பிறழ்

நான் மறைவிடம் ஒன்றைத் தேடிப்போனேன். சிறிய அவஸ்தை. ஐந்து நிமிடம் என்பதே அதிகம்தான். வயிறு முட்டி கனத்துக்கிடக்கிறது. பசியைத் தணிக்கும் என்பதற்காக ஒரு பாட்டில் தண்ணீரையும் மண்டிவிட்டதன் விளைவு. நாற்பதைத் தாண்டியபின் நான் முதலில் கண்டுகொண்டது என் உடல் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதைத்தான். இரண்டு மணியைத் தாண்ட முடியவில்லை. பசி பெருந்துயராகப் பெருகி நாடி நரம்பெல்லாம் பரவி நடுக்கம் எடுத்து விடுகிறது. என்ன செய்தாலும் அப்பதற்றத்தில் இருந்து தப்பித்துக்கொள்வது சாத்தியமில்லை. என்னுடைய இருபதுகளில் பல நாட்கள் பட்டினியாக இருந்திருக்கிறேன். பசியோடு இருப்பதன் மூலம் கொழுந்துவிட்டு கிளைக்கும் காமத்தைக் கட்டுப்படுத்திடலாம் என்று முயன்றிருக்கிறேன். இப்போது ஒரு மணி நேரத்தை என்னால் தள்ளிப்போட முடியவில்லை. உடனே பேயைப் போல சோறு இருக்கும் இடத்தை நோக்கி பாய ஆரம்பித்து விடுகிறேன்.இந்நகரம் எனக்குப் புதிதல்ல. இருபதாண்டுகளாக நான் அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருப்பவன். புராதான நகரம் என்றாலும் அதன் நதி மேலும் புராதான காலத்தைச் சேர்ந்தது. நதிக்கரையோர நகரங்களில் இன்றும் உயிரோடு எஞ்சியிருப்பது. பொதிகையில் தோன்றும் இந்த நதியும் எனக்கு நாற்பதாண்டுக்காலப் பழக்கம். நீங்கள் நம்புவீர்களாக என்று தெரியவில்லை. இந்த நாற்பதாண்டுகளில் இந்த புராதான நதியில் நான் கால் நனைக்காத ஒருநாள் கழிந்து சென்ற நினைவில்லை. அரசாங்க வேலையைவிட அதிக மதிப்பும் வருமானமும் தருவதாக இருந்தது மதுரா மில் வேலை. பொதிகை மலையின் அடிவாரத்தில் அகலித்துக்கிடக்கும் அதன் பூத உடலை நீங்கள் மலைமேல் செல்லும் சாலையில் பயணிக்க நேர்ந்தால் காணலாம். அசந்து போவீர்கள். மரங்கள் அடர்ந்து காடு போலக் காணப்படும் மில் வளாகம். பிரமாண்டமான கட்டிடங்கள். நாய்க்குட்டிகளைப் போல ஒழுங்கற்றுப் புழுதியில் படுத்துக்கிடப்பதாகத் தோன்றும். உயர்ந்த மரங்களின் நிழல்கள் மில் வளாகத்தின் உண்மை முகத்தை பலநுாறு பாவனைகளால் மறைத்து நிற்கும். தொண்ணுாறுகளில் ஒருமுறை அடைமழை பெய்து வெள்ளம் வந்தது. ஆற்றின் கரையோரங்களில் புதிதாக ஏற்பட்டிருந்த வீடுகளில் வசித்தவர்களில் பலர் நீர் உண்டு மரித்துப்போனார்கள். அதன் பிறகு இன்றுவரை அப்படி ஏதும் அசம்பாவிதம் நடந்து விடவில்லை. ஒருவாரம் விடாத மழை. வானம் சதா கருத்து உறுமிக்கொண்டே இருந்தது. இரண்டு அணைகளும் நிரம்பி முழுக்கொள்ளளவைத் தாண்டிவிட்டன. தண்டோரோ நகரம் முழுக்க எச்சரித்தது. ஊருக்கு வடக்கே மலைப்பாம்பைப் போல சோம்பலாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றுக்கு திடிரென ஆவேசம் பிடித்தது. செம்மண் நிறம் அதன் மேனியில் ஒளிர்ந்தது. காணிக்குடியிருப்பில் இருந்தவர்கள் மலைத்தோட்டங்களுக்குச் செல்லவில்லை. நான் இரண்டொருமுறை காணிகளின் குடியிருப்பிற்குச் சென்றிருக்கிறேன். மண்ணால் ஆன சிறிய குடில்கள். கதவுகள் அற்றவை. அத்தனை துாய்மையான சுற்றுப்புறத்தை நகரப்பகுதிகளில் ஒருபோதும் காண முடியாது. மழை வெள்ளத்தால் நகர வாசிகள்தான் பாதிக்கப்பட்டனர். காணி மக்கள் எதையும் இழக்கவில்லை. நான் அன்றிரவு ஒரு கனா கண்டேன். ஒரு குதிரையின் குளம்பொலியால் விழித்துக்கொண்டேன். பூதம்போன்ற ஒரு மரத்தின் அடியில் நான் படுத்திருந்தேன். சுய போதம் தோன்றியதும் பதறி எழுந்தேன். காதுவரை தடம் இட்டிருந்த சலவாயைத் துடைத்துக்கொண்டேன். நல்ல இருட்டு. சாமத்தை தாண்டியிருக்கும் பொழுது. என் முன்னால் நிழற் திட்டைப்போல புரவி. அதன் வால்மட்டும் பேரிரைச்சல்கொண்டு ஆடிக்கொண்டிருந்து. ஓடிவந்ததன் மூச்சிரைப்பு அதன் இருப்பை உணர்த்திற்று. என்னைச்சுற்றி பத்திருபது மின்மினிகள். அவை ஒளிர்ந்து அமர்ந்து அவ்விடத்தை அச்சமற்று ஆக்கியிருந்தன. மரத்தின் கிளைகள் பைத்தியத்தின் தலையைப்போல சிடுக்குடன் தென்பட்டன. தொங்கிய விழுதுகள் காற்றில் ஆடிச்சென்றன. குதிரைதானா அது என சிறிய குழப்பம். நதி அப்போதும் உராய்ந்து ஓடும் இரைச்சல். மழைக்காலமாக இருக்கலாம். நீர் ஓழுகும் சத்தம் மழைக்காலங்களுக்கு உரியது. காற்றில் ஈரப்பதம் ஏறியிருந்தது. வெற்றுடம்பில் காற்று உரசிச்செல்ல உடல் அவ்வப்போது புல்லரித்தது. குதிரை என்னை ஏற்றிச்செல்லும் உத்தேசம் கொண்டிருந்தது. நான் அதனை உற்று நோக்கியதை அது உள்ளுணர்வால் அறிந்து கொண்டது. என்னை நெருங்கி என் வலதுகையினை உரசி நின்றது. நான் அதன் பிடறி மயிர் பற்றி எக்கி ஏறினேன். அன்றுதான் ஒரு குதிரையை அத்தனை அருகாமையில் அறிகிறேன். ஆனாலும் எனக்கு அதுகுறித்த அச்சமோ தடுமாற்றமோ இருக்கவில்லை. சகல நேரமும் குதிரையோடு சுற்றித்திரிபவன் போல லாவகமாக கையாண்டேன். ஒரு கணம் என்னை கீழே விழத்தட்டும் குதிப்போடு குதிரை ஓடத்தொடங்கியது. ஆரம்பத்தில் இருளுக்குள் திடிரென்று தோன்றிய கிளைகளால் அறைகள் வாங்கினேன். சிறிய பூச்சிகளும் எறும்புகளும் என் முகத்தில் மோதி விழுந்தன. காதின்அருகில் ஊர்ந்து சென்ற ஒரு பூச்சியினை அடுத்த நொடி வந்து மோதிய செடியின் கிளையொன்று தட்டிவிட்டது. லகான் என் வசம் இல்லை என்பதே என்னை உச்சபட்ச பதற்றத்திற்கு ஆளாக்கியது. காடு என்ற இரண்டெழுத்து எனக்கு நீண்ட காவியம் போல ஆயிற்று. இரண்டு மணி நேரப் பயணம். காற்றின் திசையே வழிநடத்திச் சென்றது. இப்போது இருள் கண்களுக்கு நன்றாகப் பழகி இருந்தது. இரண்டொரு இடங்களில் ஒளிரும் பச்சைக் கண்களை வெகுதொலைவில் காண நேரிட்டது. ஒருமுறை ஒரு வேம்பின் வளைவில் திரும்பும்போது மல்லிகை வாசமும் ஒரு பெண்ணின் தாபம் நிறைந்த அழைப்பும் உணர நேரிட்டது. உடல் உடனே அதை அறிந்து, உடனடி விரைப்பும் உடனே சுய ஸ்கலிதமும். குதிரைக்கு எவ்விதச் சிக்கல்களும் இல்லை போலும் .என்னை எங்கோ அழைத்துச் செல்கிறது.அதற்கு பயண வழித்திட்டங்கள் நன்றாக அறிமுகமாகியிருக்கலாம். எவரோ அதை வெகுதொலைவில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கலாம். அகத்திய முனியை நான் சந்திக்கச் செல்கிறேன் என்று சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது. ஆதி காலத்திலே வடக்கு குடைசாய்ந்த கதையை நான்  சிறிய ஏளனத்தோடு நினைவில் மீட்டுக்கொண்டேன். அகத்திய முனி இங்கு வந்திருக்கிறார் என்பதை நானும் உங்களைப் போல நம்பவில்லைதான்.  வரலாறு என்பதே பெரும் புனைவன்றி வேறு என்ன என்பதுதான் என் எண்ணமும். நேற்றுநடந்த ஒரு நிகழ்வின் மீதே எத்தனையோ விதமான ஊகத்திரைகள் விழுந்து உண்மையை மழுப்பிக்கொண்டே இருக்கின்றன. பலநுாறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததை நாம் எப்படி துளிக்குழப்பமும் இன்றி அப்படியே நம்ப முடியும். ஆனால் அம்மா நம்பினாள் அவளின் அம்மாவும் நம்பினாள். அம்மாவின்அம்மாவின் அம்மாவின் அம்மாவின் அம்மாவும் நம்பினாள். ஆகவே நானும் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. நகரத்தில் அகத்தியருக்கு என்று ஒரு கோவில் இருக்கிறது. அங்கே ஆண்டுதோறும் பூசைகளும் விழாக்களும் இடையறாமல் நடந்துகொண்டே தான் இருக்கின்றன. இந்த நீண்ட நினைவின் தொடர்ச்சியில் அகத்தியர் மிதந்துகொண்டே இன்று என்வரை வந்து சேர்ந்திருக்கிறார். நாளையும் அவர் தன்னை நிலைநிறுத்திக்கொள்வார். அவர் என்னை காலத்தின் துகள் என்றோ காலத்துகளின் துமி என்றோ எண்ணக்கூடும். நானோ பலநுாறு நான்களாக இருக்கிறேன். நதியில் மிதந்துசெல்லும் இலையின் நிழலைப்போல என் நான்களும். ஓய்வறியா இயக்கம் என்றாலும் என்னுடைய நானும் அந்நதியை ஒத்ததே. நானின் இயக்கம் நான்களின் இயக்கமும்தான். திடுமென்று குதிரை நின்றது. அசைவற்ற அதன் உறைதல் எனக்கு எதையோ உணர்த்திற்று. நான் இறங்க வேண்டிய இடமாக அது இருக்கலாம் என்று தோன்றிற்று. அசைந்து பார்த்தேன். குதம்வரை வலித்தது. விலா எலும்பில் விண்ணென்ற மின் பாய்ச்சல். கண்கள் பஞ்சடைத்திருந்தன. திம்மக்கா பொம்மக்கா என்ற சொற்கள் அப்போது நினைவில் தோன்றின.சொரிமுத்தாக தன்னை மாற்றிக்கொண்டவர் பின்னர் அய்யனாராக சமணர்களால் மாற்றப்பட்டார் என்றும் தோன்றியது. அதன்பின் ஊரெல்லாம் பட்டமுத்து பிறந்து வளர்ந்து பெருஞ்செல்வத்தை திருமணப் பரிசாக்ப்பெற்று பிள்ளை வளர்த்து மூத்துநரைத்து செத்துப்போனர்கள். பேருந்து ஒன்று இரைந்து சென்றது. அதன் பின்பகுதியில் இருந்து கரும் குழலாக புகை நீண்டு காற்றில் கரைந்தது. செண்டிற்கு பத்து லட்சம் என்றார்கள். காடும் குதிரையும் சில்வண்டுகளும் முன்பு ஒரு காலத்தின் நிழற்படங்களாகத் தோன்றிற்று. நான் ஏற வேண்டிய பேருந்து வந்து நின்றது. எல்லாப்பயணங்களும் நீண்ட பயணங்களுக்கான ஒரு சாத்தியத்தைக் கொண்டிருக்கவே செய்கின்றன. வீட்டிற்கான மளிகைப்பொருட்களை வாங்க நான் பஸ் ஏறினாலும் வீட்டிற்கு திரும்பிவர முடியாமல் போகும் ஒரு சந்தர்ப்பம் அப்பயணம். ஏறி அமர்ந்துகொண்டேன். அதுதான் முதல் நிறுத்தம். பயணம் ஆரம்பிக்கும் இடம் என்பதால் ஆள்கள் அதிகம் இல்லை. நான் சக மனிதர்களை உள்ளுர வெறுக்கிறேன். சம கால மனிதர்களை எப்போதாவதுதான் சிலபோது சந்திக்க நேரிடுகிறது. பெரும்பாலான மனிதர்கள் சமகாலத்  தன்மை கொண்டிருப்பதில்லை. இன்னும் பழங்குடி இனக்குழுக்களின் நம்பிக்கைகளை கொண்டிருப்பவர்களே அதிகம். பழங்குடித் தன்மை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட்டேன். தவறான சித்தரிப்புஅது. பழங்குடிகளிடம் அன்று ஒருவித ஒழுக்கமும் அறப் பேணலும் இருந்தன. விலங்குகளுடன் ஒரு புரிந்துணர்வும் ஒத்திசைவும் இருந்தன. ஒருபழங்குடிக்கு மற்றொருபழங்குடி மீது மட்டுமே அச்சமும் வெறுப்பும் இருந்திருக்கலாம். ஆனால் சம கால மனிதன் எப்போதுமே சக மனிதனை வெறுப்பவனாகவே இருக்கிறான். வந்து பிறக்கும் ஒவ்வொருவரும் ஒட்டுமொத்த பூமியும் தான் ஒருவருக்கே என்று நம்புகிறார்கள். அவ்வெண்ணத்தில் சுயவெறி கொண்டு வாழ்கிறார்கள். மனித முகங்கள் அத்தனையும் ஒரே சாயலில்தான் இருக்கின்றன.சாத்தியம் என்றால் அவற்றின் சிந்தனைகளின் ஊற்றுமுகங்களை ஆவணப்படுத்தினால் நீங்கள் மெய்யாகவே சலிப்படைந்து போகக் கூடும். இவ்வளவு பெரிய பிரபஞ்சம் இந்த மனிதர்களுக்கு ஆடம்பரம் என்ற எண்ணம் தோன்றக் கூடும்.  காலடியில் புதையலைவைத்துக்கொண்டு காலணாவிற்கு அலைந்து திரிபவன்தான் மனிதன்.  நான் மனிதர்களின் முகங்களைப் பார்ப்பதில் ஆர்வமற்று இருக்கிறேன். அவர்களின் கண்களைக் காண நேரிடும் ஒவ்வொருமுறையும் தீராத சோர்வையும் அவநம்பிக்கையையும் அடைகிறேன். என்னை நல்ல மனநிலை இல்லாதவன் என நீங்கள் கருதக்கூடும். உண்மையில் என்னைப் போன்றே நீங்களும். உங்களைநான் என்னவாக மதிப்பிடுகிறேனோ அதைப்போலவே என்னையும் நீங்கள் மதிப்பீட வாய்ப்புள்ளது. ஆனால் பிற அனைத்தின் மீதும் என் ஆர்வம் குறைந்ததே இல்லை. செடி கொடிகளில் இருந்து மேகங்கள் அற்ற முற்பகல் வானம் வரை எனக்குச் சலிப்பதே இல்லை. ஒரு மரத்தின் ஓராயிரம் இலைகள் போதும் எனக்கு வாழ்நாளெல்லாம் அதிகபட்ச ஆனந்தத்தோடு வாழ்ந்து தீர்க்க. ஒரு மரத்தின் ஒரு இலைக்கு நகல் உலகில் எங்குமே இருக்கவில்லை. ஒரு இலை ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கே முன் பின் தொடர்ச்சி இல்லாதது. தன்னளவில் அதுவே ஒரு தனித்த பிரபஞ்சமே. மனிதர்களும் அப்படித்தான். அத்தனித்தன்மையை அவர்கள் எப்படியோ இழந்து விட்டார்கள். சமநிலைக்குலைவே உலகத்தோற்றம் என்ற தத்துவ நோக்கு ஒரு உண்மைவிளம்பும் அழைப்பே.மூத்திரச் சந்தை யாரும் அடையாளம் காட்ட வேண்டியதில்லை. ஒரு மைல் தொலைவில் கூட எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். குந்தி அமர்ந்தேன். வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டேன். கக்கத்தில் கவ்வியிருந்த மஞ்சள் பையில் இருந்து மீண்டும் தண்ணீர் பாட்டில் எடுத்து குடித்தேன். அடுத்த மறைவிடத்தை நான் நிச்சயமாக கண்டுபிடிப்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *