மகாகர்த்தா

நிசப்தத்தின் புகலிடமான அந்நிலத்தின் மத்தியில் விரலொன்று மெல்ல கீறி கொண்டு எழும்பியது.

சங்கீதத்தின் ஆன்மாவை சூறையாடின சஞ்சீவினி மகிழ்ச்சியாக பாடி கொண்டு வந்தாள். வாழ்க்கையின் மீது வெறுப்பு கொண்டதால் பெயர் தெரியா ரிஷி அவளுக்கு சாகாவர்ச் சாபத்தை வழங்கினார். ஆம், அவள் இருப்புக்கு இறப்பு என்பது கிடையாது.

என்ன செய்வதென்று தெரியாமல் ஊரும் தேசமுமாக சுற்ற ஆரம்பித்துவிட்டாள். சக்தியை பயணம் மூலம் கழிப்பதும் மற்றும் உறங்குவதுமாக தன் அழியா நேரத்தை செலவு செய்து கொண்டிருந்தாள். 

சஞ்சீவினி ஆடி நடந்து கொண்டிருக்கையில் ஊதா நிற பூவொன்று அவள் கண்ணை பறித்தது. சரேலென்று கீழே உட்கார்ந்து அப்பூவை ஆனந்தமாக பறித்தாள். ஒரு சதை குழம்பின கை அவள் தோள் மீது ஐக்கியம் அடைந்தது. அவள் திடுக்கென திரும்பினாள். சதைகள் பிய்ந்த நிலையில் முகம், ஆங்காங்கே எட்டி பார்த்த எலும்பின் சுவடுகள், வாய் மெல்ல அசைய ஆரம்பித்தது,

“மாயம்மா..” என தன் உதிரி போன புருவத்தை உயர்த்தி கூறினான்.

அவள் பதறி போய் அலறினாள்…!

அந்த அலறல் சத்தம் டென்ட்டில் தூங்கி கொண்டிருந்த நிரஞ்சனை எழ வைத்தது. பயந்துகொண்டு தன் அக்கா  விண்ணரசியை தட்டி எழும்ப வைத்தான். அவள் தூக்க நெரிசலில் அவனை பார்த்தாள். நிரஞ்சன் வியர்வை முகத்துடன்,

“அக்கா.. அந்த சத்தம் கேட்டுச்சா…!”

“என்ன…..”

“இப்போ யாரோ கத்துனாங்கக்கா!”

“என்ன….”

நிரஞ்சன் முகம் வெறுப்பு தொனியில் மாறியது. பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து உத்வேகத்துடன் தண்ணீரை அவள் முகம்மீது ஊற்றினான். நீரின் குளிர்ச்சிக்கு எதிர்பதமான உஷ்ணம் கோபமாக விண்ணரசியிடம் வெளிப்பட்டது. அவள் அவனை அறைய போனாள். ஆனால், நிரஞ்சன் முகத்தில் பூத்திருந்த அசாதாரமான மாற்றம் அவளை சிறிது நிதானப் படுத்தியது. 

“ஏன்டா இப்டி பேயறைஞ்ச மாறி இருக்க”

“அதான் சொன்னேனே.. எதோ பெருசா சத்தம் கேட்டுச்சு அக்கா.. அதான் கொஞ்சம் பதறிச்சு”

விண்ணரசி சிரித்து விட்டு,

“ஆமா.. ஷ்ரேயா கோஷல் இங்க வந்து கான்சர்ட் வைக்க போறாங்க பாரு.. இப்போ நீ நாலாவது படிக்கிற.. பெரிய பையன் ஆய்ட்டடா.. எதாச்சும் பறவ கத்திருக்கும்.. அத போய்ட்டு…”

என சொல்லி கொண்டிருக்கையில் மீண்டும் யாரோ கத்தும் சத்தம் கேட்டது. விண்ணரசி கண்கள் விரிய எச்சில் கூட்டி முழுங்கினாள். அதை கண்ட நிரஞ்சனின் உதட்டோரத்தில் புன்னகை மின்னி மறைந்தது. அவளும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சின்ன பெண்தான் என்று நினைத்து இருப்பான் போலும். 

“ஏ.. என்ன ஜந்து நீ.. யாரு நீ.. கிட்ட வராதா” என காட்டு குரலில் சஞ்சீவினி கத்த ஆரம்பித்தாள்.

“என்ன மாயம்மா.. உனக்கு எதுக்கு பயம்.. விளைவுகளில் கொடிய விளைவு மரணம்.. அதுவே உனக்கு இல்ல.. அப்றம் ஏன் கத்துற”

“மரணத்த விட கொடிய விஷயம் உன் முகமா தான் இருக்கும்.. நான் பயப்பட்றதுல எந்த தப்பும் இல்ல..”

இதை கேட்டவுடன் அந்த சதை குழைந்த மனிதன் சிரிக்க ஆரம்பித்தான். சிரித்த வேகத்தில் அவனின் தாடை ஒரு பக்கமாக சரிந்து உடைந்து போனது. அதை அவன் சரி செய்தான். இதை பார்த்த சஞ்சீவினி புன்னகைக்காமல் இல்லை. சூழல் கொஞ்சம் சமநிலைக்கு வந்தது. 

சஞ்சீவினி திடீரென ஏதோ பொறி தட்டியவாரு பேசலானாள்,

“எனக்கு சாவு இல்லன்ட்டு உனக்கு எப்படி தெரியும்.. யார் நீ” என பொறுமையாக கேட்டாள்.

“பிணம்”

“பிணமா?”

“ஆமா பிணம்.. உயிர் தாகம் கொண்ட பிணம்”

“ஓஹோ.. அப்டியா!…… அப்படினா?”

“நான் சாகும்போது ஒரு சின்ன ஆச இருந்துச்சு.. அது வேற ஒண்ணுமில்ல.. என் பிள்ளைக்கு முத்தம் குடுக்கணும்னு ஒரு ஆச இருந்துச்சு.. ஆனா அந்த மாறி எங்க அப்பா பண்ணதா வரலாறே இல்ல.. கறாரா தான் இருப்பாரு.. அப்படி இருந்தாதான அப்பாவா எனக்கு மரியாத.. இருந்தும் முத்தம் குடுக்க நெனச்சன்.. ஆனா என்ன செய்ய அதுக்குள்ள ஆத்துல தடுமாறி விழுந்து எறந்துட்டன்.. அந்த ஆசையோடு அச்சு உயிர்தாகமா எனக்குள்ள ஒட்டிட்டு இருந்துச்சு.. இந்த சாவ ஜெய்யிச்ச அம்மா.. மாயம்மாவோட கால் தடம் இந்த காட்டுல பட்ட உடனே.. உயிர்தீவிரத்தோட அதிர்வுகளோட‌ விளைவா இந்த ஜடம் மீண்டும் உயிற்பிச்சிடுச்சி”

“ம்ம்.. நல்ல இருக்கே இந்த கத”

“ஓ.. உண்மைக்கு கதைன்னு இன்னொரு பேர் இருக்கா மாயம்மா”

“அட.. மாயம்மா நோயம்மான்னு சொல்லிகிட்டு.. என் பேர் சஞ்சீவினி”

“இப்பேர்ப்பட்ட மாயத்த பண்ணவள மாயம்மான்னு கூப்பிட்றது தான் பொருத்தமா இருக்கும்”

“என்ன மாயமோ.. சாபத்துல இருந்து பொறந்த மாயம்”

“எப்டியம்மா சாவ கடந்த புண்ணியத்த சாபம்ன்னு சொல்றீங்க??”

சஞ்சீவினி அருகிலிருந்த சிறு கல்லை எடுத்து, “இதுவும் ஒரு வகையில சாவ கடந்ததுதான்.. இதுக்கும் எனக்கும் என்ன பெரிசா வித்தியாசம் இருக்க போவுது”

“வித்தியாசம் இருந்திருந்தா.. இந்த எண்ணம் எழாம இருந்திருக்குமோ என்னமோ?”

“எதுக்கு வீண் வியாக்கானம்” என்று சலிப்போடு கூறிவிட்டு திடீரென ரகசியம் சொல்வது போல் மென்மையாக, “இந்த புண்ணியம் உனக்கு வேணுமா” என அவனிடம் கேட்டாள்.

இந்த உரையாடலை மரத்தின் பின்புறமாக விண்ணரசியும் நிரஞ்சனும் நின்று வினோதம் கலந்த பயத்துடன் பார்த்து கொண்டிருந்தார்கள். இவர்கள் கால்களின் அதிர்வுகளை அந்த உயிர்பிழத்த ஜடத்தால் கண்டு கொள்ள இயலவில்லை போலும். 

“இந்த புண்ணியம் எனக்கா.. முடியுமா??”

“கண்டிப்பா.. எனக்கு சாபம் கொடுத்த ரிஷி சொன்ன மந்திரம் இன்னும் என் மண்டைல ஒடிட்டு இருக்கு.. உனக்கும் என் சாபத்த கடத்துறேன்.. அப்போதான் உனக்கு புரியும் என் கஷ்டம் என்னன்னு”. அந்த உயிர்பிழத்த ஜடம் ஒரு வித பூரிப்பு அடைந்தது. 

இதற்கு மத்தியில் நம் புலன்களுக்கு கடந்த தளத்தில் ஒரு காரியம் நடக்க முற்படப்போனது. சஞ்சீவினி தன் சாபத்தை பரப்பும் படலம் முற்றி போய் விட்டாள் கால-வெளியின் இருப்பு கேள்வி குறியாகும் அல்லவா! ஆதலால் காலமும் வெளியும் ஒருங்கிணைந்து தன் இருப்பை தக்கவைத்து கொள்ள திட்டம் தீட்டியது. சஞ்சீவினி மற்றும் உயிர்பிழத்த ஜடத்தின் கால-வெளி தளத்தை மாற்ற போவதுதான் அந்த திட்டம்.

எங்கேயோ போன காற்று திரும்பி அவர்களை சுற்றி குறு சூறாவளியாக உருவெடுத்தது. கற்கள் மழை பொழிந்தன. அவர்கள் மத்தியில் இருந்த மரம் ஏனோ இரண்டாக பிளந்தன.

இவ்வாறு இருப்பியல் மாற்றம் நடக்கும் தருவாயில் அஜ்ஜடதின் கால் பக்கத்தில் பறந்து வந்த ஊதா நிற பூவை நிரஞ்சன் கண்டான். அங்கே நடந்த கூத்து அவன்  பிரக்ஞையில் இருந்து நழுவி சென்றது. நிரஞ்சன் கை பரபரத்து பூவை பறிக்க ஓடோடி சென்றான். பதறிய விண்ணரசி அவனை ஓடிப்பிடிக்க போக புல் தடுக்கி சஞ்சீவினி பக்கம் விழுந்தாள்.

கால-வெளி மாற்றம் அரங்கேறியது..!

டெண்ட்டில் சீனுவும் செம்பருத்தியும் தன் பிள்ளைகளை காணுமென்றமயால் அங்கும் இங்கும் தேடினர். இந்த பரபரப்பின் சஞ்சலத்தை எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஒரு ஆந்தை சிலை பார்த்து கொண்டிருந்தது.

எல்லோருக்கும் அவரவர் பிள்ளைகள் காணவில்லையென்றால் மனம் பதற தான் செய்யும். ஆனால், இவர்கள் கதை வேறு. குடும்பமாக கடைசி முறை இக்காட்டில் கொண்டாடி களித்திவிட்டு இறக்கலாம் என்ற முடிவு. காரணம்? காரணத்தை வைத்து?!

தன் பிள்ளைகளை கண்டுபிடித்து ஒன்றாக சாகலாம் என்ற எண்ணம்தான். ஆனால், அவர்கள் இப்போது இல்லாததால் சாவதற்கு சிறிது நேரம் ஆகும். தற்போதைய நிலையில், அவர்கள் வாழ்வது தங்கள் மகன் மகளை தேடி கண்டுபிடிக்கும் நோக்கத்துக்காகதான் – எங்கே அவர்கள்???!

சஞ்சீவினி கண்களை மெதுவாக திறந்தாள். விண்ணரசி அங்கும் இங்கும் சுற்றி பார்ப்பதை கண்டு மெல்ல எழுந்தாள். அவள் எழுவதை பார்த்த விண்ணரசியின் மனம் படபடப்பு அடைந்தது. சிறிது நேரம் இருவரும் நேருக்கு நேர் பார்த்து கொண்டிருந்தார்கள். முதலில் மௌனத்தை குலைத்தது சஞ்சீவினிதான்,

“யாருடி அம்மா நீ.. என்ன எங்க கூட்டிட்டு வந்திருக்க..”

விண்ணரசி பதற்றத்துடன், “நான்.. நான்.. நான் கூட்டிட்டு வரல.. எனக்கும் எதும் தெரில.. என்ன எடம்.. என்ன எடம்..”

“சரி.. சரி.. கொஞ்சம் மூச்சி விடு.. ஏன் பயபட்ற.. நான் என்ன அவ்ளோ கொடூரமாவா இருக்கன்”

“இல்ல.. அங்க ஒரு ஆள் கூட”

“ஓ.. அந்த பெணத்து கூட பேசுனத பாத்துட்டியா”

“பெணமா!!”

“சரி.. அந்த கதைய விடு..”

சஞ்சீவினியை விண்ணரசி சிறிது நேரம் சிலை போல் பார்த்தபடி இருந்தாள்.‌ பின்பு, முகம் இலகுவாக மாற தொடங்கியது. ஆர்வத்தின் பிடியில் சிக்கி சஞ்சீவினி பக்கத்தில் சென்று,

“யே.. உனக்கும் என்ன மாறி ரெண்டு புருவம் லாஸ்ட்ல மச்சம் இருக்கு” என்று ஆச்சரியத்துடன் சொன்னாள்.

சஞ்சீவினியும் அதை கவனித்து “அட.. ஆமா.. அது சரி.. உனக்கு என்ன மாறி பாடவும் தெரியுமா?”

உயிற்பிழத்த ஜடம் குகையிலிருந்து கண் விழித்தான். நிரஞ்சன் அவன்முன் ஆராயும் தொனியில் நின்று கொண்டிருந்தான். ஜடம் எதுவும் புரியாமல் சுற்றி பார்த்துவிட்டு நிரஞ்சனை கண்டான்.

நிரஞ்சன் அவனை பார்த்து, “உங்க தோள் ஏன் இப்டி இருக்கு?”

“செத்து போனவன் தோள் அப்டி தான் இருக்கும்”

“செத்தவரா நீங்க”

“ஆமா” – அகங்காரம் எழுந்தது

“அப்ரம் எப்டி உயிரோட இருக்கீங்க.. பொய் தான..”

நினைத்த எதிர்வினை வராததால் அகங்காரம் கிழிந்து தொங்கியது.

“இல்ல உண்மதான்.. நீ இப்போ வீட்டுல இருந்து வெளிய போய்ட்டு.. எதுனா மறந்தா போயிருந்தனா.. திரும்பி வந்து எடுத்துட்டு போவள.. அந்த மாறி தான் நானும் வந்திருக்கன்”

“என்ன மறந்துவிட்டு போய்ட்டீங்க.. அப்டி என்ன அவசரம்”

தம்பதிகள் இருவரும் அங்கும் இங்கும் தேடி தோய்ந்து போனர். அவர்களின் மனம் பல எண்ணப் பின்னல்களை பின்னி கொண்டு சென்றது…

“ஒரு வேள பசங்களுக்கு தெரிஞ்சிருக்குமோ – இல்ல அப்டி நம்ம கிட்ட சண்ட போட்டு இருப்பாங்க – சீக்கிரம் சாவனும் – எங்க ஊர் சுத்த போயிட்டாங்க – பிரியாணில வெஷம் வச்சி சாப்பிட்டு மீதி வைப்போம் – எப்டி இருந்தாலும் பசினால வந்து சாப்பிடுவாங்க..”

இவ்வாறு எண்ணச் சுழல் சுற்றி சுற்றி அடிக்க அதன் வாடை ஆந்தையின் சிலையில்பட்டது. திடீரென எங்கிருந்தோ சீறி கொண்டு ஒளி வந்ததை கவனித்தார்கள். ஆந்தையின் கண்கள் ஒளியில் திகழ்ந்தன.

சஞ்சீவினி பாடி முடித்தாள். அவள் முடித்த நொடி விண்ணரசி பாட ஆரம்பித்தாள். அக்குரல் மற்றும் அவள் வார்த்தைகளை வெட்டி வெட்டி கையாளும் திறனை கண்டு சஞ்சீவினியின் மனம் கிறங்கடித்தது. அவள் அந்த பாட்டில் தன்னை மறந்து மிதந்து கொண்டிருந்தாள்.

“என்ன அப்படியே நிக்குற.. வெறுப்பா இருக்கா” என விண்ணரசி வினவுகிறாள்.

“இல்ல.. இல்ல.. இல்ல.. ஒரு துளி கூட இல்ல” என குற்றம் செய்தவள் போல் சொன்னாள்.

“சரி.. சரி.. அதுக்கு ஏன் இப்டி கத்துற” என்று கூறி சஞ்சீவினி பேசிய தொனியை செய்து காட்டி கிண்டல் அடித்தாள். இருவரும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தார்கள். அந்த காடே சிரிப்பு சத்ததால் விழித்தது.

விண்ணரசி சிரித்த முகத்துடன் சஞ்சீவினியின் கையை பிடித்து நடனம் ஆட ஆரம்பித்தாள். இருவர் மனமும் அந்த ஆட்டத்தில் சங்கமித்தது. அடையாளங்கள் யாவும் அர்த்தம் இழந்தது. நடனம் மட்டுமே அங்கு இருப்பு கொண்டது. புற்கள், செடிகொடிகள், பூச்சிகள், பறவைகள், மிருகங்கள், காற்று, காலம், வெளி, பிரபஞ்சம் எல்லாம் அந்த நடனத்தின் பாகமாக திகழ்ந்தன.

சஞ்சீவினியின் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது, “இந்த தருணம் நித்தியம் ஆக வேண்டுகிறேன்.” சஞ்சீவினியின் சாபம் நீங்கியது.

நிரஞ்சன் அவன் பேச்சை தொடர்ந்தான், “இல்ல இல்ல.. நீங்க மறந்துலாம் இருக்க வாய்ப்பில்ல.. அந்த பொருள எடுத்து வைக்கணும்னு நெனச்ச போதே எடுத்து வச்சி இருக்கனும்.. விட்டுட்டா மறக்கதான செய்யும்..”

ஜடத்தின்முன் விரலை நீட்டி,

“முக்கியமான பொருள்னு தெரிஞ்சும் ஏன் முன்னமே எடுத்து வைக்கல?”

அவன் கேட்ட கேள்வி ஜடத்தின் மனதோரத்தில் ஒளிந்து கொண்டிருந்த இருள் மூட்டையை அவிழ்த்தது. அதன் எதிரொலி போல் சுற்றி இருந்த வெளவால்கள் வீறிட்டு பறந்தன. 

“ஆமாப்பா, “நான்” செஞ்ச தவறு தான்.. ஒரு நிமிஷம் பக்கத்தில வந்து உக்கார்ரியா?”

நிரஞ்சன் ஜடத்தின் பக்கத்தில் உட்கார்ந்தான். 

ஜடத்தின் புத்தியில் பின்வருமாறு எண்ணம் தோன்றியது, “அகங்கார நிழல்களில் ஆசையை அடக்கியது பாவமோ!? ஆசையின் சுவையை அறிய ஒரு கணம் போதுமே”

ஜடம் நிரஞ்சனை பார்த்து கேட்டது, “கன்னத்துல ஒரு முத்தம் குடுக்கவாப்பா?”

நிரஞ்சன் ஒருவித சலனமும் இன்றி தன் கன்னத்தை அவன் பக்கம் காட்டினான்.

உயிர் சாரலில் ஜடத்தின் மனம் உயிர்ப்பிக்க நிரஞ்சன் கன்னத்தில் மெல்லிய முத்தமிட்டான். அவன் சிதறுண்ட சதை ஒளியின் வழிசென்று காற்றோடு கரைந்தது. அவன் எலும்புகள் மின்னல் போல் விகாரம் அடைந்து மாயமானது. 

ஆந்தை கண்களில் ஒளிப் பூத்தபின் அதன் ரெக்கைகள் சிலுப்பி கொண்டு எழும்பியது. சிலையின் சிறையில் இருந்து விடைபெற்று வான வெளியில் பறந்து சென்று விஸ்வரூபமாக காட்சியளித்தது. 

அதை கண்ட தம்பதிகள் பயத்தின் பிடியில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களும் ஆடவில்லை அவர்கள் தசையும் ஆடவில்லை. ஆந்தை பறந்து வந்து இருவருக்கும் நடுவில் வந்து இருவர் தோள்களிலும் ஒரு சேர உட்கார்ந்தது. அவர்கள் காதின் அருகே மெதுவாக சென்று… அலறியது. 

அந்த குரலின் அதிர்வுகளில் இருவரும் இரு துகள்களாக மாறி ஒரு நீண்ட சிறிய பயணம் செய்தனர். அவர்களின் புலன்களும் மனமும் அதன் அறியா பக்கங்களை அறிந்து கொள்ள தொடங்கியது. உலகில் உள்ள பல்வேறு பரிணாம உலகங்களுக்குள் ஆட்பட்டார்கள். உயிர்துடிப்பில் பின்னியிருந்த சங்கிலிகள் அறுப்பட்டன.

ஆந்தை எழுப்பிய குரல் பல்வேறு ரூபங்களாய் உருவெடுத்தது. அந்த ஒரு குரல்.

அப்பயணத்தின் விளைவாக – காரண முட்டைகள் எரிந்தன; வழிக்கருக்கள் பிறந்தன!

சிறிது நேரம் கழிந்தது….

விண்ணரசியும் நிரஞ்சனும் ஓடி வருவது கூட தெரியாமல் தம்பதிகள் நிர்மூலமாக நின்று கொண்டிருந்தார்கள். 

இருவரும் அவர்தம் அப்பா அம்மாவை சத்தம் போட்டு கூப்பிட்டனர், “அம்மா.. அம்மா.. அப்பா.. அப்பா”

தம்பதிகள் சுயநினைவுக்கு வந்தனர். குழந்தைகளை மகிழ்ச்சியுடன் ஆர தழுவினர். நால்வரும் அந்த அடர்ந்த காட்டில் அன்பின் குறியீடாக மின்னினர். நிரஞ்சன் கூச்சலிட்டான், “அப்பா.. புதுசு புதுசா நெறைய நடந்துச்சு ப்பா”

“ஆமாடா கண்ணா”

“சொல்லவா”

“வீட்டுக்கு போவோம்.. அப்றம் பொறுமையா பேசுவோமே?!”

“சரிப்பா”

நால்வரும் டென்ட் நோக்கி நடந்தார்கள். வீட்டுக்கு செல்ல ஆயத்தம் ஆனார்கள். துணியை மடித்து கொண்டிருக்கையில் சீனு ஏதோ பொறி தட்டியது போல் திரும்பி ஆந்தை சிலையை கண்டான். இப்பொழுது அச்சிலையை அவனால் தெளிவாக காண முடிந்தது. பல்வேறு கற்களால், பல்வேறு நிறங்களால், பல்வேறு விதத்தில் அந்த விஸ்வரூபம் எடுத்து ஆந்தை சிலையை வடிவமைத்து வைத்திருந்தனர். அச்சிலைக்கு கீழே சிற்பியின் பெயர் பொறித்து இருந்தது.

“சிற்பி – மகாகர்த்தா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *