சாராயக்கடை

அவர் கதவைத் தள்ளித் திறந்தார்.

சின்ன மணி ஒலி எழுந்தது.
உள்ளே புகுந்தவுடன் காற்றே வேறுபட்டிருந்தது மதுவின் வாசனை, புகையின் அடர்த்தி, மறைந்து கிடக்கும் ரகசியங்களின் வீடு.
மிகவும் இருட்டாக இருந்தது
சிலர் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
சிலர் மௌனமாகக் மதுக் குவளையை நோக்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர் மட்டும் தான் அங்கு புதிதான முகம் போல இருந்தார்.
இப்போது சொல்லுங்கள்
நீங்கள் ஒருபோதும் உங்களுக்கே தெரியாத இடத்தில் உட்கார்ந்திருக்கிறீர்களா?
சுற்றியுள்ளவர்கள் தங்கள் உலகத்தில் மூழ்கியிருக்க, நீங்கள் மட்டும் அந்நியனாகத் தோன்றுகிறீர்களா?
அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்தார்
சேவகர் வந்து கேட்டான்
“என்ன குடிப்பீர்கள்?”
அவர் சற்று யோசித்தார்.
அவருக்கு குடிக்க விருப்பம் இல்லை.
ஆனால் வாயிலிருந்து வார்த்தை வந்தது
“எதுவானாலும் பரவாயில்லை.”
சேவகர் சிரித்தான்
“அப்படிச் சொல்லுபவர்கள் தான் அதிகமாகக் குடிப்பார்கள்.”
அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
“நான் யார்? நான் இங்கே ஏன் வந்தேன்?” என்று அவருக்கே தெரியவில்லை.
முதல் மதுக் குவளை முன் வந்தது
அவர் அதைப் பார்த்தார்.
அதில் தண்ணீர் போல இருந்தது.
ஆனால் குடித்தபோது, அது நெருப்பு போல எரிந்தது.
அவரின் கண்களில் கண்ணீர் வந்தது.
அவர் சிரித்தார்.
“இது உண்மையா? அல்லது நான் உணர்ந்தது கனவா?”
அவர் உங்களை நோக்கிப் பார்த்தார்.
“நீங்கள் கதையை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதால்தான் இந்தக் மதுக் குவளை இன்னும் நிறைந்திருக்கிறது.”
சுற்றிலும் சத்தம்
சிலர் நான்தான் பின்னணிப் பாடகன் என்கிற நினைப்பில் பாடினார்கள்
சிலர் சண்டையிட்டார்கள்
சிலர் மேசையில் தலையை வைத்து தூங்கினர்.
ஆனால் அந்த சத்தம் எல்லாம் தொலைவில் இருந்து வருவது போல
அவருக்கு நெருக்கத்தில் எதுவும் இல்லாது போலவும் இருந்தது
அவருக்கு அவரது குவளை இடையே தான் உலகம் நின்றது.
சுவரில் ஒரு கண்ணாடி தொங்கியது
அவர் அதைப் பார்த்தார்.
அதில் அவர் தான் இருந்தார்.
ஆனால் அந்த முகம் அவருக்குத் தெரிந்த முகமல்ல.
மறைந்துபோன யாரோ ஒருவரின் முகம்.
அவரை விட்டு சென்ற ஒருவரின் முகம்.
அவர் கண்ணாடியை உடைக்க விரும்பினார்.
ஆனால் உடைத்தால், அந்த முகமும் அவரோடு உடைந்து மறைந்துவிடும் என்ற பயம்.
சேவகர் கையில் ஒரு பை கொண்டு வந்தான்.
“இது உங்களுக்குத்தான் என்று யாரோ விட்டுச் சென்றார்கள்.”என்றான்
அவர் பையைத் திறந்தார்.
அதில் ஒரு கடிதம்
“குடிக்காமல் நீ வாழ முடியாது.
ஆனால் குடித்தால் நீ உன்னை மறந்து விடுவாய்.
உன் தேர்வு உன்னுடையது.”
அவர் நடுங்கினார்.
“யார் இந்தக் கடிதம் எழுதினார்கள்? அவர்கள் என்னை எப்படி அறிவார்கள்?”
அவர் மீண்டும் உங்களை நோக்கினார்.
“நீங்கள் தான் என்னைத் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் கதையை வாசிக்காமல் இருந்தால், இந்தச் சாராயக்கடை இடிந்து விழும்.
ஆனால் நீங்கள் தொடர்ந்தால், நான் இன்னும் குடித்துக் கொண்டிருப்பேன்.”
அவர் கேட்டார்
“நீங்கள் எப்போது நிறுத்துவீர்கள்?
நான் விடுபட வேண்டுமா, இல்லையா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கிறீர்கள்.”
அடுத்த மதுக் குவளை வந்தது
அவர் குடித்தார்.
முகங்கள் தோன்றின
ஒரு பெண் சிரித்தாள்
ஒரு சிறுவன் ஓடி விளையாடினான்
ஒரு முதியவர் கண்ணீர் வடித்தார்.
அவருக்கு யாரையும் தெளிவாக அடையாளம் காண முடியவில்லை.
ஆனால் எல்லோரும் அவருடன் சம்பந்தப்பட்டவர்கள் போல இருந்தார்கள்.
அவர் குவளையை தூக்கி எறிந்தார்
அது உடையவில்லை.
அது தரையில் விழுந்தும் முழுமையாகவே இருந்தது.
சாராயக்கடை சுவர் திடீரென மாறியது.
அதில் பல எழுத்துகள்.
“காத்திருப்பு”
“தவிப்பு”
“தப்பிக்க முடியாது”
ஒவ்வொரு எழுத்தும் அவரின் உள்ளுக்குள் எழுதிப்போடப்பட்டது போல உணர்ந்தார்.
சாராயக்கடைக்கு இன்னும் பகல் வரவில்லை
அதே இருள்.
அதே சத்தம்.
அதே மதுவின் வாசனை.
அவர் இன்னும் அமர்ந்திருந்தார்
கையில் மதுக் குவளை
மனதில் அந்தக் கடிதம்.
அவர் மெதுவாகச் சொன்னார்
“நீங்கள் இருந்தால், குடித்து உங்களை மறந்து விடுவீர்களா?
அல்லது மதுக்குவளையை விட்டு எழுந்து வெளியே போவீர்களா?”
அவரின் கேள்விக்கு பதிலாக மதுக்குவளையில் அவரது நிழல் மட்டும் சிரித்தது.
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *