உலகமே ஓஞ்சுட்டாப்புல இருக்கு. பொறந்து வளந்த இந்த ஒத்த அறை திடுதிப்புன்னு எப்படியோ பயமுறுத்துற கணக்கா இருக்கு. வாசல்ல உக்காந்து ஒப்பாரி வச்சுட்டு கடக்குத கோமதியக்காவ பாக்கவே ஏனோ புது ஆள் கணக்கா இருக்கு. சாயங்காலம் வர எல்லாம் நல்லாத்தானே இருந்துச்சு? நல்லா தின்னுட்டு சோவரிட்டுத்தானே கடந்தா இவ? கிண்டி வச்ச களிய ஆச்சி வீட்டுல குடுத்துட்டு வாரேன்னு போனவ இப்படி பொணமா திரும்ப வருவான்னு நான் நினைக்கலயே…

பக்கத்துல ஆச்சி சேலை கலஞ்சதுகூட தெரியாம மார்ல அடிச்சு அழுவுதா. “யட்டி, ஈசுவரி, அம்மை ஒஞ்சுட்டாலேட்டின்னு” ன்னு கத்தி என்ன உலுக்குதா. எனக்கு இந்த அழுகை எழவு வந்து தொலைக்க மாட்டக்கு. எதை கண்டாலும் பயம் வாரதுக்கு அதான் காரணமுன்னு நினைக்கேன். அழுதுட்டா இந்த வீடு என் வீடு ஆயிடும். இந்த மக்க என் மக்க ஆயிடுவாக.

ஆனா முடியலையே…

அழுதே ஆவணுமுன்னு நடுக்கூடத்துல கால போலந்து கடக்குத அம்மைய வெறிச்சு பாத்துட்டேன். வாயோரத்துல, மூக்கு ஓட்டைக்குள்ள ஈ ஊருதப்ப மட்டும் உள்ளுக்கு ஏதோ கடந்து பொரளுது. ஆனா கண்ணு நனைய மாட்டங்கு. ஒன்னும் புரியல… ஆனா நேரம் ஆக ஆக ஏதோ விலகிட்டே போறேன்னு மட்டும் வெளங்குது.

அம்மை உடுத்திருக்க சேலை போன பொங்கலுக்கு நான் எடுத்து கொடுத்ததுதான். நீல கலர். எனக்கு புடிச்ச நிறம். அட்ட கருப்பு என் அம்மை. அவளுக்கு நல்லா எடுப்பா இருக்கும். ஒவ்வொரு நாளும் ஸ்கூல் போறப்ப, “பண்டம் பண்டமுன்னு அழுதயே முண்ட… இந்தா ப்பே!” ன்னு அவ தூக்கி வீசுத மூணு ரூபா சில்லறைய உண்டியல்ல சேத்து வச்சு, மார்க்கெட் முருகன் ரெடிமேட் கடையில முன்னூறு ரூபாய்க்கு எடுத்தேன். “புது சேலையாட்டி?” ன்னு கேட்டு வாங்கி மாரோட வச்சு பாத்தப்ப இவளுக்கு வாயெல்லாம் பல்லு. பண்டம் திங்காம சேத்து வச்சியாட்டின்னு ஒரு வார்த்த கேக்கல… இது தெரியாம அந்த யேச்சு யேசினேனேன்னு கொஞ்சமும் கரையல…

மூச்சில்லாம கடக்குதவல பத்தி இப்படி வேண்டாதத மட்டும் நெனச்சா அழுக எப்படி வரும்? அழுதறணுமுன்னு தான் நினைக்கேன் நானும். இவ இல்ல இனி என் வாழ்க்கைல! இனி நானே தனியா எழும்பனும்… பாடம் படிப்பேனா இனி? பணம் யார் கட்டுவா? சோறு பொங்கிருவேன். கூட்டு, பொரியலுன்னு என்னத்தயோ வச்சு ஒப்பேத்திருவேன். வீட கூட்டி பெருக்கணும். ஒரு மட்டம் போதும் இனி. தண்ணீயும் ரெண்டு குடம் புடிச்சு வச்சா போதும். பெறவு ரேஷன் கடை போவணும். பாலு, பருப்பு வாங்க பணம் வேணும். பீடி சுத்த வரவான்னு முத்துமாரி அம்மாட்ட கேக்கணும். அவ்வளோதான் வாழ்ந்துருவேன். வாழ்ந்தரலாம்தான். இவ இல்லாம வாழறது அம்புட்டு கஸ்டம் ஒண்ணுமில்ல… ஆனா இவ என்ன வாழ விடுவாளா?

நாளைக்கு விடிய முன்ன இவ எரிஞ்சு போவா. வானத்துல வட்டம் போடுத அந்த கருப்பு பொகை கரைய முன்ன தொறச்சி வந்து நிப்பா. குந்தாணி எப்படியும் கண்ண கசக்கிட்டேத்தான் வருவா. “புள்ள ஈசுவரி” ன்னு என்ன கட்டிக்கிட்டு அழுவா. பொறமண்டைய தடவுவா. காபி தண்ணி வேணுமுன்னா கேளுடின்னு பாசமா சொல்லுவா. பெறவு சேலைய தோள சுத்தி போத்திட்டு எழுந்து போறப்ப என் அம்மை கைமாத்தா வாங்கின  ரெண்டாயிரத்துக்கு வட்டி கணக்க காதோரம் குசுவிட்டு போவா. இந்த முண்டைட்ட வாங்காத வாங்காதன்னு அந்த அழு அழுதேன். கேட்டாளா…!

பல்ல கடிச்சுட்டேன்னு நினைக்கேன். ஆச்சி நிமிந்து பாக்கு… கோமதியக்கா ஒரு மாறி முழிக்கி… ஒப்பேறாது… குனிஞ்சு உக்காந்துக்கிட்டேன்… என் மண்ட ஏன் இப்படி தினுசா போவுது?

ஆச்சி மடக்கு மடக்குன்னு தண்ணி குடிக்கி. எம்பது வயசு இருக்கும் கிழவிக்கு. எட்டு பிள்ளேல். எல்லாரோட சாவும் பாத்துட்டு. எஞ்சினது என் அம்மை. அவளும் போயாச்சு… எனக்கு ஏனோ ஆச்சி மொகத்த பாக்க பயமா இருக்கு. அழுக ஓயுதப்பல்லாம் தொணதொணன்னு பேசிட்டே இருக்கு பாவம். இந்த பாவப்பட்ட கிழவிய என் அம்மை அந்த பாடு படுத்திருக்கா! ஆனா கிழவி நல்லத மட்டுமே பொலம்பி அழுவுது. தண்ணி செம்ப ஓரமா வச்சுட்டு என் தலைய தடவிட்டே பேச ஆரமிக்கு. என்ன பள்ளிக்கூடத்துல சேர்க்க என் அம்மை பட்ட கஸ்டம், நோட்டு புக்கு, யூனிஃபார்ம், செருப்புன்னு ஒன்னொன்னுத்துக்கும் அவ முட்டின முட்டுன்னு எல்லாம் சொல்லுது. என்ன அழ வைக்க பாக்குன்னு நினைக்கேன். ஆனா நினைக்க நினைக்க எனக்கு எரிச்சலாத்தான் வருது. அப்பாவி கிழவி விசயம் புரியாம இருக்கு… கவலை இல்லாம படுத்து கடக்கற பாதகத்தி அவ பேத்திய பிச்சைக்காரி ஆக்கிட்டு போயிட்டான்னு வெளங்கல கிழவிக்கு. எண்ணி ரெண்டே மாசத்துல இந்த ஒத்த அறை வீடும் இல்லாம போயிடுமுன்னு கிழவிக்கு தெரியல. சோத்துக்கே வழியில்லாதப்ப நீதியெல்லாம் எதுக்குன்னு எத்தன மட்டம் ஒப்பாரி வச்சுருப்பேன்? பைனான்ஸ் கம்பெனில லட்ச ரூபாய வாங்கி கோர்ட் கேச நடத்துவேன்னு ஒத்த கால்ல நின்னா… வீம்பு புடிச்சுவ… எவனோ போக்கத்தவன் வெட்டிட்டான் அப்பன… குடிச்ச குடிக்கு சும்மா விட்டிருந்தா அவனே ரெண்டு வருசத்துல போயி சேர்ந்திருப்பான்… இவளுக்கு என்ன அத்தன உரிமை? புருசனா அப்பனா என்ன செஞ்சான் அவன்? வள்ளியூர்ல வப்பாட்டி வீட்டோடத்தானே கடந்தான் பொழுதண்ணிக்கும்? வெட்டினதே அவக ஆளுகதான்னு பேச்சுண்டு. கேசு நடத்துதாளாம், நியாயம் கிடைக்குமாம். மசுருல கிடைக்கும். இன்னிக்கு என்ன பிச்சைக்காரி ஆக்கிட்டு போயாச்சு… ஒய்யாரமா நீ கடக்க… நான் எங்கன போயி சாவ? பயத்துலதான் அழுக வர மாட்டங்குபோல… உசுரு வாழ வக்கில்லாம இருக்கப்ப அழுது என்ன செய்ய?

எட்டு வச்சு எட்டடி நடந்தா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிரும்… பத்தடி தொலைவுல இருக்கது கண்ணுக்கு தெரியாது… வயிறெல்லாம் புண்ணு… ஆனா வைராக்கியத்துல ஒரு கொறவு கடையாது… இப்பன்னு இல்ல, இவளுக்கு பத்து வயசு இருக்கும்போதே…” ன்னு கிழவி எதையோ இழுத்து இழுத்து பேசுது கோமதியக்காட்ட. எத்தன மட்டம் கூப்பிட்டிருப்பேன் ஆஸ்பத்திரி வான்னு? பிரைவேட் தான் வருவேன்னு சாதிப்பா… கஞ்சிக்கு வக்கில்லாதப்ப, பிரைவேட் ஆஸ்பத்திரி அறுதலிக்கு மொய் எங்க எழுத? ஹைகிரவுண்டு போவோம் வான்னா, அங்கன பேய் உலாத்துதும்பா. அங்கன போனாலே உசுரு போயிருமுன்னு லூசு கணக்கா கத்துவா. இன்னிக்கென்ன ஆச்சு? இருக்கற மருந்து மாத்திரையாச்சு ஒழுங்கா போட்டாளா? சுகர வச்சுட்டு சோத்த வாரி வாரி திம்பா பண்ணி கணக்கா. ஒரு இனிப்பு விடுதது கடையாது. புண்ணு வந்து அழுகி, கால் கட்ட விரல வெட்டி எடுத்தப்பவும் அறிவு வரல… என்ன பத்தி யோசி, நீ இல்லன்னா நான் எங்கன போவேன்னு எப்படி அழுதேன் அன்னைக்கு? கேட்டாளா? இப்படி என்ன நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாளே! என்ன செய்வேன் இனி? வீடு போனா எங்கன போவேன்? பள்ளிக்கூடம் போறப்பலாம் என்ன ஒருமாதிரி பாக்கற ஐஸ் விக்கிற தாத்தா, தோள ராவிட்டே பேசுத முருகேசு மாமா, குழாயடில கண்ட வார்த்தை பேசி, அறுத்து கிழிக்கற மல்லிகாக்கா, கோயிலு கொடையில ஒரண்ட இழுக்கற சல்லிப்பயலுவ, பொம்பளேல் ஒதுங்குத பீக்காட்டுல மரத்து பின்ன ஒளிஞ்சு நிக்கறவன்னு தொடங்கி, தெரு மொனையில எப்போதும் நிக்கற கருப்பு கலர் வெறிநாய் வர ஒன்னு ஒன்னையும் நெனைக்க நெனைக்க எனக்கு கோவமா வருது. அம்மை மொகத்த பாக்கவே அசிங்கமா, எரிச்சலா வருது. ஏதோ இவ வேணும்ட்டே என்ன இப்படி செஞ்சுட்டான்னு கண்டமேனிக்கு யோசனை போவுது. ஆச்சியும், அக்காவும் இல்லன்னா, அவ முடிய புடிச்சு ஆட்டிருப்பேன்…

என்னன்னு தெரியல, என் உடம்பெல்லாம் ஒருமாரி ஒதறலெடுக்கு. ஒரு அம்மாவாச அன்னிக்கு நடுச்சாமத்துல ஓட்ட பிரிச்சு இறங்கின கள்ளன், அம்மை கத்தி ஊற கூட்டினதும், முழங்கை அளவு கத்திய சருட்டுன்னு உருவி ஒரு நிமிசம் அவ கழுத்துல வச்சது, படுக்கலாமுன்னு பாய விரிச்சப்ப உள்ளுக்கு கடந்த உள்ளங்கை அளவு நட்டுவாக்காலி, வட்டி பணம் வாங்க வந்த தொறைச்சியோட அண்ணன் கொம்பையன், பணம் இல்லைன்னதும் அம்மையோட கொண்டையை புடிச்சு இழுத்து கீழ தள்ளினது, மனசுக்குள்ள இதெல்லாம் ஓடிட்டே இருக்கு. எனக்கு குளிரெடுக்கு…

***

அதுக்கு பிறவு ரெண்டு நாள் நடந்தது எனக்கு ஒண்ணுமே நினைவில்ல. எனக்கு காய்ச்சல் பொரிச்சு தள்ளிட்டாம். அம்மைய ஆள வச்சு கொண்டு போனப்ப பேய் அறஞ்ச கணக்கா நின்னேனாம். ஆனா அழுவல. இன்னி வர அழுவல. இன்னியோட எட்டு மாசம் ஆச்சு. எனக்கு ராத்திரி உறக்கம் இல்ல. ஆச்சி கூட படுத்துக்குது. ஆனா லேசா கண்ணசந்தாலே திடீருன்னு யாரோ உசுப்பின கணக்கா முழிப்பு தட்டிருது, பெறவு ராத்திரியெல்லாம் உடம்பு ஒதறிட்டே கடக்கும். ஆச்சிட்ட எதுவும் சொல்றதில்ல… அது கடந்து போராடுது எனக்காக, பாவம். அம்மை இருந்தவர படுத்தே காலம் தள்ளிட்டு இருந்தவ, அவள ஆத்துல கரைச்சுட்டு வந்த அடுத்த நாளே உழைக்கணுமுன்னு இறங்கிட்டா. எப்பவோ சேர்த்து வச்ச தங்கம், அதை வச்சு அவசர கடன அடைச்சா. முடியாதப்ப மானம், வயசெல்லாம் பாக்காம கால்ல விழுந்தா. பெறவு உடனே நிமிந்து உழைக்க போனா. முருங்கக்கா வித்தா. நடமாடற தூரத்துல இருந்த ரெண்டு மூணு வீட்டுல பாத்திரம் கழுவினா. படுத்த படுக்கையா கடக்கற பாதிரி ஒருத்தரோட மூத்திர வேட்டி, பீ போர்வை துவைச்சா. ரெண்டு மூணு கோயிலு கூட்டி பெருக்கினா. அங்கனையே சிலப்ப கையேந்தி நிக்கறதயும் பாத்திருக்கேன். எத்தனயோ தடவ மனசு கேக்காம நானும் வேளைக்கு வாரேன்னு சொல்லிட்டேன். ஆச்சி ஒத்துக்கிடல. படிக்கலன்னா என்னைக்காச்சு எவன் காலையாச்சு புடிக்கற நெலம வருமுன்னு சொல்லிட்டே இருக்கும். ஆனா எனக்கு படிக்க ஓடல. எனக்கு என்னமோ ஆயிட்டு… நிறைய இடத்துல லூசு கணக்கா நடந்துக்கிடுதேன்னு எனக்கே விளங்குது. ரெண்டு மூணு மட்டம் கூட படிக்கற பிள்ளைய வசம்மா அடிச்சுட்டேன். பொட்ட பிள்ள கணக்காவா நடந்துக்கிடுதான்னு ஆச்சிய கூப்பிட்டு டீச்சர்மார் கண்ட கிழி கிழிச்சாவ. அம்மை இல்லாத புள்ளன்னு ஆச்சி கெஞ்சிச்சு… பெறவு டீச்சர் காலையும் புடிக்க குனிஞ்சுச்சு. அதுக்கு பெறவு பள்ளிக்கூடத்துல என்ன கொஞ்ச நாளைக்கு யாரும் எதுவும் சொல்லல…

ஏதோ காலம் தள்ளிட்டு இருந்தேன். நிம்மதியா இருக்க மாதிரி சோவாரினேன். ஆச்சி சோத்துக்கு கொறவு வைக்கல. நிறைய தின்னேன். உடம்பு பெருத்துச்சு. ஆனா உறக்கம் மட்டும் வரல. எதுக்கோ பயந்துட்டே இருந்தேன். யாரோ என்ன ஏதோ செய்ய போறாங்கன்னு பயம்… எவனோ வந்து என்ன ஏதோ செய்ய போறான்னு நடுக்கம்…

ஆச்சி எத்தன உழைச்சும் பத்தாம போயிட்டு கடைசில. ஒருநாள் சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வாரப்ப வீட்டு வாசல்ல ஒரே கூட்டம், கூச்சல். ஆச்சி யார்ட்டையோ கெஞ்சுது. ஆனா அவன் வயசுக்கு மரியாத குடுக்காம அந்தப் பேச்சு பேசுதான். ஆச்சி அவன் காலையும் புடிக்க போச்சு. ஆனா அவன அது கரைக்கல, கூட கொஞ்சம் கோவ படுத்திட்டு. எம்பது வயசு கிழவிய தேவிடியான்னு யேசினான். சமட்டிபுடுவேன்னு சொல்லி கால ஓங்கினான்.

வீடு போச்சு…

வீடு போச்சுன்னா எல்லாம் முடிஞ்சுன்னு என் அம்மை இருந்தப்போலாம் பொலம்புவா. சொந்தமுன்னு இருக்க இந்த எலிப்பொந்து வீடு மட்டும் போனா நாண்டுட்டு செத்துருவேன்னு கடந்து அழுவா. அதெல்லாம் காதுல அப்ப கேட்டுச்சு. உடம்பெல்லாம் மறுபடியும் ஒதறல். நான் பயந்ததெல்லாம் இதுக்குத்தான்னு அப்ப வெளங்கிச்சு…

நெத்தி வேர்வைய தொடச்சுட்டே ஆச்சி என் கிட்ட வந்தப்ப ரொம்ப தளர்ந்து இருந்துச்சு. என்ன அணைச்சாப்புல அவ வீட்டுக்கு கூட்டிட்டு போச்சு. அவ வீட்டுல அவ ஒருத்தி படுக்கவே இடம் கிடையாது. ஆனா வேற வழி இல்ல…

மறுநாள் காலைல எழுப்பி, “வாடி, ஆத்தங்கரை போவோம்” ன்னு கூப்பிட்டுச்சு… போனேன்… போற வழியில ஆச்சி ஒண்ணுமே பேசல. எனக்கும் என்ன பேசன்னு தெரியல. செத்தரலாமுன்னு இருந்துச்சு… அப்ப அத தவிர எதுவுமே யோசிக்க வரல. வாழவே புடிக்கல. என்ன இருக்கு இனி? இருந்து என்னத்த கிழிக்க போறேன்? ஆச்சியும் என்னபோலத்தான் நினைக்கோன்னு தோணுச்சு… இந்த ஒடம்ப வச்சுட்டு அவளும் ஏதேதோ செஞ்சு பாத்தா… ஒன்னும் ஒப்பேறல இனி என்ன செய்வா? ஆத்தோட போயிறலாமுன்னுதான் இழுத்துட்டு போறாளா? ஆச்சியோட களையிழந்த மொகத்த பாத்தா அப்படிதான் இருந்துச்சு…

ஆத்தங்கரை வந்த பிறவும் ஆச்சி ஒண்ணுமே பேசல. மெல்ல அடியெடுத்து வச்சு உள்ள இறங்கிச்சு. என்ன வான்னு எல்லாம் கூப்படல. நான் பயந்தேன்… ஆத்துக்குள்ள இறங்கிட்டு ஒரு மட்டம் திரும்பி என்ன பாத்தா ஆச்சி… லேசா சிரிச்சா… பெறவு ஒரே தாவா தாவி உள்ளுக்கு குதிச்சா…ஆச்சி!” ன்னு நான் லேசா கத்திட்டேன். ஆச்சி ஆத்தோட, என்ன விட்டுட்டு போயிருவான்னு நடுங்கினேன். ஆனா கிழவி கெளுத்தி கணக்கா நெளிஞ்சு நெளிஞ்சு நீந்தினா. ஓஞ்சுபோன அந்த ஒடம்புக்குள்ள அத்தன சூட்டிப்பு இருக்குமுன்னு நான் நினைக்கவே இல்ல… ஆச்சி அசராம அங்குட்டும் இங்குட்டும் நீந்திச்சு. பெறவு மெல்ல கரையேறி வந்து சின்ன புள்ள கணக்கா சிலிர்த்து சிரிச்சுச்சு.

நான் அவ மூஞ்சியவே பாத்துட்டு நின்னேன். அவளும் என்ன பாத்தா. “என்னடி பேய் அறஞ்ச கணக்கா முழிக்க?” ன்னு கேட்டா… எனக்கு என்ன பேசன்னே தெரியல… ஒரு நிமிசம் அப்படியே போச்சு… எம்பது வருசம் வாழ்ந்து, பெத்தெடுத்த எட்டு பிள்ளயையும் சாம்பலா பாத்துட்ட கிழவி என் கன்னத்த தொட்டு, “விடுட்டி, வாழ்ந்தரலாம்!” ன்னா… எனக்கு அப்ப என்ன வந்துச்சுன்னு தெரியல… சட்டுனு அவள கட்டி புடிச்சு, சுருங்கிப்போய் கடந்த அவ மொல மேல மூஞ்சிய அழுத்தி “ஓ!!” ன்னு அழுதுட்டேன். விக்கி விக்கி அழுதேன். ஒலகத்த மறந்து கதறினேன். “வாழ்ந்தரலாம்! வாழ்ந்தரலாம்!” ன்னு சொல்லிட்டே கடந்தா ஆச்சி. நான் அதை அப்ப நம்பினேன். அத நம்பி ஏத்துக்க ஏத்துக்க நான் அழுது கரைஞ்சேன்…

கொஞ்ச நேரம் கழிச்சு, பொக்க வாய பொளந்து சிரிச்சுட்டே, “கோட்டிக்காரி!” ன்னு சொல்லி செல்லமா மண்ணள்ளி என் மூஞ்சில பூசினா ஆச்சி. எனக்கும் சிரிப்பா வந்துச்சு. பெறவு நானே லூசு கணக்கா ஈர மண்ண அள்ளி என் மேலெல்லாம் பூசிக்கிட்டேன். ஆச்சி என் உச்சந்தலையில முத்தி, “போ, தண்ணியில இறங்கு!” ன்னு என்ன ஆத்துக்குள்ள தள்ளி விட்டுச்சு…

நான் பொத்துன்னு விழுந்தேன். நல்லா நனஞ்சேன். முங்கி ஆழம் போனேன். பெறவு கைகால ஒதறி மேல எழும்புனேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *