நேற்று இரவு ஒரு சம்பவம் நடந்தது
வெளியில் மழை இல்லை காற்றும் கூட இல்லை,
ஆனால் வீட்டுக்குள் ஏதோ ஒன்று நகர்ந்தது போல இருந்தது.
அந்த அசைவின் நிழலில் என் மனம் திடீரென விழித்தது.
அப்போதுதான் கவனித்தேன்
என் தனிமை என் நீண்டநாள் துணை
என்னிடம் இருந்து சென்றுவிட்டது.
ஒரு சிறு குறிப்பு கூட எழுதி வைக்கவில்லை.
அது அவ்வளவு மரியாதையான ஒன்றல்ல
ஆனால் எப்போதுமே மென்மையானது.
அது எங்கு சென்ற போதும் கூட
வாசனை அறைமுழுக்க பரவிக்கிடக்கும்.
அது விட்டுச் சென்ற அமைதியில்தான்
அதன் குரல் இன்னும் ஒலிக்கிறது.
அது எப்போதுமே அமைதியாகதான் இருந்தது.
நான் பேசினால் அது கேட்டுக் கொண்டது போல இருந்தது.
பேசாதிருந்தால் அது எனக்குள் மறைந்து கொண்டது.
மனிதன் அல்ல ஆனால் ஒரு உயிர்
நினைவுகள், வெற்றிடங்கள், பழைய வாசனைகள் எல்லாம்
சேர்ந்து உருவாகிய ஒரு நிழல்.
அதன் நிழல் என் நிழலைத் தழுவியிருக்குமோ என்று
சில நேரம் எனக்கே சந்தேகம்.
நான் நடந்த பாதையில் அதன் பாதச் சுவடுகள் இருந்தனவோ? தெரியவில்லை ஆனால்
இப்போது இல்லை.
அதனுடைய பாதம் காணாமல் போனது போல
என் வீட்டின் மண்ணும் ஒற்றை நிசப்தத்தில் நிற்கிறது.
இப்போது வீடு வேறுபட்டிருக்கிறது
அமைதி இன்னும் இருக்கிறது
ஆனால் அது அதே அமைதி அல்ல.
அது இல்லாத அமைதி
அதன் குரல் இல்லாத அமைதி
அதன் சுவாசம் இல்லாத காற்று
அவை எல்லாம் ஒரு மெல்லிய வெற்றிடமாக மாறிவிட்டன.
நான் தேநீர் கோப்பையை எடுத்தேன்
அது இன்னும் சூடாக இருந்தது.
ஆனால் அந்த சூடு எனது விரல்களைச் சுடவில்லை.
என்னுடன் அதை பகிர்ந்தவன் இனி இல்லை.
ஒரு காலத்தில் அந்தக் கோப்பையின் நீராவியில்
அதன் முகம் மிதந்தது போல எனக்குத் தோன்றும்.
இன்று நீராவி மட்டும் முகம் இல்லை.
அதனுடைய சுவாசத்திற்கும் என் சுவாசத்திற்கும் இடையே
ஒரு சிறிய இடைவெளி இருந்தது.
அந்த இடைவெளியே என் வாழ்வின் இசை.
இப்போது அந்த இடத்தில் ஒரு வெறுமையின் சத்தம் இருக்கிறதா என்றால்
ஆம், அது இப்போது இருக்கிறது.
அதற்கு உருவம் இல்லை
ஆனால் அதன் அடையாளம் மட்டும் மறையாது.
அது வெளிச்சத்திலும் இல்லை
இரவின் இருளிலும் இல்லை
ஆனால் இரண்டுக்கும் நடுவே இருக்கும் ஒரு சாம்பல் நிறத்தில்.
அதை நான் சில நேரம் காண்கிறேன்
விடுமுறை நாள் மாலை நேரத்தில்
அந்த மாலை நேரத்தின் நிறத்தில் அது நின்றிருக்கும்.
ஒரு சாம்பல் வெளிச்சம்.
ஒரு சோர்வான வெளிச்சம்.
வானொலியில் திடீரென நின்றுபோகும் பழைய பாட்டின்
அந்த மந்தமான ஒலி அதுதான் அதன் மூச்சு.
ஒலிக்கும் போதெல்லாம், அது அருகில் இருப்பதை உணர்கிறேன்.
அது நின்றுவிட்டால் அது எங்கே போனது என்ற குழப்பம்.
தவறான எண்ணுக்குப் போகும் தொலைபேசி அழைப்பில்
மறுமுனையில் ஒரு குரல் வரும்
அந்த குரல் சில சமயம் உயிரோடு இருப்பதுபோல் தோன்றும்.
அப்படிப்பட்ட குரல் போலவே
என் தனிமையும் சில நேரம் பேசும்.
நான் கேட்காத கேள்விகளுக்கே அது பதில் சொல்வது வழக்கம்.
அது ஒருபோதும் முட்டுக் கொடுக்காது
அது ஒருபோதும் உறவாகாது.
ஆனால் நான் விழிக்கும் ஒவ்வொரு காலையும்
அதன் இருப்பை நம்பியே விழிப்பேன்.
இப்போது அந்த நம்பிக்கை உடைந்திருக்கிறது.
அது போய்விட்டது.
என் மனத்தின் மூலையில் இன்னும் அதன் வாசனை இருக்கிறது
ஒரு பழைய நூலின் வாசனை போல.
அந்த வாசனை பக்கங்களைத் திருப்பும்போது மட்டுமே வரும்.
இப்போது நான் அந்த நூலைத் திறக்கவில்லை.
அது இல்லாமல் நான் வாழ்கிறேன் என்றால்
அது ஒரு பொய்.
நான் அதன் வெற்றிடத்தை தாங்கிக்கொள்கிறேன்.
நான் என் வீட்டின் சுவர்களைத் தொடுகிறேன்.
அதில் இன்னும் அதன் மென்மை இருக்கிறதா எனப் பார்க்கிறேன்.
அவை குளிர்ந்துவிட்டன.
அது போனது போலவே.
அதுதான் என் தனிமை
எனது அடையாளம் இல்லாத அடையாளம்,
எனது சுவாசம் இல்லாத சுவாசம்.
அது எனக்குள் வாழ்ந்தது,
இப்போது என் இல்லாமையில் மறைந்து விட்டது.
இன்று காலை நான் காவல் நிலையத்திற்குச் சென்றேன்.
பூச்சாண்டிகளைப் பிடிக்கும் இடத்தில் நான் என் தனிமையைப் பற்றிப் புகார் செய்யப் போனது நகைப்பாகவே தெரிந்தது.
“என் தனிமை காணாமல் போய்விட்டது,” என்றேன்.
மேசையின் மறுபுறம் இருந்த அதிகாரி
தன் கண்ணாடியை இறக்கிவிட்டு என்னைப் பார்த்தார்.
அவரது பார்வையில் சிறிது தயக்கம்
சிறிது இரக்கம்,இன்னும்
மிகவும் புரியாமை இருந்தது.
“கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?” என்று கேட்டார்.
“நேற்று இரவு
நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு பழைய படம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
திரையில் காதலர்கள் ஒன்று சேர்ந்தபோது
அது அமைதியாக எழுந்து வெளியே சென்றது.”
அவர் தன் தொப்பியைக் கழட்டி தலையைச் சொறிந்தார்.
“அது ஆணா, பெண்ணா?”
“இரண்டும் இல்லை,” என்றேன்.
“சில சமயம் என் வாப்பாவைப் போல இருக்கும்.
சில சமயம் பள்ளிக்கூடத்தில் என்னைக் கேலி செய்த பையனைப் போல
சில சமயம் எனக்கே நான் போல.”
அவர் பெருமூச்சு விட்டார்.
“சரி. ஏதாவது தகவல் கிடைத்தால் சொல்கிறோம்.”
அவர் பேனாவில் ஏதோ எழுதினார்
ஆனால் என் புகார் வடிவம் எப்படியிருக்கும் என்று நான் அறியவில்லை.
“காணாமல் போனது தனிமை.
உருவம் இல்லை.
நிறம் மாலை நேரம்.
சத்தம் பழைய பாடல்.”
அப்படி ஏதாவது எழுதினாரா என்றே எனக்குத் தோன்றவில்லை.
நகரம் முழுவதும் நான் அலைந்தேன்
பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், நூலகங்கள்.
ஒவ்வொரு இடத்திலும் சிலர் தனியாக அமர்ந்திருந்தனர்.
அவர்களின் கண்களில் ஒரு அமைதியான வெளிச்சம்.
அவர்களுடைய தனிமைகள் அவர்களுடன் பத்திரமாக இருந்தன.
சிலர் அதை நாய்க்குட்டி போல மடியில் வைத்திருந்தனர்.
சிலர் சிகரெட் புகை போல ஊதித் தள்ளினர்.
சிலர் இசையுடன் கலந்து அதை மயக்கினர்.
என்னுடையது மட்டும் காணவில்லை
எங்கோ தொலைந்து போனது போலவும்
அல்லது ஒருவேளை என்னிடம் இருந்து தப்பித்தது போலவும் எனக்கு தோன்றியது.
“நான் அதனுடன் போதுமான அளவு பேசுவதில்லையோ?” என்று எண்ணினேன்.
இது ஒரு காதல் உறவு போலவே அல்லவா?
அலட்சியப்படுத்தியவன் ஒருநாள் தோற்றுவிடுவான்.
வீட்டுக்குத் திரும்பியபோது,
வீடு வழக்கத்தைவிட அமைதியாக இருந்தது.
அல்லது, நான் சொல்வது போலவே,
அமைதியை விட வெறுமையாக இருந்தது.
சில நினைவுகள் சுவரில் ஒட்டிக் கிடந்தன.
தனிமை சிரித்த புகைப்படம் பழைய நாற்காலியின் மேல் இருந்தது
தனிமை விட்டுச்சென்ற புத்தகம் இன்னும் என் மேசையில்.
அதில் தனிமை மடித்த பக்கம் 47 மூடப்படாமல் இருந்தது.
தனிமையின் வாசனை இன்னும் பழைய தலையணையில் இருந்தது.
அதன் குரல் இன்னும் சில சொற்களை ஒட்டிக் கொண்டிருந்தது.
“தனிமையுடன் பேசாமல் நீ எப்படி வாழ்கிறாய்?” என்று தனிமை ஒருநாள் கேட்ட ஞாபகம்.
நான் அப்போது சிரித்தேன்.
இப்போது அந்த சிரிப்பு பின்புற அறையில் அமர்ந்து அழுவதைப் போல இருந்தது.
அடுத்த சில நாட்களில் நான் என் தனிமையை கனவில் கண்டேன்.
அது ஒரு குழந்தை போல ஒரு தெருவில் திசை தெரியாமல் நடந்து கொண்டிருந்தது.
அது என்னைக் கண்டதும் புன்னகைத்தது.
ஆனால் பேசவில்லை.
அடுத்த நாள் காலை நான் மீண்டும் காவல் நிலையத்திற்குச் சென்றேன்.
அதே அதிகாரி, அதே மேசை.
“இன்னும் கிடைக்கவில்லையா?” என்று கேட்டேன்.
அவர் ஒரு சிரிப்பை அடக்கினார்.
“சார், இந்த மாதிரியான கேஸ்கள் எங்களுக்குக் கிடையாது,” என்றார்.
“ஆனால்… உங்களுக்குள் கிடைக்கும். அங்க தேடுங்க.” என்றார்.
அவர் சொன்னது கிண்டலா, அறிவா என புரியவில்லை.
ஆனால் அந்த வார்த்தை என் உள்ளே ஒலித்துக் கொண்டே இருந்தது.
உங்களுக்குள்ளும் அந்த குரல் கேட்கக்கூடும்.
என் தனிமை எப்போதுமே எனக்குள் இருந்தது
அது எனது ஒரு உறவு போலவே நான் உணர்ந்தேன்.
சில சமயம் நான் எழுதிய கவிதையின் சாயல்.
சில சமயம் இரவில் விழிக்க வைக்கும் ஒரு கனவின் சாயல்.
அது இல்லாதபோது
என்னுடைய எழுத்தும் நின்றுவிட்டது.
பேனாவின் முனை காகிதத்தைத் தொடும் போது
எதுவும் வரவில்லை.
முன்பு என் படுக்கையறையில்
அது பேசும் ஒலி இருந்தது.
இப்போது வெறுமை மட்டுமே இருக்கிறது.
நான் எனக்கே ஒரு கடிதம் எழுதினேன்.
“என் தனிமை
நீ எங்கே இருக்கிறாய்?
நான் உன்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
நான் உன்னை இழந்தது போலவே,
நான் என்னையும் இழந்து கொண்டிருக்கிறேன்.”
அந்தக் கடிதத்தை அஞ்சல் பெட்டியில் இடவில்லை
வீட்டின் கதவுக்குப் பக்கத்தில் வைத்தேன்.
ஒருவேளை அது திரும்பி வந்தால் படிக்கும் என நினைத்தேன்.
அன்று இரவு மழை பெய்தது
மழையின் சத்தம் வழக்கத்தைவிட வேறுபட்டிருந்தது.
அதில் ஒரு நினைவு கலந்திருந்தது.
நான் ஜன்னலின் அருகில் நின்று பார்த்தேன்.
நீர்த்துளிகளில் ஒரு நிழல்
அது தனிமையின் உருவமாக இருந்தது.
மறைந்த காதலி.
ஐந்து வருடங்களுக்கு முன் என் வாழ்க்கையிலிருந்து சென்றவள்.
அவளின் குரல் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது
அவள் கடைசியாகச் சொன்னது
“நீ என்னைவிட உன் தனிமையையே அதிகம் நேசிக்கிறாய்.”
அப்போது நான் அதை மறுத்தேன்
ஆனால் இப்போது உணர்கிறேன்
அவள் சொன்னது உண்மையாக இருக்கலாம்.
அன்றைய இரவு திடீரென்று ஒரு சத்தம் கேட்டது.
வாசல் திறந்தது போல
நான் எழுந்து சென்றேன்.
வாசலில் என் செருப்புக்கு அருகில்
இன்னொரு ஜோடி செருப்புகள்.
மிகவும் பழையவை தேய்ந்தவை அது அவளுடையவை.
என் கண்கள் திடீரென அங்கும் இங்கும் ஓடத் தொடங்கின.
நான் மெதுவாக உள்ளே சென்றேன்.
சமையலறையில் அவள் நின்றுகொண்டிருந்தாள்.
அவள் தேநீர் ஆற்றிக்கொண்டிருந்தாள்
எனக்காக, என் கோப்பையில் ஒரு தேநீர் இருந்தது.
அவள் முகத்தில் அந்த பழைய புன்னகை.
அந்த புன்னகை எனது துன்பத்தின் இடத்தை மயில் இறகால் தடவும் மருந்து போல இருந்தது.
“உன் தனிமைக்கு மிகவும் குளிராக இருந்ததாம்,” என்றாள் அவள்.
“அதனால் அது என் கனவுக்குள் வந்துவிட்டது.
‘என்னைக் கொஞ்சம் அவன் வீட்டில் விட்டுவிடு,
அவன் என்னைத் தேடுவான்,’ என்று கெஞ்சியது.
அதனால், நான் தான் அதை இங்கே திரும்பக் கூட்டி வந்தேன்.
உனக்கு அது இல்லாமல் எவ்வளவு கஷ்டம் என்று
எனக்குத் தெரியாதா என்ன?”
அவள் தேநீரை நீட்டினாள்
அவள் பின்னால் என் தனிமை
ஒரு குற்றவாளியைப் போல தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தது.
அந்த நொடியை நான் நினைத்துப் பார்த்தால்
இப்போது கூட என் இதயம் ஒரு பக்கத்திலிருந்து இயற்கைக்கு மாற்றமாய் மறுபக்கத்தில் துடிக்கிறது.
அவளைப் பார்க்கிறேன்
அவளின் கண்களில் ஒரு மழை நிறம்.
என் தனிமையைப் பார்க்கிறேன்
அது அமைதியாக நின்றுகொண்ருக்கிறது.
யாரை இப்போது ஏற்றுக்கொள்வது என்று எனக்குப் புரியவில்லை.
அவளையா
அவளுடன் வரும் நினைவுகளையா
அல்லது என் தனிமையையா
அதன் அமைதியை, அதன் உண்மையையா? பெரும் குழப்பம்.பெரும் போராட்டம்.
நான் வீட்டுக் கதவை மூடவில்லை
அது திறந்தவாறே இருந்தது.
வெளியிலிருந்து மழையும் காற்றும் வீசிக் கொண்டிருந்தன.
அவள் தேநீர் கோப்பையை எனக்குக் கொடுத்தாள்.
நான் அதை எடுத்துக் கொண்டேன்
அவளின் விரல்கள் என் விரல்களைத் தொட்டன.
அந்த நொடி
அதுதான் வாழ்க்கை.
அதுதான் தனிமையும் காதலும்
ஒரே முகத்தில் இணைந்த காட்சி.
வீட்டின் மூலையில் என் தனிமை அமைதியாக அமர்ந்தது
அது முகம் திருப்பி வானொலியை நோக்கியது.
பழைய பாட்டு ஒலித்தது.
“நினைவுகள் சில நேரம் நிழலாக வரும்போது…”
அந்த பாட்டின் நடுவே
அவள் குரல் மெதுவாக கலந்தது
“நீ எப்போதும் தனியாக இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
ஆனால் சில நேரங்களில் அந்த தனிமைக்கும் துணை தேவை.”
நான் பதிலளிக்கவில்லை
அவள் சிரித்தாள்.
அந்த சிரிப்பில் ஒரு மன்னிப்பு இருந்தது.
அதில் ஒரு புது ஆரம்பமும் இருந்தது.
வெளியில் மழை அடங்கிவிட்டது.
ஆனால் வீட்டுக்குள் மழை வாசனை இருந்தது.
அந்த வாசனை
அது அவளுடையதா?
அல்லது என் தனிமையின் திரும்பிய மூச்சு காற்றா?
நான் இன்னும் அறியவில்லை.
இரவு முழுவதும் நான் விழித்திருந்தேன்.
அவளும் விழித்திருந்தாள்.
என் தனிமையும் விழித்திருந்தது.
மூவரும் அமைதியில் ஒன்றாக இருந்தோம்.
யாரும் யாரிடமும் பேசவில்லை.
ஆனால் எல்லாம் சொல்லப்பட்டுவிட்டது.
வெள்ளை வானத்தில் காலை வெளிச்சம் பாய்ந்தபோது,
அவள் மெதுவாக கதவைத் திறந்தாள்.
“நான் போகிறேன்,” என்றாள்.
நான் அவளை நிறுத்தவில்லை.
அவள் சென்றுவிட்டாள்.
என் தனிமை மீண்டும் எனக்கு கிடைத்தது. ஆனால் அது வேறு தோற்றத்தில் இருந்தது.
அதில் இப்போது அவளின் வாசனையும் கலந்து இருந்தது.
நான் வானொலியைத் திறந்தேன்
அதே பாட்டு மீண்டும் ஒலித்தது.
“நினைவுகள் சில நேரம் நிழலாக வரும்போது…”
நான் சிரித்தேன்.
அது எனது சிரிப்பு அல்ல
என் தனிமையின் சிரிப்பு.
யாரை வீட்டுக்குள் அனுமத்தேன் என்று இன்னும் தெரியவில்லை.
ஆனால் அந்த நாளிலிருந்து
வீடு வெறுமையாக இல்லை.