஒரு மச்சு உண்டு. அங்கு வைத்து பலமுறை ஊர்க் கலைநிகழ்ச்சிகளைச் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். சும்மாயிருக்கும் நேரத்தில் அங்கு உட்கார்ந்து பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசுவேன். ஒருநாள் இரவு வைத்தி நியாயவிலைக்கடையில் கல்படியில் உட்கார்ந்து பக்கத்தில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தான். நானும் அவன் அருகில்தான் இருந்தேன். அப்போது கடையை ஒட்டியிருந்த இருண்ட சந்திலிருந்து காது கூச்சலெடுக்கும்படி உயர் அழுத்த ஒலியொன்று வந்தது. தாங்கமுடியாதபடி தலையைக் குடைவதாக அது இருந்தது.

‘ங்கொம்மாள டேய்…’ என்று வைத்தி சத்தம் கொடுத்ததும் சப்தம் நின்றது.

‘என்ன வைத்தி, அங்க என்ன இருக்கு?’

‘அது உள்ள பொந்துக்குள்ள ஒரு சனம் கெடக்கு. தாயோளி எங்கிட்டாப்ட செம்மமோ. இங்கினி வந்து இருந்துட்டு நம்ம உசுர வாங்குது. எப்படி ஊளையிடுதுவ பாத்தியா’

‘இந்தக் கடவுக்குள்ளியா?’

‘இல்லப்பா, கடவுக்கு அடில, சவம் எப்பிடித்தான் உள்ள போனதுவளோ, எப்பிடித்தான் இருக்குதுவளோ’. எனக்குப் புல்லரித்தது. நான் மெல்ல எழுந்து கடவுப்பக்கம் போனேன்.

’ஏயெய்யா, எட்டிக்கிட்டிப் பாத்துராத. அவனுங்க பிசாசுங்க. இப்படித்தான் சம்முவம் கொல்லைக்குப் போறேன்னு கீழ என்னவோ தெரிதேனு எட்டிப்பாத்துருக்கான். மருளடிச்சது கெனக்கா ரெண்டுநாக் கெடந்து செத்துப்போய்ட்டான்’

திரும்ப வந்து வைத்தி அருகில் அமர்ந்தேன். பீடி தீர்ந்ததும் வைத்தி எழுந்துகொண்டான். பக்கத்தில் இருந்தவரும் வாசலோரம் துண்டை விரித்துப் படுத்துவிட்டார். நான் திரும்ப கடவை நோக்கிச் சென்றேன். எனக்குள் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது. இந்தளவு சப்த அழுத்தம் இருந்தால் நிச்சயம் அது பாறையில் அதிர்வை ஏற்படுத்தக் கூடியதுதான். நான் இத்தனைகாலம் தேடியது எனக்கு அருகிலேயே இருந்திருக்கிறதா?

வாய்க்காலில் சாக்கடை கன்னங்கரேல் என்று இருளில் இருளாக ஓடியது. கடவு ஓரமிருந்த வாய்க்கால் திண்டில் கால்வைத்து ஏறி சுவரை ஒருபக்கமாகப் பிடித்துச் சாய்ந்தபடி நடந்தேன். நீண்ட கடவு. கிட்டத்தட்ட அந்தப்பக்கம் இருபது வீடுகள் வரிசையாக இருக்கும். பாதித்தூரம் வந்ததும் கீழிருந்து மங்கலாக வெளிச்சம் வந்த இடத்தில் நின்றேன்.

எந்தச் சத்தமும் இல்லை. மேல் வீட்டில் பாத்திரம் நகர்த்தும் சத்தமும், பானையில் நீர் கோரும் ஒலியும் கேட்டது. அது ஒரு மிகச்சிறிய இடுக்கு. அந்த மங்கலான ஒளியை உற்றுக் கவனிக்க உள்ளே ஆட்கள் தெளிந்துவர ஆரம்பித்தனர்.

அவர்கள் உடலில் பால் ஒளிபோல ஒரு சாயலுக்கு சுடலை நீறு பூசிக்கொண்டு திரியும் அகோரிகளைப் போல உடலெங்கும் ஏதோ பூசியிருந்தனர். நீண்டு சடைசடையாய்த் தொங்கும் முடிக்கற்றைகள். எல்லோரும் நான்குகால் விலங்குகளைப் போல நகர்ந்தனர். ஒருவகையில் குரங்குகளைப் போல அவர்களது அசைவுகள் இருந்தன. சின்னக் குழந்தைகள் தரையில் எதையோ சுரண்டித் தின்று கொண்டிருந்தனர். சரியாகத் தெரியவில்லை. இன்னும் உற்றுக் கவனிக்கலாம் என்று கையை நகர்த்துகையில் கை வழுக்கி சொத்தென்று வாய்க்காலில் ஊன்றினேன். பதட்டத்துடன் நகர்ந்து அந்தத் திண்டில் நிலைப்படுத்திக் கொண்டு நின்றேன். உள்ளேயிருந்து வந்த மங்கலான வெளிச்சம் முற்றிலும் அணைந்துவிட்டது. எங்கும் முழு அமைதி. அன்று அமாவாசை.

கிட்டத்தட்ட ஐந்துநிமிடம் ஆகியிருக்கும். இருட்டில் எதுவும் தெரியவில்லை. மெல்ல நகர்ந்து அந்த இடுக்கின் அருகில் முகம் வைத்து உற்று நோக்கினேன். ஒரேநேரத்தில் சொல்லிவைத்ததுபோல் நெற்றிமுனையில் பளீரென்று சூரியன் உதித்ததுபோல் ஒளி. இடுக்குக்குள் நூற்றுக்கணக்கில் கண்கள். கண்களெல்லாம் ஒளி பீய்ச்ச, ஒளியெல்லாம் என் முகத்தில் உமிழ ஹாவென்று திகைத்தநிலையில் அப்படியே சாக்கடைக்குள் விழுந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *