அருள் வாக்கு

 

நடுராத்திரியில் கதவு தட்டும் ஓசை கேட்டு விழித்த ஜெயா பயத்துடன் கதவருகே சென்றாள். அவளது அப்பாவை மருத்துவமனையில் அனுமதித்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அப்பாவிற்கு ஒத்தாசையாக அவளது அம்மாவும் அங்கேயே தங்கிவிட்டிருந்தாள். தனியே வீட்டிலிருந்த ஜெயாவிற்கு பயம் மேலிட கதவருகே நின்று உரக்கப் பேசினாள்.

“ யாரு ? வீட்ல எல்லாம் தூங்கிட்டாங்க காலைல வாங்க”

“ ஜெயா. நான் தான். பாலு வந்துருக்கேன். கதவ தொற மா.”

“ அண்ணே” எனக் கத்திக் கொண்டே கதவைத் திறந்தவள், அவளது அண்ணனை பார்க்கவும் விசும்பத் தொடங்கினாள்.

“ அப்பாவ உடுப்பி ஆஸ்பத்திரில சேத்து ரெண்டு நாளாச்சுணே. அப்பா எப்டிருக்கார்னு அம்மாட்ட கேட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டேங்குது. எனக்கு ரொம்ப பயமா இருக்குணே .”

விசும்பலுக்கிடையே கூறினாள். அவள் கூறியதில் பாதி புரியாத பாலு, அவளை உள்ளே கூட்டி வந்து அமர்த்தி, ஆசுவாசப் படுத்தினான்.

“ ஜெயா. ரெண்டு நாள் முன்ன அம்மா குடுத்த தந்தி வந்தது, அப்பா சீரியஸ்னு. ஒடனே ரயில் பிடிச்சு வந்து சேர ரெண்டு நாளாச்சு. போன தடவ வந்தப்ப நல்லாத்தானே இருந்தார் ?”

“ தெரியலண்ணே. நாலு நாளா பள்ளிக்கூடம் போகல. லீவ் போட்டு வீட்லயேதான் இருந்தார். அசதியா இருக்குனு சொன்னார் தெனமும் காலைல வாந்தியெடுத்தார். திடீர்னு ஒரு நாளு காலு கையெல்லாம் எல்லாம் வீங்கிக்கிச்சு.. ஒடனே ஆஸ்பத்திரி போனோம். அம்மா அங்கையே அப்பா கூட இருந்துருச்சு.  இன்னிக்கு காலைல தான். வந்து குளிச்சுட்டு வேற புடவ கட்டிட்டு போச்சு. அப்பா எப்டியிருக்கார்னு கேட்டதுக்கு ஒன்னுமே சொல்லாம போயிருச்சு”

“ ம். ஒன்னுமிருக்காது. விடியவும் போய் அப்பாவ பாக்கலாம். ஆமா , குட்டி தங்கச்சி எங்க? ஹாஸ்டல்ல தான் இருக்காளா? நீ மட்டும் எப்படி வீட்டுக்கு வந்த ?”

“ இல்லண்ணே. அது வந்து.. கொஞ்ச நாளைக்கு வீட்ல இருந்து ஸ்கூலுக்கு போலாம்னு வந்தேன்.”

“ எதுக்கு இழுக்கிற ? ஏதும் சேட்டை பண்ணியா? . இந்த அம்மாவும் லெட்டர்ல ஒன்னும் சொல்லல. காலையில பேசிக்கலாம். போய் துங்கு.”

“ அண்ணே. ஹாஸ்டல்ல சொல்லாம வீட்டுக்கு வந்தேன். . அப்பாக்கு ஒடம்பு சரியில்லாம போகவும் அப்டியே தங்கிட்டேன் . குட்டி கிட்ட நான் ஒன்னும் சொல்லல்ல. அவளுக்கு நான் வந்தது தெரியாது.”

“ ம். சேட்டை தான். போய் தூங்கு அப்றம் பேசிக்கலாம்.”

ஜெயா உள்ளறையில் சென்று படுத்துவிட்டாள். அண்ணன் வந்துவிட்ட நிம்மதியில், உறங்கிவிட்டாள். உறக்கம் பிடிக்காமல் உலாத்திக் கொண்டிருந்தான் பாலு. ஒன்றுமிராது எனத் தங்கைக்கு கூறியிருந்தாலும் அப்பாவை நினைத்து வருந்தினான். நல்லாசிரியர் விருது வாங்கியிருந்த தந்தை, ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் சதா சர்வ காலமும் பள்ளியும் பள்ளி பிள்ளைகளும் என்றிருந்த அப்பா விடுப்பு எடுத்திருந்தார் என தங்கை கூறியது இவனுக்கு நெருடலாக இருந்தது.

இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்தவன், விடிந்தும் விடியாததுமாக அப்பாவைக் காண புறப்பட்டான். உடன் தங்கையும் ஒட்டிக் கொண்டாள். மகனை பார்த்ததும் அம்மா லட்சுமி அழுது தீர்த்தாள். அதுவரை அம்மா அழுது அவன் பார்த்ததேயில்லை. வேற்று ஜாதியில் கல்யாணம் செய்தாள் என அவள் வீட்டை விட்டு விரட்டப் பட்டிருந்தாள். அவளது அம்மாவின் மரணத்திற்குக் கூட உள்ளே அனுமதிக்காமல் விரட்டினார்கள் அவளது சொந்தங்கள். அம்மாவுடன் அன்று பாலுவே சென்றிருந்தான்.. முடியை வாரிச் சுருட்டி கொண்டை போட்டுக் கொண்டு விடு விடுவென வீடு வந்து சேர்ந்தவளிடமிருந்து துளி கண்ணீர் இல்லை. ‘ மகனை மயக்கி கட்டிக்கிட்டா’ என அப்பாவின் அம்மா வீடேறி வந்து தூற்றிய போதும் கல்லென இருந்தவள் இன்று சிறுமி போல் கேவிக் கேவி அழுவது பாலுவிற்கு என்னவோ செய்தது.

இயல்பு மீறி நடப்பவைகள் சற்று பதற்றத்தை தரவே செய்கின்றன. டா போட்டு விளிக்கும் தங்கை அண்ணா என்றழைத்தது, அழுதே பார்த்திடாத அம்மா அழுதது என்று அவனது மனம் கனத்தது. அப்பாவை பார்க்கச் செல்லவே அவனது கால்கள் நடுங்கின. சிறுவனாக மாறியது போல் அம்மாவின் கைகளை இறுக பற்றிக் கொண்டு அப்பா இருந்த படுக்கை அருகே வந்தான். வேஷ்டி சட்டை அணிந்து சைக்கிளில் கம்பீரமாக பவனி வரும் அப்பாவை, சன்னதம் வந்து ஆடுகையில் ஊரே காலில் விழ, சாமியாக நிற்கும் அப்பாவை இப்படி எலும்பும் தோலுமாக படுக்கையில் பார்க்க அவனது நெஞ்சம் விம்மியது. மகனைப் பார்த்த அப்பாவின் முகம் மலர்ந்தது. பேச முடியாமல் பேசினார்.

“ வாப்பா. உன்ன வரவச்சுட்டாளா ஒங்கம்மா? சாப்டியாப்பா ? பயணம் நல்ல படியா இருந்துச்சா? வேலையெல்லாம் பிடிச்சுருக்காப்பா?”

“ பயணம் நல்லா இருந்துச்சுப்பா. வேலை ஒன்னும் பிரச்சனையில்லாம இருக்குப்பா.  நீங்க எப்படி இருக்கீங்க?”

“ எனக்கு என்னப்பா. நல்லாருக்கேன். இங்க வந்தப்பறம் வலியெல்லாம் கம்மியாயுடுச்சு. இந்த பள்ளிக்கூடந்தான் எப்படி இருக்குனு ஒரு தகவலும் இல்ல. பிள்ளைகளெல்லாம் எப்டி இருக்கோ ? இந்த டாக்டர்ட்ட சொல்லி சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பி வைக்க சொல்லுப்பா.”

“ சொல்றென் ப்பா. நான் போய் டாக்டர பாத்துட்டு வரேன். நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்கப்பா”

அப்பாவிற்கு நீரிழிவு நோயினால் ஒரு கிட்னி மொத்தமாக செயலிழந்து விட்டது எனவும் , மற்றொரு கிட்னியும் கொஞ்சம் கொஞ்சமாக செயல்பாட்டினை நிறுத்துகிறது எனவும், அதை மருந்து மாத்திரைகளில் சரியாக்கலாம் எனவும் தெரிவித்தார். அதிலும் அவரது உடல் அந்த மருந்துகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே குணமாகும் எனவும் கூறினார். தேவைப் பட்டால் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு போக வேண்டியிருக்கும் எனச் சொன்னார். பின்  சொன்னவை எதுவும் மூளைக்கு எட்டவில்லை, பாலுவின் காதுகளை மட்டுமே எட்டியது. அப்பா குணமாக வாய்ப்பிருக்கிறது என்பதுவே அவனுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.

மருத்துவமணனையில் இருந்து திரும்பிய அண்ணனும் தங்கையும் மௌனமாகவே இருந்தனர். இருவருமே ஏதோ யோசனயில் மூழ்கியிருந்தார்கள். ஜெயா மௌனத்தை கலைத்தாள்.

“ அண்ணே. அப்பா பொழச்சுக்குவார்ல?”

“ பொழச்சுக்குவார். ஒன்னுமாகாது.”

“ அண்ணே . நாம ஒரு பூஜை போடுவோமா ? அத்த அன்னிக்கு சொல்லுச்சு. பாண்டிக்கு ஒரு பலி போட்டு பூஜை பண்ணா உயிர காப்பத்திக் குடுத்துடும்னு. நாம அப்பாக்கு வேண்டி ஒரு பூஜை பண்ணுவோமா?”

ஜெயா பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பாலு பதிலேதும் கூறாமல் அமைதியாக ஏதோ யோசனையிலேயே இருந்தான். ஜெயா உலுப்பவும் சுய நினைவுக்கு வந்தவனாய்,

“ எந்த அத்த சொல்லுச்சு?”

“ கோணக்காலி அத்த தான் சொல்லுச்சு. அப்பாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போன அன்னிக்கே சொல்லுச்சு. எனக்கு யார்ட்ட சொல்றதுனு தெரியல. அண்ணே , நாம பண்ணுவோம்ணே. அப்பா நல்லா வந்துடுவார்னு தோனுதுணே.”

“ ம். சரி. பண்ணலாம். நான் கோணக்காலி அத்தக்கிட்ட பேசுறேன்.”

பாலு கோணக்காலியிடம் பேசினான். கோணக்காலி அவர்களுக்கு அத்தை முறை. அவளுடைய நிஜப் பெயர் என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. விபரம் தெரிந்த நாள் முதலே அவளைக் கோணக்காலி என்றே தெரியும். அவளும் பூஜையைப் பற்றிச் சொல்லி அதற்குத் தேவையான பொருட்களை பட்டியலிட்டாள்.  அனைத்தையும் பாலுவும் ஜெயாவும் வாங்கித் தயார் செய்தார்கள். பூஜைக்குப் பலி குடுக்க சேவல் வேண்டுமெனக் கூறியிருந்தாள். தெரிந்தவர்களிடம் பலிக்கு என சொல்லி வாங்க முடியாது என்பதால் சந்தைக்கு சென்று வாங்கி வந்தான். பூஜையை நடுச்சாமத்தில் செய்ய வேண்டுமென கூறியதால் நடுச்சாமத்தில் பூஜைக்காக தயாரானார்கள்.

கோணக்காலியே பூஜையை தொடங்கினாள். நடுக்கூடத்தில், மஞ்சளை தண்ணீரில் குழப்பி வட்ட வடிவத்தில் பூசி, அதன் மேல் கோலமாவில் நட்சத்திரமும் கட்டமும் வரைந்து எலுமிச்சைகளை அதன் மேல் வைத்து ஏதோ முணுமுணுத்தாள். பாலுவும் ஜெயாவும் கண்களை இறுக மூடி அப்பா நல்லபடியாக மீண்டு வருவதற்காக வேண்டினார்கள். பலி கொடுக்க சேவலை கொண்டுவரச் சொல்லவும் திண்ணையில் கட்டிப்போட்டிருந்த சேவலைப் பிடித்து வந்தான் பாலு.

கோணக்காலி சேவலின் கழுத்தை பிடித்து சிறிதாக அறுத்துவிட்டு முணுமுணுத்து,  சிறு துளி இரத்தத்தை சக்கரங்களில் விட்டாள். பாண்டி சாமி  பலியை ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் கூறினாள். கழுத்து அறுபட்ட சேவலை முச்சந்தியில் போடச் சொல்லி பாலுவிடம் கொடுத்தாள். கழுத்தை பிடிக்காமல் உடலை பிடிக்கவும், சிறகடித்துக் கொண்டு துடிக்க ஆரம்பித்தது சேவல். அவன் கைகளில் துடிக்கவும் பிடித்திருந்த பிடியை விட்டான். கூடம் முழுவதும் சுற்றி , சிறகடித்து துடித்து , வீடெல்லாம் இரத்தம் சிந்த உயிரை விட்டது சேவல்.

மூவரும் திகைத்துப் போய் நின்றனர். சற்று நேரம் அமைதியாய் அமர்ந்துவிட்டார்கள். ஏதோ ஒரு இனம் புரியாத பயம் இருவரின் மனதிலும் உதித்தது. கோணக்காலி இருவருக்கும் ஆறுதல் கூறினாள்.

“ ஏய் பிள்ளைகளா. இது நல்ல சகுனம் தான். பலிய தான் பாண்டி ஏத்துக்கிட்டாருல்ல. சும்மா மூஞ்ச என்னத்துக்கு இப்படி வச்சுருக்கீங்க ? ஏய் ஜெயா, அந்த வெளக்கமாத்த எடு புள்ள. கூட்டி கழுவிடலாம்.”

“ அத்த. என்னமோ மனசுக்கு சுருக்குனு இருக்கு.”

“ ஒன்னுமில்ல புள்ள. மனச போட்டு கொழப்பிக்காத”

இறந்த சேவலை வெளியே சென்று, ஆற்றில் வீசிவிட்டு வந்தான் பாலு. பெண்களிருவரும் வீட்டை கழுவி விட்டனர். வேலையெல்லாம் முடித்து ஓய்ந்த நேரம் விடிந்து விட்டிருந்தது. கோணக்காலி சென்று விட, அண்ணனிடம் ஜெயா அழ ஆரம்பித்தாள்.

“ அண்ணே. எனக்கு என்னவோ பயமாவே இருக்கு. தப்பு பண்ணிட்டோமா அண்ணே.?

“ பயப்படாத. என்ன இருந்தாலும் நம்ம குலசாமி நம்ம கூட இருந்து காப்பாத்திக் குடுக்கும்.”

“‘ அப்பாவ பாக்கனும் போலவே இருக்குணே .”

மருந்தும் வேலை செய்யாமல் மந்திரமும் வேலை செய்யாமல் அவர்களது அப்பா இறந்து ஒரு வருடம் ஆகியிருந்தது. அப்பா இறந்ததை ஜெயாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவரின் உடலை கொண்டு வந்த அன்றைக்கு அவள் பெரிதாய் அழமால் பித்து பிடித்தது போல் அமர்ந்திருந்தாள்.  கடந்த ஒரு வருடமாக ஜெயா அவ்வப்போது காய்ச்சலில் விழுந்தாள். முன்பு போலில்லாமல் அமைதியானாள். அவள் எதையோ பார்த்துப் பயந்திருக்கிறாள் என அக்கம் பக்கத்தினர் கூறினர்.

“ எக்கா. லட்சுமியக்கா. பிள்ள என்னத்தையோ பாத்து பயந்துருக்கும் போல. அதான் பொழுதன்னிக்கும் மேலுக்கு முடியாம போவுது. ஒரு எட்டு அல்லா கோயிலுக்கு போய் மந்திரிச்சு தாயத்து வாங்கியாந்துரு.”

“ அக்கோவ், முத்தையா கோவிலுக்கு கூட்டிட்டு போக்கா. அவுக மந்திரிச்சு விபூதி அடிச்சு விடுவாங்க. அப்றம் பாரு அம்புட்டும் சரி ஆயிடும்.”

“ ஏ லட்சுமி, மாரியாத்தாள வேண்டி பிள்ள கையில கையித்த கட்டி விடு. சரியாயிடும் பாரு”

ஆளாளுக்கு ஏதோ ஒன்றை கூறினார்கள்.  அன்று ஜெயா அப்பாவின் திதிக்கு மறுநாள். வீட்டிற்கு வந்திருந்த பாலுவிடம்,  லட்சுமி ஜெயாவை பற்றி பேசினாள்.

“ தம்பி, இந்த பொண்ணுக்கு பொசுக்கு பொசுக்குனு ஒடம்பு முடியாம போவுது. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டேன். பலமில்லாம இருக்கா பிள்ளனு மருந்து குடுத்தாங்க. ஹாஸ்டலுக்கே போவல.  ஒரு வருசமா வீட்ல இருந்து தான் பள்ளிக்கூடம் போறா.  ஒரு எட்டு பூசாரி வீட்டுக்கு போயி மந்திரிச்சுட்டு வரலாமானு யோசிக்றேன்”

“ சரி ம்மா. கூட்டிட்டு போயிட்டு வாங்க.”

“ தம்பி , உள்ள சாமி அறையில இருந்து விபூதி எடுத்துட்டு வா. பூசிட்டு நாங்க ஒரு எட்டு போயிட்டு வந்துடறோம்.”

விபூதியை கைகளில் தொட்டவனுக்கு அவனறியாமல் சன்னதம் வந்து ஆடினான். அவனுக்கு சாமி வருவது அதுவே முதல் முறை. துடிப்புடன் ஆடினான். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடிவிட்டனர்.

“ ஒங்கள கொலசாமி கைவிடுமா க்கா ? ஓங்கூடவே தான் இருக்குக்கா”

“ எப்பா சாமி. இவுக குடும்பம் அப்பன பறி குடுத்துட்டு நிக்குது, நீ தான் இந்த குடும்பத்த காப்பாத்திக் குடுக்கனும். ஓம்பிள்ளைக ஏதாச்சும் தப்பு பண்ணிருந்தா மன்னிச்சு காப்பாத்திக் குடுக்கனும்ப்பா”

பக்கத்து வீட்டு ஆச்சி சாமியிடம் பேசியது.

“ எம்பிள்ளைகள நான் விடுவேனா. எப்பவும் கூடயிருந்து நாந்தான் எம்பிள்ளைகள பாத்துக்குவேன். இனி ஓம் பொண்ணுக்கு ஒன்னும் வராது.”

லட்சுமியின் நெற்றியில் வீபூதி பூசிவிட்ட படியே கூறியது சாமி. ஜெயாவிற்கும், அவள் தங்கைக்கும் விபூதி பூசியது. கூடியிருந்தவர்கள் அனைவருமே காலில் விழுந்து விபூதி வாங்கினார்கள். சிலர் அருள் வாக்கும் கேட்டனர். அவர்களின் குலசாமியே நேரில் வந்தது போல் சன்னதம் வந்து, அவனது அப்பாவைப் போலவே ஆடுகிறான் என ஊர்க்காரர்கள் மெச்சினர்.

ஜெயாவின் கண்களுக்கு பாலு மறைந்து, சாமி மறைந்து, அப்பா தெரிந்தார். அவள் அப்பாவைத் தான் பார்த்தாள்.

“ அப்பா !!!”

பாலுவின் கால்களில் விழுந்து இறுக பற்றிக் கொண்டு கதறியவளை ஒரு நிமிடம் திகைத்து பார்த்தது கூட்டம். அழுதவளை தூக்கி நிறுத்தினார்கள்.

“ எம்மவன நாந்தான் என்கிட்ட கூட்டிக்கிட்டேன். நீ தப்பு பண்ணல”

விபூதி அடித்து பூசிவிட்டான். சொன்னது சாமியா, பாலுவா எனத் தெரியவில்லை.. ஆனால். அது அவளுக்கான அருள் வாக்காய் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *