நிழலின் விளிம்பில்

கண் முன்னே பசுமையின் பல்வேறு ரூபங்கள். மரங்களில் அதன் கிளைகளில் காலடிப் புற்களில். அவற்றின் மத்தியில் வந்து நின்றவுடன் எனக்குள் தணுமை. வீட்டின் நான்கு பக்கங்களையும் என் இருப்பின் விளிம்புகளாக நான் எண்ணியதுண்டுவிளிம்பில் இருந்து வடிந்து அல்லது மீறி வெளி வரும்போதே விரிந்து பரவுகிறேன். நானும் இப்பிரபஞ்சமும் வேறல்ல என்ற உணர்வு ஏற்படுகிறது. என்னுடலின் பூதலித்த இருப்பே இப்பிரபஞ்சம்நட்சத்திரங்கள் என் கண் சிமிட்டல்கள், கருமேகங்கள் என் சிகைக் கூடுகள். வயிற்றில் உருண்டு புரளும் அமில அலையடிப்பே பேராழிகள். ஆயினும் நான் மீண்டும் என் வீட்டிற்கு திரும்பித்தான் ஆகவேண்டும். சினைப்பைக்குள் செல்ல நேரிடும் சிசுவைப்போல. வீடு சென்றதும் என் மீது ஓராயிரம் நிழல்கள் வந்து படிகின்றன. குறிப்பாக ஒரு வீட்டிற்குள் வாழ நேரிடும் மனிதன் பின்பற்றியே ஆகவேண்டிய நடைமுறைகள். அவற்றைத் தவிர்த்து என்னால் ஒருநாளும் வாழ முடிந்ததில்லை 

வீட்டின்  முற்றத்தில் நடுவகிடு எடுத்து வாரப்பட்ட கூந்தலைப்போல வழித்தடம். அதன் இருபுறமும் பச்சைப் புற்கள். பசுமை தளிர்த்த மினுக்கம். வெய்யில் புற்களின் மேல் பூரித்து நழுவும் பளீரிடல்கள். அறைக்குள் தனித்து அமர்ந்திருப்பேன்உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே பயன்படும் சிறிய நிலத் துண்டு அது. பாதுகாப்பு கருதி இப்பரந்த வெளியில் இருந்து அதைப் பகுத்து வைக்கும் கற்சுவர்கள். நிழல் வேண்டும் என்பதற்காக பாவப்பட்ட மட்டப்பா. சன்னலை ஒருநாளும் அடைப்பதில்லை. அதன்வழியே உலகம்   எட்டிப்பார்க்கும்.   வணக்கமும் நல்வரவும் அனுப்பும். விடியலி்ன் முதல் ஒலியை என்னிடம் கொண்டு வந்து சேர்க்கும். விழித்து எழுந்து அமர்ந்ததும் நான் பார்க்க விரும்பும் ஒளிர் வானத்தை அந்த சதுரத்திறப்பு எனக்காக கையில் ஏந்தி காத்திருக்கும். முன்பு எல்லாம் இருந்தன. உறவினர்கள், பிதுரார்ஜித நிலபுலங்கள், தோப்பும் துலாக்கிணறும். உடலில் காமமும் அதன் இடைவிடாத தவிப்பும்உல்லாசியாக வாழ விதிக்கப்பட்ட வாழ்வு. ஒரே பிள்ளை. ஆனால் ஒவ்வொன்றையும் கடந்து வரவேண்டும். ஒன்றும் இல்லாத வெற்றிடத்தைப்போல வாழ வேண்டும் என்பதை என் கனவாக தேர்ந்து கொண்டேன். மிகச்சிறிய வயதிலேயே ஏற்பட்டுவிட்ட எண்ணம். ஏன்? எப்போது? என்றெல்லாம் என்னால் தெளிவாக விளக்க முடியவில்லை. என் உள்ளுணர்வு ஏங்கியது. விட்டு விடுதலையாகும் வாழ்க்கையைத்தான். ஒரு சம்பவம் நீண்ட நாட்களாக என் நினைவில் .   

பள்ளிப்படிப்பை முடித்த உடன் வீட்டில் இருந்து ஓடிப்போனேன். ஆம்.   செல்லும் நோக்கம் என்று ஏதும் இல்லாத வெளியேற்றம். வீட்டைத் தவிர பிற இடங்கள் அனைத்தும் சுற்றுலா ஸ்தலங்கள். ஏன் ஓடிப்போகவேண்டும் என்று அப்போது தோன்றியது? என் வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையே இருப்பது ஒரே தெரு. ஓடைத்தெரு. தெருவினை அடுத்து ஊடறுத்து  ஓடும் சாக்கடை. அதன் இணைகோடாக வீடுகள். முன்பெல்லாம் தெருக்களின் ஊடாக ஓடும் கோடிகள் இருந்தன. தெருச்சுற்றி அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இரண்டு வீடுகளுக்கு இடையே இருந்த காலியிடத்தை நாங்கள் கோடி என்போம். மண் தரையாக இருக்கும். ஆனால் சுத்தமாக பராமரிக்கப்படும்இரண்டு வீட்டுக்காரர்களுக்கும் பொதுவான இடைவெளி. சில கோடிகள் புறக்கடையாக பயன்படுத்தப்படுவதுண்டு. அவை மூத்திரம் நாறிக்கிடக்கும். நுார்ஜகான் வீட்டு கோடி வழியே நடந்து சென்று ஐந்தே நிமிடத்தில் என் பள்ளியை அடைந்து விடுவேன். பல சமயங்களில் என் வீட்டில் பாட்டி சமைக்கும் வாசனையைகூட  பள்ளியில் இருந்தே கண்டு பிடித்துவிட முடியும்வெளியே நீண்ட தொலைவிற்கு செல்ல வேண்டிய தேவையோ நிர்ப்பந்தமோ எனக்கு ஏற்படவில்லை. தெருவின் நெற்றியாக இருந்த ஒரு வீட்டின்  மாடிதான் எனக்கு உலகத்தை திறந்து காட்டும்  அதிசயக் கண்ணாடி. ஆம். அங்குதான் பொது நுாலகம் இருந்தது. பள்ளியைவிட்டால்  நான் விழுந்து கிடக்கும் வேறொரு இடம். பொது நுாலகத்தின் துாசு படிந்த புத்தக அலமாரிகளுக்கு மத்தியில் வடதுருவத்திற்கும் தென்துருவத்திற்கும் திரிந்து கொண்டிருப்பேன். ஒருநாளில் அதிகபட்ச நிலக்காட்சிகளை அனுபவமாக்கிக் கொள்வேன். சித்திரக் கதைகளில் இருந்து படங்களே அற்ற புத்தகங்களுக்கு நான் வாசிக்க நுழைந்த போது அயர்ச்சியாக உணர்ந்து வந்த நீண்ட வர்ணனைகள் அதன்பிறகு எனக்கு அர்த்தமாகத் தொடங்கின. உரையாடல்களை விட நிலக்காட்சிகளின் சித்திரிப்புகள் என் கற்பனைக்கு கொண்டாட்டமாக இருந்தன. நான் லயித்து வாழ்ந்தேன்ஆனால் ஒரு கால கட்டத்தில் அவை போதாமல் ஆயின.அனுபவப் பூர்வமாக வேறுபட்ட நிலக்காட்சிகளை நேரில் கண்டு கொள்ள வேண்டும் என்ற விருப்பம்  தோன்றியது. அதுவே என்னை வீட்டைவிட்டு விரட்டியது. 

நீண்ட நடைமேடை. நீண்டது என்றால் அந்த வயதில் அது மிக நீண்டதுதான். வளர்ந்த பின்னர் அந்த ஆச்சரியம் ஏற்படவில்லைஅன்று என்னால் அதன் முடிவைக் காண முடியவில்லை. முடிவிலியின் இருளாக அந்த நடைமேடைடிக்கெட் வாங்கிக் கொண்டு நிலையத்திற்குள் நுழைந்தேன். நான் செல்ல வேண்டிய ரயில் பன்னிரெண்டு மணி எட்டு நிமிடத்திற்கு முதலாம் நடைமேடையை வந்தடையும் என்ற தகவல் மூன்று மொழிகளில் என் காதில்  விழுந்து கொண்டே இருந்தது. இரவிலும் நடைமேடையில் திருவிழாக் கூட்டம். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என குடும்பங்களாக சிதறிக்கிடந்தனர். என்னைப் போல சிறுவர்கள் யாராவது தனியாக இருக்கிறார்களா என்று  தேடினேன். யாரும் தென்படவில்லை. இரயில் வர ஒரு மணி நேரத்திற்கும் மேல் இருந்தது. கையில் அம்புலிமாமாவை சுருட்டி வைத்திருந்தேன். பயணிகள் அமர போடப்பட்டிருந்த சிமிண்ட் பெஞ்சில் ஒரு ஓரம் மட்டும் காலியாக இருந்தது. மற்ற பகுதியை அடைத்துக்கொண்டு ஆட்கள். நான் அமர்ந்து அம்புலி மாமாவை விரித்து வாசிக்க ஆரம்பித்தேன். என்னால் புத்தகத்திற்குள் ஆழ இயலவில்லை. சுற்றிலும்  ஒலிக்கலவைகள், தண்டவாளங்களில் ஏற்பட்ட அதிர்வுகள், மும்மொழியிலும் பயணிகளை ஆற்றுப்படுத்தும் அறிவிப்புகள் மற்றும் இட்லிகளை கூவி விற்கும் குரலோசைகள். ஒருநிமிட அமைதிக்காக  ஏங்கினேன். ஏனெனில் எனக்கு அமைதி அப்போது அவசியமாகப் பட்டது. எழுந்தடங்கும்  குரலோசைகள் என்னை ஒற்றறிவதாகப் பட்டது. அச்சத்தின் சாயை படிந்த நிழல்களை அவற்றின் இருப்பாக உணர்ந்தேன்அப்போதுதான் சட்டென்று  ஒரு துர்நாற்றம் காற்றில் நெருங்கியது.   

அமர்ந்திருந்த  இடத்திலிருந்து இரண்டு அடிகள் தள்ளி ஒரு குப்பைக் கூடை. அப்போது நிறைந்து வழிந்தது. அதன் மேல் மூடியை ஒருவன் நீக்கியிருந்தான். அதன் காரணமாகவே அந்த  நாற்றம் குப்பென்று கிளம்பி வந்தது. என்னைப் போல என் அருகே அமர்ந்திருந்தவர்களும் சிந்தனை கலைந்தார்கள். அவன் அழுக்கான கம்பளி ஆடைகள் அணிந்திருந்தான். அவை மிகுதியும் கிழிந்து நைந்து போயிருந்தனஇரண்டு பக்கப் பைகளும் ஏற்கனவே புடைத்திருந்தன. முழங்காலைத் தொடும் காற்சட்டை. அழுக்கும் பீடையும் அப்பியிருந்தன. அவன் வேகவேகமாக குப்பையை கிளறிக்கொண்டிருந்தான். உள்ளே இருந்து நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு எதையோ ஆவேசமாக வெளியே இழுத்தான். அது ஒரு துணிப்பை.   கெட்டுப்போன மீத உணவோ அல்லது பழங்களோ அல்லது கெட்டுப்போன உணவும் அழுகிப்போன பழங்களும் கூட இருக்கலாம். அதன் நாற்றம் ஒரு தினுசாக இருந்தது. பையினை அவன் பிரித்துப் பார்த்தான். கக்கத்தில் இடுக்கிக்கொண்டு மேலும் உள்ளே கிளறித் தேடினான். பத்து நிமிடங்கள் முடிந்த போது இரண்டு கைகளிலும் ஐந்தாறு பொதிகள். பயணிகள் உண்டு முடித்து குப்பை என்று வீசிச் சென்றவை. அவற்றில் இருந்து அவனுக்கான உணவை அவன் கண்டடைந்திருக்கிறான். அவன் முகம் உறைந்து இருந்தது. தேடிய போது கண்கள் ஒளிர்ந்தன. தேடிக் கண்டடைந்த பிறகு அவனிடம் முன்பிருந்த அந்த ஒளிர்வு காணாமல் ஆகியிருந்தது. அவன் அந்தப் பொதிகளோடு  என்னைக் கடந்து சென்றான். அவனை யாரோ ஒருவர் விரட்டி வருவதைப் போன்ற அவசரம் கொண்ட நடை. பொதிப்பைகளில் இருந்து ஊன் அழுகி நிணத்தோடு வழிவதைப் போல அழுகல் தெறிப்புகள். அவன் கடந்து சென்ற போது என் மீது மோதிய நாற்றங்களின் பேரலையை இப்போதும் நடுக்கத்தோடு உணர முடிகிறது. குமட்டிக்கொண்டு வர தண்டவாளப் பள்ளத்திற்கு சென்று வாந்தி எடுத்தேன். பெருங்கூவலோடு எதிர்த்திசையில் செல்லும் பயணிகள் ரயில் ஒன்று வந்து சேர்ந்தது. அமர்ந்திருந்தவர்களில் பாதிப்பேர் அந்த ரயிலில் ஏறிச் சென்றனர். நான் திகைத்து அமர்ந்திருந்தேன். என்னால் அந்த மனிதனை மறக்க முடியவில்லை. மனிதக் கழிவுகளில் உயிர்வாழும் ஒருவன். நாரணப்பேரியில் சில போது மெய்மறந்து அமர்ந்துகம்மாய் நீரில் படிந்து உருண்டு பாய்ந்தோடி வரும் தென்றல் மோதிய லயிப்பில்குந்தியிருக்கும்போது பின்பகுதியில் சீறிப்பாயும் மூச்சுக்காற்றால் உடல் புல்லரித்து எழுந்திருக்கிறேன். கூர் நாசி கொண்ட பன்றி ஒன்று வாலை ஆட்டிக்கொண்டு நின்றிருக்கும். நான் எழுந்து நிற்கக் கூட அவகாசம் அளிக்காமல் உண்ண ஆரம்பித்திருக்கும்அதன் பெருத்த  தோற்றத்தால் அச்சமடைந்து நகர்ந்து செல்வதைத் தவிர வேறு வழியிருக்காது 

ரயில் வந்து ஏறி அமர்ந்ததும் நான் அவனைத் தேடினேன். அவனை மீண்டும் ஒருமுறை பார்க்கும் ஆசை. அதுநாள் வரை அப்படி ஒரு வாழ்க்கைக் காட்சியை கண்டதே இல்லை. புத்தகங்களில் படித்திருந்தாலும் நேரில் காண்பது வேறுதான். உயிரோடு ஒருவனைப் பார்க்கும்போது அது ஏற்படுத்தும் எண்ணங்கள் வேறாக இருந்தன. கைவிடப்பட்டவனா? தன்னைத்தானே புறக்கணித்துக்கொண்டவனா? புத்தி பேதலித்தவனா? பித்துப்பிடித்தவனா? ஏன் இந்த இழிநிலையைத் தேர்ந்து கொண்டான்? அவனின் அதிக பட்ச சந்தோசம் என்பது அதிகம் நாறாத நான்கு இட்லிகளாகவோ, கெட்டுப்போகாத சட்னியாகவோதானே இருக்கும்நடைமேடையின் விளிம்பில் இருளுக்குள் இருளாக அவன் அமர்ந்திருந்தான். உற்றுப் பார்த்தால் அவன் அந்த பொதிகளுக்குள் இருந்து அள்ளி அள்ளி தின்றுகொண்டிருந்தது தெரிந்தது. அந்த உணவு உண்ணும் போது கூட அதே அவசரம். அவனிடம் இருந்து பிடுங்கக் காத்திருக்கும் கைகளை உத்தேசித்து செயல்படும் விரைவு. நான் எத்தனை பாதுகாப்பான வாழ்க்கையை வரமாக வாங்கி வந்திருக்கிறேன். சங்கடமாக உணர்ந்தேன். குற்றவுணர்ச்சி பெருகிறது. கூடவே கழிவிரக்கமும். என்னைச் சுற்றித்தான் எத்தனை தளைகள். ஆனால் வேறொரு எண்ணமும் வலுப்பெற்றது. நத்தை முதுகின்மேல் பெருஞ்சுமையை துாக்கித்திரிய வேண்டியதில்லை. வானமே வீடு என்று கொண்டால் போதும். மெல்லுடலிகளை வலுப்படுத்தும் முதல் தலைமுறையாக நான் இருக்க முயற்சிக்கலாம். சோதனை எலி. 

காற்றிலாடும் இலைகள். இலைகளின் ஓயா நடன அசைவுகள். அவை காற்றில் அசைகின்றன என்று போதம் கொள்கிறேன். காற்றின்  மாயக்கரம் என்று கொண்டால் அதை இசைக்கும் மனம் எது? இயற்கை என்ற பெயரில் எளிமைப்படுத்தி வருகிறோமா? இயற்கை என்ற சொல் எத்தனை பிழையானது. இயற்கை என்ற சொல் குறிக்கும் எவையும் இத்தனை எளிய கோலத்தில் இல்லையே. ஒரு சிற்றிலைக்குள் நுண்ணோக்கினால் எத்தனை உள்ளடுக்குகள் உள்மடிப்புகள் உள்பாய்ச்சல்கள். தீர்ந்து விடாத பிரமிப்பு 

இலைகள் துடிக்கின்றன. கிளைகளும் ஆடுகின்றன. மரங்களே பெருங்கூத்து இசைக்கின்றன. என் மொத்த உடலையும் காற்று அசைத்துப் பார்க்கிறது. என்னையும் புல்லென எண்ணிக்கொள்கிறது. என் உடல் துமிகள் கொண்டதுதான். ஆனால் கெட்டித்த துமிகளால் ஆனவன். நாற்பத்தெட்டு கிலோ எடையால் ஆனது என் இருப்பு. காற்று என்னை மோதிவிட்டு விலகிச் செல்வதை உணர்கிறேன். ரோமக்கால்களில் புல்லரிப்பு. மயிர்களின் அலைவுகள் உடலைச் சிலிர்க்கச் செய்கின்றன. இப்படியே நாள் முழுக்க என்னால் அமர்ந்திருக்க முடியும். பசிக்காமல் இருந்தால் போதும். இயற்கை உபாதைகள் படுத்தாமல் இருந்தால் போதும். ஆனால் இயற்கை மனிதனை மட்டுறுத்தும் சங்கடங்களை வழங்கியிருக்கிறது. அவன் பசி வந்தபோது வேறு ஒருவனாக மாறிப்போகிறான். சாதாரணமாக நாள்தோறும் வெளியேறும் கழிவு இரண்டு நாட்கள் தடைப் பட்டால் நோயாக மாறிவிடுகிறது. மனிதனின் இருப்பு நீர்க்குழிழி. நீரோடையில் மிதந்துசென்றாலும் கெட்டித்த காற்றைத் தன்னுள் கொண்ட நீர்க்குமிழி. உடைய விரையும் நீர்க்குமிழி. உடைந்து பேருருக்கொள்ளும் சிறிய நீர்க்குமிழி. 

தலையை இடைவிடாமல் உதறிக்கொண்டேன். யானையின் பிளிரிடலைப்  போல ரயில் எழுப்பும் கூவல். கடைசி நிறுத்தம் வரை டிக்கெட் எடுத்திருக்கிறேன். ஆனால் எனக்குத் தோன்றும் எந்த நிறுத்ததிலும் இறங்கும் உத்தேசமும் உண்டு. ஒரு பயணத்தை நிறுத்தும் எளிய பயங்கரவாதத்தை நான் எப்படி என்னியல்பாக மேற்கொள்ள முடியும். பயணம் முடிவற்று நீண்டால் நல்லது. சதா பயணி. முடிவற்ற பாட்டைகளில் என் சகடக்கால்கள் விரைந்து கொண்டிருக்கின்றன. பயணங்களின் முடிவில் வந்து சேரும் சோர்வு உடனே வீடு திரும்பும் ஆர்வத்தை ஏற்படுத்தும். வீடு திரும்பி செய்ய என்ன இருக்கிறது? நானும் என் அறைச்சுவர் பல்லிகளுமாக சேர்ந்து அமர்ந்திருப்பதைத் தவிர. அவை வேண்டுமானால் என் இருப்பின்மையை  பேரிழப்பாக உணர்ந்திருக்கலாம். நான் சென்றதும் விளக்கு ஒளிர்வு கொள்ளும். ஒரு மனிதன் வருகிறான். அவனோடு பேரொளியும் அறைக்குள் வருகிறது. அதுவரை அப்பியிருந்த இருள்வெளி காணாமல் போகிறது. ஆகவே அவன் தேவ துாதனாக இருக்கலாம். ஒளியைக் கொண்டு வருபவனை காணாமல் அறைச்சுவர் பல்லிகள் பரிதவித்திருக்கலாம். பல்லிகளை அஞ்சும் சுவர் பூச்சிகள் வேறு கண்கள் கொண்டு என்னைப் பார்க்கத்தானே செய்யும். மாபாவி. இதோ வந்துவிட்டான். ஒளியைக் கொண்டு வருவான். நாம் வேட்டையாடப் படக்கூடும். நாலு கால் பாய்ச்சலில் மரணம் நம்மைத்  தேடி வரக்கூடும். ஓடு. மறைவிடத்தை தேடி ஓடு. ஒளிந்து கொள். ஒளிந்து கொள். ஒளிந்து கொள். ஒரு அறை ஒரு மனிதனின் வருகை. இருவேறு உலகங்களின் ஊடாட்டங்கள். நான் அறிய முடிகிற உலகத்தின் சிறிய அவதானிப்பு. கட்புலனாகாமல் இன்னும் என்னென்ன உண்டோ? பேய்கள் என்றும் ஆவிகள் என்றும் சொல்லப்படும் வேறொரு உலகம் இருக்கத்தானே செய்கிறது. ஒரு அறைக்குள் நான் மட்டுந்தான் இருக்கிறேன் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நிச்சயமாக நம்ப முடியவில்லை. துயிலும் போது கனவுகளாக வந்து செல்லும் அனைத்தும் இந்த அறையைத் திறந்து எனக்குள் வருகின்றனவா? அல்லது என்னில் இருக்கும் இன்னொரு அறைக்குள் அவை இருக்கின்றனவா? அவ்வளவு பெரிய உலகத்தை என்னுள் இருக்கும் அறை கொண்டிருக்கிறதா? வெளியைப் போல உள்ளும் அளவிட முடியாத ஒன்றுதானா? நானே அதுவாக இருக்கிறேன் என்பது இதுதானா 

கடமைகளும் தளைகளும் அற்ற வாழ்வில் சந்தோஷங்களும் இல்லை. என் வாழ்வ சவால்கள் அற்றது. என் தேவைகள் எளியவை. மூன்று வேளையும் மிகச்சிறிய அளவில் உணவு உட்கொள்கிறேன். கஞ்சியும் வேகவைத்த காய்கறிகளும் போதும் எனக்கு. உடலிச்சையைத் தவிர்க்க உதவும் என்பதனால் உள்ளி, பூண்டுகளைச் சேர்த்துக்கொள்வதில்லை. மாமிசம் அறவே ஆகாது. உணவு ருசிகளும் வண்ணங்களும் அற்று இருக்கும்போது உடலும் அவ்விதமே ஆகிவிடுகிறது. அதன் பரவசங்கள் வற்றிப் போய்விடுகின்றன. உணர்ச்சிகள் துார்ந்து விடுகின்றன. அதிக பட்ச ஒலியோடு நான் வாய்விட்டு சிரித்தே பல ஆண்டுகள் இருக்கும். துறவியாக வாழ வேண்டும் என்று எண்ணியதைப் போல அமையவில்லை துறவியாக வாழ்வது. நான் துறவியா? இல்லை. வெள்ளுடைகள் அணிகிறேன். துறவிக்குரிய எந்த ஒழுக்கங்களும் பாவிப்பதில்லை. நியமங்களோ  சடங்குகளோ என்னிடம் இல்லை. நான் என்னவாக இருக்கிறேன். எனக்கேதெளிவாகத் தெரியவில்லை. போகியும் இல்லை யோகியும் இல்லை. எனில் நான்யார்? 

முன்பு மனிதர்களின்மீது தீராத சலிப்பினைக் கொண்டிருந்தேன். ஏன் என்றால் என்னை அறிவுஜீவியாக எண்ணியதால் வந்த நோய்மை. அறிவு என்பதென்ன? என் சுய அனுபவத்தில் அதன் பங்குதான் எவ்வளவு? அத்தனையும் கடன் வாங்கப்பட்டவை. யாருடைய அனுபவத்தையோ என்னுடையதாக நம்பிக்கொள்ளும் மடமை. அறிவினைக் கைவிடவேண்டும் என்று நான் அறிந்து கொண்டபோது என் ஆளுமையின் பெரும்பகுதி கடன்வாங்கப்பட்ட சொற்களால் நிரம்பியிருப்பதைக் கண்டேன். பெரும் துக்கம். என் எண்ணங்களாக உருப்பெறும் சொற்கள், சிந்தனை ஒளிர்வுகள், மின்னல் வெட்டென வந்துபோகும் தரிசனங்கள். இவையெல்லாம் எங்கெங்கோ இருந்து நான் அறிந்து கொண்டவை அன்றி வெறென்ன? இதில் தனித்த அடையாளம் என கர்வம் கொள்வதில் என்ன இருக்கிறது 

கண்களில் தென்படும் மனிதர்களைப் பார்க்கிறேன்.அவர்களைப் போல எளிய வெற்றிகளில் பேரின்பம் காண முடியாதா என்று ஆசை. சின்ன காரியங்கள் கைகூடினால் போதும். பேருந்தில் சன்னலோர இருக்கை, பார்க்கச்சென்ற அரசு அதிகாரி யை உடனே பார்க்க முடிகிற வாய்ப்பு, ரேசன் கடைகளில் அதிகம் கெட்டுப்போகாத உணவுப் பொருட்கள், இரண்டு இட்லி வாங்கியபோது கூடவே பத்து இட்லிகள் சாப்பிடப் போதுமான சாம்பார் பாக்கெட்ரயிலுக்காக காத்திருக்கும்போது எதிரே அமர்ந்திருக்கும் கன்னியின் கடைக்கண் பார்வையும் புன்னகையை ஒளிக்க முயலும் பாவனையும். சிறிய பரிசுகள். இதற்கே சாமானியர்கள் உச்சி குளிர துள்ளிக்குதித்து அமர்ந்திருக்கிறார்கள்நான் ஒரு மரத்தின் ஒரு கிளையைக் கண்டு குதுாகலித்து அமர்ந்திருப்பதைப்போல. மரம் இயற்கை என்றால் மங்கையும் அவள் தரும் போதையும் இயற்கை தானே. ரேசன் கடை அரிசியும் இயற்கையின் ஒரு கூறுதானே. 

நான் தான் என்னை கடும் சிக்கலாக்கிக்கொள்கிறேன். சாமானியர்களுக்கு சங்கடங்கள் அதிகம். வறுமையும் இல்லாமையும் நித்தியம். அவர்கள் அத்தனைக்கும்  ஆசைப்படுவதில்லை. அவர்களுக்கே தெரியும் தங்களுக்கு விதிக்கப்பட்டவை எவை என்று. அதைநோக்கி மட்டுமே அவர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். சராசரிகள் என்று எளிய வார்த்தையால் அவர்களை மட்டந்தட்டுகிறோம். ஆனால் அவர்களிடம் இருக்கும் தெளிவும் தீர்க்கமான தேடலும் என்னிடம் இல்லைநான் எந்தவித இலக்கும் இல்லாமல்இருக்கிறேன். இலக்கற்றவனுக்கு அடைய ஒன்றும் இல்லை என்றாலும் அடைவதன் மகிழ்ச்சியும் இல்லாமல் போகிறது. உடலின் பரவசங்களை புறக்கணிக்கிறேன். என்னால் ருசியான உணவு உண்ண முடியவில்லை. பெண்ணுடலின் உஷ்ண பேதங்களை அறிய இயலவில்லை. இயற்கை என்று வெட்டவெளியில் தாவரங்களோடும் பறவைகளோடும் விலங்குகளோடும் கலந்து நிற்கிறேன். சக மனித உயிரை மட்டும் தவிர்க்கிறேன். என்னுடல் எதிர்பாலின உடலிற்காக இச்சை கொண்டு அலைவதை மட்டுப்படுத்துகிறேன். அவை அத்தனை ஒன்றும் அவசியம் இல்லை என்று போதம் கொள்கிறேன். புத்தன் கிளம்பிச் சென்ற இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்று என்னை நானே எச்சரித்துக் கொள்கிறேன் 

பேரரசு, பெருஞ்செல்வம், அழகிகள் நிறைந்து வழியும் அந்தப்புரம். சித்தார்த்தன் அங்கிருந்து தானே கிளம்பிச் சென்றான். சித்தார்த்தனின் அகத்தை நான் கடனாகப் பெற்றுக்கொள்கிறேன். சித்தார்த்தன் கிளம்பிச்சென்ற இரவு ஒரு மகத்தான நிசி. துயிலும் அழகிகள் அவனைத் துரத்துகின்றனர். பொருளற்ற இரவு. செல்வம் அர்த்தம் அளிக்கவில்லை. ஆணவத்தை நிரப்பும் அரசதிகாரம் அலுத்துவிட்டது. எனில்  சோறும் யோனியும் சிம்மாசனமும் நிரப்பாத வெற்றிடத்தை என்ன செய்வது? யாரிடமும் சொல்லத் தோன்றாமல் கிளம்பினான் புத்தன். அங்கிருந்தே நானும் என் பயணத்தை ஆரம்பித்தேன். எனக்கும் புத்தனுக்கும் இடையே இருப்பது மனிதர்களின் பெருங்கணக்கான காலம். உண்மைக்கு காலம் இல்லை. உண்மையை காலத்தின் அடிப்படையில் பகுக்கவும் முடியாது. நாங்கள் இதோ இக்கணம் கிளம்பிச் செல்கிறோம்.புத்தனின் சலிப்பு என்னுடையதும். புத்தனின் தவிப்பு என்னுடையதும். புத்தனின் தேடல் என்னுடையதும். நான் நகல் செய்கிறேனா? 

யோசித்தால் என்னை திகைக்கச் செய்யும் ஒன்று மனிதர்கள்் கணந்தோறும் ஆற்றும் காரியங்கள்தான். ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்பரம்பரைச் சொத்தாக எனக்கு வாய்க்க இருந்த பெருஞ்செல்வத்தை நான் துறந்து வந்தவன் என்பதை. செல்வம் ஒருவனை என்ன செய்யும் என்பதை என் தந்தையை அவரின் தந்தையை நான் பார்த்து அறிந்திருக்கிறேன். செல்வம் சேரும் போதெல்லாம் நுகர்வின் வெறி அதிகரித்து வருகிறது. ஆண் என்றால் அகங்கார நிறைவிற்காகவும் உடலின் இச்சைகளுக்காகவும் பெரும் செல்வத்தை வீணடிக்கிறார்கள். சரி. செல்வத்தின் பயன் அதுவுந்தான். அவற்றில் இருந்து அவர்கள் பெரும் ஞானம் என்று ஏதேனும் இருக்கிறதா? அவர்களின் ஆசைகள் அடங்கி ஓய்ந்திருக்கிறதா? மேலும் மேலும் அழகிகளைத் தேடிய அவர்களின் ஓட்டங்கள் என்று ஓய்ந்தன. காலிடுக்கு புண்கள் அப்பாவைப் பலிகொண்டன. தாத்தா கள்ள உறவின் அரிவாள் வெட்டுக்கு பலியானார். பெரும் செல்வத்தின் பயன் இதுதானா? 

மற்றொரு சாரார் இருக்கிறார்கள். செல்வத்தை துய்ப்பது கூட அவர்களால் ஆகாது. சேர்ப்பதில் மட்டுமே இன்பம் காண்பவர்கள். அவர்களால் செல்வத்தின் பயன் என்ன என்பதை அறிந்து கொள்ளவே முடியாது. அற்பர்கள். ஆனால் பெரும் செல்வத்தை காலின் கீழே போட்டு மிதித்துக்கொண்டிருப்பார்கள். பெருஞ்செல்வர்கள்தான் ஞானத்தை அடையும் முன்னுரிமைப் பட்டியலில் முதலில் இருப்பவர்கள். அவர்கள் முயன்றால் எளிதாக அடைந்துவிடக் கூடும். உண்மையில் அப்படி ஏதேனும் நடக்கிறதா? சூதாட்டத்தைப் போல ஒரு தலைமுறை சேர்க்கும் செல்வத்தை அடுத்த தலைமுறை அழிக்கிறது. மூன்றாம் தலைமுறை செல்வம் சேர்க்கும் பேராசையோடு தன்னையே இழந்து நிற்கிறது. யோசித்துப் பார்த்தால் சில நேரங்களில் துக்கத் தாளாமல் சோர்ந்து விடுவேன். அத்தனை மனித முயற்சியும் பணத்தை நோக்கியோ அல்லது நுகர்வை நோக்கியா மட்டுந்தான் இருக்கிறது என்ற எண்ணம் தரும் சோர்வு மீள முடியாதது 

செல்வத்தின் பயன் துய்த்தல். துய்த்தலின் பயன் விட்டு விடுதலையாதல். இதுதான் என் எதிர்பார்ப்பு. இங்கே நடக்கும் காரியங்கள் என்னவாக இருக்கின்றன. செல்வத்தையும் துய்ப்பதையும் துறந்ததன் காரண காரியங்கள் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் பாருங்கள் இத்தனைக் கோடி மனிதர்களில் துறந்து செல்பவர்களின் எண்ணிக்கை எத்தனை என்று எண்ணிப்பாருங்கள். துறந்து செல்பவனை நல்வழிப்படுத்த இங்கே எத்தனை அமைப்புகள் அல்லது வழிகாட்டிகள் என்பதை நினைத்துப் பாருங்கள் 

என் முன்னே புத்தனின் காலடிச்சுவடுகள் இருப்பதாக நம்புகிறேன். போலிகளின் கும்பல்தடங்களுக்கு மத்தியில் புத்தனின் அச்சினை கண்டுகொள்ளும் சங்கடத்தை தவிர்த்தால் தேடல் எளிதானது. உள்ளும் வெளியும் பிரிந்துகிடக்கும் சல்லாத்துணிதான் என் பிரக்ஞை. அதை இழப்பதே என் அலைவு. அலைந்து திரிந்து ஒருநாள் நான் என்னை பொதிந்து வைத்திருக்கும் சல்லாத்துணியை துார்ப்பேன். அப்போது என்னை  நீங்கள் எதிர்கொள்ள நேரிட்டால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். நான் என் நிழலாக மட்டுமே காணக்கிடைப்பேன். 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *