கறிக்கடை மேசையில் ஆட்டின் தலையும் ஒரு அலுமினிய வட்டக் கோப்பையில் இரத்தமும் வைக்கப்பட்டிருந்தது.   நீர் சொட்டியபடி நீளமாக வந்த குடலைச் சுருட்டியபடி குனிந்து வாளியில் இருந்த நீரில் அலசியெடுத்தான் கறிக்கடை சேகர். அதை நீள்வட்டமாக வல இடக்கையால் சுற்றி பாசிமாலை விற்கும் நரிக்குறவன்போல தூக்கிப்பிடித்துப் பார்த்துவிட்டு, கடைக்குள்ளிருந்த வெட்டுக் கட்டைமேல் போட்டான். கடைக்குமுன் சமூக இடைவெளி பேண மூன்றடி இடைவெளியில் கோலத்தால் வட்டமிடப்பட்டிருந்தது. கடைக்கு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கியிருந்தார்கள்.

இரத்தம் சொட்டச்சொட்டத் தன்னையே தோலை உரித்துத் தொங்கவிடப்பட்டது போல உணர்ந்தான். பெண்டுலம்போல எவ்வித பாலுணர்ச்சியுமற்று தன் பாகங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொள் என்று அனுமதிப்பது போன்றது என்ன மாதிரி நிலை. தலையில்லாத ஆட்டிற்கு ஏது இச்சையின் இம்சைகள். எதிரில் இருந்த கடப்பாக்கல் இருக்கையில் அமர்ந்திருந்த அன்பழகனுக்கு யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத  மணவுறவில் ஏற்பட்ட மனக்குழப்பங்களும் தடுமாற்றங்கள் ஒருபுறம் இருந்தாலும் அதைக் காட்டிலும் இப்போது மனைவியுடன் இன்பம் துய்க்கமுடியாத பிரிவும் அவனுக்குத் தாளமுடியாததாய் இருந்தது.

“உன்னச் சேந்த பயலுக எல்லாம் பிள்ளையப் பெத்துவளத்து சம்பந்தம் பண்ணப் போறானுவ” என்று அவனது அம்மா செல்போனில் அவனைத் திட்டாத நாளில்லை.  எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தட்டிக்கழித்தான். குடும்பத்தைக் கட்டியாள்வது பெரும் சுமையாகக் கருதினான். இப்படியாக பல சம்பந்தம் கைவிட்டுப் போனது. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன், பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் பெண்தேடும் படலத்திற்கு அலைய விடுவதில் நியாயமில்லை என்று சம்மதம் தெரிவித்தான் அன்பழகன்.

ஆழ்மனத்தில் அன்பழகனை வதைத்துக் கொண்டிருந்த அந்த ஒன்றிலிருந்துதான் இன்னும் முழுமையாக விடுபடாமல் பல வேடங்கள் பூண்டு நடித்துக் கொண்டிருக்கிறது. மாலை மாற்றிக்கொண்ட பெண்ணுக்கு ஒரு கால் கொஞ்சம் ஒச்சம். சாதாரணமாக போட்டாவில் பார்த்தால் தெரியாது. அவன் அதை கவனித்தும் கவனியாதது போல் முடிந்துவிட்டது. அவளின் சமனிலையற்ற சற்று மெதுவாக நடக்கும் நடையின்  வேகத்திற்கு அவனும் தன் நடையை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. வெளியில் எங்காவது அழைத்துச் செல்லும் போது அதிகமாக மனம் புழுங்கும். எப்போதாவதுதான். நண்பர்களின் முகத்தில் சிறு பரிதாபம் தோன்றினாலும் வெட்கிக் குறுகிவிடுவான்.

சமயங்களில் காரணமேயில்லாமல் இருவருக்கும் தொடக்கத்தில் சண்டை மூளும். அதை அவன் மனைவி சரியாக எதற்காக இந்த முரணென்று புரிந்து கொள்வாள். அதை சமாளிக்கும் விதத்தில் “மன்னிச்சுக்கோ. ஏன்ட மட்டுக்கு கண்ட்ரோல் பண்ணித்தான் பாக்குறேன். உன்னோட ஒரு கால் இப்படி இருக்குதுங்கறத என்னால் ஜீரணிக்க முடியல.. தயவுசெஞ்சு பொறுத்துக்கோ கொஞ்ச நாள்ல நான் சகஜமா எடுத்துக்குவேன்” என்று சொன்னதுதான்…

“பொண்ணு பாக்கும்போது உங்களுக்குத் தெரிஞ்சுதான சம்மதிச்சீக. அப்பவே சொல்லிருந்தா இப்படி நீங்க சங்கடப்பட்டிருப்பியளா. அதுக்குத்தான் என் அம்மாகிட்ட கல்யாணமே வேண்டாம்னு அடிச்சுக்கிட்டே… எல்லாம் ஏன் தலையெழுத்து” என்று மூலைதேடி அழத் தொடங்கிவிட்டாள்.

அவனுக்கு அவளை சமாதனப்படுத்துவதற்குள் தன் உயிரே போய்த் திரும்பியது. முடிவாக அவள் குத்துவிளக்கு முன்னால் அவனை நிறுத்தி “ இனிமே என் ஊனத்தப்பத்திப் பேசமாட்டன்னு சாமிக்கு முன்னால எந்தலேல அடிச்சுச் சத்தியம் பண்ணுங்க… சத்தியம் பண்ணுங்க” என்றாள். சாமக்கொடை சாமியாடியின் முன்னால்  நின்று குறிகேட்பவன் போல பயபக்தியில் நின்றிருந்தான்.

அவனும் “இனிமே ஒரு வார்த்தகூட அதப்பத்தி பேச்சே எடுக்கமாட்டேன் செல்லமே” என்று கொஞ்சினான்.

அதனாலேயே இருவருக்குமான மணவுறவில் எந்தவிதத்திலும் விரிசல் வரக்கூடாது. உடனடியாக குழந்தையைப் பெற்றுக்கொண்டால் இந்த மன அவசத்திலிருந்து வெளியேறிவிடலாம் என்று இருவரும் ஒருவருக்கொருவர் மனதுக்குள் தீர்மானம் எடுத்துக்கொண்டதன் விளைவு. திருமணம் முடிந்து நான்கு மாதத்தில் கருவுற்றாள். தூத்துக்குடியில் இருக்கும் அவளது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு இவன் அம்மா வீட்டில் இருக்கிறான். இப்போது எட்டுமாதக் கரு வயிற்றில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த பெரும் கவலை குழந்தை கூன் குருடு செவிடு  நீங்கிப் பிறக்க வேண்டுமென்று.

 மணவாழ்க்கைக்குப் பிறகு வாழ்க்கை குறித்த குழப்பங்களும் கண்ணோட்டங்களும் முற்றிலும் மாறிப்போய் விடுகிறது.  வீட்டுக்குப் போகும் திசையில் காலை எடுத்துவைத்தான். எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் காலையிலேயே தொலைக்காட்சி முன்னமர்ந்து சேனல் மாற்றி மெகா தொடர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் அம்மா. குரூரமான செய்திகளுக்கும், பொழுதன்னைக்கும் ஒரே மாதிரி அழுகாச்சி வசனங்களுக்கும் அடிமையாகிவிட்டாளே… வீடு வீடாவா இருக்கு என்று தனக்குள் புலம்பிக் கொண்டான்.

 அடிக்கடி தான் சற்று கூடுதலாக ஆவேசப்படுவதை  எப்படித் தணிப்பது என்று சிந்தித்துக்கொண்டே மேற்குப்பக்கம் திரும்பி பிரதான சாலையை நோக்கி நடந்தான். இருசக்கர வாகனம் ஒன்று கடந்து ஐம்பதுஅடி தூரம்போய் திரும்ப அன்பழகனை நோக்கி வந்தது. பள்ளித் தோழன் மகேந்திரன். அவனது வலது நடுக்கண்ணில் வெள்ளையாக ஒருதுளி. ‘பூவிழுந்த கண்’ என்றுதான் எல்லோரும் சொல்லிக் கொள்வார்கள்.

இருவரும் குசலம் விசாரித்துக் கொண்டார்கள்.

“நள்ளி பக்கத்துல ஒரு புராஜக்ட். சோலார் பேனல் போட்டுருக்காங்கடா. வேலைக்கு ஆள் புடிச்சு கொடுக்கற வேல.. வாயேன் போய்ட்டு வந்திரலாம்.”

“எவ்வளோ  நேரமாகும் மகேந்திரா”

“போயி ஆள வேலைக்கு அமத்திட்டு வந்திரலான்டா… ரண்டுமணி நேரத்தில” என்று சட்டைப் பையிலிருந்த பாக்கெட்டிலிருந்து புகையிலையை எடுத்து இடது கீழ்வாயில் ஒதுக்கி கையைத் தட்டித் துடைத்துக் கொண்டான்.

காலை வெயில் மந்தமாகவே இருந்தது. காற்றுக்காலம். ஒரு வீட்டின் முன்பிருந்த  நடுத்தர வயதிருக்கும் வேப்பமரத்தில் காய்கள் கொத்துக் கொத்தாய் தொங்கட்டான் கம்மலைப்போல அசைந்து கொண்டிருந்தது. பின்சீட்டில் உட்கார்ந்தவன் ‘டாக்டரிடம் செக் பண்ணியா.. என்ன சொல்றாங்க.. குழந்தை நல்லபடியா வளருதுல்லா’ இப்படிக் கேட்பது சங்கடமாக இருந்தாலும் திரும்பத்திரும்ப தன் மனைவியிடம் கேட்கவே அவன் மனம் உந்தியது.

மகேந்திரன் மேம்பாலத்தை ஒட்டிய பிரதான சாலைக்கு இடப்பக்கமாகத் திரும்பி மீண்டும் வந்த திசைக்கே வலப்பக்கமாக திரும்பி மேம்பாலத்தின் மேல் வண்டியைச் செலுத்தினான். கீழே ரயில்வே தண்டாவாளம் ஒட்டி அவனது ஊருக்குச் செல்லும் சாலை. மேம்பாலத்திலிருந்து இடபக்கமாக திரும்பி மேற்குப் பக்கமாக அந்தச் சாலையில் ஓட்டினான். சாலையை ஒட்டி கண்மாய். முழுக்க ஆகாயத் தாமாரைகளால் தண்ணீரைக் காணமுடியாதபடிக்கு பச்சைபசேலென்று நிறைந்திருந்தது. கண்மாயின் அக்கரையில் பத்துஇருபது வரிசைப்பனைகள். இரண்டு மயில்கள் அகவல் சத்தம் மாறிமாறிக் கேட்டுக் கொண்டிருந்தது.

ஒரு கண் மகேந்திரனுக்கு பிறவிக் குறைபாடு. பூ விழு ந்த கண்ணிலிருந்து ஓரப்பார்வையை மட்டுமே பார்க்க முடியும்.  நாற்பது விழுக்காடு பார்வைத்திறன் என்பது மருத்துவர்களின் சான்று.   பேசிக்கொண்டிருக்கும் போது இவன் இமைக்கவே மாட்டானா என்று தோன்றும். ஒருபோதும் அந்தக் குறை யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவில் தன்னை இயல்பாகக் காட்டிக் கொள்வான். பகலில் வெளிச்சத்தை அதிகம் பார்க்க முடியாது. கண் கூசும். என்றாலும் இரவில் மற்றவர்களைக் காட்டிலும் அதிக பார்வைத்திறன் கொண்டிருப்பதாக தன்னிடம் ஒருமுறை சொன்னதை அன்பழகன் அசைபோட்டான்.

அவனுக்கு எதிரில் தென்பட்ட மனிதர்கள் எல்லாம் அவனுக்கு வணக்கம் தெரிவித்தார்கள். மகேந்திரன் அப்படித்தான். எல்லோருக்கும் நல்லபிள்ளை. கூப்பிட்டக் குரலுக்கு ஓடோடி உதவி செய்பவன். கடந்த தேர்தலில் மூன்றாம் கூட்டணிக் கட்சியில் அவன் தொண்டனாகவும் இருக்கிறான். இன்ன தொழில்தான் என்றில்லை. எல்லாமே அத்தக்கொத்து வேலை.  மூட்டை தூக்குவான், தீப்பெட்டி அட்டைகளில் மருந்து அடிக்கும் ஸ்கோரிங் வேலை, டிரைவர், ரியல் எஸ்டேட் இப்படியாக ஒரு வேலையிலும் அவன் நிரந்தரமாக இருந்ததில்லை. பத்து வருடங்களுக்கு முன்னால் விவசாயம். அடிக்கடி கத்தரிக்காய் வெள்ளாமை பற்றி பேசுவான். சணல்சாக்கில் மூட்டைகட்டி அவனே கோவில்பட்டி சந்தைக்குக் கொண்டுபோய் மொத்தக் கடையில் விற்றுவருவான். அவனது வீட்டிற்குக் கொண்டுசெல்லும் கத்தரிக்காயில் ஒரு கூறை  நண்பன் அன்பழகன் வீட்டிற்குச்சென்று அவன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு கொடுத்த காசை வாங்கியிருக்கிறான்.

விவசாயத்தில் போதிய வருமானம் ஈட்டமுடியாமல் அவன் வீட்டில் இப்போது நிலத்தை விற்றுவிட்டார்கள். இப்போது அவன் குடும்பத்தில் நூறுநாள் வேலைக்குப் போவதும் ஆடுகள் மேய்ப்பதுமாக வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிறார்கள்

காண்மாயின் முடிவில் சாலையைப் பிரிக்கும் ஓடைப்பாலத்தைத் தாண்டி வண்டி சென்றது. அந்தக் காலத்தில் இந்தப் பாலத்தை ஒட்டி கரையிலிருந்து எத்தனை பிள்ளைகள் தண்ணிருக்குள் குதித்து விளையாடுவார்கள் . இப்போது முன்னைவிடவும் அதிகமாகக் கழிவுநீர் கலந்து கருப்பாய் மாறிவிட்டது. ஆகாயத்தாமரைகளுக்கு இடையில் கால்வாசி நீர்ப்பரப்புதான் கண்ணுக்குத் தெரிந்தது.

பாலத்திலிருந்து இறங்கினால் இருபக்கமும் விவசாயம் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முன்னைப்போல வாழை, நெல் அல்ல. அகத்திகள், காய்கறிகள், கீரைகள். மயில்கள் முன்னை விட ஊருக்குள் அதிகமாக படையெடுத்து பயிர்களை நாசம் செய்வதாக வேறு செய்திகள்.

ஊரின் மையத்தில் முனியசாமி கோயில். மகேந்திரன் வண்டியை நிறுத்தினான். கூரையில்லாத பூடத்திற்கு நிழல் கொடுத்துக் கொண்டிரு ந்த கருவேல மரத்தடியில் நின்றுகொண்டிருந்தவன் பழகிய முகம்தான். இருவருக்கும் அருகில் வந்தான்  மூவருமே செட்டியார் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது பார்த்ததுபோல் தோற்றம் மாறாமல். “மணிகண்டனுக்கு சாத்தூர்ல பிடபிள்யுடி கான்ட்ரெக்ட்ல வேல. பெர்மண்ட் ஆகப் போகுதுடா”

அன்பழகனைப் பற்றி நலம் விசாரித்துவிட்டு,  கையில் ஹெல்மெட்டுடன் அவசரமாகக் கிளம்பினான். “என் பையன்..” என்று கையை நீட்டி காட்டினான். அவன் பையன்தான். வண்டியைக் கிளப்பத் தயாராக இருந்தான். வயது பதினெட்டு பத்தொன்பது இருக்கலாம். மணிகண்டன் தன் பையனைக்காட்டிலும் ஒரு அடி குள்ளமாக இருந்தான்.

 “அதற்குள் இவனுக்கு இவ்வளவு பெரிய பையனா.. இனிமே நான் குழந்த பெத்து ஸ்கூலுக்கு அனுப்பி கல்யாணம் கட்டிவச்சு..” என்று முனங்கினான் மகேந்திரனிடம். “எலேய்… நீ புதுமாப்பிள.  நாங்கள்லாம் பத்து நிமிசத்துல சட்டுனு மேட்டர முடிச்சுட்டு வீட்டவிட்டு வேலசோலியப் பாக்கக் கிளம்பிருவோம். உனக்கு இன்னும் அஞ்சுவருசமாது சண்டசலியம் ஊடல் கூடல்னு ஜாலியா இருக்கப்போறவங்…”

அதை அன்பழகனால் வேடிக்கையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை . சற்றுநேர அமைதிக்குப் பிறகு “எனக்கு எல்லாந் தெரியும். நீ காஞ்சுபோயி கெடக்கது மூஞ்சில தெரியுதேடா.. சரி.. மந்தித்தோப்பு ஒரு பார்ட்டி இருக்கு போறியா…”

அன்பழகன் சத்தம்போட்டுச் சிரித்தான் கண்ணில் நீர்த்துளிர்க்க.

“டேய்… சும்மா கேட்டேன். இப்பல்லாம் அந்தப் பக்கம் போறதில்ல..”

 மகேந்திரன் ரவுடிகள் சகவாசத்திலும் ஒருகாலத்தில் புழங்கியவன் என்பது தனிக்கதை. இப்போதுதான் ஆட்டம் ஒடுங்கி மனத்தேரை ஒரு நிலைக்குக் கொண்டுவந்து கொண்டிருக்கிறான்.

ஊரைத் தாண்டிப் போகையில் நாற்கரச் சாலை தென்பட்டது. இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு எதிர்ப்பக்க சாலையில் இறங்கினான். பச்சை சிகப்பு வண்ணமிட்ட கொடிக்கம்பத்திற்குப் பக்கத்தில் வண்டியை நிறுத்தி இறங்கினான். அதன் கீழ் சட்டையில்லாமல் கைலியுடன் அமர்ந்திருந்த இளைஞனிடம்

“என்னல இன்னைக்கு கொத்த வேலைக்குப் போகலயா”

“வேல இல்ல சித்தப்பு..”

“ஆமா இருந்திட்டாலும் போயிருவாரு மைனரு…”

“சித்தப்பு உங்கட்டருந்து சம்பளம்…. பாக்கியிருக்குல்லா… ஒரு ஐந்நூறு ரூபாயது தர்றது”

“எதுக்கு… ஒன்னே பாலத்தடி டாஸ்மாக்குக்கு ஓடுவ… கேணப்பயனு பாக்கியா… எப்பவும்போல மதினி கைல கொடுத்துருவேங் கவலப்படாத.. அதுக்கு கோவிச்சுக்கிட்டு எங்கிட்ட நீ வேலைக்கு வந்தாலுஞ்சரி வராட்டாலுஞ் சரி”

எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்தவன்

“என்ன மாமா ஆளுகச் சேந்துட்டாங்களா..”

“ஒவ்வொருத்தனா அனுப்பிக்கிட்டு இருக்கேன் மாப்பிள…”

“ஒத்த நாதாறி கிளம்புவானாங்கான்” என்று சட்டைப்பையிலிருந்து புகையிலையை எடுத்துக் கசக்கி வாயில் அதக்கிக்கொண்டே கொடிக்கம்பத்திற்கு எதிரில் இருந்த தெருவை நோட்டமிட்டான். வேலன் நகரின் ஒரே தெருவின் விளக்குக் கம்பங்கள் தோறும் அதே சிகப்பு பச்சை கட்சிக் கொடியின் வண்ணமடித்திருந்தது.

இவனை நோக்கி இடிப்பதுபோல் டிவிஎஸ் எக்ஸலில் வந்தான் அருகாமைக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவன். திடுக்கிட்டுப் பார்த்த மகேந்திரனிடம்

“வெள்ளையுஞ் சொல்லையுமா மாமா எப்பவும் கெத்துதான்”

“ஆமா மாப்ள  நம்ம மதிப்ப காப்பத்திக்கணுமா இல்லையா… எத்தன விவகாரங்கள  அன்னாடம் சந்திச்சு பைசல் பண்ண வேண்டியிருக்கு. கவர்மெண்டு அதிகாரிங்க நம்ப வேண்டாமா”

பேசிக்கொண்டே நைந்திருந்த சட்டைப் பாக்கெட்டின் மேல் ஓரத்தையும், காலரையும் மாறிமாறி இடக்கையால் அனிச்சை செயல்போல மறைத்துக்கொண்டான்.

அன்பழகனிடம் அவனது வீட்டை கைகாட்டினான். அது குழந்தைகள் வீடு வரைந்ததுபோல ஒரு முக்கோணமும் சிறிய கனச்செவ்வகமுமாக இருந்தது. குழுவாகச் சேர்ந்து புறம்போக்கில் இடம் காட்டுவார்கள். பிறகு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியில் மத்திய அரசு கட்டிக் கொடுத்தது.

வீட்டிற்குள்ளிருந்து அவனது ஒரே பெண் குழந்தை சிரித்துக்கொண்டே ரோட்டைத் தேய்த்துக் கொண்டு ஓடமுடியாமல் ஓடிவந்தாள்.

“பாப்பா வீட்டுக்குப் போ… அப்பா சைட்டுக்குப் போய்ட்டு வாரேன்” என்று சத்தமாகச் சொன்னான். ரோட்டுக் குழாயில் தண்ணீர் பிடித்து இடுப்பில் வைத்துக் கொண்டே மறுகையில் தன் குழந்தையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் மெலிந்த உடலில் வெளிறிய நைட்டி அணிந்திருந்த அவன் மனைவி. பேரரசியைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறான். மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தை. சரியாக பேச்சுவராமல் வாய் கொன்னும்.  இப்போது அவள் வயது பருவத்தை எட்டிப்பார்க்குபடி இருந்தது. அப்போது கருவிலேயே குழந்தையின் வளர்ச்சி குறித்துத் தெரிந்துகொள்ளவும், சிகிச்சை பெறவும் முடியாத வறுமையில் உழன்று கொண்டிருந்ததாகவும் முன்னரே சொல்லியிருந்தான் மகேந்திரன்.

அந்தச் சாலையின் மேற்குப் பகுதியிலிருந்த நான்கு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூலி வேலைக்காக தங்கள் உபகரணங்களுடன் இருசக்கர வாகனத்தில் எதிர்ப்பட்டார்கள். ஒருவர் விடாமல் மகேந்திரனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு கடந்து போனார்கள். இவனது தெருவிலிருக்கும் அந்த ஒருவர் வேலைக்குக் கிளம்பிய தகவல் தெரிந்தவுடன் அங்கிருந்து வண்டியைக் கிளப்பினான். எத்தனையோ முறை மகேந்திரன் வீட்டிற்குப் போகநினைத்து முடியாமல் போனது. இன்றாவது அவன் வீட்டிற்குப்போய் அரசியிடமும் அவனது மனைவியிடமும் பேச வேண்டுமென்று ஆவலுற்றான்.

எங்கு பார்த்தாலும் சீமைக் கருவேல மரங்களின் ஆதிக்கம். அதனூடே தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு வெள்ளாடுகளையும் அனேக செம்மறிகளையும் மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள்.  நாகலாபுரத்தில் நுழைந்தபோது அந்த ஊர் பற்றிப் பேசினான் மகேந்திரன். “இந்த ஊர்க்காரக இன்னவரைக்கு சேமித்த பணமே ஒருகோடி ரூபாயத் தாண்டும். அவங்க அந்தப் பணத்தை வட்டிக்கு விடுதாவ. யார்வீட்டு பிள்ளையளுக்கு படிப்பு, திருமணச் செலவுக்கு வேணுமோ அதிலருந்து எடுத்துக் கொடுக்காக” என்றான்.

மகேந்திரன் ஆவல்நத்தம் கிராமத்திற்குள்  நுழைந்தான். ஒரு ஆள் உயரத்திலேயே நிற்கும் பழங்காலத்து ஓட்டுவீடுகள். அதற்கு நடுவில் இருந்த காங்கிரீட் கூரை வீட்டின் முன்பு வண்டியை நிறுத்த, உள்ளேயிருந்து ஓடிவந்த சிறுவன் இவன் வண்டியில் ஏறி மடிக்கு வந்தான் “வாடா கன்னுகுட்டி…” என்று தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டான். அவ்வீட்டின் கர்ப்பிணிப்பெண் இவனருகில் வந்து ஏதோ விசாரிக்க “ஏன்டா அடிக்கடி சுகாதார ஆபிசுக்கு அலையுதீகளாப்பா.. கைல வெண்ணைய வச்சுக்கிட்டு  நெய்யுக்கு அலைஞ்ச கதையால இருக்கு. வாட்ஸ் அப்புல எப்ப வரும்னு கேளுடா.. பதில் அனுப்புவாங்க” என்றான் அவள் பையனைக் கொஞ்சிய அதே பிரியத்துடன். இந்தப் பணி மகேந்திரனுக்குப் பிடித்திருக்கிறது. நியாயப்படி அந்தப் பகுதி மக்கள் அவனை கவுன்சிலர் ஆக்கியிருக்க வேண்டும்.

“பாத்தேல்ல… எந்தச் சாதி மக்க மனுசங்களா இருந்தாலுஞ் சரி. தாயப் பிள்ளயாத்தான் பழகுதது” என்று சொல்லிக்கொண்டே  சூரிய மின்சாரம் எடுக்கும் தொழிற்சாலைக்குள் வண்டியைச் செலுத்தினான் மகேந்திரன். நுழைவாயிலில் வருகைப் பதிவேட்டில் யார்யார் வந்திருக்கிறார்களென பரிசோதித்தான். உள்ளே அவனை ஓரிடத்தில் காத்திருக்கச் சொல்லிவிட்டுச் சென்றான். வெயில் உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தது. விவசாய நிலமான பூமியில் அனுமதிக்கப்பட்ட  திறந்தவெளி தொழிற்சாலையில் ஒருஆள் உயரத்திற்கு சிறகை விரித்துப் பறக்கத் தயாரனதைப்போல சோலார் பேனல்கள் வெண்ணிற ஒளியைப் பிரதிபலித்துக்கொண்டு நின்றது. அது வெயிலின் கிரகணங்களை அதிகப்படுத்தி உஷ்ணத்தைப் பாய்ச்சுவதுபோல் இருந்தது.

ஒரு பேனலின் கீழ் நிழலுக்கு ஒதுங்கினான் அன்பழகன். மண்ணில் கருத்த பாம்புகள்போல் ஊர்ந்துகொண்டிருந்த பருத்த கேபிள்கள் எல்லாம் நடுவில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைக்குக் கொண்டுவரப்பட்டு கம்பங்களின் வழியாக வினியோகத்திற்கு மின்சாரம் எங்கோ அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது.  கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் மேல் பேனல்கள்.

செல்போனில்  கோயமுத்தூரில் தன்னுடன் தொழிற்சாலையில் வேலைபார்க்கும் நண்பன் ஒருவனிடம் அங்கே என்ன நிலவரம். கொரோனா ஊரடங்கிலிருந்து தளர்வு எப்போது என்று விசாரிக்கத் தொடங்கினான். நாள்தோறும் போட்டிப் போட்டுக்கொண்டு செய்திச் சேனல்கள் முக்கியச் செய்திகளைத் தந்து பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தாலும் சக நண்பர்களிடம் பேசினால்தான் ஆறுதல். செல்போனை அமர்த்தி சட்டைப் பாக்கெட்டில் போட்டான்.

பொறுமை தாளவில்லை.  அன்பழகனுக்கு அங்கிருந்து உடனடியாகக் கிளம்ப வேண்டுமெனத் தோன்றியது  மகேந்திரன் ஒருமணி நேரத்திற்குப் பிறகு வாயிலிருந்த புகையிலையை விரலால் எடுத்துத் துப்பியபடி இவனருகில் வந்தான்.

எதிர்பார்த்தது போலவே மகேந்திரன் அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். ஒரு சிறிய கூடம். அதைப் பாதியாகப் பிரித்து அடுப்படி. ஏதோ அசைவச் சமையல் முடித்துவிட்டிருந்த வாசனை.  தயிரைப் பாக்கெட்டில் இருந்து சட்டியில் ஊற்றி மோராக்கிக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. வெளியே விளையாடிக் கொண்டிருந்த பேரரசி ஓடிவந்து “ப்பா..” என்று மகேந்திரனை தழுவிக் கொண்டாள். எச்சில் வடித்துக் கொண்டிருந்த அவளது வாயைத் துடைத்தான். ஏதாவது பேச வாயெடுத்தால் எச்சில் வழிகிறது. களங்கமற்ற பருவம் துளிர்க்கும் அழகு முகம். இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “ரோட்டுப் பக்கம் போயிரக்கூடாது என்ன… பக்கத்துலயே வெளையாடனும். “அங்கிளுக்கு வணக்கம் சொல்லு.. “வ்ணக்…” எட்டாவது படிக்கிறாடா எப்படியாவது பாசாயிடுவேல பாப்பா”  என்று கையைப் பிடித்து உலுக்கினான். “ம்…” செல்லமாகக் குழைந்து அவனது தோளில் சாய்ந்து இவனைப் பார்த்தாள்.

கட்டில் மெத்தை தவிர வீட்டில் பொருட்கள் இல்லை. துணிமணிகள் கொடியிலும் சிறிய அலமாரியிலும் திணித்து வைக்கப்பட்டிருந்தது.

“காலையிலேயே சொன்னேம்லப்பா ஆச்சிக்கிட்ட போயி தலையில எண்ணை வைய்யு.. சீவி விடுவாகன்னு” அரசி “ஆச்..” கையை விரித்தாள். “ஆமா நீ வெளையாடிட்டு இருந்திருப்ப ஆச்சி ஆடு மேய்க்கக் கிளம்பிருப்பாவோ” என்றான்.

அன்பழகனிடம் “ போகாத கோயில் இல்ல… கும்பிடாத சாமியில்ல… என்னவோடா  இந்த மட்டுக்காவது நடமாடுதா… பேச்சுதான் வரமாட்டங்கு..” கட்டிலைவிட்டு எழுந்தவன் “இவ ஓங்கிக் கத்தணும்..” என்று கையைவிரித்துக் கத்தியபோது வீட்டை மட்டுமல்ல ஊரையே நடுங்கவைக்கும் எத்தனம். அவனது பூ விழுந்த கண்ணிலிருந்து மின்னல் வெட்டி நின்றது.  அரசி தலையைக் குனிந்து அசைந்தபடி அவனை நெருங்கி அணைத்துக்கொண்டாள். பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். “எங்காத்தால பேச வச்சிருவேன்.. இல்லடா.. இன்னோரு ரீட்மெண்ட் இருக்கு… அதயும் முயண்டு பாத்திரணும்” கட்டிலில் அமர்ந்தான்.

“ஒத்தபிள்ள.. அரசின்னா எனக்கு உசிரு… இவளுக்காவத்தான் அசலூரு வேலையெல்லாம் விட்டது.” அரசி அவனது மடியில். கலைந்து குத்திட்டு நின்ற தலைமயிர் படியுமாறு தடவிக் கொடுத்தான். அவனது மனைவி இவனைச் சாப்பிடச் சொன்னாள். தயக்கத்தோடு மறுத்தான்.  கையகல வீட்டில் விருந்து தடபுடலாய் இருந்தது. சிக்கன் குழம்பும், வருவலும், மோரும், ஆம்பிளைட்டும், மீன்வருவலும் கொண்டுவந்து வைத்து “சாப்பிடுங்கன்ணே…”  என்றாள்.

இத்தனை உபசரிப்பு இருக்கும் என்று அவனுக்குத் தெரியாது. மகேந்திரன் எப்போது போனில் தன் மனைவியிடம் சொல்லி இதையெல்லாம் ஏற்பாடு செய்தான் என்று யோசித்துக் கொண்டே “மகேந்திரா எதுக்குல இதெல்லாம்.. உனக்கிருக்கிற கஷ்டத்துல “ என்றான் அன்பழகன்.

“இருக்கட்டும்ல.. மொத தடவ வீட்டுக்கு வந்திருக்க…உ ந் தங்கச்சி மொகத்துக்காவது சாப்பிடு. இதுக்கெல்லாம் குறை வைக்கமாட்டேம்டா.. வாரத்துல ஒருக்கா கறி வாங்கிருவேன்”.

ஏதோ குலதெய்வத்திற்கு முன் படைக்கப்பட்டது போலிருந்தது. அன்பில் நெகிழ்ந்து என்னசெய்வது என்று தட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். “இது நம்ம வீட்டச் சுத்துத நாட்டுக்கோழி முட்ட… மீன்காரர் வந்தாரு.. மத்திமீனு வாங்கினேங். கோழி பக்கத்துட்டு தம்பி கடலேருந்து வாங்கியாந்தாங்”.

தூய அன்போடு பரிமாறப்பட்ட உணவுக்கென்று வயிறு விரிந்துகொண்டிருந்தாலும் ஒரு அளவோடு நிறுத்திக்கொண்டான். இனம்புரியாத பூரிப்பிலிருந்தாள் அரசி. கொஞ்சம் பழகினால் போதும் மனதளவில் இன்னும் குழந்தைப் பருவத்தைக் கடக்காதவள் யார் மடியிலும் அமர்ந்துகொண்டு ஸ்பரிசம் நாடுபவள். அவளின் அம்மா கரத்தின் இறுக்கமான பிடியில் நெளிந்துகொண்டிருந்தாள்.

இன்று புதிய உறவை தன் மகளுக்கு அறிமுகப்படுத்தி அவளின் மகிழ்ச்சிக்காகவும், அவளின் தேறுதலுக்காகவும் வந்திருந்தவன் வாழ்த்தியருளவுமான விருந்தின் வெளிப்பாடு இது. கடவுளின் கருணை வறட்சியை இப்படிப் பலி கொடுத்தலால் வெல்ல முற்படும் சமர்.

மகேந்திரன் ஏன் இப்படி நாள்முழுக்க ஊரை வலம் வருகிறான்.  எல்லோருக்காகவும் ஓடியோடி வேலை செய்கிறான். அன்றைய நாளின் நெருஞ்சி முட்கள் நிறைந்த பொருளீட்டல் பாதைகளின் வெறுமைகளைக் கடக்கும் முயற்சியா… மனப்பிறழ்வான தன் மகளை பிறந்ததிலிருந்து அவளைக் கண்ணாடிபோல ஏந்தித்திரியும் கவனத்தின் கனிவின் பிரதிபிம்பங்களைத்தான் ஊரிலிருக்கும் எல்லா மனிதர்களிடமும் எல்லா குழந்தைகளிடமும் காட்டுகிறானா..

உணவருந்தி முடித்துவிட்டு “தங்கச்சி.. நல்ல சாப்பாடு டேஸ்டே புதுசா இருந்துச்சு நன்றி” என்று சொல்ல.. அதெல்லாம் எதுக்குண்ணே அவரு ஸ்கூல் பிரண்ட்டு நீங்க…குழந்தையோட அக்காவையும் ஒருக்க நம்ம வீட்டுக்கு கூட்டிகிட்டு வரணும் கண்டிப்பா” என்றாள். அரசி மாமாவுக்கு ‘பை’ சொன்னாள். மகேந்திரன் மீண்டும் அவனை வீட்டில் கொண்டுபோய் விட தனது இருசக்கர வாகனத்தைக் கிளப்பினான்.

 வேலன்நகர் திருப்பத்தின் வேப்பமரத்திலிருந்து வீசிய மெலிந்த மதியக்காற்று  அன்பழகன் தலையையும் முகத்தையும் வருடிக் கொடுத்தது. அனிச்சை செயலாக சட்டைப் பையிலிருந்து செல்போனை எடுத்துப்பார்க்க அவனது மனைவியின் தவறிய அழைப்பு.  பிறகு பேசிக்கொள்ளலாமென்று போனை வைத்தான்.

மகேந்திரன் சிரித்துக் கொண்டே “ ஒன்னும் கவலப்படாத உனக்குக் குழந்த நல்லபடியா பொறக்கும். அனேகமா சுகப்பிரசவமாத்தான் இருக்கும். சொந்தக்காரப் பிள்ளைய எத்தன பேத்த கவர்மெண்டு ஆஸ்பத்திரில சேத்துவிட்டு பிரசவம் பாத்திருப்பேன். கல்யாணத்தப்பவே ஆளப்பாத்து கணிச்சிட்டம்ல..” என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *