வீட்டின் முன்புறத்தில் கயிற்றுக் கட்டிலில் டிரைவர் அண்ணன் அமர்ந்திருந்தார். நரைத்த மயிரிடர்ந்த தன் மார்பை காற்றுக்கு அளித்துவிட்டிருந்தார். வலது கை விரல்கள் புகைவிட்டுக் கொண்டிருந்த பீடியைப் பற்றியிருக்க இடது கையால் லுங்கியை மேலே தள்ளிவிட்டுக் கொண்டார். இரு முழங்கால்களையும் மாறிமாறி தடவி விட்டுக் கொண்டார். கட்டிலின் இடது புறம் ஒரு சிறு மாஞ்செடி இருந்தது. அருகே இரண்டு பெரிய கோழிகளும் ஒரு சேவலும் இருந்தன. சில கோழிக்குஞ்சுகள் செடியைச் சுற்றி வந்து கொண்டிருந்தன. சில கட்டிலுக்கு அடியில் புகுந்து ஓடின. வலது புறம் தொலைவில் சிறு கட்டிடம் ஒன்று இருந்தது. அதன் மீது நான்கு மயில்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன.
நான் அண்ணனைப் பார்த்து விட்ட போதும் வேகத்தை கட்டுப்படுத்திக் கொண்டு சூழலை நோட்டமிட்டுக் கொண்டு நிதானமாகத்தான் சென்றேன். அண்ணனும் என்னைப் பார்த்துவிட்டிருந்தார் என்று தெரிந்தது எனினும் என்னை அடையாளம் காணவில்லை. அவரும் வயதானதால் தோற்றத்தில் மிகவும் மாறிவிட்டிருந்தார் என்றாலும் இன்றும் மாறாத ஏதோ ஒன்று அவரிடம் இருப்பதாக தோன்றியது.
”அண்ணே”
”யாரு?
”கணேசுண்ணே”
சற்று தயங்கினார். பின் நினைவு கொண்டவராய் ”வாடா வா. .வா…… …. கணேசா. எப்படி இருக்க? உட்காரு” என்றார்.
”நல்லா இருக்கண்ணே”
இத்தனை நாள் ஏன் வரவில்லை என்று கேட்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அப்படி கேட்கவில்லை. அவர் அப்படி கேட்கக் கூடிய ஆளில்லை என்பதையும் அறிந்திருந்தேன். நான் தற்போது டிரைவராக இருப்பதை சொன்னேன். அண்ணன் மகிழ்வுடன் சிரித்தார். என் தோள்களைத் தட்டினார். என் திருமண அழைப்பிதழை தந்தபோது ”காவேரி” என்று அழைத்தார். உள்ளேயிருந்து அண்ணி வந்தார்கள். அவர்களை இப்போதுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன்.
”வணக்கங்க அண்ணி” என்று எழுந்தேன். அண்ணி தலையசைத்தார்.
”இவன் கணேசு என் தம்பி” என்று அண்ணன் சொல்ல அண்ணி மெலிதான கேள்விக்குரிய பாவனையை வெளிப்படுத்தினார்.
“என்னோட கிளீனரா 15 வருஷம் இருந்தவன். நல்ல பையன் என்றார். அண்ணி புன்னகைக்க ”எனக்கு அடுத்த மாசம் கல்யாணம். தவறாம ரெண்டு பேரும் வந்துடுங்க” என்று அழைப்பிதழை அண்ணனின் கையில் தரப் போக அவர் அண்ணியிடம் தருமாறு கைகாட்டினார். அண்ணியின் கையில் அழைப்பிதழை தந்துவிட்டு இருவரிடம் ஆசி பெற்றுக் கொண்டேன். சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு சொன்ன அவர்களது அழைப்பை அவசரமாகச் செல்ல வேண்டியிருப்பதைச் சொல்லி மறுத்துவிட்டு புறப்பட்டேன்.
அண்ணனிடம் கிளீனராக இருந்த போது அவரிடம் நிறைய பேசிக்கொண்டிருந்தேன் அல்லது அவர் நிறைய பேச கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போதும் அவருடன் நிறைய பேச வேண்டும் என்ற ஆர்வத்துடன் தான் வந்தேன். ஆனால் ஏதோ ஒன்று தடுத்துவிட்டது. லாரியில் ஏறி ஸ்டார்ட் செய்து கிளம்பினேன். அண்ணனுடனான நினைவுகள் அலைகளாக பெருகத் தொடங்கியது.
கேரளம் அண்ணனுக்கு மிகவும் பிடித்தமானது. ஒருமுறை லாரியை நிறுத்திவிட்டு நானும் அண்ணனும் ஒரு ஆற்றில் குளிக்கச் சென்றோம். விடிகாலை நேரம். அண்ணன் ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு நடந்தார். பீடியை எறிந்துவிட்டு ஆற்றில் இறங்கும் முன் சுற்றி பார்வையை ஓட்டினார். சில ஆண்களும் பெண்களும் குளித்துக் கொண்டிருந்தார்கள். நீரில் இறங்கி திரும்பி பார்த்தபோது கிழக்கு வானம் மெலிதாக ஒளி கொண்டு வந்தது. அண்ணன் கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு கைகளால் நீரை அளைந்து கொண்டு சத்தமான குரலில் பாடத் தொடங்கினார்.
”வைதவ்யம் பூணுவான் ஈ புலரி…
ஈ புலரி…
நின்ட ஓர்மகள் துடருன்ன ஈ நதியில்
என்டே திவ்ய மனோஹரி
மனோ ஓ …..ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ……….. ஹரி
மனோ ஓ …..ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ….. ஹரி
”ஓ” வை மட்டும் 18 கொண்டை ஊசி வளைவுகள் வளைத்து வளைத்து லாரி ஏற்றுவது போல நீண்டநேரம் இழுத்து பின் ”ஹரி” என்று முடித்தார். அவர் எப்போது பாடினாலும் மலையாளத்தில் தான் பாடினார். தன்னை ஏசுதாஸாக நினைத்துக் கொண்டார். அவர் உருவாக்கும் பாடல்கள் சிறந்த அர்த்தம் கொண்டவை என்று முதலில் எண்ணி இருந்தேன். சிரித்துக்கொண்டே பாடிக்கொண்டிருப்பார். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் இந்த பைத்தியம் என்னதான் பாடிக்கொண்டிருக்கிறான் என்று உற்றுப் பார்த்துவிட்டுச் சென்றார். பெண்கள் சிலர் சிரிக்கும் குரல் கேட்டது. அண்ணன் யாருக்காகவும் தன் பாட்டை நிறுத்த மாட்டார். அவராக நிறுத்தும்போது தான் நிறுத்துவார்.
கரி மலையில்
நின்டெ ஸ்வப்னத்தின்
ஒரு வழியில்
என்டே திவ்ய மனோ ஓ …..ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ……….. ஹரி
அண்ணன் பாட்டை நிறுத்தியபோது நானும் அண்ணனும் மட்டுமே ஆற்றில் இருந்தோம். வெயில் ஏறத் தொடங்கிவிட்டிருந்தது.
”அண்ணா இதெல்லாம் மலையாள சினிமா பாட்டாண்ணா?”
”இல்ல. சினிமா பாட்டுபோல”
”சினிமா பாட்டு போலன்னா?”
”நானே. கட்டுற பாட்டு.”
”உங்களுக்கு மலையாளம் தெரியுமா?”
”தெரியாது”
”பின்னே எப்டிண்ணே”
”அது அப்படித்தான்”
இது போல மற்றொரு சமயம் மாலை நெருங்கும் நேரம் ஊட்டி கூடலூர் இறங்கி முதுமலை பந்திப்பூர் காட்டில் சென்று கொண்டிருந்தபோது யானைக் கூட்டம் ஒன்று சாலையின் குறுக்கே நின்றது. அண்ணன் வண்டியை மெதுவாக செலுத்தி பின் நிறுத்தி அணைத்தார்.
”அழகு..பேரழகு” என்றார். பின்னர் பாடத் தொடங்கினார்.
”கஜராஜ கம்பீர மனோஹரி……” அண்ணன் எப்போதும் மனோஹரியை விடமாட்டார்.
”கஜராஜ கம்பீர மனோஹரி
நின்டே கஜகேசரி பிளிருன்னே
பிளிருன்னே
பிளிருன்னே
பிளி….ளி…ளி… ளி …ளி ளி….ருன்னே
பிளி ளி…ளி…ளி…ளி
அண்ணன் ”ளி” யை வைத்துக்கொண்டு சத்தமாக பிழிந்து கொண்டிருந்தது பொறுக்காமல் கூட்டத்தில் ஒரு பெரிய யானை விலகி துதிக்கையைத் தூக்கிக்கொண்டு வேகமாக எங்கள் லாரியை நோக்கி ஓடிவந்து துதிக்கையால் கண்ணாடியைத் தட்டி கொன்று விடுவேன் என்று மிரட்டியவுடன் அவர் பாட்டை நிறுத்தினார். பிறகு அது லாரியின் பின்னால் சென்று தன் முதுகை உரசி வண்டியை லேசாக உலுக்கிவிட்டு மீண்டும் சுற்றிச் சென்று தன் கூட்டத்துடன் இணைந்துகொண்டது. அண்ணன் சிரித்துக்கொண்டே ”கஜராஜ ராஜேஸ்வரி” என்றார்.
அண்ணன் நீண்ட பயணங்களால் அலுப்படையவே மாட்டார். அவருடன் பயணம் செய்யக் கூடிய யாருக்கும் அலுப்பு தோன்றாது. காட்டு விலங்குகள், அதிகாரிகளின் சோதனைகள், விபத்துகள் – எல்லா சூழ்நிலைகளையும் சாமார்த்தியமாக கையாளக் கூடியவர். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவது. தனித்து அத்துவானக் காட்டில் மாட்டிக் கொண்டு உதவி கேட்பவர்களுக்கு உதவுவது ஆகியவற்றுடன் லாரி ஓட்டுனராக தன்னால் யாருக்கும் உயிர் ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் கவனம் எப்போதும் உள்ளவர். வேடிக்கை பேச்சுகள், துணிச்சலான செயல்கள் என எதில் ஈடுபட்டிருந்தாலும் அவரது இந்த கவனம் விலகியதில்லை.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒருவித இயற்கை அழகு இருக்கிறது அந்த இயற்கை அழகுதான் அந்த ஊர் பெண்களாகவும் நடமாடுகிறது என்பது அவர் கருத்து. அதை பொறுத்தவரை தென்னிந்தியாவில் ஆந்திரா, கேரளா வடக்கே என்றால் பஞ்சாப், இமாச்சல் அவருக்கு மிகவும் பிடித்தமானது.
சில சமயம் ஆந்திராவில் கொஞ்சம் போல சரக்கடித்துவிட்டு பயங்கர காரமான ஆந்திர சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மண்டை கொதிக்கும் வெயிலில் மதியக் காட்சி திரைப்படத்திற்கு செல்வோம். கடுமையான காரத்திற்கும் கடும் வெயிலுக்கும் ஏற்பவே படத்தின் கதாநாயகனும் பெருங்குரலில் கத்தி வசனங்கள் பேசி ஒரே ஆளாக ஒரே நேரத்தில் நூறு பேருடன் சண்டைபோடுவான். ஒருமுறை ஒரு படத்தில் கதாநாயகன் ”ஏவிடி ஏவிடி” என்று கேட்டு ஒவ்வொரு வில்லனையும் பந்தாடிக் கொண்டிருந்தபோது என் மண்டையை உடைப்பது போன்ற தலைவலி ஏற்பட்டது. ஆனால் அண்ணன் மட்டும் அடக்கமுடியாமல் விடாமல் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் ஆந்திராவில் அண்ணன் மட்டும் தனியே செல்லும் சில இடங்கள் இருந்தன. அப்போது நான் வண்டியில் இருப்பேன்.
நள்ளிரவில் லாரியை சாலையோரம் நிறுத்தி பின்னால் சரக்கு மூட்டைகளின் மீது மல்லாக்கப்படுத்துக் கொண்டு வான் நிறைந்த நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே ஏதேதோ பேசிக்கொண்டும் நடுநடுவே பாடிக்கொண்டும் அவர் இருக்க கண்கள் சொக்கி உறங்கிய நாட்களை என்றும் மறக்கமுடியாது. லாரி ஓட்டுவதும் நீண்ட பயணங்களும் இனியது என்று அண்ணன் என் மனதில் பதித்துவிட்டார். ஆனால் அப்படி ஒரு எண்ணத்தை எனக்கு கிளீனர்களாக வந்த பையன்களிடம் மட்டும் என்னால் ஏற்படுத்தவே முடியவில்லை. லாரி ஓட்டுவதில் என்ன இருக்கிறது என்றுதான் எண்ணுகிறார்கள்.
அண்ணன் என் திருமணத்திற்கு வர வேண்டும் அவர் எனக்கு கடவுள் போல.
—–
அண்ணன் என் திருமணத்திற்கு வரவில்லை. கோபமாகவும் வருத்தமாகவும் இருந்தது. அம்மா அப்பா இல்லாத நான் அவரை என் அப்பா போல எண்ணி இருந்தேன். ஆனால் என் மீதும் தவறு இருக்கிறது. இவ்வளவு காலம் நான் அவரைக் காண விரும்பிய போதும் செல்லவில்லையே?
மனது கேட்கவில்லை. திருமணமான அடுத்த மாதமே என் மனைவியை அழைத்துக் கொண்டு அண்ணனைக் காணச் சென்றேன். அண்ணி மட்டுமே வீட்டில் இருந்தார். அண்ணன் அருகேதான் கடைக்கு சென்றிருப்பதாக சொன்னார். எங்களுக்காக சமைக்கத் தொடங்கினார். என் மனைவியும் அண்ணியுடன் இணைந்து வேலை செய்யத் தொடங்கினாள். நான் அண்ணனிடம் அவர் என் திருமணத்திற்கு வராததன் வருத்தத்தை சொல்லியே ஆக வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். அண்ணியும் என் மனைவியும் சமையல் அறையில் சிரி்த்துப் பேசிக் கொண்டிருக்க அப்போதுதான் வீட்டிற்குள் வேகமாக வந்து கொண்டிருந்த அண்ணன் வாசற்படியில் தடுக்கி விழப்போனார். நான் அவரை பாய்ந்து பற்றி விழாமல் தடுத்தேன். நான் இருப்பதையே அறியாதவர் போல சமையலறைக்கு சென்றவர் ”யாரு ? யாரு ?“ என்று சத்தமிட்டார்.
அண்ணி வியப்படைந்தவராக ”என்ன ஆச்சு உங்களுக்கு? இந்த பொண்ணு உங்க கிளீனர் தம்பி கணேசோட சம்சாரம். அவரு அங்கதான் இருக்காரு பாக்கல்லியா?” என்றாள்.
அண்ணன் நிதானமடைந்தார். ”வாங்கம்மா” என்று சொல்லிவிட்டு என்னிடம் வந்து ”வாடா நல்லா இருக்கியா?” என்றார்.
”என்னண்ணே கல்யாணத்துக்கு வராம வீட்டுட்டீங்க……நாம எப்படி பழகுனோம்” என்று சொல்லும்போது என் கண்களில் நீர் திரண்டது.
”சரி சரி மன்னிச்சிக்கடா வயாசாச்சில்ல எனக்கு” என்றார்.
”பரவால்லண்னே”என்றேன்.
மீண்டும் சமையலறைக்கு சென்று வந்தார். ”இன்னும் சாப்பாடு ஆகல்லியா?” என்று அண்ணியிடம் கேட்டுவிட்டு வந்தார். பின்னர் மீண்டும் எதற்கோ சமையறைக்கு சென்று வந்தார்.
உணவு தயாரான பிறகு என்னையும் என் மனைவியையும் சாப்பிட அமரச் செய்து அவரே பரிமாற தயாரானார்.
”அண்ணே நீங்களும் வாங்க” என்று நான் சொன்ன போது ”இல்ல நீங்க சாப்பிடுங்க நான் பரிமாறுறேன்” என்றார்.
”என்னாச்சு உங்களுக்கு ஒரு மாதிரியாவே இருக்கிறீங்க ? நீங்களும் உக்காறுங்க எனக்கு பரிமாறத் தெரியாதாக்கும் ?” என்றார் அண்ணி.
”நீயும் பரிமாறு நானும் பரிமாறுறேன்” என்றார் அண்ணன்.
அண்ணனின் அன்பு என்னை மீண்டும் நெகிழச் செய்தது.
”டேய் நல்லா சாப்டுறா…இப்படித்தான் நான என் பொண்டாட்டிக்கு ஒத்தாசை செய்யுறமாதிரி நீயும் உன் பொண்டாட்டிக்கு ஒத்தாசை செய்யணும் தெரியுதா” என்றார். ”நல்லா சாப்புடும்மா” என்று என் மனைவியிடம் சொன்னார்.
”அடங்கப்பா பார்ரா….இவ்வளவு நாள் இல்லாத ஒத்தாச இப்ப தீடீர்ன்னு எங்க இருந்து வந்துச்சோ” என்றாள் அண்ணி.
”சும்மா இருடீ”
”இவருக்கு இன்னிக்கு என்னமோ ஆயிருச்சி” என்று வியந்தாள் அண்ணி.”
”சாப்பிடுங்க சாப்பிடுங்க”
என் மனைவியை மிகவும் உபசரித்தார். அவளை உற்று உற்று பார்த்துக் கொண்டுமிருந்தார்.
நாங்கள் சாப்பிட்ட பின்னர் என்னை தனியே அழைத்துச் சென்று கேட்டார் ”உன் பொஞ்சாதி எந்த ஊரு?”
”ஆத்தூருண்ணே ஏன்ண்ணே…பத்திரிக்கையிலேயே போட்ருந்துச்சே பாக்கலயா?”
”ஓ பார்த்தேன் பார்த்தேன் மறந்துபோச்சு…ஆத்தூரா?”
”ஆமாண்ணே…ஆனா என்னிய மாதிரிதான் அவளுக்கும் அப்பா அம்மா இறந்துட்டாங்க தாய் மாமன் வீட்ல வளந்துச்சு. அப்பா அம்மா முன்னால ஆந்திராவுல எங்கியோ இருந்தாங்களாம்”
”ஆந்திராவா?”
”ஆமாண்னே.”
”ஆந்திராவா?” என்று மீண்டும் கேட்டார்.
”ஆமாண்னே. ஏன்ண்ணே?”
அண்ணன் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றார். பின்னர் மீண்டும் அவர் வந்தபோது நான் ”சரிண்ணே…..அண்ணி நாங்க போயிட்டு வரோம்” என்று விடை பெற்றேன்.
”கொஞ்சம் இரு….இத வந்துடறேன்…..நான் வந்ததுகப்புறம் புறப்படுங்க” என்று சொல்லி மீண்டும் அவசரமாக வெளியே சென்றுவிட்டார்.
நாங்கள் காத்திருந்தோம். ஒரு மணி நேரம் கழித்து வந்த அண்ணன் ”நீ சம்பளத்துக்குத் தானே லாரி ஓட்டுற?” என்று கேட்டார்.
”ஆமாண்ணே. சொந்த லாரி வாங்கணும்ன்னு ஆசைதான்” என்றேன்.
”நீங்க பஸ்சுலதான வந்தீங்க?” என்று கேட்டார்.
”ஆமாண்ணே. ஏன்ண்ணே?”
”இந்தா சாவி. என்னோட லாரி தெருவுல நிக்குது உனக்கு தரேன் நீ வச்சுக்க. அதுலயே போயிருங்க. காகிதமெல்லாம் அதுலயே இருக்கு. நான் அப்புறமா உங்க வீட்டுக்கு வர்றேன். பாத்துக்கலாம்” என்றார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
”வேண்டாண்ணே”
”அப்படி சொல்லக் கூடாது.” சாவியை என் கையில் திணித்தார்.
அண்ணி அதிர்ச்சியுடன் பார்த்தார். அண்ணன் அண்ணியின் பார்வையைத் தவிர்த்தவராக ”டரைவர வேற வேல பார்த்துக்கச் சொல்லிட்டேன்” என்றார்.
”வேண்டாண்ணே” மீண்டும் சொன்னேன்.
”போடா… என் மேல உண்மையிலேயே பாசமிருந்தா எடுத்துக்க” என்றார் அண்ணன்.
நான் என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். அப்பா பொம்மை வாங்கிக் கொடுத்த மகிழ்ச்சியில் இருக்கும் குழந்தை போலிருந்தது அவள் முகம்.
நாங்கள் வீட்டை விட்டு நடந்து சற்று தொலைவு வந்துவிட்டபோது பின்னால் வீட்டிலிருந்து அண்ணியின் குரல் கூச்சலாக கேட்டுக் கொண்டிருந்தது. அண்ணனின் குரல் தணிந்து ஒலித்தது.
ஒரு நிமிடம் நின்று சென்று திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று திரும்பினேன்.
என் மனைவி என் கையை பிடித்து இழுத்து முன்னால் திருப்பி நடக்கச் செய்தாள்.
நல்லா இருந்தது 👍