உரு ஆடி

அந்த கண்ணாடிக் கடையில் இப்படியொரு நிகழ்வை இதுநாள் வரையில் அவன் சந்தித்ததேயில்லை. சந்தானகிருஷ்ணனின் நாற்பது ஆண்டு கால வாழ்க்கையிலும் சரி…. ஏன் இந்த கண்ணாடிக் கடையின் மூன்று தலைமுறை ஆயிசிலும் சரி……. இப்படியொன்று நடந்ததேயில்லை. அதனால்தான் என்னவோ…. இந்த நிகழ்வு சந்தானகிருஷ்ணனை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தியது. அவனின் ஆழ்ந்த யோசனைக்குப் பின்தான், பிற்காலத்தில் கண்ணாடியுள்ளிருந்து யாருமே அறிந்திராத ஒரு அதிசயம் நடக்கப் போவதாக, அந்த சீன யாத்திரிகர் தாத்தவிடம் சொல்லிய தாந்திரீகக் கதையின் மந்திர முடிச்சின் சூட்சுமம் தெரியவந்தது.. ஆனாலும், அந்த அதிசயம் சந்தானகிருஷ்ணன் காலத்தில் நடந்ததுதான் பெரும் ஆச்சரியம்.

சந்தானகிருஷ்ணன் அந்த நீல நிற கண்ணாடியையே வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். அவரால் கண்ணாடிக்குள்ளிருந்து வெளிவந்திருந்தது யார் என்றே முதலில் அனுமானிக்க முடியவில்லை. மனிதன் மாதிரியும் தெரிந்தது. அவ்வளவு சிறிய உருவில் வந்தது மனிதனா? என்ற சந்தேசமும் எழுந்தது…. ஒருவேளை தனது கண்களுக்குத்தான் அப்படி தெரிகிறதா..? என்னவோ…..? தெரியவில்லை.. ஆனாலும், இதுநாள் வரை இந்த மாதிரியான ஒரு உருவம் அந்த அபூர்வ கண்ணாடிக்குள்ளிருந்து வெளி வந்து அவர் பார்த்ததேயில்லை. ஒருவேளை அது வேற்று கிரகவாசியாக இருக்குமோ ?…..? வேற்று கிரக வாசி என்றால், குட்டி இளவரசனாக இருக்கலாமோ…….என்ற எண்ணமும் மனதில் வந்து போனது. அதன்பின் சந்தானகிருஷ்ணன், தான் அறிந்த பல்வேறு விசித்திரப் பக்கங்களின் விஸ்தரிப்பில்தான் வந்திருப்பது யார்? என்று கண்டறிய முடிந்தது. வந்திருந்தது…….அந்துவான் து செயிந் தெகுபெறியின் குட்டி இளவரசனேதான்……… என்பதை ஊர்ஜிதப்படுத்தினார்.  குட்டி இளவரசனுக்கு இந்த பூமி ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்  இந்த பூமியின் பாலைவன பிரதேசத்திற்கு வந்திருக்கிறான். ஆனால், இப்போது வந்து சந்திக்கும் சந்தானகிருஷ்ணனும், அவன் கண்ணாடிக்கடையும் முற்றிலும் புதிது.

குட்டி இளவரசன் வாழும் கிரகத்தில் கண்ணாடிகள் என்பதே இல்லை. இங்குள்ள கண்ணாடிகளை பார்க்கப் பார்க்க குட்டி  இளவரசனுக்கு பிரம்ம ரகசியத்தை கண்டது போல் விண்ணை முட்டும் அதிசயத்தை ஏற்படுத்தின. குட்டி இளவரசனுக்குள் இதுநாள் வரை அவன் உணர்ந்திராத புதிய ஒளிக்கீற்று உள்ளுக்குள் புகுந்த உற்சாகத்தில், அந்த கண்ணாடியையே வியந்து பார்த்தான். அதன்பின் கண்ணாடியை தொட்டுத்தடவிப் பார்த்தான். கண்ணாடியை தொடும் அந்த நிமிடத்தில் கண்ணாடிக்குள்ளிருந்து எதிர் திசையில் எதுவோ… அவன் கைகளை மாயமான தொடாத தொடுதலில், ஒரு வித விநோதத்தை ஏற்படுத்தியது. அப்போதுதான் கவனித்தான். உள்ளே ஒரு உருவம் வளைந்து நெளிந்து செயல்படுவதை. அப்படியே குட்டி இளவரசன் எந்த அசைவுமின்றி அந்த உருவத்தை கண் இமைக்காமல் பார்த்தான். அந்த உருவமும் அப்படியே அசைவற்று குட்டி இளவரசனைப் பார்த்தது. கண்களை மூடிமூடித் திறந்தான். அதுவும் கண்களை மூடிமூடித் திறந்தது. அந்த உருவத்தை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், குட்டி இளவரசன் அதை கையால் பிடிக்க எத்தனித்தான். அந்த உருவமும் அதனுடைய கைகளால் குட்டி இளவரசனைப் பிடிக்க எத்தனித்தது. கண்ணாடியை விலக்கிவிட்டு அந்த உருவத்தை பிடித்து விட வேண்டும் என கண்ணாடியின் மையப் பகுதியில் இரு கைகளையும் ஒருசேர இணைத்தான். உள்ளிருந்து அவனும் குட்டிஇளவரசனை பிடித்துவிட வேண்டும் என கைகளை ஒருசேர இணைத்தது. யாரும் யாருக்கும் பிடிபடாமல் தப்பித்தல் என்ற நிகழ்வே நடந்தது. குட்டிஇளவரசன் மறுபடியும் முயற்சி செய்தான்.  கண்ணாடியில் சற்று தள்ளி, கீழ்பக்கமாக அவன் மேல் கையை வைத்து அழுத்தினான். உள்ளிருந்த அவனும் சற்று தள்ளி குட்டிஇளவரசன் மேல் கையை வைத்து அழுத்தினான். குட்டிஇளவரசனின் எண்ணம் ஈடேறவில்லை, சற்று நேரம் பொருத்து வேறொரு பக்கம் கைகளை  குவித்தான். உள்ளிருந்த அவனும் எதிர் திசையில் குட்டி இளவரசனை நோக்கி கைகளை குவித்தது. கண்ணாடிக்குள் இப்படியான…..நிகழ்வுகள் வேறுவேறாய் கைகளில் பிடித்து விடவேண்டும் என்பது மட்டுமே தொடர்ந்து நீண்டு  கொண்டே சென்றது.

அவரவர் கைக்குள் எவரெவரையும் அடக்கிப் பார்ப்பது என்பதே  வேடிக்கைதானே.

அதன்பின் எத்தனையோ முறை அந்த உருவத்தை தொடுவதற்கு முயற்சி செய்து பார்த்தான். அவனால் அந்த உருவத்தை தொடவே முடியவில்லை. ஆனாலும் குட்டி இளவரசனுக்கு, கண்ணாடிக்குள் உள்ள அவனின் அசைவுகளே வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் இருந்தது. இவைகளெல்லாம் என்ன என்பது போல், குட்டிஇளவரசனின் இரணடு கண்களும் ஆச்சரியத்துடன் சந்தான கிருஷ்ணனை பார்த்தது. அந்தப் பார்வையில் ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது. சந்தானகிருஷ்ணனின் கண்கள் காந்தமாய் குட்டிஇளவரசனை ஈர்த்தது. சந்தானகிருஷ்ணன் எதுவும் சொல்லாமல் அமைதியாய்.. ஆனால், குட்டி இளவரசனின் அத்தனை செய்கைகளையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தார்.

சந்தானகிருஷ்ணன் நின்றிருந்த பின்புறச் சுவற்றிலும், சுற்றுச் சுவரின் பக்கங்களிலும், மாட்டப்பட்டிருந்த விதம்விதமான கண்ணாடிகளெல்லாம் குட்டி இளவரசனையே பார்த்துக் கொண்டிருந்தன. வட்டக் கண்ணாடி, சதுரக் கண்ணாடி, நீள்சதுரக் கண்ணாடி, நீள்வட்டம், செவ்வகம், நீள் செவ்வகம், முப்பட்டகம், அறுங்கோணம், கோடுகளின் இணைப்புகளில் விளைந்த அத்தனை விதமான கண்ணாடிகளும், அந்த நீண்ட உயரமான சுவற்றைச் சுற்றி மாட்டப்பட்டிருந்த அத்தனை கண்ணாடிகளிலும் குட்டி இளவரசனின் முகங்களாய்.. வட்ட நிலவுக் குள்ளும், நீள் வட்டத்திற்குள்ளும், அகல வட்டத்திற்குள்ளும், சூரிய வட்டத்திற்குள்ளும்…. இப்படி விதவிதமான வட்டகங்களுக்குள் நுட்ப மாறுதல்களில் குட்டிஇளவரசனை வேறுவேறாய் காண்பித்தன. கோடுகளின் இணைப்பில் உருமாறிய உயரஉயரமான சட்டகக் கண்ணாடிகளுக்குள் அடைபட்ட குட்டிஇளவரசன், அவன் அறியாத தூரத்தையும், காலத்தையும் கண்ணாடிகளின் ஒளிக்கீற்று நுனியில் பல மாறிதிலிகளுடன் உருவேற்றி நின்றான்.  கண்ணாடிகள் விளைந்த இந்த பூமியில் உருவகங்களின் ஆச்சரியயுகத்தில், குட்டிஇளவரசன் தான் எங்கே நிற்கிறோம்….. என பிடிபடாமல் திக்கித் தினறினான். தொடுதல் மட்டுமே நிரந்திர தப்பித்தலுக்கான வழியென, கண்ணாடிகளின் திசையெங்கும் அவன் கைவிரல்கள் அலைபாய்ந்தன. காலம் ஓடியது. அவனால் இவைகள் சாத்தியமாகாத ஒன்று என அவன் செயல் தளர்ந்தது. பூமி என்ற கிரகத்தின் மையத்தில் நின்ற அவன், எந்த வகையிலும் தொடர்பற்ற வேறு ஒரு ஜந்து என அந்த சனத்தில் தலை குனிந்து மதி மயங்கி நின்றான்.

எவ்வளவு நேரம் இந்த ஆச்சரியமான நிகழ்வு நடந்தது என்றே  சந்தானகிருஷ்ணனுக்கு தெரியாது. திடீரென்று குட்டி இளவரசன் அவரிடம் பேச ஆரம்பித்தான். அதுவும், சந்தானகிருஷ்ணன் பேசும் மொழியிலேயே குட்டி இளவரசன் பேசுகிறான் என்பதே முதலில் யோசிக்க முடியாததாகத்தான் இருந்தது. ஆனால் வேற்று கிரக வாசிகள் எந்த மொழியையும் நிமிடத்தில் புரிந்து கொண்டு பேசி விடுவார்கள் என்று, தாத்தா சொல்லிய கதைகளெல்லாம் அவனுக்குள் வந்தபோது, சந்தானகிருஷ்ணன் வார்த்தையற்று மெளனமானான்……

  இப்படியொன்றை நான் பார்த்ததேயில்லையே….. .இது என்ன?

  என்றான்  குட்டிஇளவரசன்.

சந்தானகிருஷ்ணன், துருதுருவென சுழலும் அவன் கண்களை பார்த்துக் கொண்டேயிருந்தான். அவன் கண்களில் கண்ணாடிகளும், கண்ணாடிகளில் அவன் கண்களின் பிம்பங்களும் தூரதூரமாய் தொடர்ந்தது. முடிவில் கண்ணாடிகளற்ற அவன் கிரகம், அவன் கண்களில் உருப்பெற்று பதிவாகியிருந்ததை சந்தானகிருஷ்ணன் பார்த்தான்..

 இதுவா….. இது பூமியிலுள்ள ஒரு அபூர்வமான பொருள். இதன் பெயர் கண்ணாடி.. என்றார்.

குட்டிஇளவரசன் அதிசயப்பட்டான். அந்தப் பெயரும், பொருளும்……… அதுவரை அவன் அறியாத உணர்வில் ஆச்சரியப்படுத்தியது.

அவன் சந்தானகிருஷ்ணனிடம்

“அது என்ன….. கண்ணாடியா…..? புரியவில்லையே… அப்படி என்றால்……… என்றான்.

ஆம்…. கண்ணாடிதான்.

இந்த கண்ணாடிகளை புரிந்து கொள்வது என்பதே முடியாத காரியம்தான்.   இவைகளை பார்க்க மட்டும் தான் முடியும். கேட்கவோ.. உணரவோ முடியாது. இந்த பூமியில் சிலவற்றை உணர மட்டும்தான் முடியும் ஆனால் பார்க்கவோ, கேட்கவோ முடியாது. சிலவற்றை கேட்க மட்டும்தான் முடியும். பார்க்கவோ, உணரவோ முடியாது.  இன்னும் சிலவற்றை நுகர்தல் மூலம் பொருளையே கண்டறியலாம்……….இப்படியே சொல்லலாம்……  இதுதான் இந்த பூமியின் அதிசயமும் பிரமாண்டமும்..

குட்டிஇளவரசனுக்குள்ள  குழப்பத்தில்….. .தெளிவாக ஒன்று கேட்டான்.

இந்த கண்ணாடி எங்கிருந்து வந்தது?

இந்த கண்ணாடிகள் பிரபஞ்சத்திலிருந்து பூமி தோன்றும் போதே நீர் துளிகளின் ஆதி அசைவிலிருந்து, மனிதர்களுக்கு முன்பே தோன்றியதாகத்தான் தெரிகிறது. இவைகள் நீரின் வளர்ச்சியின் வேறு வடிவம் என்றான்.

எங்கள் கிரகத்தில் இப்படியொன்று இல்லையே….

ஆம்… நீ வாழ்வது நீரற்ற கிரகம். பின் எப்படி விசித்திரங்கள் உருவாகும்.

கண்ணாடிகளின் அதிசயமே…. அவைகளின் பார்வைகளிலிருந்து எதுவும் தப்பிக்க இயலாது..

சரி…… உன்னை நீ பார்த்திருக்கிறாயா ?  என்றான் சந்தானகிருஷ்ணன்.

 என்னை நான் ஏன் பார்க்க வேண்டும்? என்றான்  குட்டிஇளவரசன்.

 இப்படியொரு பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.  குட்டி இளவரசனின் பதில் சந்தானகிருஷ்ணனை வேறு என்னவோ செய்தது. குட்டிஇளவரசன் எந்த நிலையில், தான் சொல்வதை புரிந்து கொண்டு இப்படி பேசுகிறான்… என்றும் தெரியவில்லை.

சிறிது நிதானித்து  சந்தானகிருஷ்ணன் பதில்சொன்னார்.

“உன்னை நீயே………….பார்ப்பது என்பது எவ்வளவு பெரிய விந்தை….       சிந்தித்துப்பார்……

கண்ணாடிகளின் ரகசியமே அதுதான்……..

 யார் பார்க்கிறார்களோ… அவர்களை அப்படியே காண்பிக்கும்………. என்றார் சந்தானகிருஷ்ணன்.

குட்டி இளவரசன் எதுவும் பிடிபடாத நிலையில்…….

என்னை நான் பார்ப்பதால் என்ன ஆகப்போகிறது? என்றான்.

உன்னை  மறந்து விடுவாய்……உனக்குள் உள்ள நீ  விழித்துக்கொள்ளும்.

நீ பார்க்கும் உன் அழகை…….

நீயே நேர்த்தியாக்கிக் கொள்ளலாம்…..என்றான் சந்தானகிருஷ்ணன்.

நீ பேசுவதெல்லாம் எனக்கு……. விநோதமாய் இருக்கிறது.

சரி…. அழகு என்றால் என்ன?……  என்றான் குட்டிஇளரசன்.

சிறிது மெளனத்திற்குப்பின் சந்தானகிருஷ்ணன்………

அது ஒரு ரசனை.,,,ஒரு வகையான உணர்வு. இயற்கையின் விநோதம்…. உன்னிடம் உள்ள ஒற்றை ரோஜாவிடம் ஏதோ ஒன்று, உன்னை ஈர்த்து ஆச்சரியப்படுத்தியது…… அல்லவா? .

.அதுதான் அழகு. என்றார் சந்தானகிருஷ்ணன்.

அப்படியா….. அப்படியென்றால் அழகு என்பது கண்ணாடிகளுக்கு வெளியில் இருக்கிறதா…?  உள்ளே இருக்கிறதா…….? என்று கேட்டான் குட்டிஇளவரசன்.

வெளியில்தான் …….இருக்கிறது,. ஆனால், அழகை பிரதிபலிப்பது கண்ணாடிகள் மட்டும்தான்…. கண்ணாடிகள் என்பதே நமது கண்களின் பிரதிபிம்பம்தானே….என்றார்… .சந்தானகிருஷ்ணன்.

அப்படியென்றால்… நம் கண்கள் தெரிந்து அறிவது போல், கண்ணாடிகளும் தெரிந்ததை அறியுமா.. என்று கேட்டான் குட்டிஇளவரசன்.

குட்டி இளவரனின் சில கேள்விகள், சந்தானகிருஷ்ணனுக்கு சிரிப்பாய் வந்தது.  சந்தானகிருஷ்ணன் சிரித்துக்கொண்டே…..

 கண்ணாடிகளுக்கு ஏது உயிர். என்றார்….

உயிரற்றது அந்த கண்ணாடி என்றால்… அதில் தெரியும் அசைவுகள் எல்லாம்…… என்னை சந்தோசப்படுத்துகிறதே….என்றான் குட்டிஇளவரசன்.

 எந்தப் பொருளும் கண்களின் ஒளியில் உயிர் பெற்று விடுகின்றன.. பின்தான்…. உயிர்களாய் சிந்திக்கின்றன.   ஆனால், பூமியில்…… மனிதர்கள் மட்டும்தான் கண்ணாடிக்குள் உள்ள அழகில் உயிர்பெற்ற பின் சிந்திக்கிறார்கள்….. என்றார் சந்தானகிருஷ்ணன்.

சரி…………..அழகை எப்படி பார்ப்பது… என்றான் குட்டிஇளவரசன்

ஒப்பிட்டுதான் பார்க்க வேண்டும் என்றார்…. சந்தானகிருஷ்ணன்.

எதனோடு ஒப்பிட்டு அழகை பார்ப்பது? என்றான்

மனிதர்களோடு……..இல்லை………இல்லை…….. எவைகளோடும்  ஒப்பிட்டுதான் பார்க்க வேண்டும். . என்றார் சந்தானகிருஷ்ணன்.

மனிதர்களைப்பற்றி நினைத்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது என்றான் குட்டிஇளவரசன்.

எல்லாம் உனக்கு அப்படித்தான் தெரியும்.

நீ உன் அழகை இதற்கு முன் பார்த்திருக்கிறாயா….

அந்தக்கண்ணாடியில் பார்…. என்றார் சந்தானகிருஷ்ணன்.

கண்ணாடியில் தன் முகத்தை உற்றுப் பார்க்கிறான்….

அது நானா…….எனக் கேட்டான்…

ஆம்…அது உனக்குள் உள்ள நீ தான் என்றான் சந்தானகிருஷ்ணன்.

 ஆம்………அது நான்தான் என்பதை உனக்கு யார் சொன்னார்கள்? எப்படித் தெரியும்?  என்றான் குட்டிஇளவரசன்.

உனக்கு எதிராக இருக்கும் நான்தான் சொல்கிறேன்… உன் அழகை கண்ணாடியில் பார்…  எவ்வளவு அழகாயிருக்கிறாய்…. உன்னைச்சுற்றி தெரியும் அத்தனை பொருளும் கண்ணாடிக்குள் எவ்வளவு வசீகரமாய்….. அழகாய் இருக்கிறது..

அதுபோல் உன் உருவமும் கண்ணாடியில் தெரிகிறது. அவ்வளவுதான்.

இதுவா நான்…?

ஆம்…. நீதான்… உனக்குள் உள்ள நீ என்றான் சந்தானகிருஷ்ணன்.

 அது என்ன எனக்குள் உள்ள நீ…?.என்றான் குட்டி இளவரசன்.

ம்…ம்… அதுதான்.  “அந்த நீ” இல்லையென்றால்… இந்த பூமியின் இவ்வளவு பிரமாண்டம் ஏது……….. இந்த மனிதர்கள் வாழ்வதற்கான அர்த்தம் ஏது? என்றான் சந்தானகிருஷ்ணன்.

குட்டி இளவரசன் எதுவும் பேசவில்லை……சந்தானகிருஷ்ணனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சிறிது மெளனத்திற்குப் பின் குட்டிஇளவரசன்……..

ஆம்….. என்னுடைய கிரகத்தில் நீ சொல்லும் அந்த “.நீ” என்ற ஒன்று இல்லாமல்தான் வாழ்கிறோமா,,  சாதாரணமாகக் கேட்டான்.

அதனால்தான்……… நீ வாழும் கிரகமே எந்த  வளர்ச்சியும் இல்லாமல், நீ மட்டும் தனியனாய் இருக்கிறாய்.. என்று சந்தானகிருஷ்ணன் குட்டிஇளவரசனைப் பார்த்து  புன்முறுவலளித்தான்.

 என்னோடு என் கிரகத்தில் அந்த ஆட்டுக்குட்டியும்,  ஒற்றை ரோஜாவும் இருக்கிறதே… என்றான்.

அவைகளெல்லாம் இயற்கையாய் உருவானது ….

நீ என்ன செய்தாய்? ஆச்சரியப்படும் படியாய் உன் கிரகத்தில்            நீ என்ன உருவாக்கினாய்……சொல் ?

..குட்டிஇளவரசனுக்கு சற்று குழப்பமாகத்தான் இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற குறுகுறுப்பில் குட்டிஇளவரசனால் எதையும் செய்ய முடியாத நிலையில் குழம்பி நின்றான். அவனுக்குள் உள்ள குழப்பத்தில் நிறைய கேள்விகள் எழுந்தன…….

இந்தக் கண்ணாடிகளோடு….. நான் பேசலாமா?

பேசலாம் ஆனால்… நீ தான் பேச முடியும்.  கண்ணாடிகள் எப்போதும் பேசாது….

இல்லை……..இல்லை….. அந்தப் பேச்சு ஒலிகளின் கேட்பு…… நமக்குள் பிடிபடுவதுதான் கடினம்….. கண்ணாடிகளின் மொழி பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் உன் வாயசைவு, உன் உடலசைவிலிருந்து, அத்தனை அசைவுகளுமே…….. கண்ணாடிகளின் செயலூக்க மொழியாக பிரதிபலிக்கிறது.

நீ என்ன செய்தாலும் அப்படியே கண்ணாடிகள் செய்யும்…

ஓ அப்படியா…. நான் எனது கை காலை இப்படி நீட்டினால்…. இப்படி ஆட்டினால்…..

குதித்தால்…

ஆடினால்….

ஓடினால்

அத்தனை அசைவுகளும் கண்ணாடியில் பிரதிபலித்தது.  குட்டிஇளவரசன் சந்தோசத்தில் குதூகலித்தான்..

அப்படியென்றால் கண்ணாடிகள் பார்ப்பவரையெல்லாம் மகிழ்விக்கிறதா? எனறான் குட்டிஇளவரசன்.

பார்ப்பவரைப் பொருத்துதான். என்றான் சந்தானகிருஷ்ணன்

அப்படியென்றால், கண்ணாடிகள் எப்போதும் அழகை மட்டும்தான் காண்பிக்குமா?

அப்படியில்லை…… கண்ணாடிகளைப் பற்றி நன்றாக சொல்வதென்றால் நீரைப் போன்றது… …மனிதர்கள் எப்படி எப்படி இருக்கிறார்களோ… அப்படியேதான் காண்பிக்கும். மனிதர்கள் வாழும் இந்த பூமியில் அனைத்துமாகத்தான் இருக்கும். என்றார் சந்தானகிருஷ்ணன்.

அப்படியானால் மனிதனின் அழகு என்பது எது?  என்றான் குட்டிஇளவரசன்.

என்னைக் கேட்டால் “அழகு” .என்பது வெறும் பிரம்மை தான். அது உன்னின் மேல்கட்டுமானம்தான் என்பேன்..

“அழகு…..” அப்படியென்று எதுவும் இல்லை.?

அழகை நேர்த்தி செய்வது என்பது?

அவைகளெல்லாம் ஒப்பனைக்குத்தான்.

இந்த கண்ணாடிகள் எல்லாம்…..

அசல் மாதிரிதான்………  நகல்கள் தான்.  இவைகள்……… உண்மைகள் அல்ல… என்றான் சந்தானகிருஷ்ணன்.

அப்படியானால்…..இந்த நகல்கள்தானே மனிதனின் சிறைக்குக் காரணம்.

ஆம்…ஆம்,,அப்படித்தான்……….அப்படியேதான்…….

அப்படியானால்……

கண்ணாடிகளை பூமியிலிருந்து உருவிவிட்டால்….. மனிதர்கள் விடுதலையாகி விடுவார்கள்….. இல்லையா .

அய்யோ………. கண்ணாடிகள் இல்லாத பூமியா…..

 யோசிக்கவே முடியவில்லையே…. என்றார் சந்தானகிருஷ்ணன்.

சந்தானகிருஷ்ணன் குட்டிஇளவரசனுடன் பேசிப்பேசி உடல் அயர்ந்து தூங்கி விட்டான். கண்விழித்த போது குட்டிஇளவரசன் அங்கு இல்லை. குட்டிஇளவரசனை எத்தனையோ முறை அழைத்துப் பார்த்து விட்டான். குட்டி இளவரசனை கடையினுள் எல்லா இடங்களிலும் தேடியும் பார்த்தான்.  எங்கும் இல்லை. சந்தானகிருஷ்ணன் குட்டிஇளவரசனின் கால் பதிவுகளை எங்கும் காணாமல்………….. ஒருவேளை  கண்ணாடிக்குள் குட்டிஇளவரசன் சென்றிருக்கலாம் என்ற முடிவுடன் கண்ணாடியைப் பார்த்தான். எந்த சீன யாத்திரிகன் தந்த கண்ணாடியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்களோ….. அந்தக் கண்ணாடியையே காணவில்லை.

          சற்று பயத்துடன், சந்தானகிருஷ்ணன் அவன் கடையைச் மீண்டும் ஒருமுறை சுற்றிச்சுற்றிப் பார்த்தான். சுவர்களெங்கும் கண்ணாடிகள் இல்லை. எல்லா திசைகளிலும் கண்ணாடிகளை தேடினான். எங்கும் அவைகள் இல்லை. கடையில் எந்தவொரு கண்ணாடிகளும் இல்லாமல்……. சந்தானகிருஷ்ணன் கண்ணாடிகளெல்லாம்  எங்கே போய் விட்டனவோ…? தெரியவில்லையே..? காணவில்லையே ? என்ற பதட்டத்துடன் என் கண்ணாடிகள்…. எங்கே? கண்ணாடி….எங்கே…? கத்தினான். கூப்பாடு போட்டான். கதறினான். அழுதான். ஆனால் கண்ணாடிகள் எங்கிருந்தும் வரவில்லை. கண்ணாடிகளைத் தேடி வேகவேகமாக கடையை விட்டு தெருவுக்கு ஓடினான். மீண்டும் கடைக்குள் வந்தான். எதுவும் பிடிபடாமல் மீணடும் தெருவை நோக்கி ஓடி வந்தான். கண்ணாடிகள் இல்லாமல் தெருவெங்கும் வெறிச்சோடிக் கிடந்தது. குட்டி இளவரசன் தெருவின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான். கண்ணாடிகள் எங்கே? என் அருமைக் கண்ணாடிகளே நீங்கள் எங்கேதான் சென்றீர்களோ… வந்து விடுங்கள்… வந்து விடுங்கள்.. கண்ணாடிகளே.. என்று அழும் குரலில் கூக்குரலிட்டான். அவன் குரல் பூமியின் எட்டு திக்கும் ஒலித்து ஒலித்து , மீண்டும், அவன் குரலே அவனுக்குள் எதிரொலித்தது. தெருக்களின் திசைகளங்கும்…….. கண்ணாடி….எங்கே? கண்ணாடி…..எங்கே…? என்ற பதட்ட குரலில் கண்ணாடிகளைத் தேடி மக்கள் திக்கு தெரியாமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். சென்று கொண்டிருந்த யாருடைய முகத்திலும் எந்த நேர்த்தியும், குறிக்கோளில்லாமல் சென்று கொண்டிருந்தார்கள். சந்தானகிருஷ்ணனால் இவைகள் எதையும் ஜீரணிக்க முடியவேயில்லை. சுற்றி சுற்றிப் பார்த்தான். பூமியெங்கும் கண்ணாடிகளே இல்லை. கண்ணாடிகளற்ற பூமி. நகல்களற்ற இந்த பூமியில் மக்கள் தேடுவதற்கான இடம் எதுவென்றே தெரியாமல் ….தேடிக் கொண்டிருந்தார்கள். “காண்பது” என்பதே எல்லா ஜீவன்களிடமிருந்தும் தொலைந்து கொண்டிருந்தது. தேடலின் பிரதேசமே காண்பதிலிருந்து விலகி வெறுமையின் இருளாகிக் கொண்டிருந்தது. இந்த பூமிக்கோள் காலமும், தூரமும் அற்ற வேறொரு பரிமாணத்தில் சுழன்று சுழன்று, அதன் அச்சிலிருந்து விலகிக் கொண்டிருந்தது.

           எங்கோ…பிரபஞ்ச வெளியில்…… குட்டிஇளவரசன் கையில் பூமியிலிருந்து உருகப்பட்ட கண்ணாடியோடு, அவன் கிரகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *