ஜெயந்தி கார் ஓட்டுவது புதிதல்ல. இந்த நகரின் எந்த மூலை முடுக்கிலும் அவளால் கார் ஓட்டிக் கொண்டு சென்றுவர முடியும்.  ஆனால் நகரின் இந்தப் பகுதி மிகவும் நெரிசலாக இருந்தது. வாகனங்கள் சட்ட விதிகளின்படி நகராமல், தங்கள் ஓட்டுனரின் மன விருப்பப்படி நகர்ந்து கொண்டிருந்தன.  சின்னதும் பெரியதுமான டிரக்குகள், மினி வேன்கள், பஸ்கள், இன்னும் எத்தனை வடிவங்கள் உண்டோ அத்தனை வடிவங்களிலும் வாகனங்கள், அவள் காருக்கு முன்னும் பின்னும் மிக நெருக்கமாக நகர்ந்து கொண்டிருந்தன.  பைக்குகள் ஸ்கூட்டர்கள் சிறு கொசுக்களைப் போல் நினைத்த நேரத்தில் இடுக்குகளிலெல்லாம் பாய்ந்து கொண்டிருந்தன. ஜெயந்தியின் அருகில், வனஜா அமர்ந்து, அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  ’ஆட்டோவில் போய்விடுவோம்’ என்று கிளம்பும் போது வனஜா சொன்னாள்.  அதற்குப் பதிலாக ஆட்டோக்காரர்கள் பற்றி ஜெயந்தி பெரிய விரிவுரை நிகழ்த்தினாள். “அம்மா, போதும்.. உன் காரிலேயே போகலாம்’ என்று சொல்லிவிட்டாள். 

அன்று முகூர்த்த நாள். ஜெயந்தி, விலையுயர்ந்த பட்டுப் புடவை அணிந்திருந்தாள். கழுத்தில் பல தங்க நகைகள். கைகளில் பல ரகமான தங்க வளையல்கள்.  ஏதோ விக்கிரகத்துக்குப் போட்டுவிட்டது மாதிரி இருந்தாள். அவள் விக்கிரகம் போன்ற அழகுதான்.  சிலருக்குப் பல அதிர்ஷ்டங்கள் அமைந்துவிடுகின்றன. அவளுக்கு அப்படித்தான். அவளுடைய கணவர் பெரிய வணிகர். நகரின் முக்கிய வணிக வளாகத்தின் உரிமையாளர். அது தவிர ‘ஃபைனான்ஸ்’ஸும் பண்ணிக்கொண்டிருந்தார்.  அவ்வப்போது நிலங்கள், வீடுகள் வாங்கி விற்றுக் கொண்டிருந்தார்.  ஆட்டோவில் போய் திருமண வீட்டில் இறங்குவது அவளுடைய, கௌரவத்துக்கு இழுக்கு. எவ்வளவு நெரிசலாக இருந்தாலும், நடுரோட்டில் காரை நிறுத்த வேண்டிவந்தாலும் அவளை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். காரின் மாடல் அதைக் கவனித்துக் கொள்ளும். சில அடையாளங்களை கண்டு சட்டம் வளைந்து கொள்ளும். 

வனஜா நேர் மாறாக இருந்தாள்.  அரசுத்துறை ஒன்றில், வேறொரு நகரத்தில், பெரிய அதிகாரியாக இருந்த அவள் இந்தத் திருமணத்துக்கென்றே வந்திருந்தாள்.  எளிய பருத்திப் புடவையை அணிந்துவந்த வனஜாவைப் புதியதாகப் பட்டுப்புடவை வாங்கச் சொல்லி வற்புறுத்தி, அதை உடுத்தவும் வைத்து, ஜெயந்தி அழைத்து வந்தாள். நகரின் போக்குவரத்தை உத்தேசித்தும், பார்க்கிங் பிரச்சனைகளை நினைத்தும், ஆட்டோவில் போகலாம் என்றிருந்த அவளை, காரில் கூட்டிக் கொண்டு வந்ததும் அவளே.  ஜெயந்தி அணிந்திருந்த ஏராளமான நகைகளும் அதற்கொரு காரணம் என்று வனஜா புரிந்துகொண்டிருந்தாள்.  படித்துப் பட்டம் பெற்று, தேர்வுகள எழுதிப் பதவிகள் பெற்றால்தான் முன்னேற்றம் என்று அந்தக்காலத்தில் தான் நினைத்தது தவறு என்று வனஜாவுக்குத் இப்போது தோன்றியது. அவள் படித்து, அகில இந்தியத் தேர்வுகள் எழுதவில்லையெனில் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்பது உண்மை. ஆனால் எல்லோருக்கும் அப்படி அல்ல.  

ஜெயந்தி மிகக் கவனமாகக் காரை ஓட்ட வேண்டியிருந்தது. அவள் திறமையான காரோட்டி. வனஜாவிற்கு வியப்பாக இருந்தது.  படிப்பில் மக்காக இருந்த ஜெயந்தி, இவ்வளவு பெரிய வசதி உள்ளவளாக வருவாள் என்று அவள் நினைத்ததில்லை.  போக்குவரத்து நெரிசலில் வனஜா அதிகம் பேச்சுக் கொடுக்கவில்லை. ஆனால் ஜெயந்தி, மற்ற வாகன ஓட்டிகளுக்குச் சமமாக, நெளிந்து வளைந்து, விதிகளை மீறி ஓட்டிக் கொண்டு, இந்த நகரத்தின் முக்கியப் பிரஜையாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்தாள்.  ’ஆட்டோவில் வந்திருந்தால் பேசிக் கொண்டே வந்திருக்கலாம்’ என்றாள் வனஜா. ‘பேசிக் கொண்டிரேன். உனக்கென்ன? நான் தானே ஓட்டுகிறேன் எனக்கொன்றும் அதில் பிரச்சனையில்லை’ என்றால் ஜெயந்தி.

ஒரு வழியாக அந்தத் தெருவிலிருந்த ஒரு மாபெரும் திருமண மண்டபத்தை அவர்கள் வந்தடைந்தனர்.  ’உள்ளே கார்பார்க்கிங் நிரம்பி வழிகிறது’ என்று சொன்ன கேட்டில் நின்ற செக்யூரிடி, வாசலுக்கு எதிர்ப்புறத்தில் பார்க் செய்திருந்த ஒரு கார் நகர்வதைச் சுட்டிக் காட்டி ‘அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்றான். அவளும் அந்த இடத்தில் பார்க் செய்தாள். 

வனஜா கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்து. ஏழு கிலோமீட்டர்கள் வந்திருக்கிறார்கள். ஒரு மணி நேரம் ஆகிவிட்டது முகூர்த்த நேரம் முடிந்திருக்கும்.  உள்ளே நுழையும் போது, ரிசப்ஷனில் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள் போல் நின்ற மூன்று இளம்பெண்களைப் பார்த்தாள். அவர்களும் நகைகளைக் காட்டுவதற்காகவே அசைகிறவர்கள் போலிருந்தது.  அவர்களும் ஜெயந்தியை மிகவும் கூர்மையாகக் கவனித்தார்கள். அவள் என்ன உடை உடுத்திருக்கிறாள்? என்னென்ன நகைகள் அணிந்திருக்கிறாள்? எப்படிப்பட்ட பூச்சுக்கள், அலங்காரங்கள் செய்திருக்கிறாள்? இவையெல்லாம், அவர்களுக்கு முக்கியமாக இருந்தன. அவர்களைக் கடந்து சென்ற ஒவ்வொருவரும், பார்வையால் மற்றவர்களுடைய நகைகளின் எடைகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்குப் புன்னகையும் இதமான முகங்களும் தனியாகக் கிடைத்தன. 

ஒருவழியாக பெரிய ஹாலுக்குள் வந்த பொழுதுதான், அதன் பெரும்பரப்பு தெரிந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் அமர்ந்திருந்தார்கள். நூற்றுக் கணக்கானவர்கள், வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.  ஜெயந்தியும், வனஜாவும் மணமக்கள் நிற்கும் மேடையை நெருங்கவே வெகுநேரம் ஆகும் என்று புரிந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. அவர்கள் இருவரையும் யாருக்கும் தெரியாது. மணமகனின் தாயைத்தவிர இருவருக்கும் வேறு யாரையும் தெரியாது. மணமகனின் தாய் மேடையில் அவர்களிடமிருந்து வெகு தொலைவில் நின்றிருந்தாள்.  வரிசை மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. வனஜா, மண்டபம் முழுவதையும் நோட்டமிட்டாள்.  உணவருந்தும் இடத்திலும் பெரும் கூட்டம் வரிசையில் நின்று கொண்டிருந்தது.  வனஜாவுக்கு அயற்சியாக இருந்தது. இன்னும் எத்தனை மணிநேரம் ஆகும் என்று அவளுக்குத் தெரியவில்லை. யாருடைய நேரமும் வீணாவது குறித்து யாரும் கவலைப்படவில்லை. நமது பண்பாடு என்று நினைத்துக் கொண்டாள். உடனே அந்த நேரத்தைப் பயன்படுத்தி என்ன செய்துவிட முடியும் என்று அவளுக்கும் தோன்றியது. அதுவும் பண்பாட்டின் கனம் என்றும் நினைத்தாள்.

மணமகனின் வீட்டாரைப் போல் தெரிந்தவர்களைப் பார்த்த வனஜா, அவர்கள் முகத்தில் காலையிலிருந்து அலைந்து திரிந்த களைப்பு பரவியிருப்பதைப் பார்த்துப் பரிதாபப்பட்டாள். எல்லாவற்றையும் வேலைக்கென வந்திருந்த ஆட்கள் பார்த்துக் கொண்டாலும், மணமகனின் அப்பா, எழுந்திருக்க முடியாமல், ’எப்போது படுக்கப் போவோம்?’ கேட்பது போலிருந்தது.  விருந்தினர்கள் ஒன்றிரண்டு பேர்கள் வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் வேகவேகமாக வந்து நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.  வேகவேகமாக வரிசைகளில் நின்றனர். மிக மெல்ல நகரும் வரிசைகளில் நின்று, ஒவ்வொருவரும் மணமக்கள் நினற இடத்துக்கு அருகில் செல்வதற்கே ஒரு மணிநேரம் ஆனது. ‘என்ன கூட்டம் என்ன கூட்டம்?’ ஒவ்வொருவரும் பெருமையாகப் பேசிக் கொண்டும், சலித்துக் கொண்டும், இருந்தனர் அப்படி ஒரு திருமணத்தில் பங்குபெற்றது பெருமை என நினைப்பது அவர்கள் முகங்களில் தெரிந்தது. 

அரங்கம் முழுவதும் நாற்காலிகளில் ஆடைகள் பளபளக்க மனிதர்கள் அமர்ந்திருந்தார்கள். பக்கவாட்டில் ஒரு மேடையில் பத்துப் பேர்கொண்ட ஒரு இசைக்குழு சினிமாப்பாடல்களை இசைத்துக் கொண்டிருந்தது.  நெஞ்சதிரும் இசையின், தாளத்தின் ஒலிகளும் அடிகளும், நெஞ்சங்கள் இடிகள் போல் அதிர்ந்தன.  அந்த அருமையான இசையலைகளை யாரும் பொருட்படுத்தியது போல் தெரியவில்லை. இரைச்சலில் அருகிலிருந்த ஜெயந்தியுடன் பேசுவதற்கே வனஜா கூக்குரலிட வேண்டியிருந்தது.  பெரும்பாலும் அவர்கள் அமைதியாகவே இருந்தனர். வனஜா ஹாலில் அலங்காரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  ஹாலின் நடுவில் பத்தடி விட்டமுள்ள பெரிய சாண்ட்லியர் தொங்கிக் கொண்டிருந்தது. அது எப்பொழுது விழும் என்று வனஜாவுக்குத் தோன்றியது. வண்ண வண்ண விளக்குகள் கண்களை கூச வைத்துக் கொண்டிருந்தன. காலுக்குக் கீழே கார்பெட் மென்மையாக இருந்தது. மணமக்கள் இருந்த மேடையைத் தவிர வேறு எதையும் கவனிக்க முடியாதபடி அங்கே ஒளி வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. அவ்வப்போது வீடியோகிராஃபர்கள், போட்டோகிராஃபர்களின் ஆணைகளின் படி மேடையில் எல்லோரும் அசைந்து கொண்டிருந்தனர்.  இது செல்ஃபிக்களின் யுகம். 

அவ்வப்போது வரும் பிரபலங்கள், வரிசைகளை மீறி குறுக்கே அழைத்துச் செல்லப்பட்டு, தங்கள் நாகரீகத்தைக் காட்டிக் கொண்டிருந்தனர்.  வனஜாவுக்கு எரிச்சலாக இருந்தது. மற்றவர்கள் தாங்கள் இப்படி அவமானப்படுத்தப்படுவதை மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டிருந்தனர். ’இதுமாதிரி தமக்கு மட்டும் தனி முன்னுரிமை கிடைப்பதில் பெருமைகொள்ளும் பிரபலங்கள், அதை அளிப்பதில் பெருமை கொள்ளும் விழாக்காரர்கள், அதைச் சகித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் இவையெல்லாம் ஒரு பெரும் தொற்று நோயின் அடையாளங்கள்’ வனஜா உரத்த குரலில் ஜெயந்தியிடம் சொன்னாள். ’ஆமா, இங்க நடைமுறை இதுதான்’ என்று இரைந்ததுடன் ஜெயந்தி நிறுத்திக் கொண்டாள்.  காட்டுத்தனமாக, மிக மோசமான பாலுறவு அர்த்தங்களைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளை நினைவூட்டும் பாடலின் இசை, அநாகரீகத்தின் உச்சமாக வனஜாவுக்குத் தோன்றியது. இதுவெல்லாம் ஜெயந்திக்கோ அல்லது மற்றவர்களுக்கோ தோன்றுமா இல்லையா? அதுவும் பண்பாட்டின் அடையாளம். 

ஒரு வழியாக, மணமக்களின் அருகில் சென்ற போதுதான், இருவரின் தோழியான டாக்டர் லட்சுமி இருவரையும் பார்த்தாள். அதுவரை பிளாஸ்டிக் புன்னகையை அள்ளி வீசிக் கொண்டிருந்த அவள் அப்போதுதான் நிஜமாகப் புன்னகைப்பதை வனஜா கவனித்தாள். “எப்ப வந்தீங்க’ ’இருங்க, இந்த குருப் போட்டோ எடுத்துட்டுப் போகட்டும்’ என்றாள். அவர்கள் இருவரும் ’அப்பதே வந்துட்டோம்’ என்று சொன்னது இரைச்சலில் லட்சுமியின் காதில் விழ வாய்ப்பே இல்லை. உதட்டசைவில், கையசைவில் அதை யூகித்திருக்க வேண்டும். மணமகனின் கையில் இருவரும் பணக்கவரைக் கொடுக்கும் போது, ‘என்னுடைய பள்ளித் தோழிகள்’ என்று டாக்டர், அறிமுகப்படுத்திய போது, மணமக்கள் இருவரும், இன்னொரு முறை பிளாஸ்டிக் புன்னகையை அள்ளி வீசினர். பிறகு ‘சாப்பிட்டு விட்டுப் போங்க’ பாதி சைகையும் பாதிச் சொல்லுமாகச் சொன்னாள் லட்சுமி.  முப்பது வருடங்கள் கழித்துப் பார்க்க வந்த தோழிகள், அந்தச் சந்திப்பில் பேசிக் கொண்டது இவ்வளவுதான் என்பதை நினைத்துப் பின்னாளில் போனில் பேசிக் கொண்டபோது சொல்லி வனஜா வருத்தப்பட்டாள். 

ஹாலிலிருந்த கூட்டத்தில் இடித்துக் கொண்டும் நெருக்கிக் கொண்டும் உணவருந்தச் சென்ற போது, உணவுக்கூடம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. உணவு உண்டு கொண்டிருந்த ஒவ்வொருத்தருக்குப் பின்னாலும் இரண்டு இரண்டு பேர் இடத்துக்காகப் போட்டியிடக் காத்துக் கொண்டிருந்தனர்.  அதைக் கண்டு பின்வாங்கிய ஜெயந்தியும் வனஜாவும், வெளியே வந்த போது, இன்னொரு இடத்தில் சிலர் உணவு உண்டு கொண்டிருப்பதைப் பார்த்தனர்.  அந்த அறையின் வாசலில், ஒரு செக்யூரிடி நின்று கொண்டிருந்தார். பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர், ’இது பிரபலங்கள் மட்டும் சாப்பிடும் இடம்’ என்று சொன்னார்.  வனஜாவுக்கும் இன்னும் எரிச்சலாக வந்தது. ‘வீட்டுக்குப் போய்விடலாம்’ என்று ஜெயந்தியிடம் சொன்னாள். ‘சாப்பிடாமப் போய்விட்டோம் என்று தெரிந்தால், லட்சுமி கோபித்துக் கொள்வாள்’ என்றாள் ஜெயந்தி. வேறு வழியில்லாமல், மீண்டும் பொது உணவுக்கூடத்துக்கே இருவரும் விரைந்து சென்று வரிசையில் நின்று கொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து இருவரும் திருமண மண்டபத்தை விட்டு வெளியே வரும்பொழுது, அந்த குளிரூட்டப்பட்ட மண்டபம், அடுப்பங்கரையாகச் சுட்டுக்கொண்டிருந்தது. வாசலில் ஒரு வயதான மனிதர் நின்று கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து ‘என்ன கூட்டம்! இப்படி ஒரு திருமணத்தைப் பார்த்ததே இல்லை!’ என்றார். அதற்கு என்ன அர்த்தம் என்று வனஜா யோசித்தாள்.  வெளியேயும் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. மண்டபத்தின் உள்ளே வரும் கார்களுக்கும் வெளியே போகும் கார்களுக்கும் யார் முதலில் போவது என்ற போட்டி மாதிரி இருந்தது. 

இருவரும் ஜெயந்தியின் வீட்டுக்குப் போய்ச்சேர இன்னொரு மணிநேரம் ஆகிவிட்டது. மாலையில், வனஜா விமானத்தைப் பிடிக்கவேண்டியிருந்தது. இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது.  தன்னுடைய பருத்திச் சேலையை உடுத்திக் கொண்ட வனஜா, ‘ச்சே, பட்டுப் புடவையக் கட்டுனா, ஏதோ பாரத்தைச் சுமப்பது போல இருந்தது’ என்றாள். 

’பட்டுப் புடவைகளின் அழகிலும் டிசைனிலும், அவற்றைக் கட்டுவதால் அதிகரிக்கும் அழகையும் வனஜாவுக்கு ரசிக்கத் தெரியாதோ’ என்று ஜெயந்திக்குத் தோன்றியது. ’நீ இப்படிச் சொல்றே. இங்க பட்டுப்புடவையைக் கட்டிக்கிட்டுப் போகலைன்னா, ஏதோ பரம ஏழைன்னு பரிதாபமாகக் பாப்பாங்க’

’யார் என்ன நினைச்சா நமக்கென்ன?  ஆமா, இன்னோன்னையும் கவனிச்சேன். நிறைய நகை போட்டிருந்த உன்னைப் பார்த்ததும், ரிசப்ஷன்ல இருந்து, எல்லா இடத்திலயும் மரியாதையோட பாத்தாங்க. யாருன்னே தெரியாதவங்க. நகை பேசும் மொழி எல்லாத்துக்கும் புரியுது.  மனிதர்களுக்குத் தானே மரியாதை. பொருட்களுக்கா?’ என்றாள் வனஜா. 

’அதனாலதான், எல்லோரும் போட்டுக்கிட்டு வந்து காட்றாங்க.  நாம கார்ல போறதும் அது மாதிரிதான். இவளா? இந்தக் காரா? அப்படீன்னு பாப்பாங்க. நீயெல்லா நினைக்கிற மாதிரி யோசிக்கிறவங்க இங்க யாருமில்ல’. 

’நிறையப் பேரு, உணவுப் பொருட்களை வாங்கிவாங்கி, சாப்பிட முடியாம வேஸ்ட் பண்றாங்க. ஏன் இருபது முப்பது ஐட்டம் போடறாங்கண்ணே தெரியல’ என்றாள் வனஜா.

’அத்தனை போடலைன்னா, என்ன சாப்பாடு போட்டாங்கன்னு பேச்சுவரும்’

’எதுவெல்லாம் திருமணத்துக்கு, நல்ல வாழ்க்கைக்குத் தேவையில்லையோ அதெல்லாம் பாக்றாங்கன்னு தோணுது. நாளு நட்சத்திரம், முகூர்த்தம், சீர், சினத்தி இதையெல்லாம் பாத்து, பொண்ணுக்கும் பையனுக்கும் மனப்பொருத்தம் இருக்காங்கிறதப் பாக்க மாட்டேங்குறாங்ல்ல’ என்று இப்படி எதையும் பார்க்காமல் நடந்த தன் திருமணத்தை நினைத்துக் கொண்டே பேசினாள் வனஜா. 

’அதை ஏன் கேக்ற.. நீயாவது லவ் மேரேஜ். அவரு கொஞ்சம் தேவல. எங்க வீட்ல. பணம், நகை,சீர் செனத்தி, திருநாளு, பொங்கல், தீபாவளி, அதைச் செய், இதைச் செய்யுன்னு, பேரன் பேத்தி வரைக்கும் எதிர்பார்க்கிறாங்க.  இன்னும் அம்மா அப்பா செஞ்சிக்கிட்டே தான் இருக்காங்க.  அவங்ககிட்ட இருக்கு செய்றாங்க. மத்தவங்க என்ன செய்வாங்க? அதைச் செய்றதுல பெருமை பீத்தல் வேற. பெத்தவங்களுக்கும் சரி, புகுந்த வீட்லயும் சரி’

’அடுத்தவங்க பைசாங்கிற எண்ணமே கிடையாது. ஃப்ரீயா கிடைச்சா எதுவும் வாங்கிக் கிடுவாங்க. அது ஏன்? குடுன்னு கேக்கவும் செய்வாங்க. குடுக்கலைன்னு தெரிஞ்சா, அதுக்குச் சண்டையும் போடுவாங்க’

’இதுதான் நமது ஐயாயிர வருஷ நாகரீகம்? பிச்சை எடுக்கிறது. அதுக்காக மிரட்றது. அதை கௌரவம், அங்கீகாரம்னு நினைக்கிறது. ஆனா ஊரு ஊருக்குக் குப்பையும், சாக்கடையும், மழபெஞ்சா, வெள்ளமும் சாக்கடையா ஓடும்’ என்று சலித்துக் கொண்டாள் வனஜா. 

’இந்தச் சுரணை கெட்ட சமூகத்தில, சுரணை கெட்ட ஆளா வாழும்படி ஆயிருச்சு எனக்கு. திருமணத்துக்கு முன்னால நாம பேசினமே பெண்கள் சுயகௌரவம் பத்தி. அதைப் பத்தியெல்லாம் ஏதாவது செய்யணும்னு நமக்கு ஏன் தோணல?’

’எல்லோருக்கும் தோணும். சகிச்சிக்கிட்டுப் போயிடுறோம்’

’இந்தக் காலத்துப் பொண்கள் தேவலை. நெத்தில அடிச்சாப்பிலப் பேசுதுக’ 

ஆனால் இன்னைக்குக் கல்யாணப் பொண்ணு அதுமாதிரித் தோணலயே’

’வசதியிருக்கிற சில பொண்ணுக பணத்தை வச்சே ஆண்களைச் சமாளிச்சிறலாம்னு நினைக்கிறாங்க. வசதி கொறஞ்ச பெண்கள் இதில மாட்டிக்கிட்டு போராடிப் பாக்குறாங்க. ஆனா இப்ப வசதியான பொண்ணுகளும் ரியலைஸ் பண்றாங்க. கூண்டுக்குள்ள அடைஞ்சி கிடக்கிறாங்க. தங்கக் கூண்டா இருந்தா என்ன, இரும்புக் கூண்டா இருந்தா என்ன? அப்படீங்கிறது தெரியுது’ என்றாள் ஜெயந்தி.

’என்னைப் பாரு, நான் லவ் மேரேஜ் பண்ணி, எல்லாப் பொறுப்பையும், நானும் என் கணவரும் ஏத்துக்கிட்டோம்.  அது மாதிரி பெரும்பாலும் பண்றதில்லை. பொறுப்பேத்துக்கப் பெண்களுக்கு பயமா இருக்கு. அதுக்குப் பதில், இப்படி ஏதோ ஒரு எருமைமாடு கூடச் சேர்ந்துக்கிறாங்க. பொறுப்பு ஏத்துக்கிறது கஷ்டமான காரியந்தான். ஆனா, பிறகு நீங்களும் சேந்து எல்லா முடிவும் எடுக்க தைரியம் வந்துடும்’ சோபாவில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டே சொன்னாள் வனஜா.

’நீ தப்பிச்சிக்கிட்டே. நல்ல ஆளு லவ் பண்ணுனார். ஆனா, கொஞ்ச மோசமான ஆள்கிட்ட மாட்டியிருந்தேன்னா தெரிஞ்சிருக்கும். என்னைப் பாரு.  வீட்ட விட்டு வெளியவே விடல. என்னைத் தவிர எதையெதையோ பாத்துத் திருமணம் நடந்தது.  எனக்கு எந்தப் பொறுப்பும் எங்கப்பா தரல. இப்ப என் கணவர் தர்றதில்லை. நானும் நல்லாத்தான் இருக்கேன்னு எல்லோரும் நம்புறாங்க. நானும் அதை நம்பத் தொடங்கிப் பல வருஷங்கள் ஆச்சு’. அவள் பெரு மூச்சுவிட்டாள்.

’ஏதோ ஒனக்குப் புரிஞ்ச மாதிரி நீ வாழ்ற. நான் எனக்குப் புரிஞ்ச மாதிரி வாழ்றேன். ஆனால் குதிரை ஓடறத நான் கட்டுப்படுத்திறனோ இல்லையோ, கடிவாளம் என் கைல இருக்கு’

’ஆனால் என் கைல அது கூட இல்லை. அதைப் பத்தி யோசிக்கிறது கூட இல்லை.’

’இரண்டு பேரும் ஏதோ காத்தில பறக்கிற தூசி மாதிரி, இந்த சமூகத்தில பறந்துக்கிட்டிருக்கோம். எது சரின்னு யாரால சொல்ல முடியும்’

’ஒவ்வொருத்தருக்கு ஒண்ணொண்ணு சரி. வெளிய சொல்ல முடியாத மனத்தின் மணம். அவளுடைய கணவர் இன்று யாரையோ இரவுச் சாப்பாட்டுக்குக் கூட்டி வருகிறேன் என்று சொன்னது ஞாபகம் வந்தது அவளுக்கு. வனஜா கிளம்பியதும் சமையல் வேலையைத் தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சோபாவில் சாய்ந்து கணயர்ந்தாள்.

வனஜாவுக்குத் தூக்கம் வரவில்லை. வெளியில் பெரும் ஊர்வலம் செல்வது போல் இரைச்சல கேட்டது. ஒரு புறம் பேண்ட் வாத்தியங்கள், மறுபுறம் நாதஸ்வரம், மேளம். ஜன்னலில் சென்று எட்டிப் பார்த்தாள்.  திருமண ஊர்வலம்.  எந்த இனத்துப் பழக்கம் என்று தெரியவில்லை. இந்த வேகாத வெய்யிலில், கோட் சூட் போட்டுக் கொண்டு, மணமகன் குதிரை மீது வந்து கொண்டிருந்தான். மணமகனின் தலைப்பாகையை, தாடியைப் பார்த்தால் சர்தார்ஜி மாதிரி இருந்தது. நாதஸ்வரமும் வருவதால், தெற்கத்தி மணமகளாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே, ஜன்னலைச் சாத்திவிட்டு, ஜெயந்தியைப் பார்த்தாள். அவள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.  வெளியே பெரிய தெருக்கூத்து நடந்து கொண்டிருதது அது ஜெயந்திக்குத் தெரியவில்லை. சுகவாசி. தூங்காமல் விழித்திருப்பதுதான் தொல்லை என்று தோன்றியது.  தன்னுடைய சூட்கேஸைத் திறந்து துணிமணிகளை அடுக்கிக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தாள். வெளியே ’தெரு-மணம்’ வீசிக் கொண்டிருந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *