அந்த கண்ணாடியில் ஒரு முகம் தெரிந்தது
இல்லை இருந்தது, இருந்தது தான்
ஆனால் அது யாருடையது என்று அவனுக்குத் தெரியவில்லை.
முதலில் அவன் அதை சுத்தம் செய்ய நினைத்தான்.
அது பழைய அலமாரியில் பொருத்தப்பட்டிருந்தது மஞ்சள் நிற மரத்தால் ஆனது.
அதில் பிளவுகள் இல்லை ஆனால் பிளவும் போல அவனது நினைவுகள் அதில் கீறியிருந்தது.
அவன் கையை நீட்டித் துடைத்தான்.
படிந்த தூசி அகன்றது, முகம் தெளிந்தது
அது அவன்தான் போல தோன்றியது.
ஆனால் உடனே அவன் கண்கள் அதை மறுத்தன.
அது அவனுக்குப் புரியவில்லை
அவன் அன்றாடம் அதே கண்ணாடியைப் பார்க்கிறான்.
காலை எழுந்ததும் முகம், தாடி, முடி, கண்கள், எல்லாமே சரி பார்த்துக் கொள்கிறான்
ஆனால் இன்றைய நாளில் ஏதோ மாறி இருந்தது.
முகம் பார்த்தவுடன் அவன் அதிர்ந்தான்.
கண்ணாடியில் அவன் இல்லை
யாரோ வேறு ஒருவன் நின்றிருந்தான்.
அவன் விலகி மறுபடியும் பார்த்தான்
மறுபடியும் அதே முகம்.
கண்ணாடி அவனைப் போலவே சிரித்தது, ஆனால் அந்த சிரிப்பு அவனுடையதல்ல
அது யாரோ அவனாகி அவனைப் பார்க்கும் சிரிப்பு.
அந்த நாளிலிருந்து அவன் அவ்வளவாக கண்ணாடி பக்கம் போகவில்லை.
படுக்கும் அறைமூலையில், திரைச்சீலைக் கிழித்து வெளிச்சம் நுழைந்தது,
அவனது நிழல் கண்ணாடி மேல் சாய்ந்தது,
மறுபடியும் அந்த சிரிப்பு அங்கு திரும்பியது.
அவன் கண்ணாடியிடம் கேட்டான்
“நீ யார்?”
கண்ணாடி அமைதியாக இருந்தது
அவன் இன்னும் அருகே சென்றான் தன் மூச்சு கண்ணாடி மேல் பனிப்படலமாய் படிந்தது.
அந்த பனியில் அவன் விரலால் ஒரு வட்டம் வரைந்தான்.
அந்த வட்டத்தின் நடுவில் முகம் மாறிவிட்டது.
அது அவன் சிறுவயது முகம்.
சிரித்த முகத்துடன் கண்களில் ஒரு வெளிச்சம்.
அவன் அங்கேயே நின்று கொண்டான்
அவன் எப்பொழுது அந்த முகத்தை இழந்தான் என்று நினைத்தான்.
மீண்டும் துடைத்தான்
முகம் மறைந்தது.
தற்போதைய முகம் திரும்பியது
அவன் நிம்மதி அடைந்தது போல இருந்தாலும் உள்ளே ஏதோ குலப்பமாக இருந்தது.
அவன் ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போகும் முன் கண்ணாடி பார்க்காமல் போக மாட்டான்.
அது ஒரு பழக்கம்
ஆனால் இப்போது அந்த பழக்கம் ஒரு பயமாக மாறியது.
ஒவ்வொரு முறையும் அவன் முகம் மாறுகிறது
சிறுவயது, இளமையிலிருந்தது, சில நேரம் வேறு ஒருவன் சாயல்.
அவனால் அவனை நம்ப முடியாமல் இருந்தான்.
அவன் அந்த கண்ணாடியின் பின்புறம் பார்த்தான்.
ஏதோ யந்திரம் இருக்கிறதா என எண்ணினான்.
அவன் அதை அகற்றிப் பார்த்தான்
அது வெறும் கண்ணாடி தான்.
பின்புறம் தூசி, சில தேய்ந்த தாள்கள்,
ஓர் பழைய கடிதம்.
அவன் கடிதத்தை எடுத்தான்
அதில் எழுதப்பட்டிருந்தது
“நீ உன்னை காணவில்லை என்பதால் நான் உன்னை காண்கிறேன்.”
அவன் கைகள் நடுங்கின அதிலிருந்த
எழுத்துகள் பழையது ஆனால் அறிமுகமான எழுத்துகள்
அவனது பாட்டியின் கையெழுத்து போல இருந்தது.
அவள் ஒருபோதும் இப்படி எழுதியிருக்க மாட்டாள்
அவள் இறந்து பத்து வருடம் ஆகிவிட்டது என அவனுக்கு தோன்றியது.
அடுத்த நாட்களில் அவனது வாழ்க்கை ஒரு கண்ணாடி சுற்று போலவே மாறியது.
அவன் பேச்சு குறைந்திருந்தது
அவனது உறவினர் யாரும் அவனிடம் நெருங்கவில்லை.
அவன் சொன்னான் “என் கண்ணாடி பேசுகிறது” என்று
உறவினர்கள் சிரித்தார்கள்.
அவனால் சிரிக்க முடியவில்லை
அவன் அறை முழுவதும் மற்ற அறைகளிலிருந்த கண்ணாடிகள்
பழையவை, புதியவை, கடைகளில் வாங்கியவை அங்கு வைத்தான் அவை
அனைத்தும் ஒரே முகத்தைக் காட்டின.
ஆனால் ஒவ்வொன்றிலும் வேறு வேறு நிலைகள்.
ஒரு கண்ணாடி அவன் சிரித்த முகம்
மற்றொன்று அவன் அழும் முகம்.
மூன்றாவது கண்கள் மட்டும் தெரிந்தன
நான்காவது கண்ணாடி.யில் எந்த தோற்றமும் இல்லை அதில் அவனது உருவம் காட்டவில்லை.
அவன் கண்ணாடிக்கு அருகில் சென்று ஒவ்வொரு முகத்தையும் தொட்டு பார்க்கிறான்.
எந்த முகம் உண்மையென,
எந்த முகம் என்று அதில் அவனுக்கே அடையாளம் தெரியாததால் சற்று குலப்பம் அடைந்தான்.
ஒருநாள் அவன் அவற்றை எல்லாம் உடைக்க நினைத்தான்.
அவன் ஒரு கல் எடுத்தான்
முழு பலத்தோடு எறிந்தான்.
அந்த கண்ணாடி உடைந்தது, ஆனால் அதன் சத்தம் கேட்கவில்லை.
அது கண்ணாடிக்குள் அடங்கிய சத்தம் போல இருந்தது.
அவனது காதுகளுக்கும் எதுவும் கேட்கவில்லை, ஆனால் சத்தமில்லா சின்னச்சின்ன சிதறல்கள் அவனுள் விழுந்தது.
இன்னுமொரு கண்ணாடி உடைந்து
அதில் இருந்து ஒரு சுருட்டிய படம் விழுந்தது
அவன் புன்னகையுடன் கையில் ஒரு பெண்.
அவளது முகம் அவனது நினைவில் இல்லை.
ஆனால் கண்ணாடி அவள் முகத்தை காட்டி தந்தது.
அவன் அந்த முகத்தை பார்த்தான்
மீண்டும் கண்ணாடிக்குள் அவள் தோன்றினாள்
அவள் சிரித்தாள்
அவன் கேட்டான் “நீ யார்?”
அவள் சொன்னாள் “நீயே மறந்த நான்.”
அவன் சிரிக்கவில்லை
அவன் அதிர்ந்தான்.
அடுத்த நாள் அந்த வீட்டை சுத்தம் செய்ய வந்தவர் சொன்னார்
“இந்த அறையில் யாரும் இல்லை ஆனால் எல்லா கண்ணாடிகளும் உடைந்திருக்கின்றன.”
அவன் பக்கத்தில் ஒரு துடைப்பம் கிடந்தது.
அவன் கைகளை அதிலேயே வைத்தபடி
மூச்சு நின்றது போல இருந்தது
அந்த கண்ணாடி மட்டும் ஒரே மாதிரி இருந்தது
அதில் அவன் இன்னும் சுத்தம் செய்து கொண்டிருந்தான்.
அந்த துப்புரவாளர் நிமிர்ந்து பார்த்தார்
அவரது முகம் கண்ணாடிக்குள் தெரிந்தது
சிறிது நேரம் மீண்டும் மீண்டும் பார்த்தார்,
மீண்டும் துடைப்பத்தை எடுத்தார்
சுத்தம் செய்ய ஆரம்பித்தார்
அவர் சிரித்தார்
அந்த கண்ணாடி திரும்பச் சிரித்தது.
அந்த கண்ணாடி தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தது.
அந்த சிரிப்பை யாரும் கவனிக்கவில்லை.
துப்புரவாளர் தன் வேலை முடித்துவிட்டு வெளியே சென்றார்.
அவரது காலடிச்சத்தம் மெல்ல மெல்ல மங்கியது.
வீடு முழுவதும் மீண்டும் அமைதி நிலவியது.
அந்த அமைதிக்குள் ஒரு சுவாசம் இருந்தது
தனிமையின் சுவாசம்
கண்ணாடி அதைக் கேட்டது.
அது யாருக்காக காத்திருக்கிறதோ அவருக்காகவே அந்த சுவாசம் இன்னும் உறுதியாக காத்திருக்கிறது.
அந்த நேரத்தில் காற்று சற்று அசைந்தது.
முன்பக்க ஜன்னல் திடீரென திறந்தது.
மணல் துகள் சில பறந்து வந்து கண்ணாடி மேல் விழுந்தது.
அந்த மணல் துகள்களின் நடுவே ஒரு சிறிய நிழல் தோன்றியது.
அது மனித வடிவில் இருந்தது
சிறிது சிறிதாக அது வளர்ந்தது
அது நின்று கொண்டது
அதே மனிதனின் வடிவத்தில்
அவனே
அவன் மீண்டும் வந்திருந்தான்.
ஆனால் கண்ணாடிக்குள் இல்லை, இப்போது கண்ணாடிக்குப் பின் புறம்.
அவன் தன் கைகளைப் பார்த்தான்
அவை உண்மையா? அல்லது பிரதிபலிப்பா?
அவனுக்கு புரியவில்லை.
அவன் கண்ணாடிக்குள் தன் பிரதியைத் தேடினான்
அதில் வெறும் சுத்தமான மேற்பரப்பு மட்டுமே இருந்தது.
அவனது உருவம் அங்கே இல்லை.
அவன் கண்ணாடியிடம் கேட்டான்
“நான் உயிரோடா இருக்கிறேனா?”
கண்ணாடி பதிலளிக்கவில்லை
அவனது குரல் வெறும் சத்தமாய் திரும்பியது.
அவன் அங்கு நிற்பதைப் பார்த்த காற்று
சில துகள்களை அவன் முகத்திற்குத் தட்டி ஒட்டியது.
அந்த மணலில் கண்ணாடியின் வெளிச்சம் பிரதிபலித்தது,
அவன் முகத்தில் மீண்டும் ஒரு புன்னகை தோன்றியது.
அது அவனுடையது அல்ல.
அவன் வெளியே வந்தான்
வீடு அமைதியாக இருந்தது
மாடிப்படி பழுதாகி இருந்தது,
தூசிப்படிந்த புத்தகங்கள், ஒரு பழைய நாற்காலி,
அனைத்தும் அவன் இல்லாத நாட்களைக் காட்டியது.
அவன் வெளியில் வந்தவுடன் தெரு வெறிச்சோடியிருந்தது.
மழை பொழிந்தது போல நிலம் ஈரமாக இருந்தது.
அவன் நடந்தான்
ஆனால் அவன் பாதங்கள் சத்தம் எழுப்பவில்லை.
மணல் உலரவில்லை,
அவன் தடங்கள் பதியவில்லை.
அவன் தன் நிழலைத் தேடினான்
அது எங்கும் இல்லை.
“நான் நிழல் இல்லாத மனிதன்”
அவன் தன் மனத்தில் சிரித்தான்.
அவன் சில அடிகள் சென்றபோது
அங்கே ஒரு சிறிய கடை திறந்திருப்பது போல தெரிந்தது.
அதில் பல பொருட்கள்
முக்கியமாக அங்கு கண்ணாடிகள் இருந்தன.
அந்த கடைக்காரர் வயதானவர்
அவரது கண்கள் சாம்பல் நிறத்தில்
சொல்லாத வார்த்தைகளால் நிரம்பி இருந்தது.
அவர் சொன்னார்
“மீண்டும் வந்துவிட்டாயா?”
அவன் அச்சமடைந்தான்
“என்னை உங்களுக்கு தெரியுமா?”
“நான் எல்லா முகங்களையும் அறிவேன்,”
அவர் சொன்னார்.
“ஆனால் உன் முகம் மட்டும் எனக்கு மறந்துபோனது.”
அவன் கேட்டான்
“அதன் பொருள்?”
“நீ கண்ணாடிக்குள் சென்றவர்கள் பட்டியலில் இருந்தாய்,”
அவர் மெதுவாக சொன்னார்.
“ஆனால் யாரோ உன்னை திரும்பக் கொண்டு வந்திருக்கிறார்கள்.”
அவன் மூச்சை இழுத்தூவிட்டான்
“யார்?”
அவர் காட்டினார்
கடையின் மூலையில் தொங்கியிருந்த ஒரு பெரிய கண்ணாடி.
அதன் மேல் எழுத்துக்கள்
“நிழல்களுக்கு வரவேற்பு.”
அவன் அருகே சென்றான்
அதில் அவன் பிரதிபலிப்பு இல்லை.
அதில் ஒரு பெண்
அவள் சிரித்தாள்.
அவள் அதே பழைய படத்திலிருந்த பெண்.
அவள் சொன்னாள்
“இப்போது நினைவுக்கு வருகிறேனா?”
அவனது கண்கள் பளிச்சென்றன
“நீயா?”
அவள் சிரித்தாள்
“நீ என்னை மறந்தது எனக்கு தெரியும்
ஆனால் கண்ணாடி மறக்காது.”
அவன் கண்ணாடியைத் தொட முயன்றான்.
அவன் விரல்கள் கண்ணாடிக்குள் நுழைந்தது.
அதன் குளிர் அவனது நரம்புகளுக்குள் ஊறியது.
அவன் கையில் துடிப்பு இல்லை ஆனால் உயிரோட்டம் இருந்தது.
அவள் கையை நீட்டினாள்.
“வா,” என்றாள்.
அவன் தயங்கினான்
“நான் அங்கே சென்றால்?”
“நீ உன்னை மீண்டும் காண்பாய்,” என்றாள்.
“ஆனால் ஒருமுறை சென்றால் திரும்ப முடியாது.”
அவன் சிரித்தான்
“திரும்ப வர ஏதாவது இருக்கிறதா?”
அவள் தலையசைத்தாள்
அவன் கண்ணாடிக்குள் நுழைந்தான்.
அந்த நேரத்தில் கடைக்காரர் தன் புத்தகத்தில் இன்னொரு பெயரை எழுதினார்
“அவன் திரும்பி வந்தான் மீண்டும் சென்றான்.”
அவர் கடையை மூடினார்.
மழைத் துளிகள் கண்ணாடி மேல் விழுந்தன.
அதில் புதிதாக ஒரு முகம் தோன்றியது
அது அந்த துப்புரவாளர்.
அவர் கண்ணாடிக்குள் பார்த்தார்
அவர் தன் பிரதியைப் கண்டார்.
அவர் கையில் துடைப்பம்.
அவர் சிரித்தார்.
அந்த சிரிப்பு கண்ணாடிக்குள் பரவியது.
அவர் மெதுவாக சொன்னார்
“நான் உன்னை காண்கிறேன்.”
கண்ணாடி பதிலளித்தது
“இப்போது நீயே நான்.”
அந்த வீட்டில் இன்னும் சில கண்ணாடிகள் உடைந்து கிடக்கின்றன.
ஆனால் ஒரு கண்ணாடி மட்டும் நிலைத்திருக்கிறது.
அதில் தினமும் மாலை வெளிச்சம் விழும்.
அந்த வெளிச்சத்தில், சில நொடிகள்,
யாரோ ஒருவர் சுத்தம் செய்து கொண்டிருப்பது போல தெரியும்.
அவனை யாரும் காணவில்லை.
ஆனால் அந்த கண்ணாடி சிரிக்கிறது.
ஒவ்வொரு முறை, அதே சிரிப்பு.
அது உண்மையா?
அல்லது ஒரு பிரதிபலிப்பின் நினைவா?
யாரும் அறியவில்லை.
கண்ணாடிகள் சில நேரங்களில் பேசுவதில்லை,
ஆனால் அதற்குள் நுழைந்த ஒவ்வொரு மனிதனையும்
அவை நினைவில் வைத்துக் கொள்கின்றன
அவர்களில் சிலர் இன்னும் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.