நியதி

 

காலையிலேயே இரண்டாவது கோப்பை மதுவை உள்ளிறக்கிவிட்டு “டிங்க்” என்ற சத்ததோடு கண்ணாடிக் குவளையை ஷோஃபாவின் எதிரிலிருந்த தே-மேசை மேல் வைத்தான்.

இரவின் தூக்கமின்மையுடன் மதுவின் மெல்லிய கிரக்கமும் சேர்ந்து கொண்டது. சிவந்த கண்கள் மூடும் போதெல்லாம் தலையை உலுக்கி திறந்து கொண்டான். உள்ளிருந்து எழும் ஏதோவொன்று விடாமல் துரத்திக் கொண்டிருந்தது. முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு தனது டாட்டா இண்டிகாவில் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரிக்கு சென்று, காரினை நிறுத்திவிட்டு, நெஃப்ராலஜி பிரிவினை நோக்கி தள்ளாடியபடியே நடந்தான். மணி ஏழினை நெருங்கிக் கொண்டிருந்தது. உதிர்ந்த பெருங்கொன்றை பூக்கள் பெருக்கி சுத்தம் செய்யப்பட்ட மண் சாலையினை சரிகை பூக்கள் போல அலங்கரித்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்பவர்கள் தவிர கூட்டம் இன்னும் வரத் துவங்கியிருக்கவில்லை. இடது புறம் இருக்கும் புற நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை கடந்து வலது பக்கம் திரும்பினால் சிறுநீரகத்துறையின் உள் நோயாளிகள் பிரிவு உள்ளது.  முகத்தை சரித்து வாயினை சட்டையில் துடைத்துக் கொண்டே வேகமாக நடந்தவனை, ஒவ்வொரு அடிக்கும் இரு புறத்திலுமிருந்தும் ஏதோ பற்றி இழுப்பது போல் வழியிலிருந்து விலக்கி தள்ளியது, மீண்டும் நேர்பாதைக்கு எப்படியோ வந்து நடந்து கொண்டிருந்தான். 

மருந்து வாசனையையும் மீறி எழும் மதுவின் வாசத்தினை நுகர்ந்து உறுதிப்படுத்திக்கொள்வதற்காக கட்டிடத்தின் வெளிப்புற வாயிலில் நின்றேன். அங்கிருந்த தகரக் கூரையிடப்பட்ட பாதையின் இரு புறமும் மனிதர்கள் படுத்துக் கொண்டும் உட்கார்ந்து கொண்டும் இருந்தார்கள். அவர்களுக்கு அருகில் கட்டைப்பைகளும் துணிப்பைகளும் சில தண்ணீர் பாட்டில்களும் இருந்தன. அவர்கள் உள் நோயாளிகளின் உறவினர்களாக இருக்கலாம். தூங்கி எழுந்து அடுத்த நாளினை கையிலிருக்கும் டீயோடு வரவேற்றுக் கொண்டிருந்தார்கள் சிலர். அவர்களைக் கடந்து பெரிய இரும்பு கேட்டின் வாயிலில் இருந்த ஒற்றைக் காலி இருக்கையினை தாண்டி உள்ளே நுழைந்தேன். இடப்புறம் இருந்த அறையில் இளஞ்சிவப்பு நிற உடை அணிந்த செவிலி இரவு நேர வேலைக்கு பிறகு புறப்பட தயாரித்துக் கொண்டிருந்தார். சற்று தூரத்திலயே நின்று கொண்டு அவரிடம் கிட்னி டிரான்ஸ்பிளான்ட் பிரகாஷ் எந்த அறையில் இருக்கிறார் என்று கேட்டேன். 

அவர் திரும்பி என்னை பார்க்கும் போது கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைப்பது போல் பாவனை செய்தேன். மூன்றாவது இடது பக்க அறை என்ற பதிலைக் கேட்டு தாமதியாமல் செவிலியை கடந்து சென்றேன். கைக்குட்டையில் இருந்த பவுடரின் வாசனை முகத்தில் தங்கியது போல் தோன்றியது. 

பிரகாஷ் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். எட்டு கட்டில் கொண்ட அறையில் வேறு யாரும் இல்லை. ஒவ்வொரு கட்டிலின் மூலையிலும் குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிடும் கம்பி வெறுமனே நின்று கொண்டிருந்தது. நடுவிருக்கும் அலமாரியில் சில மருந்துகளும் குப்பிகளும் தூசி படிந்து கிடந்தன. நான் கட்டிலின் விளிம்பில் அமர்ந்து கொண்டு அவனை எழுப்பினேன். கழுவாமல் வைக்கப்பட்டிருந்த பழச்சாறு குவளையிலிருந்த ஈக்கள் பறந்து விலகி மீண்டும் அமர்ந்தது. தரையில் பரிசோதனை அறிக்கைகளின் கத்தை நிரம்பிய பை சுவரோடு சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.

எழுந்து தலையணையினை முதுகிற்கு வைத்துக் கொண்டு அமர்ந்தவன் நிதானித்து “என்ன காலையிலேயே சரக்கா..?” என்றான்.

அவன் கேட்டதும் பவுடரின் வாசம் இல்லாமலாகியது. நன்கு தூங்கியிருப்பது அவனது தெளிந்த கண்களில் தெரிந்தது. எனது எரிச்சல் நிறைந்த கண்களை தாழ்த்திக் கொண்டேன். 

“என்னடா மாப்ள.. ஓத்தா வர வர மோசமாயிட்டுருக்க.. சொல்றத கேளு பேசாம வேற கல்யாணம் பண்ணிக்க” என்றான்.

என்னிடமிருந்து வெளிப்பட்ட உறுமல் என்னையே அச்சுறுத்தியது. கீழிருந்த தண்ணீர் புட்டியை திறந்து மட மடவென்று குடித்தேன்.

பின்பு சிறிது நேரம் கழித்து “அம்மா இல்லையா.. “ என்றேன்.

“அவங்க கலை கூட லேடீஸ் வார்டுல இருக்காங்க.. இன்னும் மூனு நாள் தான இருக்கு..”

“என்ன மச்சி.. காலைலேயே கிளம்பி வந்திருக்க..?” என்றான் பிரகாஷ்.

“ரூபாவ ஹாஸ்பிட்டல்ல சேத்திருக்காங்க”

“என்னாச்சி.. எந்த ஹாஸ்பிட்டல்ல…”

“மியாட்ல… கலைக்கு சொன்ன மாதிரி தான் சொல்லியிருக்காங்க…”

“என்ன திடீர்னு…”

“அவ குடிச்சி குடிச்சே கிட்னி போயிருக்கும்.. ரெண்டு வாரமா அங்க தான் ட்ரீட்மென்ட் போயிட்டிருக்கு..”

 “சரி விடு மச்சி.. எப்படியும் டிவர்ஸ் போட்டாச்சி.. இப்ப கடவுளுக்கே பிடிக்கல போல.. அதுக்கு நீ ஏன் டென்ஷன் ஆகுற..விடு..”

“ஆமா.. ஒரு வகையில பாத்தா எனக்கு இருக்குற பிராப்ளம் இதோட முடிஞ்சிருச்சினு தோணுது… ஆனா.. விட முடியல…”

“என்ன திரும்ப லவ் ஸ்டார்ட் ஆகுதா…” என்றான் வாயோர புன்னகையுடன்.

“லவ் திரும்பவுமா.. அவள நெனச்சாலே எரியுது..  நான் எப்படி இவள லவ் பண்ணேன்னு நெனச்சே பல நாள் தற்கொலை பண்ணிக்கனும்னு தோனிருக்குடா…”

அவன் ஒன்றும் சொல்லவில்லை.

“நீ என்ன நெனைக்கிறனு தெரியுது மச்சி.. ஜாலியா ஒன்னா சுத்தி கல்யாணத்துக்கு முன்னாடியே நாலு முறை அபார்ஷன் பன்னிட்டு.. இப்ப இப்படி பேசுறானேனு நெனைக்கிற.. அப்போ நம்ம டீம்ல இருந்த எல்லாரும் எங்கள பாத்து பொறாம படுவீங்க.. அந்த கேளம்பாக்கம் வீட்டில ரெண்டு பெரும் லிவிங்க்ல இருந்தோம்.. உண்மையிலேயே வாழ்க்கைய அனுபவிக்கிறது நாங்க தான்னு நெனச்சேன் மச்சி.. டெய்லி குடி, விதவிதமா செக்ஸ், வீக் என்ட் ட்ரிப்னு… எங்களுக்குள்ள எல்லாமே அப்படி ஒத்து போகுதுனு நெனச்சி பயங்கர ஹாப்பியா இருந்தேன்…” 

“ம்ம் தெரியும்டா..”

“கல்யாணம் பன்னதுக்கு அப்றோம் இவ்வளவு நாள் சாகசம்னு நெனச்சிட்டு இருந்தது சாதாரணமா ஆகிருச்சி.. எல்லா புது ஜோடியும் செய்யறது தான கல்யாணத்துக்கு முன்னாடி செஞ்சிருக்கோம்.. ஆனா சாதாரணம்னு நெனச்சதெல்லாம் அசாதாரணமா ஆகிருச்சி…”

“ம்ம்ம்..”

“அவள யாரும் ஒன்னும் சொல்லக்கூடாதுனு நெனைக்கிறத மாத்த முடியல.. இவ்வளவு நாளா அந்த வீட்டில எப்படி இருந்தாலோ இனிமேலும் அப்படி இருக்கனும்னு நெனைக்கும் போதுதான் பிரச்சனை ஆரம்பமாச்சி.. கல்யாணமாகி மறு நாளே கிளம்பி சென்னைக்கு வந்துட்டோம். இங்க வந்திருந்த ரெண்டு பக்க சொந்தக்காரங்களையும் மூனு நாளுக்குள்ள சண்ட போட்டு விரட்டிட்டா.. இவ்வளவு நாளா நிர்வாணமா சுத்தின வீட்டில இப்ப குடும்ப பொண்ணு மாதிரி இருனு சொல்றத அவளால ஏத்துக்க முடியல.. ”

“ஆனா உண்மையிலேயே இந்த எதிர்பார்ப்பு எங்கிட்ட எப்படி வந்ததுன்னு தான் எனக்கு இன்னும் ஆச்சரியமா இருக்குது.. அவ எப்பயும் போல தான் இருக்கா.. திடீர்னு நான் தான் மாறிட்டேன். அவ குலதெய்வம் கோயிலுக்கு வர மாட்டேன்னு சொன்னதுக்கு அவள அடிச்சிட்டேன்.. அப்றோம் எத்தனையோ முறை ஊர் திருவிழாக்கு, பண்டிகைக்கு கூப்பிட்டப்பவும் அவ வரல. அவங்க வீட்டுக்கும் போனதில்ல.. ஒரு நாள் திருச்சில இருந்து அவங்க அப்பாவும் அம்மாவும் காலைலேயே வந்திருந்தாங்க. “தாலி பிரிச்சி கோக்கறதுக்கு வீட்டுக்கு வாங்கன்னு” கூப்பிட்டதுக்கு தாலிய கழட்டி எடுத்துட்டு போங்கன்னு கையில குடுத்திட்டா.. அப்றோம் அவங்க இங்க வர்றதில்ல. அவளோடது பெரிய குடும்பம், ஏகப்பட்ட நிலம் இருக்கு.. இருநூறு பேருக்கு மேல வேல பாக்குறாங்க.. 96 ல காலேஜ் படிக்க சென்னை வந்ததுக்கு அப்றோம் அவங்க வீட்டுக்கு வர்றத நிறுத்திட்டான்னு அவங்க அப்பா சொன்னாரு..” 

“காலேஜ்லயே சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சிட்டேன்.. ஊருக்கு போயி சிகரெட் பிடிச்சதுக்கு அப்றோம் அவங்களே நான் வரலைன்னு கவலப்பட்றதில்லன்னு ரூபா சொன்னா..” என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது போல் தொடர்ந்தேன். அவன் கேட்கவில்லையென்றாலும் அதனால் ஒன்றுமில்லை.

“அவ என்ன கேக்காமா அபார்ட் செஞ்சதுக்கு நான் ஏன் அப்படி கோவப்பட்டேன்னு எனக்கு தெரியல மச்சி.. அவ ஐட்டம் மாதிரி வாழனும்னு நெனைக்கிறான்னு எனக்கு தோணுச்சி.. ஆனா அப்படியில்ல.. அவ எங்கிட்ட உண்மையா தான் இருந்தா..  இப்பவும் நான் தான் டிவர்ஸ் அப்ளை பண்ணேன் முதல்ல.. ” 

 “ஹாஸ்பிட்டலுக்கு போய் பாத்தியா”

“போனேன்.. வெளியே இருந்து பாத்தேன்.. டயலிசிஸ் பண்ணிட்டு இருந்தாங்க.. அவ மேல சிமொன் டெ பெவோயிரோட புக்கு இருந்தது. அவங்க அம்மாவ பாத்தேன். ஒன்னும் பேசல. டாக்டர்கிட்ட பேசினேன். லேடீஸ்க்கு சில நேரத்துல அப்நார்மலா கிட்னி மால்ஃபங்க்ஷன் ஆகுறது உண்டு. அது மாதிரி தான் நடந்துருக்கு.. வேற கிட்னி கிடச்சிருச்சின்னா மூனு மாசத்துல ரெகுலர் லைஃப்க்கு திரும்பிடலாம்னு சொன்னாரு..”

“ம்ம்ம் சரியாகிடும் மச்சி.. ரொம்ப ஃபீல் பண்ணாத.. சரியானதுக்கு அப்றொம் புது லைஃப் ஸ்டார்ட் பண்ணுங்க..”

“இல்ல மச்சி.. இனிமே அது நடக்காது..” என்னுடைய குரலில் இருந்த உறுதி அத்தனை தெளிவாக அதனை உணர்த்தியிருக்க வேண்டும். அவன் ஒன்றும் சொல்லவில்லை. “சரி எனக்கு உண்மைய சொல்லு.. நீ எப்படி ஒத்துக்கிட்ட..”

“யாராவது செய்யனுமில்லயா.. ரெண்டு பொட்ட புள்ளைங்க வேற இருக்குதே..”

“ஒத்தா பாட்டில எடுத்து மண்டைய ஒடச்சிடுவேன்.. நீ யாருனு எனக்கு தெரியாதா..”

“மச்சி அமைதி… இது ஹாஸ்பிட்டல்”

“உன் பொண்டாட்டிய ஹாஸ்பிட்டல்ல சேக்கிறதுக்கு கூட போகாம குடிச்சி மட்டையான நாயிடா நீ.. இந்த கதயெல்லாம் எங்கிட்ட விடாத..” அவனது கையை பிடித்து முறுக்கினேன்.

“ஆஆ.. விடுடா.. வலிக்குது சொல்றேன்..”

“ம்ம்ம்”

“மச்சி உனக்கு தான் தெரியுமே.. ட்வின்ஸ் பொறந்ததுக்கு அப்றமா அவ உடம்பு அடிக்கடி சரியில்லாம வந்தவாசிலயே அவங்க அம்மா வீட்ல பாத்துக்கிட்டிருந்தாங்க.. கொஞ்ச நாளுக்கு அப்றமா கால் இரண்டும் வீங்கிருச்சி.. சாதரண வீக்கம் தானே, நீர் கோத்துட்டு இருந்தா அப்படி இருக்கும்னு  வைத்தியம் பாத்தாங்க.. யூரின் போகாம ரொம்ப கஷ்டப்படவும் தான் காஞ்சிபுரம் ஹாஸ்பிட்டல்ல சேத்தாங்க. அங்கிருந்து செங்கல்பட்டுல.. அங்கிருந்த டாக்டர் இங்க ரெஃபர் பண்ணினாங்க.. இங்க செக் பண்ணிட்டு ரெண்டு கிட்னியும் போயிருச்சினு சொல்லிட்டாங்க.. இப்ப டயலிசஸ் பண்ணிட்டிருக்காங்க.. ”

“வேற கிட்னி கிடைக்கிறதுக்கு பதிவு செஞ்சிட்டு வெயிட் பண்ணோம். அவளுக்கு நம்பிக்க போயிருச்சி. எங்க அம்மா கிட்ட கொழந்தய நல்லா பாத்துக்கோங்க என்ன பத்தி கவலப்பட வேணாம்னு சொல்லிக்கிட்டே இருப்பா.. அவ உடம்பு செரியில்லனு ஒரு நாள் கூட அழுது யாரும் பாத்ததில்ல.. இவ்வளவு தான் நம்ம வாழ்க்கைனு எப்படியோ ஏத்துக்கிட்டா..”

“நான் எப்பயும் போல வேல முடிஞ்சி ஹாஸ்பிட்டல் போயி பாத்துட்டு சாப்பாடு வாங்கி குடுத்துட்டு சரக்கு வாங்கிட்டு வீட்டுக்கு வந்து குடிச்சிட்டு படுத்துடுவேன். என்னோட பழைய சி டி எம் ஏ போன் அவங்ககிட்ட குடுத்துட்டு இந்த புது நோக்கியா 1100வ வாங்கி நான் வச்சிருந்தேன். 

இங்க வந்து ரெண்டு மாசத்துக்கு அப்றமா.. உனக்கு தான் தெரியுமே.. நீ டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டு வந்த நாள் அது. அன்னைக்கு கொஞ்சம் அதிகமா குடிச்சிட்டேன். நீ போனதுக்கு அப்றோமா எங்கம்மா போன்ல கூப்பிட்டது எனக்கு தெரியல. அவங்களுக்கு போன் பத்தி ஒன்னும் தெரியாதுங்கிறதுனால எதாவது சொல்லி சமாளிச்சிக்கலாம்னு நெனச்சேன். மறு நாள் காலைல நான் ஹாஸ்பிட்டல் போகும்போது எங்கம்மா வழியிலேயே நின்னுட்டிருந்தாங்க..”

“அவங்க அப்படி என்ன மொறச்சி பாத்ததில்ல.. கைய பிடிச்சி வார்ட தாண்டி வரண்டாவுக்கு கூட்டிட்டு போனாங்க.. ரெண்டு கன்னத்திலயும் நாலு அற செவுல்லயே வச்சாங்க.. எனக்கு பொறி கலங்கிருச்சி.. சத்தம் கேட்டு அங்கிருந்தவங்க வந்து பாத்தாங்க.. அம்மா மொறச்சதுல திரும்பி போயிட்டாங்க.. “

“என்னோட ஒரு கிட்னிய நான் குடுக்கனும்னு அவங்க சொல்லிட்டாங்க… அவ்ளோ தான். இது தான் மச்சி நடந்தது..”

போதை இப்போது தெளிந்திருந்தது. நான் சற்று பின்னகர்ந்து நன்றாக அமர்ந்து சம்மணமிட்டுக் கொண்டேன். “உங்க அம்மா எப்படி டா இதுக்கு ஒத்துக்கிட்டாங்க..”

“அது தான் தெரியல மச்சி.. எப்ப பாரு அவள கொற சொல்லிக்கிட்டு இருப்பாங்க.. மாசத்துக்கு ரெண்டு சண்ட வராம இருந்ததில்ல..”

நான் பதிலெதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.

“அவளும் பொறுத்துப் போற ஆளெல்லாம் இல்ல.. நல்லா சண்டைக்கு வரிஞ்சி கட்டிக்கிட்டு நிப்பா.. ஆனா தனியா போகணும்னு சொன்னதில்ல.. ”

“எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யறவ தான் கலையும்.. ஆனா அவ வேலை செஞ்சிட்டா இவங்க அத விட பெரிய வேலைய இழுத்துக்கிட்டு வந்திருவாங்க..”

“எங்கம்மாவ பத்தி நிறய கலை வந்ததுக்கு அப்றோமா தான் நானே தெரிஞ்சிக்கிட்டேன். பசங்க கூட இருக்கிறது மாதிரி மருமக கூட இருக்க முடியாது. எப்படியோ அது போட்டியா மாறி வந்திடுது.”

“அதெல்லாம் விட.. கொழந்த நிக்கிறதுக்கு ரெண்டு வருஷம் ஆனதுக்கு தான் பெரிய சண்டையெல்லாம் ஆகிருச்சி.. நானும் கொஞ்சம் வருஷம் போகட்டும்னு இருந்துட்டேன்.. எங்கம்மா தொல்ல தாங்க முடியாம டாக்டர பாத்து எப்படியோ சீக்கிரம் நின்னுருச்சி…”

நான் மூச்சை இழுத்து விட்டு அன்னார்ந்து மின் விசிறியை பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து

“உங்கம்மா சொன்னதும் நீ சரின்னு சொல்லிட்டியா..?” என்றேன்.

“மச்சி உங்கிட்ட மட்டும் சொல்றேன்.. அன்னைக்கு எங்கம்மா மொகத்த பாத்ததும் எனக்கு வாயடச்சி போயிருச்சி.. நீ ஒரு கிட்னிய தரணும் எம் மருமவளுக்கு, இல்லன்னா நீ எனக்கு புள்ள இல்லடான்னு, கண்ணெல்லாம் பெருசா உருட்டிக்கிட்டு நாக்க துருத்திக்கிட்டு மொகம் செவுந்து போயி அவங்க சொன்னத கேட்டு நான் ஒண்ணுக்கு போயிட்டேன். உண்மையிலேயே பயந்து போய் தான் ஒத்துக்கிட்டேன்.. ஆனா இப்ப ஏதோ ஒரு திருப்தி இருக்கு.. ஆறு மாசமா குடிக்காம இங்க ரெகுலர் செக்கப்ல இருக்கேன்.. எல்லாம் நார்மலா இருக்குன்னு சொல்லியிருக்காங்க.. இன்னும் மூனு நாள்ள ஆப்ரேஷன் டேட் சொல்லிருக்காங்க..”

“சரி மச்சி நான் கிளம்புறேன்..”

“சரி.. எங்க வீட்டுக்கா..?வேலைக்கா..? ”

“இல்ல ஹாஸ்பிட்டலுக்கு..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *