யானை எங்கேயோ இருக்கிறது

“ இது என்ன கதை? ”

“ ஏன்  சார் ? ”

“ இந்தக் காலத்து கதை மாதிரி இல்லையே. ”

“ இந்தக் காலத்து கதைனா? ”

“ இது பேசுற விஷயத்துக்கும் நமக்கும் தொடர்பே இல்லையே. இதுல ஏன் மத வாதமெல்லாம் வருது? அப்புறோம் நேரடியான தத்துவ விவாதம் வேற ”

“ ஏன்  இதெல்லாம் வந்தா என்ன? ”

“ இது நவீன இலக்கியம். இதுல நேரடியான தத்துவத்துக்கெல்லாம் இடம் இல்லை. அதை எப்பையோ கடந்து வந்தாச்சு. எதார்த்தமில்லாத இலக்கியம் அம்புலி மாமா கதை மாதிரி. அது இல்ல இலக்கியம். இது மாடர்ன் கதை இல்ல. ”

“ சார் அன்றாடத்துல நடக்குற எளிய விஷயத்த பெரிய ஆன்மீக உண்மையா நினைச்சுகிட்டு அத கதையில மறச்சு வச்சு எழுதுறது தான் மாடர்ன் கதையா? அது தான் நவீன இலக்கியமா?”

“ உங்களுக்கு புரியல. ஆயிரம் வருசமா நீங்க எழுதுனத தான் தமிழ்ல எழுதிட்டு இருக்காங்க, இப்போ தேவை எதார்த்தவாதம் தான். எதார்த்தத்தோட நுட்பம் தான் இன்றைய இலக்கியம். எதார்த்தத்துல இருக்குற படிமத்த கையாளுங்க. வெளிப்படுத்த முடியாத உண்மைய வெளிப்படுத்த முயற்சிக்குறது கற்பனாவதம். அது முடிஞ்சு போச்சு. ”

“ சார் என்கிட்டே இருக்குற படிமம் பல ஆயிரம் வருஷம் எல்லார் மனசுலையும் பொதைஞ்ச வைரம் அத விட்டுட்டு ஆபீஸ் பொட்டி படிமத்த வச்சி கதை எழுத நான் விரும்பல.”

“ ஆபீஸ் பொட்டி படிமத்த உங்களுக்கு கையாள தெரியலைனு சொல்லுங்க. ”

“ சரி சார் கையாளத் தெரியலனே ஒத்துக்குறேன். எனக்கு அது தெரியணும்னு அவசியம் இல்ல. ”

“ சரி விடுங்க. கதைல அந்த வாதம் தான் பிரச்சனை. கழுல ஏத்துனத்துக்கு அப்புறோம் இருந்து நல்லா இருக்கு. அத மட்டும் வெளியிடலாம். சரி தான? ”

அனாகதம்

   கழு முளைவிட்டெழும் ஓரிலை சோலமென குதத்துள் கூசி நுழைந்தது. தசைகளில் எல்லாம் இருள் உணர்ந்து வெளி தேடி அலையும் அதன் படபடப்பு. இது குதாகாசம் என்று எண்ணி சிரித்துக்கொண்டான். வாய் வழி சிந்திய ஒளி நோக்கி கழு ஏறியது. ஊதற் காற்று மடல்களில் முட்டிச் சுழன்று செவிப்பறையில் அறைந்து உடல் முழுக்க ‘வம்’ என அதிர்ந்தது. கழுமுனை ஆறாக பிரிந்து விரல் நீட்டியது. அதில் ஒன்று காற்றில் ஆடிய குறியைப் பின்னிருந்து தொட அது விரைத்து எதையோ உமிழ்ந்தடங்கியது. ஆற்று மணல் திறந்ததை உள் பொதித்தது, மழைத்துளி பெறும் சிப்பியென. மற்றொரு விரல் நினைவுகளின் அறைகளை கீலோசையுடன் திறந்து அதில் நேற்றை மட்டும் துழாவிக்  கொணர ஏனைய விரல்கள் அதை இடுக்கி மேடுறுத்தின.

“ நேத்ரரே ”

“ ம்..”

“ நேத்ரரே ”

“ சப்தரே ”

“ ஆம் ”

அவன் கண் திறக்கையில் வெளியிலின்றி கண்பாவையுள் சப்தர் நின்றிருந்தார்.

“ நேத்ரரே தாங்கள் நேற்று அவையில் முன்வைத்த பிரமாணத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறேன். நான் மட்டும் அல்ல பூரணரும் தத்தரும் இதையே யோசித்துக் கொண்டிருக்கின்றனர். விளக்கியும் மறுத்தும் ஊசலாடுகின்றனர். ”

“ அது என்றும் தொடரும் சப்தரே. நான் எங்கு நின்று அதை அடைந்தேன் என்று அவர்கள் உணரவில்லை. இது தர்க்கம். அடிக்கல்லை தொடாமல் கொடிக்கம்பத்தில் தொற்றி ஏறி பயனில்லை. குழுமியிருந்த முப்பது தரிசனங்களில் இல்லாததையா நான் சொல்லிவிட்டேன். நான் எங்கு நிற்கிறேன் என்று கண்டிருந்தால் ஒருவரேனும் தங்கள் மார்க்கத்தில் அது ஏற்கனவே இருக்கிறது என்று சொல்லியிருக்கலாம். ஆனால் நீங்கள் கண்டுவிட்டீர்கள் போலும். ”

சப்தர் சற்று பின்னடைந்தார். அவன் சிரிக்கையில் வாய் ஒருபக்கம் இழுக்க மேலும் தொடர்ந்தான்,

“ எளிய வாதத்தால் மறுத்திருக்க முடியும். என்னை இந்நேரம் தங்களின் சீடனாக மாற்றியிருக்க முடியும். கவலை இல்லை சப்தரே. நான் சொன்னது உண்மை என்பதாலேயே நான் கழுவிலிருக்கிறேன். எனது சுவடிகள் என்னை சுற்றி எரிந்துகொண்டிருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் தங்களிடம் இருக்கிறது. ”

சப்தர் மடியை ஒரு முறை தடவி சுவடியை சற்று உள் செருகி நகைத்தார்.

சூரியன் முகில் உதிர்த்து நீர் அமிழ்ந்தெழும் மலரென விரிந்தது. அதை நோக்கி கழு பத்து தளிர்விட்டெழுந்தது. ஒரு இளந்தளிர் நாபியைக் கவ்விப் பிடிக்க  ஏனைய தளிர்கள் பற்றுக்கோளுக்கென தவித்து அழுதன.

“ தாங்கள் சொன்னது தான் நேத்ரரே. இது பூச்சிகளின் புழுக்களின் உலகு தான். வேர்களென, கிளைகளென, நரம்புகளென, வால்களென, கைகளென, விரல்களென இங்கு நிறைந்திருப்பவை புழுக்களே. அவை இன்றி வேறில்லை. இது அவற்றுக்கான உலகு. அவற்றை அச்சாக்கி சுழலும் உலகு. ”

“ சப்தரே. இது வலியவரின் உலகு. யானையை கண்டதுண்டா சப்தரே. பிரம்மத்தின் துளி யானை என்பர். இடி ஏற்று நிற்கும் மரங்களை மத்தகத்தால் முட்டி சாய்க்கும் அது வழி வரும் முயலை துதிக்கையால் தட்டி நடப்பதை கண்டதுண்டா. கருணை. கருணையே வலிமை சப்தரே. பிரம்மம் கனிந்த கருணை இன்றி வேறில்லை. என் தரிசனம் அதுவே. பூச்சியின் நூற்றில் ஒரு பங்கு இயல்பை நூறு களிறுகள் கொள்ளுமெனில் அவை போதும் இவ்வுலகு அழிய. கருணை. கருணை… ”

“ நேத்ரரே பூச்சியின் இயல்பை நூறு களிறுகள் கொள்ளுமெனில் அழிவது உலகல்ல, நூறு களிறுகள் மட்டுமே. யானை வலியது அதனாலேயே தான் என உணர்வது. தான் என்பதிலிருந்தே கருணை முளைக்கிறது. கருணைச் சுனையின் ஊற்றுமுகம் தனிமையிலேயே அமைகிறது. பூச்சிகளை கண்டதுண்டா நேத்ரரே. உலகின் அத்தனை பூச்சிகளும் ஒற்றைச் சரடால் இணைக்கப்பட்டவை. அச்சரடின் அதிர்வை அவற்றின் சிறு சிறகடிப்பில் உணரலாம். தான் அற்றவை. தங்களின் மொழியில் கருணையற்றவையே. அவற்றை நித்தமும் பல்கிப் பெருகவைப்பது அந்தச் சரடின் சிறு அசைவுகளே. அறம் நேத்ரரே. அறம் வலிமை அல்ல. வலிமையற்றவற்றால் பல யுகங்களாக தொகுக்கப்பட்டவொன்று. தான் அற்றவற்றின் குரல் அது. ஒவ்வொரு புழுவும் யானையே, ஆனால் யானைகள் எல்லாம் புழுவல்ல. ”

“ சப்தரே இந்த யானை வாதில் வென்றிருந்தாலும் புழுக்களை கழுவில் ஏற்றியிருக்காது. ஆனால் தோற்ற யானை புழுவிற்கு எதிரே இப்போது கழுவில் இருக்கிறது. அறம் என்றீரே அதன் விளைவா இது? ”

பத்து தளிர்களும் கூம்பி குடற் கட்டுகளுக்கிடையே வளைந்து கழு ஒற்றை முனையாக நெஞ்சை அடைந்ததது. வலுக்கிய குதத்தில் வேர் பதித்து நெஞ்சில் பன்னிரு கிளைவிட்டு படர்ந்தது. கூர் உகிர் இலைகள் கிளைகளிலிருந்து துளிர்த்து மின்னி நகைத்தன. ஒன்றில் ஒன்று மோதி உலோக ஒலியெழுப்பி நரம்பறுத்து பரவின. எதிரில் சப்தர் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். மேற்பரப்பில் சொல் தொட்ட சிற்றலைகளை அடி ஆழத்துள் செவி தொட்டெடுக்க முயன்றது. கழுவின் கிளைகள் இதயத்தை அடைந்து அழுத்துகையில் சப்தர் பிரக்ஞையற்ற வெளியில் எங்கோ சென்றுகொண்டிருந்தார். நேத்ரனின் திறந்த வாய் வழி ஒரு பூச்சி அவனது எச்சிலும் உதிரமும் தோய்ந்த தன் உடலைச் சிலுப்பி வானில் சிறகை விரித்தது.

வணக்கம்

அன்புள்ள எழுத்தாளருக்கு,

                                சமீபத்தில் வெளியான தங்களின் அனாகதம் கதை வாசிக்கக் கிடைத்தது. அதை வாசிக்கும் பொழுதே டேவிட் அட்டன்பரோவின் ஒரு ஆவணப் படம் நினைவிற்கு வந்தது. கருவுற்ற ஒரு பூச்சி மற்றொரு புழுவைப் பிடித்து அதனுள் ஒரு திரவத்தை செலுத்துகிறது. அத்திரவம் அப்புழுவை ஒரு மயக்க நிலைக்கு கொண்டுசெல்கிறது. அந்நிலையில் அப்புழு தான் நிறைய செடிகளை உண்டு களிப்பதாகவே நினைத்துக்கொள்ளும். கருவுற்ற பூச்சி அப்புழுமேல் முட்டையிட்டு கூடுகட்டி அவ்விடம் நீங்கிவிடும். முட்டை உடைத்து வெளிவரும் சிறுபூச்சிகளுக்கு உணவே அந்த புழுதான். பூச்சிகள் அப்புழுவை உண்டு சிறுகு வளர்த்து பறந்து செல்லும்.

அவையில் நிகழ்ந்த வாது கதையில் இல்லை. கழுவேற்றத்துடனே கதை தொடங்குகிறது. நேத்ரனுக்கும் சப்தருக்கும் நடக்கும் உரையாடலை வைத்துப் பார்கையில், நேத்ரன் வாதில் முன்வைத்தது இதுவாகவும் இருக்கலாம். தன் தரிசனத்தின் மையப் புள்ளியாக அல்ல எனினும் மாயையை விளக்க முன்வைத்திருக்கக் கூடும்.

கழு மேலேறி அனாகதத்தை அடைகையில் நேத்ரன் இறந்து கதை முடிகிறது. அவன் கேட்ட கடைசி கேள்விக்கு கழு அனாகதத்தில் என்ன கூறியிருக்கும் என்று ஒருவாறாக ஊகித்தேன். சப்தர் சொன்னது போல புழுக்கள் என்பவை வெவ்வேறானவை அல்ல அவை ஒற்றைச் சரடால் இணைக்கப்பட்ட ஒரு பெரிய புழு. விராட வடிவின் சிறு அங்கங்கள். யோசித்துப்பார்க்கையில் கூட்டிற்குள் இருக்கும் புழுவை உண்பதால் பூச்சிகள் கருணையற்றவை அல்ல. சிறகற்ற அந்தப் புழு தன்னை சிறகுள்ள பூச்சிகளாக மாற்றிக்கொண்டு வானில் பறக்கும் ஒரு நிகழ்வு தான் அது. அதற்கேற்றாற் போல சப்தரும் நேத்ரரின் ஒரு சுவடியை எடுத்துச் செல்கிறார். நேத்ரன் தன் தரிசனத்தில் இல்லாத ஒன்றை சப்தரின் மூலம் பெற்று பறக்கும் தருணம்.

இறுதியில் நேத்ரனும் ஒரு புழு, தான் நினைத்தது போல் யானை அல்ல. யானை எங்கேயோ இருக்கிறது.

நன்றி

அன்புடன்

எம்.எஸ்

“ உண்மையிலேயே இந்த வாசகர் சொல்றது எல்லாம் நீங்க யோசிச்சு தான் கதை எழுதுனீங்களா ?

“ இல்ல சார். ”

“ அப்போ இவரோட கிரெடிட் உங்களுக்கு கிடையாது. ”

“ எனக்கு அது தேவை இல்ல. அட்டன்புரோ எடுத்த படத்தோட இந்த கதை பொருந்துதே அது போதும். படிமம் நரம்ப தொடணும் அவ்ளோதான். பதில தரணும்னு அவசியம் இல்ல. ”

“ ஆனா உங்க கதைப் படி நேத்ரன் அவைல சொன்னதே வேறயாச்சே? நீங்க செத்த யானைல இருந்து வர புழுவ பத்தி நேத்ரன் சொல்றதா எழுதி இருந்தீங்க. ”

“ அதான் சார் கதை பதில தரணும்னு அவசியம் இல்ல. நேத்ரன் எழுப்புன கேள்வியோட கதை முடிஞ்சது. ”

“ இது என்ன பின்நவீனத்துவ இலக்கியமா? ”

“ இல்ல சார் பின்நவீனத்துவ வாசிப்பு. ”

“ அப்போ இலக்கியம்? ”

“ அது யானை மாதிரி எங்கையோ இருக்கு சார். நம்மளோடது புழுவோட உலகம் இதுலையே இருப்போம் ஏன் யானைய சீண்டணும்? ”

“ ம்.. விளங்கும். ”

“ ஆனா நல்ல வாசகர் சார். ”

“ எப்படி சொல்றீங்க? ”

“ கதைய இப்படி முடிச்சி இருக்கலாம்னு ஐடியா எதுவும் சொல்லலையே. ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *