தன் கைப்பேசியில் இருந்த கோப்பில் வேகமாக பார்த்துவிட்டு சொன்னார்,
”உங்களுக்கும் எனக்கும் இப்போது ராகு சதை நடக்கிறது. அதனால் தான் இப்படியெல்லாம் ”
”அய்யா ஏதாவது அசிங்கமாக என் வாயில் வரப்போகிறது” என்றார் மணி.
”ஓ வாய் தவறி….ராகு தசை” என்றார்.
”மண்ணாங்கட்டி. இப்போது நாம் இருப்பது ஆண்ட்ரோமெடா கெலாக்ஸி. அதாவது ஆன்ரோமெடா அண்டம். நம்முடைய பால்வழி அண்டம் இல்லை. இப்போது நாம் இருக்கும் இடம் நம்முடைய பூமி கிரகம் அல்ல. மறந்துவிட்டீரா இந்த கிரகம்…..”
மணி பேசிக் கொண்டிருக்கும் போதோ புழதி காற்று வேகம் கூடியது. சற்று தொலைவில் இருந்த எங்கள் விண்கலத்தை எடுத்து எங்கோ வீசியது. மணி விண்கலம் இருந்த இடத்தை நோக்கி ஓடினார். வேகம் குறைந்தது போல் தோன்றிய சுழி அவர் பக்கம் வந்து அவரைச் சூழ்ந்தது. ஒடக்காரன்வலசு சோதிடரின் கண்களுக்கு மணி முற்றிலும் மறைந்தார். அந்த சுழி மணியை அப்படியே தூக்கிச் சென்று விட்டது.
சோதிடர் தனியாக நின்று நடுங்கினார். ”பேசாமல் பூமியிலேயே இருந்திருக்கலாம். விண்கலம் நொன்கலம்…ஒளி வேகம் களி வேகம் என்றெல்லாம் சொல்லி இவன் எங்கேயோ கொண்டு வந்து தள்ளி விட்டான். இப்போது எங்கோ காணாமல் போயும் தொலைந்தும் விட்டான்”
அவர் வருத்தப்பட்டார். இப்படி தனக்கு நேர்ந்தற்கு சோதிட ரீதியாக என்ன காரணமாக இருக்க முடியும்?
அப்போது அவர் தடுமாறி விழுந்தார். என்னவென்று புரிந்து கொள்ள அவருக்கு சில நிமிடங்கள் ஆனது. அவர் நின்றிருந்த பரப்பு நகர்ந்து சென்றது. அவர் ஏதோ ஒரு மிகப் பெரிய உயிரினத்தின் மீது இருப்பது போன்ற உணர்வு தோன்றியது. இவ்வளவு நேரம் அது தெரியவில்லை. அது நகர்ந்து செல்லத் தொடங்கிய போது தான் தெரிந்தது. அந்த உயிரினம் வேகமாக செல்ல தொடங்கியது. அவர் எழுந்து நிற்க முயன்றார். மீண்டும் தரையில், அதாவது அதன் உடலின் மீது, விழுந்தார். அதன் தலை எங்கே இருக்கிறது, கால் எங்கே இருக்கிறது எதுவும் தெரியவில்லை. அது மிகப் பெரிய மைதானத்தை போல பெரியதாக இருந்தது. கண்ணுக்கெட்டும் தூரத்திற்கு அதன் எந்த உறுப்பையும் அவரால் அடையாளம் காண முடியவில்லை. அவர் மீண்டும் எழ முயன்றார். இம்முறை இன்னும் வேகமான அசைவு. விழுந்தார். ஒரு வேளை இது பூகம்பமாக இருக்குமோ? ஏதோ உயிரினம் என்று தவறாக கற்பனை செய்து கொண்டேன் போலும் என்று எண்ணினார்.
”இல்லை…இல்லை…பூகம்பம் இல்லை. நீ நினைத்தது சரி தான். உயிரினம் தான்” பெரிதாக அசரீரி போல் குரல் கிழக்கு திசையில் இருந்து கேட்டது. அவர் அந்த திசையில் பார்த்த போது அங்கே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
அவர் எழுந்து ஓடி விட நினைத்து மீண்டும் எழுந்தார். விழுந்தார்.
”எழாதே. பேசாமல் உட்கார்” மீண்டும் குரல் சொன்னது.
அவர் அமர்ந்து கொண்டார். பின் அச்சத்துடன் கேட்டார்,
”யாரது?”
”முதலில் நீ ஏன் இங்கு வந்தாய்? அதைச் சொல்”
”நான் தெரியாமல் பூமியில் இருந்து இங்கு வந்து விட்டேன். அப்பாவி ஓடக்காரன்வலசு சோதிடர் நான்….. மணி என்கிற ஒரு முட்டாள் என்னை இங்கு அழைத்து வந்தான்” என்றார்.
கிழக்கே தொடர்ச்சியாக இடி முழுங்கியது. தரை மேலும் வேகமாக ஆடியது.
அவர் அழுதார். ”தயவு செய்து என்னை ஒன்று செய்துவிடாதீர்கள்”
”பயப்படாதே. நான் சிரித்தேன். அது தான் உனக்கு இடி போலக் கேட்கிறது”
”சரி சோதிடரே. உங்கள் கைப்பேசியில் இப்போதைய கோள்களின் நிலவரத்தை பார்த்து சொல்லுங்கள் பார்ப்போம்” என்றது அந்த குரல்.
ஒரு கணம் சோதிடருக்கு பெருமையாக இருந்தது. ஆண்ட்ரோமெடா அண்டத்தின் பேர் தெரியாத இந்த கோளில் கூட தன் சோதிடத்திற்கு மரியாதை இருக்கிறது.
”இதோ…” அவர் தன் கால்சட்டையில் கை நுழைத்து கைப்பேசியை எடுத்தார். ஆடிக் கொண்டிருந்த பரப்பில் அமர்ந்து கைப்பேசியை ஒரு கையில் பற்றுவது கடினமாக இருந்தது. இருந்தாலும் எப்படியோ சமாளித்து அந்த இன்றைய கிரக நிலையை வானை ஸ்கேன் செய்து கட்டத்தில் காட்டும் ஆப்பை திறந்தார்.
அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. பன்னிரெண்டு ராசிக் கட்டங்களிலும் 66 கோள்களைக் காட்டியது. அது காட்டிய அவற்றின் பெயர்கள் அவர் அறிந்த பெயர்களாக இல்லை. அவர் அறிந்த ஒரு கோளின் பெயர் கூட இல்லை.
”என்ன சோதிடரே” என்றது குரல்.
”ஆமாம். இது வேறு கிரகம் வேறு அண்டம் இல்லையா? வேறு கோள்கள்” என்றார் சோதிடர்.
”ஆம் சோதிடரே. இங்கு நீங்கள் எதையும் கணிக்க முடியாது. இதன் கணிப்பு முறை வேறு. உங்கள் பூமியைப் போல எளிது அல்ல. மிகவும் சிக்கலானது. இப்போது நீங்கள் இருக்கும் இந்த கிரகத்தின் பெயர் என்ன தெரியுமா? இதன் பெயர் 111 B.”
சோதிடர் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
”உங்கள் சூரியனை விட இங்குள்ள சூரியன் 108 மடங்கு பெரியது. இந்த சூரியனி்ன் பெயர் 12 B. இந்த சூரியனை 66 கோள்கள் சுற்றி வருகின்றன. நாமிருக்கும் இந்த கிரகம், அதாவது 111 B. உங்கள் பூமியை விட 88 மடங்கு பெரியது. இது சூரியனிலிருந்து 16 வது கோள்”
”ராசி கட்டமும் உங்கள் பூமியில் போடுவதைப் போல 12 அல்ல. இங்கு 60 கட்டங்கள்”
இங்கு கோள்களுக்கு இடப்பட்டுள்ள பெயர்கள் எல்லாம் நம்மூர் நகர பேருந்து எண்களைப் போல உள்ளதே. ஒருவேளை தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்துத் துறையில் இருந்த யாரோ இந்த கோளில் மறுபிறப்பு எடுத்து இந்த பெயர்களை வைத்திருப்பார்களோ? சோதிடர் யோசித்துக் கொண்டிருந்த போதே அந்த உயிரினத்தின் குரல் புரிந்து கொள்ள முடியாத பெரும் ஓலமாகியது.
சோதிடர் தூக்கி எறியப்பட்டார். ஒரு பெரும் மணல் வெளியில் விழுந்து புரண்டு எழுந்தார். என்ன நடந்தது என்று புரியவில்லை. பெருச்சாளி போன்ற ஒரு விலங்கு அவருக்கு முன்னால் ஓடியது. அது சற்று தூரம் ஓடிவிட்டு பிறகு திரும்பி வந்து அவருக்கு முன்னால் நின்றது.
”சோதிடரே….போகலாம் வாரும்” என்றது.
”போகலாமா?….பேசும் பெருச்சாளி?” அவர் பயந்தார்.
”சோதிடரே பயப்பட வேண்டாம். இவ்வளவு நேரம் என் மீது தான் நீங்கள் சவாரி செய்து வந்தீர்கள்” என்றது அது.
”உன் மீதா? ஏதோ மிகப் பெரிய விலங்கு அல்லவா அது?”
”ஆமாம். அது நான் தான். ஆனால் இப்போது என் நேரம் மாறி விட்டது. நீங்கள் தசை, புக்தி என்பீர்களே. நான் இப்போது வேறு கோளின் ஆளுகைக்குள் வந்து விட்டேன்.”
”வேறா?”
”ஆம்…42 வது கோளின் ஆளுகை கடந்த சில நிமிடங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இப்போது 56 வது கோளின் ஆளுகை துவங்கி இருக்கும்”
”விபரீதமாக இருக்கிறது. அதற்காக அவ்வளவு பெரிய விலங்கு பெருச்சாளியாக மாறுமா?” சோதிடர் கேட்டார்.
”இங்கு அப்படித்தான். வாருங்கள் சென்று கொண்டே பேசுவோம்” என்றது பெருச்சாளி.
”எங்கு செல்வது?” அவர் கேட்டார்.
”அதுபற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. ஊழே கொண்டு செல்லும். அது எங்கு கொண்டு செல்கிறதோ அதுவே நாம் செல்ல வேண்டிய இடம்” என்றது.
இருவரும் பேசிக் கொண்டே அந்த பெரும் மணற் பரப்பில் நடந்தனர். பெருச்சாளி நடுநடுவே நின்று சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டது.
”சோதிடரே….இந்த கிரகத்தில் வாழ்க்கை லேசுப்பட்டதல்ல. உங்கள் பூமியில் வாழ்பவர்கள் எவ்வளவோ அதிர்ஷ்டசாலிகள்”
சோதிடர் அது மேலும் சொல்ல ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
”இந்த ஆண்ட்ரோமெடா அண்டத்தின் தெய்வங்கள் கூட இந்த கிரகத்தில் அவதாரம் எடுக்க அஞ்சி நடுங்கும். அவை தவறியும் இங்கு எந்த உயிராகவும் பிறப்பதில்லை”
”ஏன்?”
”உங்கள் பூமியில் பொதுவாக ஊழ் என்றால் என்னவென்பீர்கள் சோதிடரே?”
”ஊழ் என்பது ஊழ்வினை…கர்ம வினை என்றும் சொல்வார்கள். ஒருவன் தன் முற்பிறவியில் செய்த நன்மை-தீமைகளின் பயன் விளைவை இந்த பிறவியில் பெறுவது” என்றார்.
”ஆம். ஊழை செயல்படுத்துவது கோள்கள் என்பீர்கள் சரிதானே? பெருச்சாளி கேட்டது.
”ஆமாம்”
”இங்குள்ள ஊழின் பொறி அமைப்பு மிகவும் சிக்கலானது. புரிந்துகொள்ளவே முடியாது. இங்கு பிறந்து விட்ட ஒரு உயிர் அவ்வளவு எளிதாக இங்கிருந்து விடுபடவே முடியாது. நீங்கள் முக்தி என்றெல்லாம் சொல்வீர்களே? இங்கே கடவுள் அவதாரம் எடுத்தால் கூட தப்ப முடியாமல் சிக்கிக் கொள்வார்…….. உங்கள் கோள்கள் உங்கள் சூரியனை நீளவட்டப் பாதையில் சுற்றுகின்றன அல்லவா?”
”ஆமாம்”
”இங்குள்ள சூரியனை இங்குள்ள 66 கோள்களில் ஒரு சில மட்டும் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகின்றன, வேறு சில முழு வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன, பிற சில சதுரப் பாதையில் சுற்றி வருகின்றன, சில முக்கோணப் பாதையில் சுற்றி வருகின்றன. சில முரட்டு கோள்கள் தூரத்திலிருந்து நேர்க்கோட்டில் சூரியனை நோக்கி நேராக மோதுவது போல் வந்து அப்படியே தாண்டிக் குதித்து அப்பால் செல்கின்றன. பிறகு திரும்பி வருகின்றன. சில சமயம் அவை தாண்டிக் குதிக்கப் போவதில்லை என்று தெரியும் போது சூரியன் பயந்து நகர்ந்து கொண்டு மோதலில் இருந்து தப்புகிறது. சில சமயம் துணைக் கோள்கள் கூட தங்கள் துணையை மாற்றிக் கொண்டு வேறு கோள்களுக்கு துணையாகி விருப்பம் போல் திரிகின்றன”
”விபரீதம்”
”ஆமாம். அதனால் இந்த கிரகத்தில் உள்ள உயிர்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப் படுகிறது. அவற்றின் ஊழை புரிந்து கொள்ளக் கூட அவற்றுக்கு நேரமில்லை. பால்வெளி அண்டத்தின் பூமியிலிருந்து வந்த மனிதர் நீங்கள். உங்கள் மனித இனத்திற்கு நிகராக இங்குள்ள இனம் சிக்மண்ட்கள். சிக்மண்ட்களே இங்குள்ள அறிவுள்ள பிராணிகள் ஆனால் அவர்களாலும் கூட ஒரு நிலையான தத்துவார்த்த புரிதலுள்ள வாழ்க்கையை இங்கு மேற்கொள்ள முடியவில்லை. பாருங்களேன் நானே கூட ஒரு சிக்மண்ட் தான். என் ஊழ் இப்போது என்னை பெருச்சாளி ஆக்கி இருக்கிறது. ஒரு சிக்மண்டின் அறிவு இப்போதும் எனக்கு உள்ளது. அதனால் தான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அடுத்து என்ன நடக்குமோ என்று அஞ்சிக் கொண்டும் இருக்கிறேன்” என்றது.
தன்னுடைய நிலைமை இங்கு என்ன ஆகப் போகிறதோ என்று சோதிடர் கவலைப்பட்டார்.
பெருச்சாளி சிக்மண்ட் தன் கதையைக் கூறியது. அவருடைய உண்மையான பெயர் டைமண்ட். டைமண்ட சிக்மண்ட் மிக அழகானவராக இருந்தார். மிகவும் கற்றவராக, அறிஞராகவும் இருந்தார். இங்குள்ள சிக்மண்ட்களின் பல்வேறு மொழிகளை கற்றது மட்டுமல்லால் வெகு தூரத்தில் இருக்கும் பால்வெளி அண்டத்திலுள்ள மனிதர்களின் மொழிகளையும் அறிவுத் துறைகளையும் கூட மானசீக உயர்கல்வி முறையில் கற்றுத் தேர்ந்தார். பேரழகியான பிளாட்டினாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் சொல்லொணா இன்பத்துடன் நேசித்தனர்.
அவர்களுக்கு திருமணம் ஆனது. திருமணத்தின் போது அவருக்கு 25 வயது. பிளாட்டினாவுக்கு 21 வயது. அவர்கள் தங்கள நல்வாழ்வுக்காக ஆன்ரோமெடாவின் தெய்வங்களை வேண்டிக் கொண்டனர். கோள்களின் அருளைப் பெற ”கோயிங்” மலையிலுள்ள 66 குறியீடுகளுக்கு பூசைகள் செய்தார்கள். பின்னர் அவர்கள் இருவரும் 111 B யின் துணைக்கோளான 12 C யில் தனியாக வசித்து வந்து டைமண்டின் 97 வயது தாத்தாவிடம் ஆசி பெறச் சென்றனர். தாத்தா பேரனையும் அவரது மனைவியையும் கண்டு மகிழ்ந்தார். அவர்களை தன் மாளிகையில் சில நாட்கள் தங்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் அங்கு தங்க மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டனர். ஆனால் ஒரு சில நாட்களிலேயே தாத்தா தன் மனைவியை அணுகும் விதம் சரியில்லை என்று டைமண்டுக்குத் தோன்றியது. அவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு 111 B திரும்பினார்.
கதையை இது வரை சொல்லி விட்டு தற்போது பெருச்சாளியாக இருக்கும் டைமண்ட சிக்மண்ட் நிறுத்தினார். பெருச்சாளியின் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
”கேடு கெட்ட ஊழ் நண்பரே. பொதுவாக உங்கள் மனிதர்களைப் போலவே சிக்மண்ட்களும் 90 – 100 வயதில் தான் இறப்பார்கள். பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் இங்கு எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானலும் நடக்கும்”
”துணைக் கோளில் சாவு நெருங்கும் வயதில் இருந்த என் தாத்தாவிற்கு கிரக நிலைகள் விபரீதமாக மாறியது. அவர் 24 வயது இளைஞனாகி விட்டார். அவர் எங்கள் கோளுக்கு எங்களிடமே வந்து விட்டார். பிளாட்டினாவிடம் அவர் அவளை காதலிப்பதாக சொன்னார்”
”அட கிரகச் சாரமே. பிரபஞ்சத்தின் இப்பகுதியிலும்…” என்றார் சோதிடர்.
”ஆம். கேடு கெட்ட கிரகச் சாரம்”
”உங்கள் பிளாட்டினா என்ன சொன்னாள்?”
”அவள் அவருடைய காதலை ஏற்றுக் கொண்டாள். நீ எப்படி அவரை ஏற்றுக் கொள்ள முடியும் என்று சண்டை போட்டேன். அவள் என் பேச்சை பொருட்படுத்வில்லை.”
”விதி”
”இளைஞனாகிவிட்ட என் தாத்தா அச்சு அசலாக என்னைப் போலவே இருந்தார். என்னை விட சற்று கூடுதலாகவும் அழகாக இருந்தார். அதனால் தான் நான் அவரைக் கண்டு பொறாமைப்படுவதாக பிளாட்டினா சொன்னாள். அவளைப் பொறுத்தவரையில் ஒன்று போலவே இருக்கும் இருவரையும் ஒருவராவே கருதுவதாகவும் அவரது காதலை அவள் மறுக்க முடியாமல் போனதற்கு அவர் என்னைப் போலவே இருந்தது தான் காரணம் என்றாள். அந்த அளவிற்கு என்னை அவள் நேசிக்கிறாளாம். நான் தான் புரிந்து கொள்ள மறுக்கிறேன் என்கிறாள்”
”ஜாலக்காரி”
”என் தாத்தா சொன்னார். அவருக்கு என் மீது அளவு கடந்த அன்பாம். அவர் ஒருபோதும் என்னை வெறுக்க மாட்டாராம். வாழ்க்கை அனுபவம் குறைந்த என்னை என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்து வழி நடத்த வேண்டிய கடமையும் பொறுப்புணர்வும் அவருக்கு இருப்பதாக சொன்னார்.”
”மோசக்காரன்”
”எனக்கு வேறு வழியில்லை. நான் அவர்களை விட்டு பிரிந்து வந்து விட்டேன். என்ன பாவம் செய்தேனோ சில நாட்களில் என் கிரக நிலை மோசமாக மாறியது. நான் மிகப் பெரிய ”பெனோசார்” உயிரினம் ஆகி விட்டேன். இந்த பெரும் மணற் பரப்பில் ஓடிக் கொண்டிப்பது என் வாழ்க்கை ஆகி விட்டது. அப்படி வழக்கம் போல ஓடி விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த போதுதான் இன்று நீங்களும் உங்கள் நண்பரும் விண்கலத்தில் வந்து என் முதுகின் மீது இறங்கினீர்கள். என் மீது கடந்து சென்ற மணற் காற்று உங்கள் நண்பரை தூக்கிச் சென்று விட்டது”
டைமண்ட் சிக்மண்ட தன் கதையை சொல்லி முடித்தார்.
ஓடக்காரன்வலசு சோதிடரின் மனதில் பலவித எண்ணங்கள் ஓடியது. பூமியில் ஒரு உயிர் தன் உடல் இறந்து பிறகு வேறு உடலில் பிறவி எடுக்க வேண்டும் என்பது அனைத்து உயிருக்குமான பொது விதி. இங்கு அது போலல்லாமல் உடல் இறக்காமலே வேறு வேறு உடல்களாக மாறிக் கொள்கின்றன. இறக்கவும் செய்கின்றன. எனில் எது பிறப்பு? எது இறப்பு…? இங்குள்ள சிஸ்டம் என்ன? சோதிடர் குழப்பமடைந்தார்.
”புரிந்து கொள்வது சற்று கடினம் தான் சோதிடரே” பெருச்சாளி சிக்மண்ட் சொன்னார்.
”இங்கு தற்கொலை செய்துகொள்ள முடியுமா?” சோதிடர் கேட்டார்.
”இயலாது சோதிடரே. உடல் தானாக இறந்தால் தான் உண்டு நாமாக அதைக் கொல்ல முடியாது அல்லது யாராவது நம்மை உண்ண வேண்டும்”
சோதிடர் மேலும் குழப்பமடைந்தார்.
”என்ன சோதிடரே?”
”ஒன்றுமில்லை”
”இதற்கு என்ன பரிகாரம்? நம் பூமியில் என்றால் எத்தனையோ கண்டுபிடிக்கலாம். இங்கு எனக்கு ஒரு எழவும் தெரியாது” தனக்குள்ளாக சொல்லிக் கொண்டார் சோதிடர்.
பெருச்சாளி சிரித்து மணலில் புரண்டது.
சோதிடருக்கு திடீரென்று அந்த மணற் பரப்பில் கீழே படுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவர் மணலில் குப்புறப் படுத்துக் கொண்டார். தலையை மட்டும தூக்கி வளைத்து பெருச்சாளி சிக்மண்டைப் பார்த்தார்.
”நான் விடை பெறுகிறேன் சோதிடரே” பெருச்சாளி சிக்மண்ட் புறப்பட்டார்.
”இருங்கள். ஏன் செல்கிறீர்கள்? என்று கேட்டார் சோதிடர்.
”செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது” அவர் சொல்லி விட்டு வேகமாக ஓடி விட்டார்.
குப்புறப் படுத்துக் கொண்டு கால்களை ஆட்டிக் கொண்டிருந்த சோதிடர். தன் கால்கள் நெளிவதாக உணர்ந்தார்.
அவர் இடுப்பு வரை நெளிவு உணர்வு ஏற்பட்டது. தான் முன்னகர்ந்திருப்பதை உணர்ந்து தலைத் திருப்பி கீழே பார்த்தார்.
சோதிடர் அலறினார்.
”அய்யோ நான் மலைப் பாம்பாகிக் கொண்டிருக்கிறேன்”