வாதா மரம்

ஊரே ஒரே பரபரப்பாக இருந்தது. கிராமத்தின் எல்லாத் தெருக்களிலும் ஒருவர் கூட வேலைக்கு போகாமல் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே நின்று கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு எதுவும் புரியவில்லை. யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று பார்த்தால் என் வயதுக்குரிய நண்பர்கள் யாரும் கண்ணில் படவில்லை. மணி எட்டுக்கு மேல் ஆகிவிட்டதால் பள்ளிக்கூடம் வேறு போக வேண்டும் என்ற அவசரத்தில் சாப்பிடத் தொடங்கிவிட்டேன்.  ஆனால் விஷயம் தெரியாமல் மாலை வரை பள்ளிக் கூடத்தில்  படிக்கவே முடியாது என்பதால் அம்மாவிடமே கேட்டு விட்டேன். அவளுக்கும் அந்தச் செய்தியை யாரிடமாவது சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவள் நான் கேட்டதும் உற்சாகமாகி வாசலுக்கு சென்று அப்பா திண்ணையில் இல்லாததைத் தெரிந்து கொண்டு என்னிடம்  மெல்லிய குரலில் பன்னீர் மகன் குமாரு பாப்பாத்தியை இழுத்துக்கொண்டு ஓடி விட்டானாம் என்றாள்.

எனக்கு உடனடியாக அதை நம்பவே முடியவில்லை. அதே நேரத்தில் அம்மா சொல்வது ஆச்சரியமாகவும் இருந்தது. இப்படியொரு சம்பவம்  இதுவரையில் ஊரில் நடந்ததேயில்லை. அதனால்தான் இதை வெளியில் பேசக் கூட பலரும் சங்கடப்பட்டார்கள். அம்மா சொன்ன சம்பவம் எனக்கும் அதிர்ச்சி தான். பன்னீர் மகன் குமார் என்பவர் ஒருவகையில் எனக்கு அண்ணன் முறைதான். அவரது முழுப்பெயர் செல்வகுமார். செல்வகுமார் பத்தாம் வகுப்பு வரை படித்தவர். எல்.ஐ.சி.ஏஜெண்ட் வேலைதான் முழு நேரமும், சொந்தமாக கொஞ்ச நிலம் இருக்கிறது. ஆனால் ஒருநாள் கூட மண்வெட்டியை தொட்டதில்லை. விவசாய வேலையின் மீது அவருக்கு ஏதோ தனிப்பட்ட வெறுப்பு இருக்கிறது. அவரது அப்பா பன்னீர் மட்டும் நடவு காலத்திலும் அறுவடை காலத்திலும் வயல்வெளியை சுற்றிக் கொண்டிருப்பார். மாநிறத் தோற்றம் கொண்ட செல்வகுமார் சிரித்த முகத்தோடுதான் பேசுவார். சாமர்த்தியமான அவரது பேச்சுத்திறமையினால் ஊரில் பலரும் அவரது பாலிசிதாரர்களே. வாரத்தின் தொடக்கத்திலிருந்து வசூல் செய்யத் தொடங்கும் செல்வகுமார் அதே வாரத்தின் இறுதியில்தான் பணத்தை மொத்தமாக சேர்த்துக்கொண்டு தஞ்சாவூர் சென்று எல்.ஐ.சி. அலுவலகத்தில் கட்டிவிட்டு வருவார். கிராமத்திலிருந்து தஞ்சாவூர் செல்வதற்காகவே அவரிடம் ஒரு டி.வி.எஸ்.50 வாகனம் இருக்கிறது. அந்த வாகனத்தின் பச்சை நிறங்கூட மங்காமல் புதியதாக வைத்திருப்பார். காலை மாலை இரண்டு வேளையிலும் அந்த வண்டியை தேங்காய் எண்ணைய் போட்டு பளபளவென துடைத்து வைத்திருப்பார். அவசரத்திற்கு கூட யாருக்கும் அந்த வண்டியை இரவல் தரமாட்டார். தவிர்க்கவே முடியாத ஒரு கட்டத்தில் அந்த வண்டியை இரவல் தந்தாக வேண்டும் என்ற பட்சத்தில் மிகுந்த சங்கடப்பட்டுக்கொண்டே தந்துவிட்டு வண்டி திரும்ப தனது கைக்கு வரும்வரை கொடுத்த இடத்திலேயே நின்று கொண்டிருப்பார். தனது காரியத்தில் அவ்வளவு சுத்தமாகவும் கறாராகவும் இருந்து பழகிய செல்வகுமாரா ஊரே பேசும்படியான இந்தக் காரியத்தை செய்திருப்பார். என்னால் நம்பவே முடியவில்லை.

பள்ளிக்கூடம் போகிற வழியில்தான் அந்த பிராமணப் பெண்ணின் வீடு. அவள் பெயர் கூட ராஜலெட்சுமி என்ற நினைக்கிறேன். ஆமாம். அந்த பெயரின் சுருக்கமாகத்தான் நாங்கள் கூட ராஜீ அக்கா என்றே அழைப்போம். நாங்கள் பள்ளிக் கூடம் போகும் நேரங்களில் தான் ராஜியக்கா தஞ்சாவூர் காலேஜ் போவதற்காக எதிரில் வருவாள். சமயங்களில் நாங்கள் வருவதற்கு முன்பாகக்கூட அவள் எங்கள் தெருவினைக் கடந்து சென்றிருப்பாள். இப்போது ராஜியக்காவின் வீட்டுவாசலில் ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது. அந்த வீட்டின் திண்ணையில்தான் அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. அதன்  ஓரமாகவும் கொஞ்சப்பேர் நின்று கொண்டிருந்தனர். இந்த அஞ்சல் அலுவலகத்திற்கு சரியாக பதினோரு மணியளவில் என்னை அனுப்பி வைத்து இரண்டு இன்லேண்ட் லெட்டர் வாங்கிவரச் செய்து அதில் மதிய உணவு இடைவேளை முன்பாக ஏதாவது எழுதி அதை ஒட்டி திரும்பவும் அதே அலுவலகத்திற்கே  என்னை அனுப்புவார் மைக்கேல்சார். வாரப்பத்திரிகை ஒன்றுவிடாமல் படிப்பதும், அதே பத்திரிகைகளுக்கு ஏதாவது எழுதிப் போடுவதும்தான் மைக்கேல்சாரின் அன்றாடப் பழக்கம். மைக்கேல்சார் எங்கள் பள்ளிக் கூடத்திலிருந்து ஓய்வு பெற்று வீட்டிற்கு செல்லும்போது அஞ்சல் அலுவலகம் அருகே வந்தவடன் சைக்கிளை நிறுத்திவிட்டு அலுவலகம் அருகே சென்றவர் பத்து நிமிடம் நேரம் போல் அங்கேயே நின்றபடியே வெளியில் சத்தம் வராமல் வாயில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

வேணுகோபால் அய்யர் வீட்டினை இதற்கு முன் இவ்வளவு பரிதாபத்தோடு யாரும் பார்த்திருக்க முடியாது. அஞ்சல் நிலையம் வருபவர்களுக்கு அவரது வீட்டின் முன்புறமாக வளர்ந்து நிற்கும் வாதாம் மரமும் அதை ஒட்டினாற்போல நின்றிருக்கும் வேப்பமரமும் ஒரு அமைதியையும் குளிர்ச்சியையும் தந்துகொண்டே இருக்கும். போஸ்ட்மேன் வருவதற்கு தாமதமாகும் நேரங்களில் அஞ்சல் நிலையத்தின் கிழக்கு பக்கமாக ஒரு திண்ணையுண்டு அதில் கல்கி, ஆனந்த விகடன் போன்ற வாரப் பத்திரிகைகளும், தினமணி, இந்து போன்ற தினசரிகளும் கிடக்கும். அங்கே காத்திருப்பவர்கள் அந்த பத்திரிகைகளை புரட்டிக்கொண்டிருப்பார்கள். இன்று அந்த திண்ணையின் ஓரத்தில் அதாவது நிலைவாசலை ஒட்டியவாறே வேணுகோபால் அய்யர் உறுதியற்ற நிலையில் அமர்ந்திருந்தார். தாழ்வாரத்தின் நடுவே உள்ள தொலைபேசி அடிக்கடி ஒலித்துக்கொண்டேயிருந்தது. வேணு அய்யரின் மனைவி முற்றத்தின் விளிம்பில் ஒரு துாணில் சாய்ந்தபடியே நின்று கொண்டிருந்தார். சமையலறை நடையில் அவளது மாமியார் ஒரு பெஞ்சில் படுத்தபடியே முனகிக் கொண்டிருந்தாள். அங்கேயுள்ள சூழ்நிலை மேலும் மேலும் இறுகுவதைக் கண்ட கருப்பையாத் தேவர் மெல்லியதாக செறுமிக்கொண்டே கூட்டத்தை ஏகமாக ஒருமுறைப் பார்த்தார். கருப்பையாத் தேவரைப் போலவே சீனிவாசன் பிள்ளையும் தனது தெருவாசிகளை என்ன செய்யலாம் என்பதைப் போலவே பார்த்தார். கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டு பிறகு அடங்கியது. சீனிவாசன் பிள்ளையே ஆரம்பித்தார்.

“அய்யா ..நீங்க இப்படியே அமர்ந்திருப்பதைப் பார்த்தால் எங்களுக்கெல்லாம் பெரும் கவலையாக இருக்கிறது. அவன் செய்த மாபாவத்திற்கு நாங்களெல்லாம் பழி சுமக்க வேண்டியதாய் போயிடுச்சி. நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள் என்று எல்லோருக்காகவும் பேசுவதைப் போல பேசி முடித்தார். வேணு அய்யர் சற்றே உள்நோக்கி வீட்டின் முற்றத்தினைப் பார்த்தார். துாணைப் பற்றிக்கொண்டிருந்த அய்யரின் மனைவியால் தனது பார்வையைத் தாள முடியாமல் அங்கிருந்து விலகுவதைப் போல் அசைந்து கொண்டிருந்தாள். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் சம்பளப் பட்டியலில் கையெழுத்து வாங்க தலைமையாசிரியர் வந்து நின்றார். கூட்டத்தில் ஒருவரைப் போலவே அவரும் அங்கே நின்று கொண்டிருந்தார். வழக்கம்போல் தான் எப்போது வேணு அய்யர் வீட்டிற்கு சென்றாலும் தன்னை வீட்டிற்குள் அழைத்து கூடத்தில் அமரவைத்து காப்பி சாப்பிட்ட பிறகே மற்ற பள்ளிக்கூட விவகாரங்களை விசாரிக்கும் வேணு அய்யரா இப்படி தன்னைக் கண்டும் காணாமல் இருக்கிறார். ஒன்றுமே புரியவில்லை. அவரைச் சுற்றிலும் ஊர்க்காரர்கள் பெரும்பாலும் திரண்டு நிற்கிறார்கள். என்ன செய்வதென்றெ தெரியாமல் நின்ற போது வேணு அய்யர் ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்துவிட்டு “சார்..நாளைக்கு வாங்க” என்று கூறிவிட்டு தலையைக் குனிந்து கொண்டார்.

பனிரெண்டு மணியிருக்கும் பெண்களில் சிலரும் அய்யரின் வீட்டில் கூடத் தொடங்கினர். தொலைபேசி தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது. அதில் எரிச்சல் உண்டானதோ என்னவோ உள்ளே சென்று ரிசீவரை எடுத்து கீழே வைத்துவிட்டு திரும்பி வந்து அமர்ந்தார். அந்த நேரத்தில் கூட்டம் ஒருமுறை சலசலத்து அடங்கியது. இப்போது வேணு அய்யர் சற்று உறுதியான மனதோடு நிமிர்ந்து உட்கார்ந்தார். ஏதோவோரு முடிவுக்கு வந்தவர்போல் நீண்ட பெருமூச்சினை இழுத்துவிட்டார். கருப்பையாத் தேவரும் சீனிவாசன் பிள்ளையும் ஊர்ப் பெரியவர்களில் சிலரும் அய்யரை நெருங்கி உட்கார்ந்தனர். வேணு அய்யர் சற்று கணைத்தபடியே பேசத் தொடங்கினார்.

“எனது மகன் கல்யாணத்தின்போதே என்னையும் பெங்களுருக்கத்தான் கூப்பிட்டான். எனக்கும் போக இஷ்டம்தான். நானும் குடும்பத்தோடு அவனோடு போயிருந்தால் இந்தப் பள்ளிக்கூடமும் இந்த வயல் வெளியும் பார்க்க ஆளில்லாமல் கெட்டு சீரழிந்து போய்விடும் என்ற நினை்பில்தான் என் மகளின் கல்யாணம் வரையிலாவது இங்கேயே இருந்து விடுகிறேன் என்று என் மகனிடமும், மாட்டுப்பெண்ணிடமும் சொல்லியனுப்பினேன். அவர்கள் எவ்வளவோ விடிவாதம் பிடித்துப் பார்த்தார்கள். நான்தான் கேட்காமல் விட்டேன். இதோ இப்படி நடந்துவிட்டது. இனி என் மகனையும் என் மருமகளையும் எந்த முகத்தோடு நான் பார்ப்பேன். நான் செய்தது தப்புதான் என்பதை இப்போதுான் உணர்கிறேன். என்க்கு உங்கள் மீது துளியும் கோவமில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம். விதி அப்படித்தான் நடக்கும் என்று எழுதியிருந்தால் யார்தான் அதை தடுத்துவிட முடியும். என் மகள் ராஜியும் கூட பாவம்தான் பச்சப்பிள்ள. ஏதோ விளையாட்டாக இப்படி செய்துவிட்டாள். அவளுக்கு லோக நடப்புகள் ஏதும் தெரியாமலே வளர்ந்துவிட்டாள். ஏதோவொரு டிகிரி படித்துவிட்டால் எல்லாம் தெரிந்துவிடுமா என்ன?,” என்று நிறுத்திவிட்டு மீண்டும் ஒருமுறை கூட்டத்தைப் பார்த்துவிட்டு தீர்மானமாகவும் உரக்கமாகவும் பேசத் தொடங்கினார். “நீங்கள் எல்லோரும் சேர்ந்து இங்கே வந்திருப்பது எனக்கு உபகாரம் செய்யத்தான் என்றால் அந்த உபகாரத்தை உடனடியாகச் செய்யுங்கள். என் மகள் எங்கிருந்தாலும் கூட்டி வந்து என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். என் மகள் ஒன்றே  போதுமெனக்கு. அந்த காரியத்தை நீங்களெல்லாம் சேர்ந்து எவ்வளவு சீக்கிரம் செய்து தர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்து கொடுங்கள்” என பேசி முடித்தார்.

கூட்டம் முடிவுக்கு வந்து தங்களுக்குள் பேசிக்கொண்டு ஆளுக்கொரு திசையாகத் தேடத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சேதியாக வந்து கொண்டே இருந்தது. கிராமத்தில் ஆண்கள் பலரும் ஊரில் இல்லை. பெண்களும் சிறுவர்களுமே ஆடுமாடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வேணு அய்யர் வீட்டை விட்டு வெளியேஎங்கும் நகராமல் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறே வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தார். வங்கிகளின் ஆடிட்டிங் வேலைக்காக தஞ்சாவூர், திருச்சிக்கு போவதைக் கூட இந்த ஒரு வாரத்தில் நிறுத்தி வைத்திருந்தார். இரண்டாவது வார இறுதியில் இரவு ஏழுமணியிருக்கும், வேணு அய்யரின் வீட்டு வாசலில் வெள்ளை நிற அம்பாசிடர் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து சீனிவாசன் பிள்ளையும் வேறு சிலரும் கூடவே ராஜியும் நடந்து வீட்டிற்குள் சென்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *