தொக்கம்

அப்படியொரு பரபரப்புடன் அந்த அரசு டவுண் பஸ் பேருந்து நிலையத்திற்குள் வந்து நிலையாவதற்குள், அங்கு நின்றிருந்த கூட்டம் அவ்வளவும் திமுதிமு வென்று ஏறியது. இடித்து பிடித்து சண்முகமும் பின்பக்கம் வழியாக ஏறினான். அவன் தான் போட்டிருந்த பேண்டின் வலதுபக்க பெல்ட் போடுற இடுப்பு ஓரப்பகுதியின் உள்பக்கத்தில் உள்ள சின்னப்பையில் வைத்திருந்த நகையை தடவிப் பார்த்துக் கொண்டான். நகை பத்திரமாகத்தான் இருந்தது. பேங் பாஸ் புக் பேண்ட் பாக்கெட்டில் இருந்ததையும் பார்த்துவிட்டு, எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்பதை உறுதிபடுத்தினான். ஆனால், முக்கியமான ஒன்று அவன் ஞாபகத்திலிருந்து மறைந்து கொண்டிருப்பதை அவன் கவனிக்கவில்லை.

பஸ்ஸிற்கு உள்ளேயும் வெளியேயும் இடத்தை பிடிப்பதற்கான கூப்பாட்டுச் சத்தத்தில் பேருந்து நிலையமே அலறியது. பஸ் ஜன்னல் வழியாக துண்டு, கைகுட்டை, துணிப்பை, நோட்டுப்புத்தகம், கைப்பைகள்…. இப்படி இருக்கைகளின் மேல் லாவகமாக விழுந்து கொண்டிருந்தது. அதைவிட சில மனிதர்கள் நேரடியாக பஸ்ஸிற்குள் சென்றே கையை வைத்து மறித்தும், ஏதாவது ஒன்றை இருக்கைகளில் விரித்தும்…. ஒரு மணி நேர பயணத்தில் அவரவர்களுக்கான இருக்கைகளை தக்க வைக்க போராடிக்கொண்டிருந்தார்கள். இப்படித்தான் இந்த அரசு டவுண்பஸ் பயணத்தில் இட ஒதுக்கீடுகள் நடந்து கொண்டிருந்தது.

நடத்துனரின் “உள்ள போங்க…… உள்ள போங்க.” என்ற சத்தம் யாருடைய காதிலும் விழுந்ததாக தெரியவில்லை. சண்முகம் பஸ்ஸிற்குள் உள்ளே சற்று நகர்ந்து சென்றான். மனித வியர்வைகளின் பிசுபிசுப்பும், வாடையும், வெக்கை ததும்பிய அந்த பஸ் முழுவதும் பரவியிருந்தது. பயணிகளின் பேச்சுச் சத்தத்திலும், இடம் பிடிக்கும் போட்டியிலும் யாருக்கும் எந்த உணர்வும் அற்று செயல்பட்டார்கள். பஸ்ஸில் உட்கார ஒரு இருக்கை கூட காலி இல்லை. உட்கார்ந்த கூட்டம் போக நின்ற கூட்டமே நிரம்பி வழிந்தது. பயங்கர நெருக்கடி மத்தியில்தான் அவன் டீசர்ட், ஜீன்ஸ் பேண்டுடன் நின்று கொண்டிருந்தான். பஸ்ஸின் முன்பக்கத்தில் இருந்த இளம்பெண்கள் அவ்வளவு நெருக்கடியிலும் அழகாகவே தெரிந்தார்கள்.

இந்த உற்சாகத்திலேயே சண்முகம் ஊர் போய் சேர்ந்து விடலாம் என்ற நினைப்பில் மெய் மறந்து நின்றிருந்தான். பின்பக்க நசநசவென்ற ஆண்களின் கூட்டத்துடன் அந்த அரசு டவுண் பஸ் அசைந்து அசைந்து கப்பல் போல் கிளம்பியது. பேருந்து நிலையத்திலிருந்து தெற்கு திசையில் திருநெல்வேலி ரோட்டில், பையப்பைய லட்சுமி மில் மேலக்காலனி, மணியாச்சி பஸ்ஸ்டாப்புகளை கடக்கும் போதுவரை, அதிலிருந்த பயணிகள் பஸ்ஸிற்குள் எப்படியெல்லாமோ அங்கும் இங்கும் முட்டிமோதி பின் ஒருமாதிரியாக சமநிலையாகி, நடைபாதையே நிரம்பி வழிந்த அந்த அரசு மோட்டர் வாகனம் டர்… டர்… டர்… என்ற சத்தத்துடன் எப்போதும் போல் ஊர்ந்து கொண்டிருந்தது.

நடத்துனர் டிக்கட் போட ஆரம்பித்திருந்தார். இருக்கின்ற கூட்டத்தைப் பார்த்தால்…. ஏதாவது ஒரு இடத்தில் நின்றுதான் டிக்கட்டை முடிக்க முடியும்…. என கண்டக்டருக்கு புலப்பம் வேறு ஆரம்பமாகி விட்டது. சில்லரை பற்றாக்குறையில், பயணிகளிடம் கொஞ்சம் எரிச்சல், கோபம், கிண்டல், நக்கல், சிரிப்பு ….இப்படி கலகலவென பேசிக்கொண்டே கண்டக்டர் டிக்கட்டை கொடுத்து நகர்ந்து வந்து கொண்டிருந்தார். சண்முகமும் டிக்கட் எடுக்கத் தயாரானான். நகைக் கடன் வாங்குவதற்காக வங்கிக்கு செல்வதால், அம்மா அவனுக்கு போதுமான பணம் கொடுத்திருந்தாள். ஒரு பத்து ரூபாயை மட்டும் பையிலிருந்து எடுத்து சட்டைப்பபையில் வைத்துக் கொண்டான். டிக்கட்டுக்கான பணம் ஏழு ரூபாய் இருக்குமா ? இப்படி யோசிக்கும் போதுதான் தொண்டைக்குழிப் பக்கத்தில், ஏதோ ஒரு முக்கியமான வார்த்தை தடங்கலாகி நிற்பதை அவனால் உணர முடிந்தது.

அந்த வார்த்தை வேறு ஒன்றுமில்லை. சண்முகம் செல்ல வேண்டிய ஊரின் பெயர்தான். ஒரு நிமிடம் கண்களை மூடி யோசித்துப்பார்த்தான். சடாரென்று அந்த வார்த்தை தப்பி எங்கோ மறைந்தது போல், ஞாபகத்திற்கு வர மறுத்தது. அதெப்படி….சரியாயிருக்கும்., தான் செல்ல வேண்டிய ஊர் பெயர் வாய்க்கு வரமால் திக்குதே….என்பதை சண்முகத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ச்சே… ச்சே… என்ற படியே பஸ்ஸினுள்ளிருந்த உள்பக்கப் பெயர்பலகையில், மேல் பக்க ஓரங்களில் ஏதாவது பெயர் தெரிகிறதா ? சுற்றி சுற்றிப் பார்த்தான். ஒன்றுமே அவன் கண்களுக்குத் தெரியவில்லை. அந்தப் பெயர்பலகையின் பின்புறக் கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டிருந்தது. பஸ்ஸினுள் சன்னல்களின் மேல்புறத்தில் ஏதாவது தெரிகிறதா என்று மறுபடியும் சுற்றி பார்த்தான். எந்த வார்த்தைகளும் அந்த ஊர் பெயரின் ஞாபகத்தை ஏற்படுத்தும் படியாக இல்லை.

சண்முகம் மனதிற்குள் மறதி நெருடலாய் படர ஆரம்பித்தது. ச்சே… நாம பிறந்து வளர்ந்த ஊரின் அருகிலுள்ள அந்த உரின் பெயர்… அதுவும் பலதடவை சென்று திரும்பிய அந்த ஊரின் பெயர்… எப்படி தப்பிப் போகும்?. நம்பவே முடியவில்லை. கொஞ்சம் யோசித்தால் அந்தப்பெயர் வந்து சேரும். கோவில்பட்டியிலிருந்து ஒவ்வொரு ஊர் பெயராய் சொல்லிப் பார்த்தால், அந்த ஊரின் பெயர் தானாகவே வந்து விடும். சண்முகம் மனதிற்குள்ளேயே ஒவ்வொரு ஊர்ப் பெயராய்… சொல்லிக் கொண்டே வந்தான். அவன் தேடும் அந்த ஊர் பெயரின் வார்த்தை அவனுக்கு அகப்படவில்லை. மறுபடியும் ஊர்களின் பெயர்களை வரிசைப்படி சொல்லிப் பார்த்தான்… இனாம் மணியாச்சி, ஆலம்பட்டி, நாலாட்டின்புத்தூர், இடைசெவல், எதிற்புரத்தில் சத்திரப்பட்டி, மெய்தலைவன்பட்டி, அதை அடுத்து… அடுத்து… சிவஞானபுரம், அகிலாண்டபுரம்.

அந்த ஊர் பெயரைத் தவிர மற்ற எல்லா ஊர் பெயரும் வாயில் வந்து விழுந்தது. ஆனால் அந்த பெயர் மட்டும்… சட்டென்று வர மறுக்கிறதே… அது என்னடா… அந்த ஊருக்குத்தானே போக வேண்டும்… அந்த பெயரு மட்டும் வந்து தொலைய மாட்டேன் என்கிறதே… சரி.சரி… கண்டக்டர் அங்கதானே நிக்காரு… அவர் இந்தப் பக்கம் வருவதற்குள் ஊர் பெயர் ஞாபகம் வந்திராதா… அப்படியே இல்லாட்டலும்… இவ்வளவு பேரு இருக்காங்க… யாராவது ஒருவராவது நிச்சயம் அந்த ஊருக்கு போகிறவர் இருப்பாங்க… என்ற நம்பிக்கையோடு சுற்றும் முற்றும் பார்த்ததில், சிறு நம்பிக்கை வந்தது.

அந்த கலர்கலரான பெண் பிள்ளைகள் டிக்கட் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவன் காதை துடைத்து வைத்துக் கொண்டு கேட்டான். அவன் போக வேண்டிய ஊர் பெயர் ஏதாவது சொல்கிறார்களா? லொட…லொடவென சத்தங்களுக்கு மத்தியில், உன்னிப்பாக கேட்டான்… எப்பவுமே அந்த ஊருக்குன்னு ஒரு கூட்டமே வந்து போகும்… ஆனால், இன்னைக்குன்னு பாத்தா… அந்த ஊரைத் தவிர்த்து மற்ற எல்லா பெயர்களிலும்… சத்திரப்பட்டி, இடைசெவல், நாலாட்டின்புத்தூர், மெய்த்தலைவன்பட்டடி, அகிலாண்டபுரம், சிவஞானபுரம்… வரை டிக்கட் எடுத்தார்கள். ஆனால், அந்தப் பேரு மட்டும்… காதில விழவே மாட்டக்கே… என்னடா இது… இப்படியா ஆகும். என்னன்னு கேக்கக் கூட ஒருத்தரும் கண்ணுக்கு தட்டுப்படல. என்னத்தச் சொல்ல… நண்பன்னு யாராவது ஒருத்தன் எப்பவும்… வருவான். இன்னைக்குப் பாத்து ஒருத்தனும் இல்லாம தனியாக வந்து மாட்டிக்கிட்டேன்… இனிமே எங்க கிளம்பினாலும் தேவையான விபரத்தை கையில எழுதிக்கிட்டாதான் சரியாக இருக்கும்… டக்குன்னு கையப் பாத்தமா… விபரத்த சொன்னமான்னு இருக்கும்.

அதெல்லாம் சரிதான்… இப்பம்… என்ன செய்ய… கண்டக்டரு வேற பக்கத்தில வந்திட்டாரு… சண்முகத்தின் கண்ணும் காதும் சுற்றிச்சுற்றி அலைமோதியது… ஒருவேளை அந்த ஊருக்கு அவனைத் தவிர்த்து வேறு யாருமே வரவில்லையா,? அல்லது சண்முகம் காதுக்குத்தான் அந்தப்யெர் கேட்க வில்லையா? ஒன்றுமே புரியாமல், குழப்பத்தில் முகமே வியர்த்து வேறு ஒன்றாய் உருமாறிக்கொண்டிருந்தது. அடுத்தடுத்து பஸ்ஸில் ஏறும் கூட்டம் வேறு தாங்க முடியாத இன்னும் புழுக்கத்தை உண்டு பண்ணியது… பஸ் முன்னை விட சற்று வேகமாக சென்றது.

இன்றைக்கு பஸ் பயணம் நன்றாக இருக்குமென்று முதலில் உற்சாகமாகதான் இருந்தான். ஆனால், நிலைமை இப்படியாகிவிட்டதே… என்னசெய்ய… எந்த ஊருக்கு போக வேண்டுமென்ற பெயரே மறந்து போச்சுன்னா… யார்ட்ட போய் என்னத்த சொல்ல. தேர்வு எழுதும் போது எல்லாம் தெரிந்து, திடீரென்று எந்த வினாவிற்கும் பதில் தெரியாமல் போய் திருதிருவென முழித்து சுற்றி சுற்றி பார்ப்பதை போலிருந்தது. எதுவும் அவனுக்கு ஞாபகம் வந்த பாடில்லை. பேசாமல் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி, அந்த ஊர்பெயரை விசாரித்து விட்டு போவோமென்று தோன்றியது. ஆனால், பஸ்ஸை விட்டு இறங்கி ஊர் பெயரை விசாரித்த பிறகு, அடுத்த பஸ் உடனே கிடைக்காமல், பேங்க் நேரம் முடிஞ்சுதுன்னா அவ்வளவுதான்…

வீட்டில் ஏற்கனவே சண்முகத்திற்கு ரொம்ப நல்ல பேரு… இந்த நிலைமை தெரிஞ்சதுன்னா… அவ்வளவுதான்… யோசிக்கவே முடியவில்லை. “ நீதான் குண்டி மறந்த பயலே… அதான் ஒன்னுக்கு ரெண்டு தடவை சொல்லி விட்டாலும்… பொண்ண கூட்டி வான்னா… மாமியால கூட்டி வருவையே…” ஒக்கல்ல பிள்ளைய வச்சுகிட்டு ஊரெல்லாம் தேடுற பயதான நீ! கல்யாணத்துக்கு வாங்கச் சொன்னா… .காடையத்துக்குல்லா வாங்கிட்டு வருவ…! அம்மாவின் வார்த்தைகள் நிற்காமல் ஓடியது.

“சொந்தக்காரன் கல்யாண வீட்டுக்கு போடான்னா… சோறு போடுறாங்கன்னு எவனோ ஒருத்தன் கல்யாணத்துக்கு மாத்தி போயி மொய்யும் செஞ்சுட்டு வந்த பயதானே…நீ!” உனக்குன்னு கொடுத்த இந்த ஒரு வேலையக் கூட செய்ய துப்பில்ல… நீ யெல்லாம் இருந்து எதுக்குலே? அண்ணனின் தாங்க முடியாத குற்ற வார்த்தைகள் தொடர்ந்தது.

நீதான்… படிக்கற காலத்திலேயே… ஓம் புத்தகத்தை தூக்கிட்டு போறேன்னுட்டு… ஏம் புத்தகத்தை தூக்கிட்டு போனவன்தானே… இப்ப எப்படி இருப்ப…

அக்காவின் நாகரீக நக்கல் பின் பாடியது.

அப்பா மட்டும்தான் அம்மாவிடம் சரி… சரி… விடு… அவன் என்ன வேணுக்குன்னா செய்றான்… அவனுக்கு அப்படியொரு மறதி… போகப்போக எல்லாம் சரியாயிடும்… என்பார். பின் என்னை அழைத்து… இப்படி நீ மறந்து கொண்டிருந்தால், வாழ்கையே கேலிக்கூத்தாகி விடும்… சண்முகம்… கொஞ்சம் கவனமா… கருத்தா… இருலே… என்பார்.

என்னடா… இது… இப்படியா எழவு…போக வேண்டிய ஊர் பெயரு… மறந்து போகும். குழப்பத்தில் தலையை ஆட்டிஆட்டி தானாகவே பேசிப்பேசி, பின் மண்டையை பிடித்து நின்றான். பக்கத்தில் உள்ளவர் ரொம்ப நேரமாக அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை, அப்போதுதான் கவனித்தான். அவருக்கு ஐம்பது வயதுக்கு மேலிருக்கும். பெரிய கிடா மீசைக்காரர். ஆளும் உயரமும் பாக்கவே பயமாத்தான் இருந்தார். அவரிடம் லேசாக விசாரிக்கலாம் தான்… ஆனால், அவர் எப்படின்னு தெரியலையே… அவரிடம் பேசப்போறேன்னு ஏதாவது ஒன்னுக்கு ரெண்டு பேசி… முதல்ல அவர் இடுப்பில் சூரிக்கத்தி ஏதாவது வச்சிருக்காரான்னு பாக்கனும்…

என்னத்த சொல்ல… இப்பல்லாம் என்ன வேணுமுன்னாலும் நடக்கும். அப்படித்தான் போன வாரம் விளாத்திகுளத்தில ஒரு டீக்கடையில வச்சி ஒருத்தன் பீடிக்கு கங்கு கேட்டிருக்கான்… அவ்வளவுதான்… அந்த மனுசன் என்ன கோபத்தில… எந்த மாதிரி இருந்தானோ தெரியல? அவரு ஒன்னுமே பேசாம முறைச்சிப் பார்த்துக்கிட்டேதான் முதல்ல இருந்திருக்காரு… அந்த மனுசன் திரும்ப கங்கு கேட்டதான் தாமசம்…பட்டுன்னு பையில இருந்த அறுவாள எடுத்து… சின்னத்தாயோளி… ஏங்கிட்டயா கங்கு கேக்க…ன்னு கழுத்துல ஒரு போடு போட்டுட்டான்… அப்புறம் தலை தொங்கிட்டு… பக்கத்தில இருந்த மூர்த்தி பாத்துட்டு பதறிப்போயி… வாயே பேச வராம… ஒரு வாரமா வயித்தால போச்சுன்னான்

என்னத்த சொல்ல…மனுசங்க என்ன செய்றாங்கன்னு? அவங்களுக்கே தெரியாம… இப்படியா செய்வாங்க…

இப்ப உள்ள நிலைமைக்கு இவரிடம் பைய பிரச்சனையை பேசினால்…, அவரும் தப்பாக நினைக்காமல் இருந்தால்தான் சரி…, ஆனால், யாரு மேலயாவது உள்ள கோபத்தில… கத்திய எடுத்து .டப்புன்னு சொருகிட்டா… என்ன செய்ய…? உடனே நாளைக்கு பேப்பர்ல போட்டுருவான். ஓடும் பஸ்ஸில் ஒரு மீசைக்கார மனிதர் சண்முகத்தை சதக்…சதக்… கென்று குத்தினார். விசாரணை செய்ததில் சண்முகம் அகிலாண்டபுரம் அரசு டவுண் பஸ்ஸில் செல்லும்போது அவர் போகவேண்டிய ஊர் பெயரை மறந்து விட்ட நிலையில், அதைப் பற்றிய விபரத்தை ஒரு மீசைக்காரரிடம் கேட்க… தன்னை நக்கல் பண்ணத்தான் இப்படி கேட்கிறானோ…என்று குழம்பி கோபத்தில் தன்னிடமிருந்த சூரிக்கத்தியால் சதக்…சதக்… கென்று குத்தினார்…

என்ற செய்தி நாளிதழில் எந்த ஓரத்தில் போட்டிருந்தாலும் நம்ம மக்கள் தேடிக் கண்டுபிடித்து விட்டு, அதத்தான் பிரஸ்தாபித்து பேசுவார்கள்… அப்புறம் ஊர் முழுவதும் “

பாவம்… சண்முகம் ஒரு ஊர் பெயரு தெரியாம இப்படியா… பஸ்ஸில போயி செத்துப் போவான்… அவன் உண்மையிலேயே பெரிய தியாகிதான்னு கிண்டல் பண்ணி பேசுவாங்க…

ச்சே…நாம என்ன இது இப்படியெல்லாம்… தேவையில்லாத கற்பனையெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டோம்…

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. சும்மா அவரிடம் பைய கேட்கலாம். அவரு… மீசைதான் அப்படி வச்சிருக்காரு. அவரைப் பார்த்தால் அப்படி… செய்கிற ஆளு மாதிரியெல்லாம் தெரியல… சரி…சரி… பையப்பேசுவோம். அவரும் பேச ஆரம்பித்திட்டா… போதாது… அப்படியே அவரிடம் அந்த ஊர்பெயரையும் விசாரித்து விடலாம் என்று கதையோட்டினான்.

ஆனால், எப்படி ஆரம்பிப்பது என்றுதான் தெரியல… முதலில் அவர் அருகில் சென்றான். சண்முகம் கை, வாய், தலையெல்லாம்… அசைந்தது. எல்லா விபரத்தையும் வாய் திறந்து பேசி விட்டதாகத்தான்… நினைத்தான். ஆனால், சண்முகத்தின் வாய் மட்டும்தான் அசைந்திருக்கிறது, வாயிலிந்து எந்த சத்தமும் வரவேயில்லை… என்பதை அதன்பின்தான் தெரிந்து கொண்டான். சரி… பேசிற வேண்டியதுதான். சண்முகம் மனதிற்குள்ளேயே எப்படி பேசுவதென்று வார்த்தைகளை சேகரித்து ஒத்திகை பார்த்துக் கொண்டான். அவரிடம் போய்… நான் போற ஊர்பெயரை மறந்து விட்டேன்… என்று சொன்னால் என்ன நினைப்பார். அவர் அவனையேதான் பார்த்துக் கொண்டிருந்தார். எவ்வளவு நேரம் பார்த்தாரோ… தெரியவில்லை… சரி தைரியமாக பேசிவிட வேண்டியதுதான் என முடிவோடு பேச வாயெடுத்தான்… அதற்குள் சண்முகம் தான் என்ன சொல்ல வேண்டுமோ… என்ன பேசுகிறோமோ என்பதே தெரியாமல்

“சார்… நீங்க எந்த ஊருக்கு போறேங்க…” என்று ஒளறிக் கொட்டி பேசினான்… அவர் சண்முகத்தை ஒருமுறை முறைத்துப் பார்த்து விட்டு, கணத்த குரலில் “இடைசெவல்” என்றார். அவர் பார்வை இதுக்கு மேல என்னிடம் ஏதாவது கேட்டேன்னா இருக்கு… என்பது போலிருந்தது. சண்முகத்திற்கு பயத்தில் உச்சந்தலை வரை ஜிவ்வென்று ஏறியது. இதற்கு மேல் யாரிடமும் ஒன்றும் கேட்க வேண்டாமென்று முடிவெடுத்து, சண்முகம் அந்தப்பக்கமே திரும்ப வில்லை.

ஆனால், எப்படியானாலும் அந்த ஊருக்கு டிக்கட் எடுத்துதானே ஆக வேண்டும். சண்முகத்திற்கு பதட்டம்… எரிச்சல்… கோபம்… அதிகமாகியது. “தாயோளி… அந்த ஊரு பேரு இப்பவாது ஞாபகம் வருதா…பாரு… வராதே… “ வரவே வராது…!

அத்தனை வேறு மத்தியில, அதுவும் அந்த பொம்பிளப்பிள்ளைகள் மத்தியில கேவலப்படப்போறேன்னு மட்டும் தெரியுது… அவனுக்கு புழுக்கம் அதிகமாகி அதிகமாகி வியர்த்து ஊற்ற ஆரம்பித்தது.

கண்டக்டரின் டிக்கட்…டிக்கட்… என்ற சத்தம் மிக அருகில் கேட்டது. ஒரு நான்கு பேரைக் கடந்தால் சண்முகம் தான் டிக்கட் எடுத்தாக வேண்டும். என்ன செய்ய… சரி… பாப்போம். அந்த நான்கு பேரும் டிக்கட் எடுப்பதை உன்னிப்பாக கவனித்தான். யாராவது ஒரு ஆள் அந்த ஊர் பெயரை சொல்லி விட மாட்டார்களா? என சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். சத்திரப்பட்டி ரெண்டு கொடுங்க… என்று சொல்லி ஒருவர் ரெண்டு டிக்கட் வாங்கினார். அவர் சத்தம் பலமாகவே காதில் விழுந்தது. சண்முத்திற்கு வீடு, அம்மா, நகைக்கடன் எல்லாம் மறந்து போய் ரொம்ப நேரமாகியது. சார்… உங்களுக்கு எங்க டிக்கட்… போடணும்… சொல்லுங்க… என்றார். அந்த ரெண்டு பேருக்கு அப்புறம் அவன்தான்…

பேசாம இறங்கி ஓடிப்போயிடலாமா… கண்டக்டர் பக்கத்தில் வந்து விட்டார். கொஞ்சம் பின்னாடி தள்ளிப்போனால், இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கிடைக்கும். ஆனால், இந்த நேரத்தில எப்படி போவது ?. கண்டக்டர் வேறு பார்த்து விட்டார். பின்னால் நகரலாமென்றால், இந்த ஆளு வேற என்னைத்தான் முறைத்து பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரைத்தாண்ட வேண்டுமென்றால், அந்த கிடாமீசைக்காரர்… போகிற பாதையை முழுவதையுமே அடைத்துக் கொண்டு நிற்கிறார். முன்னால் போகலாமென்றால், அவ்வளவும் பெண்கள். கண்டக்டர் வேறு பக்கத்தில் வந்து நிற்கிறார். நட்டநடுல மாட்டின நாயி மாதிரி…வசமா மாட்டிக் கிட்டோம்… மீதமிருந்த அந்த இரண்டு பேரில் ஒருவர் இடைசெவல் ஒரு டிக்கட் என்றார். மற்றவர் சிவஞானபுரம் ஒரு டிக்கட் வாங்கினார். கண்டக்டர் நகர்ந்து இவனருகில் வந்து விட்டார்.

அவ்வளவு தான். சோளி முடிஞ்சுறிச்சி. இன்னைக்கு கேவலப்பட்டது…பட்டதுதான்… தாயோளி… இன்னும் பாரு அந்த ஊரு பேரு வந்து தொலையுதான்னு… இந்த பஸ்ஸில ஒருத்தர் கூட அந்த ஊருக்கு போறவங்க இல்லாம போயிட்டாங்க… கையெல்லாம் கூட கொஞ்சம் நடுங்க ஆரம்பித்தது. தம்பி… டிக்கட் டிக்கட்… சண்முகத்திற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. திருதிருன்னு விழித்தான். கையிலிருந்த பத்து ரூபாயை கண்டக்டரிடம் கொடுத்தான். அய்யா…தம்பி எங்க போணும்… இதை வேற தனியா… கேக்கணுமா… சொல்லுங்க… என்றார்.

எங்க சொல்ல…? தெரிஞ்சாத்தான்… சொல்லிருவேன்லா… மனதுக்குள் சண்முகம் நினைத்தான். எங்கய்யா…போணும் சொல்லித் தொலைய்யா… இன்னும்…,,,டிக்கட் போடணும்யா… என்றார் கண்டக்டர். சண்முகம் எதுவும் சொல்லாம… ஒன்ற ஆட்டுல ரெண்டு ஆட்ட விட்ட மாதிரி முழித்தான். அவன் முழிப்பதைப் பார்த்த கண்டக்டர்… பரிதாமாக இடைசெவலா… என்றார். சண்முகம் இல்லை… என்று தலையாட்டினான். சத்திரப்பட்டியா…? இல்லை அதுக்கு இந்தப்பக்கம் என்றான். இந்தப்பக்கம்னா… தம்பி நாலாட்டின்புத்தூர்… அப்பமே போயிட்டு என்றார் ஒரு பெரியவர்.

தம்பி நான் டிக்கட் போடவா… வேண்டாமா… கண்டக்டர் எரிச்சலாக விழுந்தார். எங்கதான் போணும் சொல்லித் தொலைப்பா… என் உயிரை வாங்க காலங்காத்தால வந்திட்ட… சண்முகம் அழுது விடுபவன் போல் பயந்து போயிருந்தான். யாராவது உதவ மாட்டாங்களா…ன்னு சண்முகம் தட்டுத் தடுமாடினான். சிவஞானபுரம்மா… .தம்பி என்றார் ஒருவர். இல்லை… அதுக்கு முன்னாடி…என்றான். அவன் பேசும் சத்தம் அவனுக்கே கேட்கவில்லை. ஒரு சிறு நிசப்தம். யாரும் எதுவும் சொல்லவில்லை. கண்டக்டருக்கு எரிச்சலும் ,கோபமும், ஆத்திரத்தின் உச்சத்தில், “ நீ பஸ் மாறிக்கீறி ஏறித் தொலைச்சிட்டையா… சட்டுன்னு சொல்றயா… இல்ல… இறங்கிறயா…” என்றார். என்னடா… இப்படியா… பதில் சொல்ல முடியாம… ஊர் பேரு தெரியாத அகதி மாதிரி ஆயிட்டோமே…

தொலைந்த வார்த்தைகளை மீட்கும் தவிப்பில் வரண்டு போன தொண்டைக்குழி ஒருமுறை கீழிருந்து மேல் நோக்கி சென்றது. சண்முகம் எதுவும் இயலாமல் முழித்தான்… அவன் கண்களுக்குள் தேங்கி நின்ற வார்த்தைகள் வடிந்தோடியது…

கடவுளே… யாராவது அந்த ஊர் பேரு சொல்லக்கூடாதா… .கடவுளே…! கடவுளே…! அம்மணக்குரலில் அழைத்தான்.

திடீரென்று ஒரு குரல்” …கண்டக்டரய்யா… வில்லிசேரிக்கு ஒரு டிக்கட்…!!!.”

பின்புற படிக்கட்டிலிருந்து கூப்பாடு போட்டார்…

அந்தக் கூப்பாட்டொலியை கேட்டவுடன்…அவன் அடி மனதில் பதுங்கியிருந்த அந்த வார்த்தை பிரவாகமெடுத்து பேரொலியாய்… ஆமா…மா…மா… வில்லிசேரிதான்… அந்த ஊரு வில்லிசேரிதான்… கத்தினான் சண்முகம்…

சண்முகத்தின் கண்கள் சந்தோசத்தில் துடித்தது. கண்ணீர் தேங்கி நின்றது. அண்ணாச்சி… ரொம்ப… ரொம்ப… தேங்க்ஸ்…அண்ணாச்சி… தன் இரு கைகளையும் எடுத்து கும்பிட்டான். அந்த படிக்கட்டில் நின்ற அவர் என்னவென்று தெரியாமல் விழித்தாலும்…கையை வேகமாக மேலே ஆட்டி சந்தோசமாக சிரித்துக் கொண்டார்…

சண்முகம் மறு உயிர் பெற்றது போல…

ஆமா… ஆமா… வில்லிசேரி…வில்லிசேரி… டிக்கட் கொடுங்க… கத்தினான்… கூப்பாடு போட்டான். பஸ்ஸில் எல்லாருமே சண்முகத்தை திரும்பி பார்த்தார்கள்…

பக்கத்தில் இருந்த மீசைக்காரர் மீசை மயிர் வரிய சிரித்துக்கொண்டே… இதுக்குத்தான் இந்தப் பாடா… ப்பா என்றார்.

கண்டக்டர் அவனை ஒருமாதிரியாக பார்த்தார். என்னதான் நடக்குன்னு அவருக்கு புரியல… தலையில… தலையில அடிச்சிகிட்டு… இந்தா வில்லிசேரி டிக்கட்டை பிடி… என்று டிக்கட்டை கொடுத்து விட்டு நகன்று செல்ல ஆரம்பித்தார்.

பஸ்ஸிற்குள் காற்று வர ஆரம்பித்தது. சண்முகத்தின் முகமே மாறி பிராசமானது. உற்சாகத்துடன் மீசைக்காரரின் கைகளை அவனே பிடித்து இழுத்து கைகளை குலுக்கி… சத்தமாக சிரித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *