சுமித்ரா, அறை விளக்கின் விசையைத் தட்டாமல் சன்னல் துணியை விலக்கிப்பார்த்தாள். வெளியே இருள் கனிந்து  மூடிக்கிடந்தது. அடுத்த அறையில் அம்மா தன்னை மறந்து உறங்கிவிட்டிருந்தாள். அது அவளுக்குத் தோதாக இருந்தது. தொலைபேசித் திரையை உயிர்ப்பித்து நேரத்தைப் பார்த்தாள். நள்ளிரவை எட்ட இன்னும் ஐந்தாறு நிமிடங்களே இருந்தன. இப்படி எத்தனை  முறை பார்த்திருப்பாளோ தெரியாது! தன் தனிப்பட்ட புலனத்தில் சேகர் ஏதும் புதிய செய்தி அனுப்பியிருக்கிறானா என்று நோட்டமிட்டாள். அப்படி ஏதுமில்லை என்றவுடன் ஏமாற்றத்தில் உள்மனம் புழுங்கியது.  கைப்பேசியை அம்மாவுக்குத் தெரியாமல் வைத்திருந்தாள். சேகர் வாங்கிக்கொடுத்தது.

‘நான் வீட்டைவிட்டுக் கிளம்பப் போகிறேன் சாயாங்’    என்ற ஒரு செய்தியைத் தட்டச்சு செய்து அனுப்பினாள். திரை முழுமையாக ஒளியிழக்கும் முன்னர் “உடனே கிளம்பி வா,” என்ற பதில் செய்தியை ஏந்தி வந்திருந்தது. அப்போது அவள் மனம் இருப்புக்கொள்ளவில்லை. கால்கள் பரபரத்தன.

அவள் தயாராக வைத்திருந்த பயணப்பை கற்பமுறறு  படுத்துக்கிடக்கும் நாயின் அடிவயிறுபோல  உப்பிக் கிடந்தது. ஏற்கனவே பின்கதவு தாழ்ப்பாளைத் திறந்தே வைத்திருந்தாள். திறக்கும்போது உரசும் ஓசை அம்மாவின் செவியைத் தட்டிவிடக்கூடாது என்பதற்காக. அறையில் அம்மா ஒருக்கலித்துப் படுத்துக் கிடந்தாள். மெல்லிய குரட்டை ஒலி அறையில் சுமித்ராவின் அந்தரங்க செயல்பாட்டை எச்சரிப்பதுபோன்ற பிரம்மையை உண்டாக்கியது.

வெளியே இருள் கரிய மேகத்தைப் போல சுருண்டு கிடந்தது. அது புகைபோல் சுருள் சுருளாக அவளுக்குள்ளும் புகுந்து பீதியைக் கிளர்த்தியது. நள்ளிரவில் காற்று ஓய்ந்துவிட்டிருந்தது. பனிப்பொழிவு அபுர்வக் கைகளைப் போலச் சுமியைத் தீண்டிச் சென்றது.  இரவு அந்தரங்கத்தின் பருப்பொருள்போல உருக்கொண்டிருந்தது. அச்சத்திலும் பதற்றத்திலும் விம்மியிருந்த  உடலின் சூடு அதனை உணரத் தவறவில்லை.

இங்கிருந்து எட்டி நடை போட்டால், பேருந்து நிலையத்தை ஏழெட்டு நிமிடத்தில் அடைந்துவிடலாம். தூரத்தில் பட்டண வெளிச்சத்தின் எச்சம் அவள் நடைபாதையில் கொஞ்சமாய் சிந்தியிருந்தது.  விரைந்து நடைபோட்டாள் .ஆனால் அப்பொழுது அவை உடலின் புதிய பகுதியாக வளர்ந்து  பாரமாக இருப்பது போல உணர்ந்தாள். மனது நீண்ட நாட்கள் சீவப்படாத முடிபோல  பின்னிச் சிக்கிக்கொண்டிருந்தது.

‘சேகர் சத்தியம் செய்ததுபோல வந்துவிடுவானா?’ என்ற சந்தேகம் பாறையாய் கனத்து மோதிக்கொண்டே இருந்தது.

‘வந்துவிடுவான் , அவன்தானே இதற்குத் திட்டம் தீட்டியவன். அவன்தானே நான் பின்வாங்கிய எனக்குத் துணிச்சலைக் கொடுத்தவன். அவன் சொன்ன வார்த்தைகளால்தானே நம்பிக்கை விதைக்கப்பட்டது. வந்துவிடுவான், வந்துவிடுவான்………. வந்துவிடுவான்” என்று மனதைத் தேற்றிக்கொண்டாள். இருந்தாலும்   இயல்பை முறிக்கும் ஓர் உளநடுக்கம் நிலையாக  இருந்தது.

இதோ பேருந்து நிலையத்தை அடைந்துவிட்டாள். பார்வையால் அவ்விடத்தைச் சுற்றியும் சல்லடை செய்தாள். தெரிந்த முகம் ஏதும் தட்டுப்படக் கூடாது என்பதே அவளின் முதல் பயம். இரண்டொரு மலாய் மாணவர்களைத் தவிர வேறு மனித நடமாட்டம் இல்லை. வெள்ளிநிற இருக்கையில் எட்டி எட்டி உட்கார்ந்திருந்தார்கள். நள்ளிரவின் அமைதியும், ஈரக்காற்றின் வருடலும் சூன்ய வெளிக்குத் துணையாய் நின்றது. கோலாலம்பூருக்குப்  போகும் கடைசி பேருந்துக்காகக் காத்திருந்தார்கள் அவர்களும். வேறு பேருந்துகள் அங்கே இல்லை. புதியதாக வருபவர்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒரு தூணின் மறைவில் ஒதுங்கி நின்றுகொண்டாள். பயணத்தை பறைசாற்றும் பையை யார் கண்களிலும் படாதவாறு மறைத்து வைத்துக்கொண்டாள். ஆனால் அப்பயணப்பை காட்டிக்கொடுத்துவிடலாம் என நினைக்கும் அத்தருணத்தில் அதற்கு உயிர்வந்துவிட்டதுபோல உணர்ந்தாள்.

இரைக்குக் காத்து நிற்கும் கொக்குபோல சேகரின் வருகையை மனம் ஓயாமல் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. ‘நான் முதலில் வந்துவிடுவேன், என்று சொன்னவன் சொல்லைக் காப்பாற்றாமல் இருந்தது அவளுக்குச் சிறிய எரிச்சலை உண்டாக்கியது. மெல்லிய இருள் மலைப்பாம்பைப்போல கால்களுக்கு அடியில் படுத்துக்கிடந்தது.

வீட்டின் பின்கதவை வெறுமனே சாத்தியவாறே இருப்பதும், அதனை வெளியே இருந்து தாழ்ப்பாளிட முடியாமல் போனதும் அவளுக்கு நினைவுக்கு வந்து தொந்தரவு செய்தது. காதல் வயப்பட்டு புறப்பட்ட  அவசரத்தில் பின்கதவுக்கு  வெளியே இருந்து தாழ்ப்பாளிட வாய்ப்பில்லை என்பதை மறந்திருந்தாள்.

கைப்பேசித் திரை சட்டென்று வெளிச்சமேறி அதிர்ந்தது. “நான் வந்துவிட்டேன். நீ எங்கே இருக்கிறாய்?”  அச்செய்தியால் கண்கள் ஓளிர்ந்தன. அச்சம் சற்றே அகன்றது. அவள் அதனை பையில் திணித்துவிட்டு தூணைவிட்டு விலகி எட்டிப் பார்த்தாள். சேகரின் உருவம் எதிர்ப்பக்கம்  ஐம்பது அடி தூரத்தில் தெரிந்தது. அவனின் உடல் அசைவு அவன்தான் என்று உறுதிபடுத்தியது. அவள் கையை அசைத்தாள்.  அப்போது அவன் வேறு திசையைப் பார்த்துக்கொண்டிருந்தான். சுமி “சேகர்” என்று அழைக்க குரல் எழுப்ப நினைத்த மறுகணம் முடிவை மாற்றிக்கொண்டாள். இந்த ரகசியத் திட்டத்தை சுய குரலோசை காட்டிக்கொடுத்திவிடலாம், என்பதனால்!

சுமியின் கைப்பையை வாங்கிக்கொண்டு. “ரொம்ப நேரமாச்சா வந்து? என்றான்.

அடங்கிய குரலில் , “நீங்க சொன்ன நேரத்துக்கு வந்து சேர்ந்துட்டேன். நீங்கதான் லேட்! பயந்துட்டேன் தெரியுமா!” என்றாள் . சேகர் அவளை தோளில் கைப்போட்டு அணைத்துக் கொண்டான். அந்தக் கதகதப்பில் அவளைச் சூழ்ந்திருந்த பீதி சற்றே விலகிக்கொண்டிருந்தது. தவித்துக்கிடக்கும் ஒரு பெண்ணுக்கு தக்க நேரத்தில் கிடைக்கும் ஆண்துணை எவ்வளவு ஆசுவாசமானது என்பதை உணர்ந்தபோது உடல் மெலிதாய்ச் சிலிர்த்தது.

கோலாலம்புருக்குப் பயணப்படும் பேருந்து இரவு பூதம் போல வந்து நின்றது. சுமியை ஏறச்சொல்லி கண்ணசைத்தான். பின்னால் அவனும் உள் நுழைந்தான். பேருந்து கிளம்பும் நேரத்துக்குக் காத்திருந்திருந்தது. உள்ளே பேருந்தின் உள் வெளிச்சம் தன்னைத் தேடி வந்த  யாரோ டார்ச் லைட்டால் முகத்துக்கு நேரே வெளிச்சம் காட்டி அடிப்பது போல இருந்தது. அந்த ஒளி வெள்ளம் அவளைப் பதற்றத்துக்குள் தள்ளியது.

“கெளம்பிடும் இன்னும்… அஞ்சி நிமிசம்” என்றான். அவள் குனிந்து  தலையை இருக்கை முன் புதைத்துக் கொண்டாள். அவள்  கழுத்திலிருந்து  இறங்கிய முதுகெலும்பு பூரான்போலத் தோற்றமளித்தது. சேகர் அவள் வெற்று முதுகில் கைவைத்து ஆறுதலாக வருடினான்.

பேருந்து விளக்கணைந்தது. மெல்ல இடத்தைவிட்டு நகர்ந்தது. அவள் உள்மனம் இருளை வரவேற்றது. அது அக்கணத்துகான விடுதலையைப் பிரகடனபப்டுத்தியது போல இருந்தது. அந்த பயணிகள் வாகனம் மெல்ல அவ்விடத்தைவிட்டு நகர்ந்தது. அப்போதுதான் அவளுக்கு மறு உயிர் வந்தது. அந்தப் பட்டண எல்லையைக் கடக்கும் வரை அவள் முகத்தை ஆமையைப்போல உள்ளிழுத்து தாழ்த்தியே வைத்திருந்தாள்.

 அவ்வாகனம் அவளின்  ஊரைவிட்டு வெளியே இழுத்துக்கொண்டுபோகப் போக அவள் மனம் எடையற்றுப்போனதுபோல ஆனது.  “சேகர் எனக்கு பயமா இருக்கு?” என்று விசும்பத் தொடங்கினாள்.

“எனக்கும்தான், இதையெல்லாம் எதிர்பார்த்துதானே வந்தோம்?”

“காலையில அம்மா தேடுவாங்க?” என்று சொல்லிக் கண்களைத் கசக்கினாள்.

“தேடத்தான் செய்வாங்க, பெத்தவங்க இல்லியா?”

“நான் இல்லன்னதும் பதறுவாங்க!”

“இதெல்லாம் நடக்கும்னு நமக்குத் முன்னயே தெரியும்தானே சுமி?”

நா உதற “நா காணலேன்னு எங்கெல்லாம் தேடுவாளோ?’ என்றாள்.

“சுமி, நாம் போயி ரெண்டு நாள்ள போன் பண்ணி சொல்லிடலாம், அழமா இரு. நானிருக்கேன் கூட,” என்று சொல்லிக் கொண்டே அவளின் கைகளைக் கெட்டியாகப் பற்றிகொண்டான். அந்த வெப்பம் அவள் அச்சத்துக்கு வடிகாலாக இருந்தது. அந்த நேரத்தில் அவளுக்கு அது ஆசுவாசத்தைத் தந்தது.

“அம்மாவ பரிதவிக்க விட்டு வந்துட்டனே? திரும்பப் போயிடலாம் சேகர்.”

“பைத்தியம்,   இங்க எறங்கனா அப்புறம் வேற வெனையே வேண்டாம். எங்கப்பன் குதிருக்குள்ள இல்லான்னு நம்மல் நாமே காட்டிக்கொடுத்த மாதிரி ஆய்டும். மூனு நாலு நாலைக்கு இப்படித்தான் இருக்கும். பயப்படாதே,” என்றான்.

“நான் வீட்டவிட்டு ஒடிட்டேனு ஊருக்குத் தெரிஞ்சா மொகத்த எங்க வச்சுக்குவாங்க.”

“சொம்மா பொலம்பாத சுமி, இதையெல்லாம் எதிர்பார்த்துதானே வந்தோம்.”

“நான் அவசரப்பட்டுட்டேன்”“நான் அவசரப்பட்டுட்டேன், அம்மாகிட்ட போவனும்”

“ நாம போட்டத் திட்டத்தையெல்லாம் ஒரு நொடியில பாழாக்கிறுவ போலருக்கே! நமக்குக் கல்யாணம் பண்ணிவைக்க, நம்ம ரெண்டு குடும்பமும் எதிர்ப்பு தெரிவிச்சிட்டாங்க, இதவிட்டா நாம ஒன்னு சேர முடியாதுன்னு நாமதானே பேசி   முடிவெடுத்தோம்? நாம் சந்தோசமா வாழப்போறத அவங்களுக்கு காட்டுனும்.  அப்போ   அவங்களோட மறுபடியும் ஒன்னா சேர்ரதுல பிரச்னை இருக்காது!”

அவள் ஒன்றும் பேசவில்லை. “யாருக்கிட்ட எல்லாம் போய் விசாரிப்பாளோ!. எங்கெல்லாம் போய் மொக்க கெடுவாளோ! சொந்தக்காரங்க எல்லாம் காறித்துப்புவாங்களே!”  . அவள் உடல் நடுங்கியது.

“நான்தான் சொல்றனே, என்ன நம்பி வந்த ஒன்ன நான் கைவுட மாட்டேன்.” என்று சொல்லியவாறே அவள் தோள்களை விழுந்த முடி இழைகளைக் கோதினான். அவளுக்கு அது ஆறுதலாக இருந்ததா அல்லது அம்மா நினைப்பில் அவஸ்தையாக இருந்ததா என்பதில் குழப்பம் உண்டானது.

பின் கதவு திறந்த வாக்கில் விட்டு வந்ததை மீண்டும் அவள் எண்ணங்கள் அவளைப்  பிராண்டின.

“கொஞ்ச நாள்ள எல்லாம் சரியாயிடும். இப்படி ஓடிவந்து மீண்டும் குடும்பத்தோட சேர்ந்த எத்தன தம்பதிகள பாத்திருப்போம்? துணிச்சலா இரு,” என்றான். அவள் தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள். இரண்டொரு முடி இழைகள் அவன் கன்னத்தை வருடின. அவன் அதனைச் சேர்த்து இணைத்து  அவள் செவி மடிப்புக்குள் வைத்தான். இருவருக்குமே தூக்கம் கொள்ளவில்லை.

“எல்லாம் சரியாயிடும், நீ வேண்ணா பாரு!: என்றான். அவள் விழிநீர் அவன் கைகளை ஈரமாக்கியது. உடல் முறுக்கேறிய வண்ணம் இருந்தது.

பொல பொலவென்று விடிந்துகொண்டிருக்கும் போது பேருந்து கோலாலம்பூர் கட்டட நிறைந்த சாலையினூடே ஊடுருவி மெல்ல நகர்ந்துகொண்டருந்தது. பனிப்பொழிவில் கட்டடங்கள் சாம்பல் பூத்து, இரவு வேளையில் இயல்பாக  ஒளிரும் பட்டண பிரகாசத்தை இழந்திருந்தது. கட்டடங்கள் நகரைச் சிறை  போன்ற எழுந்து சுவர் எழுப்பியிருந்தன.

பேருந்து நின்றதும் இறங்கியவள், “எங்க போறோம்?” என்றாள். குரல் கமறியது. இமைகள் விரிய ,கண்கள் சிவந்து எரிந்தன. முதலில் குளிக்க வேண்டுமென்று தோன்றியது,

“ஹோட்டல் பாக்கணும்” என்றான்.

“முன்னயே புக் பண்ணலியா?”அவள் குரலில் துயில் களைப்பு பாரமான சுமைபோல அழுத்தியது.

“ஒடனே கெடைக்கும், வா ?’

‘ஹோட்டல் நிர்வானா’ என்ற விளம்பர ஒளி எழுத்து அவர்களை அழைத்தது.

ஓர் அறையை புக் செய்துகொண்டார்கள்.

“தெனைக்கும் இங்க தங்கனா மத்த செலவுக்கு என்ன செய்றது?” என்றாள்.

“அதுக்குள்ள வேல தேடிக்குவேன். இங்க சீக்கிரமா வேலை கெடச்சிடும்”

“சுமி தாழ்ந்த குரலில்,“நாம் ஓடி வர அவசரத்துல இதப்பத்தியெல்லாம் சிந்திக்கல, ல? தனியா வந்தவொடனேதான் வாழ்க்கைய பத்திய பயம் வந்துடுது. பெத்தவங்களோடு இருக்கும் போதே இந்த பயமே வர்ல!” பாத்தியா!” என்றாள். அவள் குரல் தழு தழுத்தது.

அவன் புன்னகைத்தபடி “என்ன திடீர்னு தத்துவமா வருது? ம்?” என்றான்.

“மனசுக்குள்ள ஏதோ இனமறியா அச்சம் புகுந்துட்ட காரணமா இருக்கலாம்.”

“சுமி எந்த நேரம் பாத்தாலும் பயந்து செத்தா எப்படி? நான் இருக்கேன். தைரியமா இரு, என்னா?

மீண்டும் வீட்டை நினைத்துக்கொண்டவள்,“வீட்டுப் குசினிக் கதவு தாப்பா போடல .காத்து வேகமா வீசுனாகூட தொறந்துக்கும்.”

“வுடு .ஒன்னும் திருடு போவாது.” தான் இவ்வளவு பொறுப்பற்று நடந்துகொண்டதை சாத்தப்படாத கதவு எச்சரித்துக்கொண்டே இருந்தது.

அந்தக் காலைப்பொழுது இருவருக்கும் இனிமையாகக்  கழிந்தது. உல்லாசமும் குதூகலமும் வேண்டி வந்த இடத்தில் அது நிறைவேறிக்கொண்டிருந்தது. தனிமையும், புது இடமும் தாழ்ப்பாளிட்ட அறையும் அவர்களுக்குப் புது உலகைக் காட்டியது. அந்த நாள் முழுதும் அந்த உறவு காட்டிய வாழ்க்கையில் திளைத்துப் போனார்கள்.

மறுநாள் காலை, நான் வேலை தேடிட்டு வந்துற்றேன், என்று அவள் முன்னால் தயங்கி நின்றான்.

“போய்ட்டு வெள்ளன வந்துருங்க. அறைக்குள்ளேயே இருந்தா போரடிக்கும்” என்றாள். அவன் அங்கேயே நகராமல் நின்றிருந்தான்.

“ ஏன் ..என்னவிட்டுப் போக மனம் வர்லியா?”

“இல்ல கையில காசில்ல. ஒங்கிட்ட இருந்தா குடு.” பேருந்து கட்டணத்துக்கு ஒருநாள் அறை வாடகைக்கு மட்டுமே அவனிடம் பணமிருந்ததை எண்ணும்போது அடுத்தடுத்து வரும் நாள்கள் அவளுக்கு  இருண்ட காட்சியாய்த் தெரிந்தது. அவளிடமிருந்த சொற்ப பணத்தில்,ஐம்பது ரிங்கிட்டை எடுத்துக் கொடுத்தாள். அவன் அதனைப் பெற்றுக்கொண்டு கிளம்பினான்.

அவனில்லாத பொழுது இருண்மையில் அமிழ்ந்து கிடந்தது. தனிமையில் அம்மாவை நினைத்துக்கொண்டு அழுதாள். நான்கு சுவர்களுக்குள்ளான வாழ்க்கை சிறைக்கு ஒப்பாகிப்போனது. அறையின் வெளிச்சத்தை ஒரு விநோத இருள் கவ்வியபடிக் கிடந்தது. தொலைகாட்சியலும் மனம் லயிக்கவில்லை. நான்கு சுவருக்குள்ளேயே அங்குமிங்கும் நடந்தாள். அவளின் இருப்பு அவளுக்கே சுமையாக இருந்தது. காதல் வயப்பட்ட மனம் கிளர்ச்சிக்கு அடிமையாகிப்போய் மனம்போன போக்கில் வீழ்ந்து, கடைசியில் இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்ததை, அறிவு சுட்டிக்காட்டியபின்தான் அவளுக்கு உறைத்தது. நினைவின் பதிந்துபோன  வீட்டின் பின் கதவை நினைவுக்கு வந்தது மீண்டும். ஏதும் களவு போயிருக்குமா? ஏதாவது நடக்கக்கூடாதது நடந்திருக்குமா? அம்மா ஒத்தையா இருந்து சமாளிச்சிருப்பாளா?’ என்று நினைத்துக்கொண்டாள்.

மறுநாள் மீண்டும் வந்து நின்றான். வேலை கிடைக்க சிரமமாக இருப்பதாகவும் விரையில் அதற்கொரு விடிவு பிறக்குமென்றும் சொன்னான். அவள் கையில் பணமுமில்லை. கனத்த மனத்தோடு அவள் காதில் மாட்டியிருந்த சிறிய தோடுகளைக் கழற்றிக் கொடுத்தாள். அவன் மீண்டும் காணாமல் போய் அந்தி சாயும் நேரத்தில் வந்தான். அவள் உள்ளம் சுருங்க ஆரம்பித்தது.

வந்தவன் உடனே,” வேற ஹோட்டலுக்குப் போறம்.” என்றான்.

“வேலை என்னாச்சி?”

“கேட்டிருக்கேன் நாளைக்கு வரச்சொன்னாங்க?”

“என்ன வேல?”

“ ரெஸ்டோரண்ட்ல சமையலுக்கு ஒதவி…நீ கெளம்பு நொய் நொய்ன்னு…”

அவன் அவளை அழைத்துக்கொண்டு கிரேப்பில் ஏறி ஒரு மூன்றாம்தர விடுதியில் கொண்டு போய்விட்டான். அதன் வாசலுக்கு புகும்போதே சிகரெட் புகையின் தடித்த நெடி மோதியது. மூச்சு திணறும் அடர்த்தி. சிகரெட் புகையின் எச்சம் உடலுக்கும் உள்ளேயும் வெளியேயும் ஒட்டிக்கொண்டது போல உணர்ந்தாள். வாந்தி தொண்டைக்குழியில் எட்டிப்பார்த்து இறங்கியது. வரவேற்பரை மங்கிய ஒளியில் சோம்பிக் கிடந்தது. சுவர்ச் சாயம் பழுப்பாகிக் கிடந்தது.  ஆண் பெண் ஜோடிகள் அடிக்கடி தென்பட்டனர். மிக நெருக்காக கட்டிப்பிடித்தவாறும், கன்னத்தில் முத்தமிட்டவாறும் இருந்தார்கள் ஜோடிகள். அதிலும் பெண்கள் மிகை ஒப்பனையில் இருந்தார்கள். மார்புகள் வெளிகிளம்ப பொறுமையிழந்து காத்திருந்தன. தொடைக்கு மேல் ஏறிய ஆடை. அவர்களில் பெரும்பாலும் சிகிரெட்டும் கையுமாக இருந்தார்கள். கூச்சம் காணாத கண்களால் உர்ரென்று பார்த்தார்கள். தரையில் சிகிரெட் துண்டுகள் புழுக்களாய் மிதிபட்டன. கௌண்டரின் மேசை மீது, டியோ, காப்பிய எஞ்சிய கிண்ணத்தில் இரண்டொரு வாடிக்கையாளர்களைப் பொருட்படுத்தாத  ஈக்கள் இரை தேடிச் சுற்றின. அவ்விடத்தின்  சூழல் புதிய அச்சத்தை அவளுக்குள் ஊற்றிக்கொண்டிருந்தது.

ரகசியமாய் “இந்த எடம் ஒரு மாரியா இருக்கே சேகர்” என்றாள்.

அவன் கடுப்போடு,“எல்லாம் …….மனுசாளுங்க குடியிருக்கிற எடம்தான்.”என்றான்.

 அவள் செய்த வினைப்பயனுக்காக ஏதோ ஒரு அவமானம் அவள் முதுகைத் தொற்றிக்கொண்டு பின்தொடர்வதாகவே உணர்ந்தாள். திடீரென அவன் பேச்சில் கடுமையும் ஏளனமும் தொனித்ததை அவள் எதிர்ப்பார்க்காதது.

“அறை வாடகைக்குப் பணம் இருக்கா ?” என்றான்.

கொஞ்சம் மறைவான இடத்துக்குப் போனாள். சுவரில் சாய்ந்து அழுதாள். அவளின் நிழல் காலுக்கடியில்  குள்ளமாய் மிதிபட்டிருந்தது. பின்னர் தான் அணிந்திருந்த சங்கிலியைம் கழட்டும்போதே அது தலைமுடி இழைகளில் சிக்கின. எண்ணெய் காணா தலைமுடி அதன் இயல்பான கரிய நிறத்தை  இழந்திருந்தது.“எங்கம்மா கூட்டு கட்டி வாங்கிக்கொடுத்தது,” என்று சொல்லிக் கையில் கொடுத்தாள். குரல் உடைந்து குழறியது. கண்களில் நீர் ததும்பக் காத்தருந்தது. உதடுகள் மடித்து உள்ளிழுக்கப்பட்டிருந்தன.

“இப்போ என்னா,சம்பளம் வந்தா மீட்டுடலாம் இதுக்கு போய்  அழுமூஞ்சிய காட்டுற? நாலு பேர் பொழங்கிற எடத்துல!”

அந்த மாதத்தில் எஞ்சி இருக்கும் நாட்கள் அவளை அச்சுறுத்தின. அவளிடமிருந்த பணம் நகை நட்டு எல்லாம் கொடுத்தாயிற்று.பையில் சில்லறையாகக் கொஞ்சம் எஞ்சியிருக்கலாம். தூரத்திலிருந்து எல்லாம் பார்க்கும்போது அழகாகத்தான் இருந்தன. அந்த இடத்துக்கே நெருங்கி வந்து பார்த்தால் நாம் எட்டி யிருந்த பார்த்த அழகு கலைந்துவிடுகிறதே என்று நினைத்து உள்ளம் வெதும்பினாள்.

அவளை வரவேற்பறையில் காத்திருக்க சொல்லிவிட்டு போய்விட்டான். சற்று தொலைவில் போய் கைப்பேசியில் யாரோடோ பேசத் தொடங்கினான்.

அவனோடு வந்ததிலிருந்து காத்திருத்தல் ஒரு நோயைப்போல  சீண்டிக்கொண்டே இருந்தது. காலத்தை கருணையின்றி நீட்டிக்கச்செய்யும் நோய். கோலாலம்பூருக்கு வந்ததிலிருந்து வயிற்றில் பசியின் எச்சம் மிதந்துகொண்டே இருந்தது. உணவு வாங்கிவர எவ்வளவு நேரமாகுமோ தெரியாது. அந்த இடத்தின் சூழல், மனிதர்கள் மெய்ப்பாடு (body language) அவளை வெளியே தள்ளியது. அவள் அவசரத்தில் எடுத்த முடிவால்   ஏதோ ஒரு அவமானம் அவள் முதுகைத் தொற்றிக்கொண்டு பின்தொடர்வதாகவே உணர்ந்தாள்.

பெண் துணையற்று இருப்பவர்கள் அவளை கண்மாறாமல் பார்த்தார்கள். அருகில் நெருங்கித் தொட முனைந்தார்கள். அவள் வெடுக்கென தட்டிவிட்டாள். அவர்கள் விலகிக்கொண்டார்கள். கூச்சம் உடல்மீது விஷமாய்ப் பாய்ந்தது.

ஒருவன் சிகிரெட் புகையை அவள் காதருகே ஊதிவிட்டுச் சிரித்தான். அவனிடமிருந்து ஒருவகை மதுவாடை நாசியைத் தீண்டியது. அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சுமியின் புறக்கணிப்பால் அவர்கள் அப்பால் சென்றார்கள்.

“யாரும்மா நீ? ஏன் இங்க வந்திருக்க?”

சுமி விசாரித்தவளை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் தோற்ற ஒற்றுமை அந்தக் கூட்டத்தில் ஒருத்தியாக இருக்கலாம் என்று முடிவெடுக்க வைத்தது.

“நான் ஒன்னிய இங்க முன்ன பின்ன பாத்ததில்லையே”

சுமி அப்பாவியாகச் சொன்னாள் , “நா.. என் போய் பிரண்டுக்காகக் காத்திருக்கேன்”

“ செத்த மின்ன ஒங்கூட வந்தானே அவனா?”

“ஆமா…”

“ நீ நல்லா ஏமாந்திட்ட… அவன் எனக்குத் தெரிஞ்சி இங்க ரெண்டு பேர கொண்ணாந்து வுட்ருக்கான். நீ மூனாவது. இது நல்ல எடமில்ல தெரிமா?”

சுமியின் முகத்தின் தீப்பிழம்பு அறைந்ததுபோல இருந்தது. கண்கள் ஈரமாகிக்கொண்டிருந்தன. துரியம் சில்லிட்டு பிறடி வரை விர்ரென்று ஏறியது.

“ஒங்கிட்ட உள்ள எல்லாத்தியும் பிடுங்கியிருப்பானே. இனிக்க இனிக்க பேசியிருப்பானே? இங்கேர்ந்து ஒடனே கெளம்பிடு..ஒன்னத் தேடி இன்னும் செத்த நேரத்துல ஆள் வந்திடும். அப்புறம் ஒன் விதிய யாராலும் மாத்த முடியாது. உடனே கெளம்பு..” ரகசியமான குரலில் அழுத்தமாக கட்டளையிட்டுவிட்டு , ஒன்றுமே நடவாததுபோல அவள் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். தூண்டில்முள் தொண்டையில் தொடுத்தி இழுப்பது போன்ற இருந்தது அவள் எச்சரிக்கை. அவள்  தப்பிக்காதபடி யாரோ வலிமையுள்ள ஆடவன் பின்னாலிருந்து கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். வெடுக்கென அந்தப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள திமிறி உடலை உக்கிரமாய் குலுக்கினாள். ஆனால் அப்படி யாரும் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கவில்லை என்பதை உடலின் இயல்பாக அசைவதுலிருந்து சட்டென்று புரிந்துகொண்டாள். வெறும் பிரம்மை.  ஆனாலும் அந்த கண நேர உணர்வு உடலில் ஊர்ந்தபடி இருந்தது. யாரோ தன்னைப் பிடிக்க நாலாப் பக்கமும் காத்து நிற்பது  போன்றே இருந்தது.

சுமி மிரண்ட கண்களால் சுற்றுமுற்றும் பார்த்தாள். அந்த இடத்தின் நடவடிக்கை அவளுக்குத் துல்லிதமாய்ப் புரிந்தது. உடனே வெளியாகித் தப்பித்துவிடவேண்டும்.

 அவள் மெல்ல வெளியேறினாள்.

எதிர்படும் ஆண்களெல்லாம் அவள் சொன்ன ஆளாக இருக்குமோ என்ற அச்சம் தோன்றியது.

அவர்கள் கண்களிலிருந்து தப்பிக்க, கூடிய பட்சம் அவள் முயன்றது அவர்கள் நேர்கொண்டு பார்க்காமல் பூனையைப்போல நழுவியதே.

அவளைக் கடந்து செல்லும் பாதங்கள் சடாரென நின்று, அவள் கையைப் பற்றிக்கொள்ளுமோ என்று பதறினாள்.

 அவள் சொன்ன  அந்த ஆள் வந்துவிடுவதற்கு முன்னர் அவள் கால்கள் வேகம் பிடித்தன.  கால்களுக்கு அந்த அசாத்திய துரிதம் வந்தது வியப்பாக இருந்தது.

  சற்று தூரம் வந்தவுடன்தான் அங்கிருந்து தப்பித்துவிட்ட நம்பிக்கை வந்தது. புலியின் குகையிலிருந்து தெய்வதீனமாய் தப்பித்த ஆசுவாசம் உண்டானது. ஆனாலும் கால்களின் நடுக்கம் எஞ்சிகிடந்தது. பாதங்கள் சில்லிட்டு மறத்தன. நெஞ்சு வெடித்ததுபோல துடித்தது.

கையசைத்து டேக்சிகளை நிறுத்த முயன்றாள். அவள் அவசரம் புரியாது உதாசீனப்படுத்திவிட்டுக் கடந்தன. கையசைவுக்கு நிற்காத டேக்சிகள் மீது கோபம் பொங்கியது. ஆனாலும் கால்கள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தவாறே இருந்தன. ஒரு டேக்சி நின்றது. எங்கே போகவேண்டும் என்று முடிவெடுக்க முடியாமல் திணறினாள். “நந்தி சயா பகி தௌ, யு பி டுலு “ என்றாள். டேக்சி ஓட்டி  கண்ணாடிவழி அவளைச் சந்தேகக் கண்களோடு பார்த்தான்.

அதில் உட்கார்ந்த போதே அவள் கை தன்னிச்சையாக அடிவயிற்றைத் தொட்டுக்கொண்டிருந்தது. ‘ச்சே ஒரு வாரங்கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே? இருக்காது !’என்று ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். ஆனாலும் அடிவியிற்றுக்குள் என்னவோ ஊர்வது போல இருந்தது. அந்த உணர்வை இனி கொஞ்ச காலத்துக்குச் சுமி சுமந்துதான் ஆகவேண்டும் என்று எண்ணியபோது இந்தப் பேரண்டமே விழுந்து சிதறுவது போன்று இருந்தது.

டேக்சி சாலைக்குள் இறங்கி ஊர்ந்தபோது அதே விடுதியைச் சன்னல் வழியாகப் பார்த்தாள். அப்படிப் பார்க்க ஒரு வரட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டாள்.

அதன் கதவுகளும் திறந்தே கிடந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *