வதை

சிறிய பறவை. மிகச்சிறியது. உற்றுப் பார்த்தால் மட்டுமே கண்ணுக்குத் தெரியக்கூடியது. வேம்பின் பசுங்கிளைகளுக்கு நடுவே, வேகமாக நகரும் கரும்புள்ளியென அதன் இருப்பு. குதிக்கும் கரிய உருவினைப்போல. கூர்ந்து பார்த்தேன். நீண்ட நேரம் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆம். அவ்விதம்  பார்க்க என் வசம் போதிய காலம் இருக்கிறது. முன்பென்றால் இப்படி இல்லை. சதா ஓடிக்கொண்டே இருந்தேன். எதை நோக்கி? பணத்தை, அதிகாரத்தை, சமூக மதிப்பை, குடிச்சாலைகளை, தொடையிடுக்கை. பணி ஓய்வு இவை எல்லாவற்றையும் தலைகீழாக்கிவிட்டது. கடலைப்போல நேரம். நீந்திக்கடக்கவே முடியவில்லை. தீராப் பகல், தீரா முன்னிரவு. தீரா யாமங்கள்.

அலுவலகம் முன்பு  காட்டிற்குள் இருந்தது. முன்பு என்றால் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர். அதற்கும் முன்பு அவ்விடம் ஓர் அடர்வனத்தின் மையப்பகுதியாக இருந்திருக்கலாம். தன்னை இலகுவாக்கிக்கொண்டு நதியின் பாதையை அடர்வனம் உள்ளிழுத்துக்கொண்டது. நதி ரதியைப் போல. சகலத்தையும் தன்னைநோக்கி இழுத்து நிலைநிறுத்திவிடும். பல்லாயிரம் பாதச்சுவடுகள் நதிக்கரை மணலில் மல்லாந்து கிடந்தன. மனிதச் சுவடுகள் அறிந்த பின்னர் நதி தன்னை தொட்டாற்சுருங்கியாக மாற்றிக்கொண்டது. அதன் சிருங்காரம் மோனத்வம் என்றானது. நளினம் ஒளிரும் நழுவல், குதித்தோடும் ரீங்காரம் ஆனது. ஒத்திசைவு குலைந்தது. ஆனால் வற்றாநதி. ஆண்டு முழுக்க முழங்கால் அளவு தண்ணீர் ஓடும். தண் நீர் என்று பிரித்து உச்சரித்துக்கொள்ளுங்கள். அவ்வளவு குளுமை. வானம் நீரானாது போல. உருகி நகரும் கண்ணாடியைப் போல. மதியம் சாப்பிட்டு விட்டு பின்னால் ஓடும் நதியில் சென்று பாத்திரங்களை கழுவிக்கோள்வோம். மொண்டு குடிப்பதும் அதையே.  அழுக்குத் துணிகளைக் கொண்டு வந்து துவைத்து காயப்போடுவார்கள்.  மாலை வீடு திரும்பும் முன்னர் சில நாட்கள் முங்கிக்குளிப்பேன். நாணற்புதற்களுக்கு நடுவே அமர்ந்து எழுந்து வருவேன். நதிக்குளியல் என் புத்துணர்வு முகாம். பாத வெடிப்புக்களை, கெண்டைக் கால்ச்சதைகளை ஆவேசத்தோடு முத்தமிடும் கெண்டையும் கெழுத்தியும் எனக்கான ஆசிர்வாதங்கள். ஒரே ஒருமுறை மலைப்பாம்பொன்றை காலடியில் நகரும் தரையென உணர்ந்தேன்.

அந்தப் பறவைக்கும் எனக்கும் என்ன தொடர்பு. அதை நான் ஏன் சிந்திக்கிறேன். அக்கணத்தில் அதைப் பொருட்படுத்தும் ஒருவன் நான் மட்டுந்தானா. அதன் பறத்தல் என் பொருட்டா? அவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவனா நான்? என்னைத்தவிர அப்பறவை இந்தப் பிரபஞ்சத்தில் வேறு யாரோடெல்லாம் தொடர்பில் இருக்கிறது? இதை என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா? இக்கணம் நானும் அந்தச் சிறிய பறவை மட்டும்தான் பரஸ்பரம் தொடர்பில் இருக்கிறோமா?. என் வீட்டின் சன்னல் வழியாக எனக்குத் தெரியும் துண்டு வானம். அதில் நகரும் ஓவியம் போல அந்த ஒற்றை வேம்பு.  காற்றிலாடும் கிளைகளுக்கு மத்தியில் அந்தச் சிறிய பறவை. பறவை என்பதனால்தான் நான் ஆவலோடு அதைப் பார்க்கிறேனா. சமீபத்தில் இப்படி அக்கறையும் கனிவும் ஒன்றுசேர நான் எதிலும் ஓர்மை கொண்டதில்லை. சகலமும் சலித்தவனுக்கு இது புதிது.

என் பணி மிக எளியது. அலுவலகத்திற்கு வரும் கடிதங்களைப் பிரித்து அனுப்புவது. பென்சிலால் அலுவலகங்களின் பெயர்களை ஒரு ஓரத்தில் குறிப்பிட்டு வைப்பேன். அக்கடிதங்கள் தட்டச்சுப் பிரிவிற்குப் போகும். அங்கே குறிப்பாணைகள் தயாரிக்கப்பட்டு அவை சென்று சேர வேண்டிய அலுவலகங்களை நோக்கிப் பயணத்தைத் தொடங்கும். ஒரு விதத்தில் நான் தேவதுாதன். பலநுாறு கோரிக்கைகளை பரிசீலனை செய்கிறேன். அவற்றின் விடியல்களை அடையாளம் காட்டுகிறேன். என் பணியில்  ஆரம்ப நாட்களில் மிகுந்த உற்சாகம் கொண்டிருந்தேன். அங்கு வரும் கடிதங்கள் பலவிதம். அவை ஒரு நாவலுக்குரிய தகவல் குறிப்புகள். அவற்றை  அப்படியே எழுதினால் கூடப் போதும். சிறந்த நாவலின் பக்கங்களாக உருமாறும். மனிதரின் அத்தனை அயோக்கியத்தனங்களும், சின்னத்தனங்களும் கையறு நிலைகளும் அக்கடிதங்களைப் படிப்பதன் வழியாக எனக்குப் புரிய வந்தன.  இருள் மண்டிய மனமும் இறுகிய முகமும் உள்ளவன் ஆனேன். இவ்வுலகம் இனிது என என்றுமே  எண்ணியது இல்லை.  அது மேலும் உறுதியானது.  வீடு திரும்பும்போது கனத்த இதயத்தோடு, உலகத்தின் துயர்களை எல்லாம் தோள்களில் துாக்கிச் செல்பவன் போலும் சோர்ந்து போவேன். துயர் அது பிறரது என்றாலும் மனதை நோகச் செய்கிறது. ஆழ் மனங்களின் ஊடாக நாம் ஒன்றாகி இருக்கிறோம். உடல்களாக பிளவுற்று இருப்பினும். வாடிய பயிரைக் கண்டு வாடுதல் எனக்குச் சாத்தியமானது. அது என் இயல்பல்ல. பணியின் பின்விளைவு.

சிட்டுக்குருவி. சிறிய பறவைகளுக்கு மனம் இட்டுக்கொள்ளும் அடையாளம். ஐம்பத்தெட்டு வயதுவரை என்னை புத்திசாலியாக நம்பிக்கொண்டிருந்தேன். செயற்கரிய காரியங்களை செய்துகொண்டிருப்பதாக இறுமாப்பு உண்டு.பணி ஓய்வு பெற்ற பின்னர்தான் எனக்கே தெரியவந்தது. நான் மகா முட்டாள் என்பது. இரண்டு வீடுகளுக்காக, எண்பெத்தெட்டு லட்சத்திற்காக என் முழு வாழ்நாளையும்  இழுந்து விட்டேன். கடைசியில் மிஞ்சியவை இரண்டு வீடுகள். வங்கிக் கணக்கில் எண்பத்தெட்டு லட்சங்கள். ஆனால் நான் இருக்கிறேனா? நான் யார் என்று கேட்டால் ஓய்வு பெற்ற குமாஸ்தா என்பார்கள். குமாஸ்தா  என்றாலே குமட்டிக்கொண்டு வருகிறது. முதுகுநாண் கொண்ட மெல்லுடலி. சகல இந்திரியங்களும் பெற்ற முடவன். கபோதி. நான் வெறும் குமாஸ்தா மட்டுந்தானா?  என் வீடே இந்த பூமி என்று நம்புவதைப்போல எரிச்சலுாட்டக் கூடியது நான் ஒரு குமாஸ்தா என்பது. ஒரு குமாஸ்தாவிற்கு தேவையான தகுதிகளை விட அதிகம் பெற்றிருந்தேன். அக்காலத்தில் எங்கள் கிராமத்திலேயே முதல் பட்டதாரி. பட்ட மேற்படிப்பிற்குச் சென்றவனும் நான்தான். காக்காசு என்றாலும் கவர்மெண்ட் காசு என்பதே அப்பாவின் வேதம். அப்பா என்னைவிட படு முட்டாளாக இருந்திருக்க வேண்டும். இந்த ஒரு ருசு போதாதா? இருக்க வீடும் பசிக்கு உணவும் வேண்டுந்தான். இருக்க வீடுகளும் பசித்து தின்றாலும் தீராத உணவுச்சேகரிப்பும் வேண்டுமா? அவசியமா? பேராசை இல்லையா? மனிதகுல விரோதம் தானே?

வேலையில் சேர்ந்த பிறகு எதையுமே புதிதாகக் கற்றுக்கொள்ளவில்லை. பிறவி மோட்சம் அடைந்ததைப் போல. வாழ்வின் ஈடேற்றம் நிறைவுற்றதைப் போல. வேறு தேடல்களே இல்லை. வேறு எவையும் தேவையும் இல்லை.  மாதச் சம்பளம் முப்பத்திரண்டு ரூபாய். மாதாந்திர விடாயைப் போல. மாதந்தோறும் முதல் வாரத்தில். தவறவே செய்யாது. சொலவு பதிவேட்டில் ரெவின்யு ஸ்டாம்பில் கையொப்பம் இட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். நிதானகதியான ஒரே போக்கு. கொந்தளிப்பற்ற அன்றாடங்கள். எப்போதாவது சில உயரதிகாரிகள் பேரிடர்களைப் போல வந்து அமைந்து விடுவதைத் தவிர்த்தால் சிக்கலற்ற பணிச்சூழல். இடது புறம் திரும்பி வலது பக்கம் சென்று அந்தமானிக்கு தென்திசை ஏகினால் வீடுவந்து விடும் என்பதைப் போன்ற மனப்பாட செயல்கள். கவர்களை கவனமாக உடைத்துப் பிரிக்க வேண்டும். அலுவலகத் தேதி முத்திரையை இடதுகை மூலையில் பதிக்க  வேண்டும். அதற்கு முன்னர் அதிகாரியின் சுருக்கொப்பம் இடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள  வேண்டும். ஒரே விதமானச் சடங்குகள். ஒரு மனிதக்குரங்கு போதும் அதைச் சிறப்பாகச் செய்ய. அல்லது ஒரு உராங்குட்டானை பழக்கப்படுத்திவிடலாம். கணிணி கொஞ்சக்காலம் கழித்து உள்ளே வந்தது. மந்தியைப் போன்ற அதன் மெல்லியக்கம் எனக்கு திகில் ஊட்டுவதாக இருந்தது. கடைசி வரை  அதைக் கற்றுக்கொள்ள ஆர்வம் கொண்டதில்லை. கணிணியை இயக்கத் தெரிந்தவன் மீது கடலலைகள் வந்து மோதுவதைப் போல வேலைகள் வந்து விழுந்து கொண்டே இருந்தன. உலக வேலைகள் அனைத்தையும் இழுத்துப்போட்டுச் செய்தாலும் மாதச் சம்பளத்தில் ஐம்பது பைசா கூடக் கிடைக்கப்போவதில்லை.  கைநட்டம் ஏதுமில்லை. அதனால் கற்றுக்கொள்ள மெனக்கெட்டதும் இல்லை.

அந்தப் பறவையைக் காணும்போது நான் அடையும் பதற்றம் எனக்கே புதிது. பறவையின் உடல்மொழி உற்சாகம் நிரம்பியது. சோர்வடையாத அதன் பறத்தல். ஆம். சரியாகச் சொன்னால் அதுதான். பறத்தல். பறத்தல் அளிக்கும் மகிழ்ச்சி. பறக்கும்போது கிளம்பும் உற்சாகம். பறப்பது பயணிக்க அல்ல. மகிழ்ச்சியோடு இருக்க. பறத்தல் அதன் சுதந்திரம். சுதந்திரம் என்பதே விட்டு விடுதலையாகி பறத்தல். நான் எப்போதாவது அப்படிப் பறந்திருக்கிறேனா. உண்மையாகச் சொல்வதென்றால் காசு வாங்குவதற்காக அப்படி இருந்திருக்கிறேன். ஆம். லஞ்சம், கையூட்டு, வெகுமதி, அன்பளிப்பு, சட்டப் பூர்வமான வழிப்பறி. இப்படி எத்தனையோ நாமரூபங்கள் கொண்ட பலவேசம் அது. எல்லா அலுவலகங்களையும் போல என் அலுவலகமும். காசு இருந்தால் பணிவு காட்டும். சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும். புன்முறுவல் காட்டி  சேவையாற்றும். இல்லையோ வாளை எடுத்து வீசும். சாட்டை கொண்டு விளாசும். சட்டாம்பிள்ளையாகி வியாக்கியானம் பேசும். தடித்தனமே எதிர்கொள்ளும். டேபிளுக்கு அடியில் நீட்டப்படும் ரூபாய்த்தாள்களைக் கண்டு மனம் குதியாட்டம் போட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் சில நுாறுகளுக்குக் குறையாமல் வீட்டிற்கு எடுத்துப்போக வேண்டும். . அதற்காக எதைச் செய்யவும் தயாராக இருந்தேன்.  எதைத்தான் செய்யாமல் மிச்சம் விட்டிருக்கிறேன். என் மனம் என்பதே மனிதக்கீழ்மைகளின் உறைகுழிதானே. முடைநாற்றம் வீசும் அழுகல் பிலம்தானே.

பறவையைக் காணவில்லை. பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். எப்படி மறைந்தது. தலையை ஆட்டிக்கொண்டேன். காற்றில் தேடினேன். மரங்களில் தேடினேன். மரங்களுக்கு இடையே தேடினேன். கிளைகளுக்கு இடையே தேடினேன். அந்த மரத்திற்கும் என் வீட்டிற்கும் இடையே தேடினேன். பறவையைக் காணவில்லை. பறவை எங்கே போனது. சற்று முன்பு அந்தக் கோணல் வேம்பிற்கு மேலே ஒரு பறவை. ஆம். சிட்டுக்குருவி என்றுதான் நம்புகிறேன். சிட்டுக்குருவி இருந்தது என்பதற்கு என்ன சாட்சி. அந்தப் பறவையைப் போலத்தான் நானுமா? வாழ்ந்ததற்கு என்ன சாட்சி? எச்சத்தால் காணப்படும் என்கிறார்கள். என் எச்சம் எது? என் பிள்ளைகளா? என்னை இப்படித் தனியே தவிக்கவிட்டு, என் சொத்திற்காக என் சா நாளை நோக்கி காத்திருக்கும் வாரிசுகளா? நீசப்பய என்பதே என்னைப் பற்றிய பெரும்பான்மை மனப்பதிவு. நீசன். நான் ஏன் நீசன் ஆனேன். நீசன் ஆக எத்தனை முயன்றேன். எத்தனை யோசித்தேன். எத்தனை தருக்கங்களை கட்டி அடுக்கினேன். எத்தனை அதிகாரிகளின் கால்களை நக்கியிருப்பேன். ஆனாலும் நான் நீசன். பணம் சகலத்தையும் கொண்டுதான் வருகிறது, நீசன் என்பதும் அப்படி வந்து சேர்ந்த ஒன்று.

ஒரு டேபிளுக்கும் அதன் அருகில் பத்தடி தொலைவில் இருக்கும் மற்றொரு டேபிளுக்கும் இடையே ஒரு கடிதம் செல்ல எத்தனைக் காலம் எடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சில கடிதங்கள் மின்னல் வேகத்தில் பறக்கும். சில கடிதங்களுக்கு நாட்கணக்கும், சிலவற்றிற்கு மாதக்கணக்கும் உண்டு. கடிதங்களோடு மானசீகமாக ஒரு விளையாட்டை மேற்கொண்டேன். கண்ணாமூச்சி விளையாட்டு. அவற்றை நான் துரத்துவதும். அவை என்னைத் தேடி அலைவதும் அன்றாடம் நடக்கும். என் விளையாட்டிற்கு கேடு எப்போது வந்ததென்றால் 2005-ஐ ஒட்டி. அப்போது ஒரு சட்டம் வந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்ற பெயரில். அதன் பின்னர் கடிதங்களுக்கு கொம்பு முளைத்தன. அவை வன மிருகங்களைப்போல அச்ச மூட்டும் அம்சங்களைப் பெற்றிருந்தன. இரவில் கனவுகளில் வந்து மிரட்டின. அதற்குப்பிறகே நான் தினந்தோறும் ஒரு குப்பி என்று ஊற்றத் தொடங்கினேன். அதன்பின்னரே என் மனைவி என்னை விட்டு விட்டு சலுான் கடைக்காரச் சின்னானோடு ஓடிப்போனது. அப்பால்தான் நான் பேயைப் போல காசு சேர்த்து இப்போதிருக்கும் இரண்டு வீடுகளை வாங்கியது. இரண்டாவது ஒருத்தியை மனைவியாக்கிக் கொண்டது. போதாக்குறைக்கு பாறையடித் தெருவில் ஒருத்தியை கொஞ்சக்காலம் வைத்துக் கொண்டதும். ஒவ்வொரு நீண்ட கூடலுக்குப் பின்னரும் ச்சீ..இவ்வளவுதானா என்று தோன்றும். நாம்தான் வேண்டாத பரவசங்களை ஏற்றிக்கொள்கிறோமா என்ற கேள்வி எழும். கண்ணிற்கு தென்படாத காற்றுதான். இல்லையென்றால் செத்துப்போய்விடுகிறோம்.

பறப்பதன் நுட்பம் வாய்க்காதா? பறந்து மேலே செல்ல வேண்டும். கிடை மட்டம் அலுத்து விட்டது. கிடை மட்டம் முடத்தனம். என்னை வரையறை செய்து ஒரு கட்டத்திற்குள் அடைத்துவிடுகிறது. சவால்கள் அற்ற பயணம். உயரம் கூடக் கூட அறியக் கிடைப்பவற்றின் பரிமாணங்கள் அதிகரிக்கின்றன. செங்குத்தாக பயணிக்க வேண்டும். மேலே உள்ளதோ அறியப்படாத வெளி. இறக்கைகள் பரிணாமத்தின் முகடுகள். எத்தனைச் சிறிய பறவை என்றாலும் அத்தனைச் சிறிய இறக்கைகள் இருக்கின்றன. நான் பறந்த காலம் நினைவில் வருகிறது.

பெண்ணுடல்களை விரட்டித் திரிந்திருக்கிறேன். ஒரு நுாறு பெண்ணுடல்கள்  வாழ்நாள் இலக்கு. எண்பத்தெட்டோடு ஓய்ந்து போனேன். செயற்கையாக எது செய்தாலும் நீடித்த மகிழ்ச்சியை அளிப்பதில்லை. மாத்திரைகள் ஒருவிதத்தில் அவமானகரமானவை. நம் உடலை வேறு எவரோ இயக்குவதைப் போல. அவ்விரவு நீண்டு கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பினாள் அவள். நானுந்தான். முடியாதவற்றின் மீதே மனம் தவம் கொள்கிறது. ஏங்கிக்கிடக்கிறது. உடைகள் கீழே விழ விழ என் ஆர்வம் அத்தனையும் வற்றிப்போனது. உடைகளே வெறி ஏற்றுகின்றன. கற்பனைச் சாத்தியங்களின் புதிர்ப்பாதைகளை உண்டாக்குகின்றன. நிர்வாணம் எல்லா உடல்களையும்  போலத்தானே அந்த உடலும் என்ற கைப்பினைத் தருகிறது. சிற்பங்களின் கன கச்சிதமான முலைகளை, வழிந்தோடும் இடைகளை, மனம் எதிர்பார்த்து ஏமாறுகிறது. பெண்மையின் மகத்துவம் பெண்ணுடலில் இல்லை. பேரழகிகள்  பேரானந்தம் தருவார்கள் என்கிற உத்தரவாதம் இல்லை. எத்தனை நுாறு நீலப்படங்கள். எத்தனை நுாறு உச்சக்கட்ட கதறல்கள். எத்தனை நுாறு பிளவுகள்.  எத்தனை நுாறு சுக்கிலப் பீச்சல்கள். எத்தனை நுாறு விரைத்து நீண்ட குறிகள். ஆணைத் தீண்டி பத்தாண்டுகள் ஆகிவிட்டன என்றாள். அவள் நடையிலேயே அது வெளிப்படும். என்னை மீட்டு என்று குறிப்புணர்த்தும். மிகையான துள்ளலாக தளும்பும். மெல்லிய சல்லாத்துணி போன்ற சேலை கட்டியிருந்தாள். அருகில் வந்து நின்றதுமே ஆளைக்கவரும் செண்டின் வாசனை. அக்குள் ஈரம் கூட மனத்தது. அவள் பயன்படுத்திய கழிவறையை வெப்பம் குறையும் முன்னர் பயன்படுத்தச்  சென்றேன். அங்கும் நறுமணம். ரோமங்களற்ற பளபளப்பு. மேடிட்ட மென்மை. அவள் தவிப்பு கணத்திற்கு கணம் பெரிதானது. சொக்கப்பானையைப் போல கொழுந்து விட்டு எரிந்தது. உதட்டு முத்தத்தில் மட்டுமே ஒரு மணி நேரம். அவள் உடல் கொண்ட பரவசத்தை அச்சத்தோடு பார்த்தேன். கால்கள் பின்னின. தாயிடம் முலையருந்தும் மகவினைப்போல. கூடுதலாக இரண்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்ள ஆசையும் இருந்தது. மாரடைப்பின் சாத்தியக்கூறு எச்சரித்தது. மூச்சை உள்ளடக்கி. சில கணங்கள் நிறுத்தி. வேகத்தைக் குறைத்து உடம்பெங்கும் முத்தி. கன்னக் கதுப்புகளை நாவால் தீண்டி. அக்குள்களை முகர்ந்து கிறங்கி. நேரமே நீண்டு செல். காலமே விரைவாக பாய்ந்தோடு. என்னுடலே என்னை பதின்பருவத்திற்கு கொண்டு போ. அக்கணத்தில் இருந்து தப்பிக்க விரும்பினேன். வேறு நினைவுகளில் தொலைக்க முயன்றேன். என்னை எப்போதும் ஏசிக்கொண்டே இருக்கும் மேலதிகாரிகளைப் பற்றி விசாரம் கொண்டேன். ஆனாலும் வெகு சீக்கிரமே முடிந்தேன். அவள் அன்றிரவு திக் பிரமை பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள். கூடிக் களித்த பெண் வேறு ஒருவள். தேவதைக்கணங்கள் நீங்கப் பெற்றவள். திருவிழா முடிந்த தேரோடும் வீதிகளைப் போன்றவள். கண்கள் சிவக்க குளித்து எழுந்து, தலை துவட்டிய நதியைப் போன்றவள். என்னை உயிர்ப்பிக்க நீவிக்கொண்டே அமர்ந்திருந்தாள். மீண்டும் நடக்கும் வாய்ப்பே இல்லை. ஒருவாரம் பத்துநாட்கள் ஆகும் என்பதை நான் எப்படிச் சொல்வேன். அதிகாலையில் கிளம்பிச் சென்றவள் சபித்திருப்பாளோ.  கழிவு உறுப்பாக மட்டுமே சோம்பிக் கிடந்தது.  என்னை வெறுமை தின்னத் தொடங்கியது. நடை பிணம். சாயும் பிணம். படுத்து எழும் பிணம். உண்ணும் பிணம். கழிவறை சென்று திரும்பும் பிணம். உரையாடும் பிணம். நடமாடும் பிணம். லௌகீகக் காரியங்களில் ஆழ்ந்து ஈடுபடும் பிணம். ஆனால் பிணம்.

இருள் ரகசியமாக படிய ஆரம்பித்தது. பகல் சரிந்து பேதலித்து சுருண்டது. மரம் மங்கல் கொண்டது. முதலில் உருவெளி தேய்ந்தது. தொலைதுார அசைவாக மரத்தின் அலைவு. இனி நிரந்தரமாக பறவை என்னைவிட்டுப் பிரிந்து செல்லக்கூடும். பறவை என்னுள் கிளர்த்தியவை அடங்க நான் மறுபடியும் குடிக்க வேண்டும். குடிப்பதே  சுய இன்பம். குடியே தியானம்,  மீட்பு, உயிர்த்தெழுதல்.