சர்க்கரை

சர்க்கரை நன்றாக படித்து கொண்டு தான் வந்தான். அரசு பள்ளி என்பதால் அவனுக்கு ஒன்றும் பெரிய  நெருக்கடி இல்லை. அவன் அப்பா அம்மா பள்ளியில் கூட படிக்கவில்லை. மாலை நேர டிபன் கடை தள்ளுவண்டியில் சாலை ஓரமாக நடத்துகிறார்கள். அதில் வரும் சொர்ப்ப வருமானத்தில் வாழ்க்கை ஓடிக் கொண்டு இருந்தது. அதுவும் ஓரு சில நாட்கள் நடத்த முடியாது. சர்க்கரை படிப்பை அவன் அக்கா சுந்தரி தான் அதிக அக்கறை காட்டினாள். அவனுக்கு மாலை முழுவதும் விளையாட்டு தான். அது தான் அவனுக்கு உயிர் மற்றும் மூச்சு எல்லாம். அக்காவின் கண்டிப்பால் தான் தினமும் ஏதாவது படிப்பான். வீட்டு பாடம் முடித்து விடுவான். எல்லாம் அவள் அக்கா துணையுடன் தான். அவன் அக்கா நன்றாக படிக்க கூடியவள். சர்க்கரை பரீட்சையில் சில பாடங்களில் தேர்ச்சி பெற்றான் சில பாடங்களில் தோல்வி அடைந்தான். கணக்கு பாடத்தில் எப்போதும் தோல்வி தான். அவன் அக்கா என்ன தான் முயன்றாலும் தேர்ச்சி என்பது அவனுக்கு கனவு தான். அவனுடைய கவனம் எல்லாம் விளையாட்டு தான். அது மிகவும் எளிதான ஒன்று. நண்பர்களுடன் சேர்ந்து எல்லா விளையாட்டுகளும் விளையாடுவான். பள்ளியில் பேஸ்கட் பால் டீமில் விளையாடுகிறான். பல போட்டிகளில் விளையாடி பரிசுகள் பெற்று இருக்கிறான். அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வது இல்லை. வெற்றி பெற்ற ஒரு சில நாட்கள் எல்லோரும் கவனிப்பார்கள். அதன் பிறகு படிப்பு மற்று பரீட்சை தான்.

அவனுடன் படிக்கும் ராமு ஒரு நாள் டியூசனுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது சர்க்கரையின் அப்பா கடை வழியாக சென்றான். ராமு சர்க்கரையின் அப்பாவை பார்த்து விட்டான். சர்க்கரையின் அப்பா அவனிடம் எதாவது சாப்பிடு என்றார். அவன் இல்லை வீட்டில் அம்மா ஏதாவது செய்து வைத்திருப்பார்கள் என்றான். அவர் உடனே அதுவும் நல்லது தான். சாப்பாட்டை வீணாக்க வேண்டாம்.  அதற்கு தானே இரவு பகலாக வேலை செய்கிறோம் என்றார். அவனிடம் நன்றாக படிக்கிறாயா என்றார். அவன், படிக்கிறேன். இப்போது கூட கணக்கு பாடத்திற்கு டியூசனுக்கு தான் சென்று வருகிறேன் என்றான். சர்க்கரை நன்றாக படிக்கிறானா என்றார். அவன் படிக்கிறான் என்று  மலுப்பலாக சொன்னான். அவர் உடனே அவனிடம் படிப்பு சம்பந்தமாக சர்க்கரையிடம் எதுவும் கேட்க மாட்டேன். அவன் அக்கா தான் பார்த்து கொள்கிறாள். அவளிடம் கேட்டால் கூட அவன் ஏதோ படிக்கிறான். அவன் கவனம் முழுவதும் விளையாட்டில் தான் உள்ளது என்பாள். நீ அவனுடன் படிக்கிறாய் அதனால் தான் கேட்டேன் என்றார். ராமுக்கு தர்ம சங்கடமான நிலைமை. வருவது வரட்டும். சர்க்கரைக்கு தெரிந்தால் கூட என்ன ஒரு சில நாட்கள் பேசாமல் இருப்பான். பின்பு பழையபடி பேசுவான். அவனை பற்றிதான் நன்றாக தெரியுமே. மற்ற மாணவர்கள் போல் அவன் அல்ல. அவனுடைய நல்லதுக்கு தான் என்று எண்ணி , சர்க்கரைக்கு கணக்கு பாடத்தில் தான் பிரச்சனை எப்போதுமே தேர்ச்சி பெறவில்லை என்றான். ஒரு பெருமூச்சு விட்டபடி. ஏதோ பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது. சர்க்கரையின் அப்பாவிற்கு தான் பெரிய பாராங்கல் வைத்தது போல் இருந்தது.

சர்க்கரையின் அம்மா இதை எதுவும் கவனிக்க அவளுக்கு நேரம் இல்லை. இருக்கும் நேரம் எல்லாம் அலைகள் போல் வறுமையை துரத்தி கொண்டு இருந்தாள்.

இப்போது கடையை வேற சாலைக்கு மாற்றியதில் இருந்து ஓர் அளவு வருமானம் வந்தது. வீட்டில் எல்லோரும் கொஞ்சம் இயல்பாக சுவாசிக்க தொடங்கினார்கள்.

சர்க்கரையின் அப்பாவிற்கு அவனுடைய அண்ணன் மகன்களை போல் அவனும் சரியாக படிக்காமல் கிடைக்கும் வேலைகளை செய்ய போகிறானோ என்ற கவலை அவருடைய மனதில் நீல வானம் மறையும் படியாக கரு மேகங்கள் சூழ்ந்து முட்டுவது போன்று இருந்தது. என்ன இருந்தாலும் ஏதாவது நம்மால் மாற்ற முடிந்ததை செய்யலாம் என்று எண்ணினார்.

ஒரு முறை அவர் கடையில் ஒருவர் தினமும் சாப்பிடுவார். நன்றாக படித்தவர் பண்பாக நடந்து கொள்வார். ஏதோ அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் போல. அவரிடம் பேசும் போது தன் மகனை பற்றி விசாரிக்கும் போது. அரசு பள்ளியில் படிக்கிறான் என்றார். நன்றாக படிக்கிறானா என்று கேட்டதற்கு. சரியாக பதில் கூற முடியாத நிலைமையை புரிந்து கொண்டவர். நன்றாக படித்தால் அரசு பள்ளியிலேயே படிக்கட்டும் அப்படி இல்லையென்றால் வேறு ஏதாவது தனியார் பள்ளியில் கடன் வாங்கியாவது சேர்த்து விடுங்கள். அவன் வாழ்க்கை நன்றாக இருக்கும். தேர்ச்சி பெற்றால் போதும். விளையாடுபவர்களுக்கு அரசு வேலைகளில் நல்ல வாய்ப்பு இருக்கு என்று நம்பிக்கை ஊட்டினார்.

சர்க்கரை அப்பாவிற்கு அப்போது இருந்த நிலைமையில் எதுவும் புரியவில்லை. அன்று அவர் சொன்னது பெளர்ணமி நிலவு ஒளி போல் பூரணமாக இன்று புரிந்தது.

சர்க்கரை அப்பாவிற்கு வேறு புதிய சிக்கல் வருவதற்குள் உடனே சர்க்கரையை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார். அவள் அக்காவிற்கு சர்க்கரை மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தாலும்  வேண்டாம் அரசு பள்ளியிலேயே படிக்கட்டும் என்று சொல்ல முடியவில்லை.  ஏதாவது மாற்றம் வந்தால் சரி என்று எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே அடுத்த வேலைகளை தொடங்கி விட்டார்கள். சர்க்கரைக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் கோடை விடுமுறையை மழை ஆனந்தமாக குதித்து ஆடுவது  போல் இருந்தான். 

அரசு பள்ளியில் முதலில் மறுப்பு சொன்னாலும் உறுதியாக இருப்பதால் டிசி கொடுத்து விட்டார்கள். ஒன்று இரண்டு தனியார் பள்ளியில் சேர்த்து கொள்ள மறுப்பு தெரிவித்தார்கள். இறுதியாக சர்க்கரை படிப்பில் சுமாராக இருந்தாலும் விளையாட்டை கருத்தில் கொண்டு சேர்த்து கொண்டார்கள்.

சர்க்கரையின் வீட்டில் எல்லோருக்கும் நிம்மதி. நாட்கள் செல்ல சர்க்கரை விளையாட்டில் ஜொலிப்பது போல் படிப்பில் எந்த மாற்றமும் இல்லை. அவன் அக்கா நம்பிக்கையை விடவில்லை. எப்போதும் போல் அவனுக்கு படிக்க உதவினாள். இவன் விளையாடுவதால் பள்ளியிலிருந்து எந்த புகாரும் இல்லை. 

சர்க்கரைக்கு அவனுடைய பழைய நண்பர்கள் அப்படியே தான் இருந்தார்கள். எந்த மாற்றமும் இல்லை. ஒரே வித்தியாசம் தான். பள்ளியில் சந்திக்க முடியாது மற்ற நேரங்களில் சேர்ந்து விளையாடினார்கள். புதிய பள்ளியில் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். 

இந்த பள்ளியில் சர்க்கரைக்கு அதிகமான போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இவனுக்கும் பள்ளிக்கும் சேர்ந்து வெற்றி கிடைத்தது. சரக்கொன்றை மலர்கள் மரம் முழுவதும் சரம் சரமாக மஞ்சள் ஒளி விளக்குகள் தொங்குவது போன்றும் பின்பு நாட்கள் செல்ல பூக்கள் உதிர்ந்து காணாமல் போவது போன்று சர்க்கரைக்கு விளையாட்டு மறைந்து தேர்வுகள் மூச்சு முட்ட தொடங்கி விட்டது.

சுந்தரி எவ்வளவு முயன்றாலும் சர்க்கரையால் கணிதத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை. சர்க்கரையின் அப்பாவிற்கு அவன் பேசாமல் பழைய பள்ளி  கூடத்திலேயே படித்திருக்கலாம் என்று தோன்றியது.

பள்ளியில் சர்க்கரைக்கு நெருக்கடி தொடங்கியது. சர்க்கரைக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. நன்றாக படித்தாலும் தேர்வு எழுதும் போது சில பகுதிகள் மறந்து விடுகிறது. இதை யாரிடம் கூறினாலும் யாருக்கும் கேட்டு புரிந்து கொள்ள நேரம் இல்லை.இறுதியாக பள்ளியில் இருந்து சர்க்கரை அப்பாவை பள்ளிக்கு நேராக வரும்படி அழைத்தார்கள்.

சுந்தரி தான் பள்ளிக்கு சென்றாள். அவளுக்கு ஏதோ ஒரு தயக்கம் என்ன சொல்வார்கள் என்று. சர்க்கரையின் வகுப்பு ஆசிரியர் தான் சுந்தரியிடம் பேசினார். பொது தேர்வில் சர்க்கரை மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்றாலும் கணக்கில் தேர்ச்சி பெறுவது சந்தேகம் தான் என்றார். சுந்தரிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இதனை கேள்வி பட்டால் சர்க்கரையின் அப்பா மிகவும் வருத்தப்படுவார். அவனை ஆசையாக சேர்த்து விட்டார்.

சுந்தரி அவரிடம் இதற்கு வேறு வழியில்லையா என்றாள். ஒரு வழி இருக்கிறது, இங்கு சீனியர் கணக்கு ஆசிரியர் கார்த்திக் சார் இருக்கிறார் அவரை பாருங்க என்றார். சுந்தரி அவரை நேரில் சந்தித்தாள்.

அவர் உடனே சர்க்கரை உங்க தம்பியா. நீங்க பயப்படாதீங்க. அவன் தேர்ச்சி பெறுவான். நான் அவனுடைய விடை தாள்களை பார்த்து விட்டு சொல்கிறேன் என்றேன். அதற்குள் உங்களை அழைத்து பயமுறுத்தி விட்டார்கள். அவன் விடைத்தாளை பார்த்ததில் அவனுடைய பிரச்சனை என்ன என்பது தெரிந்து விட்டது. அதனை மட்டும் சரி செய்தால் அவன் தேர்ச்சி உறுதி என்று கூறி வெளிச்சம் கொடுத்தார். பொது தேர்வுக்கு இரண்டு மாதங்கள் இருக்கிறது. நான் பார்த்து கொள்கிறேன் என்றார்.

சுந்தரிக்கு  இப்போது பயம் போய் விட்டது இருந்தாலும் ஒரு வித ஐயம் இருந்தது. கார்த்திக் சார் சர்க்கரையின் மீது தனி கவனம் செலுத்தினார். அவனுடைய தயக்கங்கள் மற்றும் ஐயங்களை போக்கினார். அவனிடம் மனம் விட்டு பேசினார். அவனுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தினார். நல்ல முன்னேற்றம் இருந்தது. மாதிரி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுக்காவிட்டாலும் தேர்ச்சி பெற்றான். சர்க்கரைக்கு இப்போது தான் தெளிவாக தான் என்ன தவறு செய்து கொண்டு இருந்தோம் என்று தெரிந்தது. கடலில் அலைகள் வீசி கொண்டு தான் இருக்கிறது. பொது தேர்வு நடைபெற்றது. சர்க்கரைக்கு எந்த பயமும் இல்லாமல் எல்லா தேர்வுகளையும் எழுதினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *