சஞ்சலம்

உறக்கம் கலைந்ததும் எழுந்தமர்ந்து இருளை வெறிக்கத் தொடங்கினார் சுப்பையா.  கூரைக்குள் எலிகள் ஓடி விளையாடின. கண் முன்னே இருள் வளையங்கள்.  கலைந்து உருப்பெற்று பல்வேறு வடிவங்களில் அலையடித்தது. மணி என்ன இருக்கும் என்று அவரால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. சமீப காலமாக அந்தக்கனவும், பாதி இரவில் துாக்கம் கலைந்து பதறி எழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

குடிசையைவிட்டு வெளியே வந்தார். சந்துக்குள் சென்று குத்தவைத்து அமர்ந்தார். அஞ்சடிச்சான் முக்கில் நாய்கள் குரைக்கும் ஆர்ப்பாட்டம். நாயொன்றின்..வ்ஊஊஊவ்…என்ற நீண்ட பிலாக்கணம், வைத்தியர் வீட்டுத் தொழுவத்தில் மாடுகளின் கழுத்து மணிக்குலுங்கல். அனந்தம்மா வீட்டில் இருந்து பாத்திரங்கள் சரிந்து தரையில் விழும் உலோக ஒலி. பௌர்ணமி நிலவு முற்றம் எங்கும் செறிந்து கிடந்தது. மணி மூன்றோ நான்கோ இருக்கலாம். மூன்று மணிக்கு திருநெல்வேலிக்கு  செல்லும் கணபதி பஸ் வந்து செல்லும். அதுதான் ஊருக்குள் வரும் முதல் வாகனம். ஊரைத் துயிலில் இருந்து தட்டியெழுப்பும் விடியலின் கையாள். அஞ்சடிச்சான் முக்கில் செட்டியார் டீக்கடை முதல் வாடிக்கையாளருக்காக கங்கு பூத்து காத்திருக்கும்.  ஈயத்தட்டில் இஞ்சி மணக்கும் ரவை உப்புமா. சில நாட்களில் அவருக்கு விழிப்பு வந்த சிறிது நேரத்திற்குள் கணபதி பஸ்சின் ஹாரன் ஒலி கேட்கும். மணியை உடனே உறுதி செய்துகொள்வார். இன்று காத்திருக்க வேண்டியதுதான். இனிப்படுத்தாலும் உறக்கம் வருவதில்லை. நிம்மதியான துாக்கம் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரந்தான்.

தெரு அமைதியில் உறைந்திருந்தது.  நிலவொளி மனதிற்கு ஆழ்ந்த நம்பிக்கையை அளித்தது. குருநாதன் கோவில் திண்ணையில் சென்று அமர்ந்து பொழுதுபோக்கத் தோன்றிற்று. வீட்டிற்குள் முகட்டை வெறித்தபடி விழித்திருப்பது கொதியடங்காத சிறை. எழுந்து நடக்கலானார் அந்நேரத்தில் வழிப்போக்கர்களோ அல்லது இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு திரும்பிய தெருக்காரர்களோ கோயில் திண்ணையில் உருண்டு கிடப்பார்கள்.  நான்குபுறமிருந்தும் காற்று சிலுசிலுத்து ஓடும். தென்னை மரங்கள் தங்களுக்குள் கதைகள் பேசி குலுங்கிச் சிரிக்கும்.  கொசுக்கள் நிலைத்து நிற்க முடியாமல் தட்டழிந்து ரீங்காரமிடும். சில சமயங்களில் புதிதாக வந்துள்ள சாமியார்கள்  போர்த்திக்கிடப்பார்கள். சாமியார்கள் மட்டும் ஒரு விதமான ஒழுங்கோடு படுத்திருப்பார்கள். அவர்களின் உடலில் எப்போதும்   எச்சரிக்கை உணர்வு. குடிகாரர்களை அவர்கள் படுத்திருக்கும்  கோலங்களை வைத்து தள்ளி நின்றே  கண்டு பிடித்துவிடலாம்.  அவர்கள் அருகே அமர்வதற்கு முன்பு சற்று யோசிக்க வேண்டும். வாந்தியெடுத்து அதை தரைமுழுக்க இழுவியும் விட்டுருப்பார்கள். வேட்டியை அவிழ்த்து உதறிக் கட்டிக்கொண்டார். சீசன் துண்டினால் முகத்தை அழுந்த துடைத்தார்.   முனியம்மா வீட்டுப் படிக்கட்டில் படுத்துக்கிடந்த செவலை அவரைப் பின்தொடர்ந்தது. திரும்பி பார்த்து மெலிதாகச் சிரித்தார். வேகம் கொண்டது அதன் வாலடிப்பு .

சித்திரை மாசத்து பனையூர் குருபூஜை. பெருமாள் கோவில் மண்டபத்தில் அன்னதானம். வாசலடைத்து சாப்பிட வந்திருந்த மக்கள் திரள். ஒரே தள்ளுமுள்ளு. கூட்டத்தை சமாளிக்கும் விதமாக வாசல் கேட்டைத் திறக்கவில்லை. சாம்பார் கொதியடங்கி தாளித்துவிடும் மணம் கோயில் முழுக்க. தங்கவேல் பந்தி இலைகளை வரிசையாக தரையில் போடுகிறான். சோற்று அண்டாவும் ரசம் வாளியும் பரிமாறத் தயார்நிலையில். கூட்டும் பொரியலும் தனித்தனி சில்வர் வாளிகளில்  கரண்டியோடு ஆவி உமிழக் காத்திருக்கின்றன.  சாமிக்கு பூஜை நடந்து முடிந்ததும் வாசல் கேட்டைத்திறந்து விட வேண்டியதுதான். சுப்பையா கேட்டின் அருகே நின்று கூட்டத்தை ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்தார். ரோட்டை அடைத்துக்கொண்டு நின்றது கூட்டம். அன்று மதியம் மட்டும் மூன்று வெவ்வேறு இடங்களில் அன்னதானம். ஆனாலும் மக்கள் தேடிவருவது சுப்பையா தலைமையில் நடக்கும் அன்னதான அரங்கிற்குதான். அத்தனை சாதி மக்களும் அங்கே குழுமியிருந்தார்கள்.

“அண்ணாச்சி..வாருங்கோ…சாமிக்கு தீபாரதனை காட்டப்போறா” கணேசன் கூப்பிட்டான்.

சுப்பையா படையலுக்கு முன்னே சென்று நின்றார். ரோஜா மாலைக்குள் சாம்பிராணிப் புகைமண்டலத்தின் மத்தியில் குருநாதரின் குழந்தை முகம். புருவ மத்தியில் இரு கைகளின் கட்டைவிரல்களும் தொட்டு நிற்க  கைகூப்பி வணங்கினார். கண்கள் கலங்கின. உள்ளே நடுக்கம் தோன்றி உதடுகளில் வேகத் துடி. பாலுவின் நினைவு குப்பென்று நெஞ்சைக்கீறி வெளியே வந்தது. “குருநாதா…உனக்கு நன்றியே இல்லியா….எதற்காக என் மகனை என்னிடமிருந்து எடுத்துக்கொண்டாய்? அவனோடு  என் வம்சாவளியை முடித்துவிட ஏன் தீர்மானித்தாய்”

இலைத்துணுக்கில் கற்பூரக்குவியலில் நின்றெரிந்த தீபத்தை குனிந்து வணங்கினார்.  சட்டென்று எரிச்சல் தோன்றியது. “இதன்ன விருத்திகெட்ட வேலை..” என்று ஆங்காரம் பொங்கியது. உடலில் ஒருவித அசிரத்தையும் சலிப்பும் வெளிப்பட்டது. குருநாதனின் கண்களில் குறும்பு ஒளிர்வதான மனப்பிரம்மை.  தலைகுனிந்தபடியே வாசல் சென்று கேட்டைத் திறந்துவிட்டார். கூட்டம் முண்டியடித்து உள்ளே பாய்ந்தது. கண் மூடித் திறப்பதற்குள் நான்குவரிசைப் பந்தியும் நிறைந்து, ஆட்கள் இலைகளுக்கு முன்னால் அமர்ந்திருந்தவர்களுக்குப் பின்னால் நின்றார்கள்.

எதேச்சையாகப் பார்த்தபோது இரண்டாவது வரிசையில் பாலு அமர்ந்திருந்தான். சட்டென்று சுப்பையாவின் உடல் குலுங்கியது. “ஐயா…நீ..வந்திட்டீயா..எங்கய்யா..போன?” சுப்பையா தன் மகனைக் கண்ட பரவசத்தில் அவனை நோக்கிச் சென்றார். பாலு சுப்பையாவைப் பார்த்ததும் பந்தியில் இருந்து எழுந்தான். ”விடும்வே..என்னை..” என்று கத்தியடி வாசலை நோக்கி  ஓடினான். ஒரு கணம் சுப்பையா திகைத்தார். அவருக்கு அவன் ஏன் தன்னைக் கண்டு பயந்து ஓடுகிறான் என்பது விளங்கவில்லை. “ஐயா…ராசா..எங்கய்யா..போற? என்று அழுகையோடு அவனை விரட்டிச் சென்றார்.

கொம்பேறி மூக்கன் குளம். கரைநெடுக வானுயர்ந்த பனைமரங்கள். குளத்தின் நடுப்பகுதியில் சிறிய நீர்த்தேக்கம். செம்மண் நீர்ப்படலம் ஒளிர கண்கள் கூசியது. குளத்தின் பெரும்பகுதியில் கருவேல மரச் செறிவு. பாலு பனைமரங்களுக்கு நடுவே ஓடினான். அவருக்கு வேகு வேகென்று மூச்சு வாங்கியது. கால்களில் வலியெடுத்தது. நெற்றியில் வியர்த்து ஒழுகியது. அவரால் அவனை நெருங்க முடியவில்லை. எத்தனை வேகமாக ஓடினாலும் ஓரிடத்திலேயேதான் அவர் ஓடிக் கொண்டிருந்தார். பாலு ஓடும் திசைக்கு எதிரே திடீரென்று யானையொன்று நிலமதிர ஓடிவருகிறது. பாலு அதைக் கண்டும் அச்சம் கொள்ளாமல் அதை நோக்கியே ஓடினான். “ஐயா..பாலு..மகனே..ராசா…யான…வருதுடா..பாத்துப்போடா..ஓடாதடா..அப்பாட்ட திரும்பி வந்துருடா?” அவரால் கத்த முடிந்தாலும் ஓலம் காற்றில் கரைந்து போனது. அவனை நெருங்கவில்லை. அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே யானையின் கரிய துதிக்கை பாலுவின் இடையில் சுற்றி அவனை அலேக்காக துாக்கி நெல் பிணையலில் நெல்கதிர் குவியலை தரையில் மோதி அடிப்பதைப்போல அடிக்கிறது. ”ஐயோ..ஆண்டவா…அவனக் காப்பாத்து” என்று கத்துகிறார்.

தெருவிளக்கில் பூச்சிகள் மோதிப் பறந்தன. செவலை மின்கம்பத்தின் அருகே நின்று ஒரு காலை உயர்த்தியது. கோயில் திண்ணையில் அன்று ஒருவரும் படுத்திருக்கவில்லை. வடக்கே  அமைந்த  காளியம்மன் சந்நிதியைப் பார்த்து ஒருமுறை வணங்கினார். கிழக்கு  நோக்கிய கருப்பசாமிக்கும் ஒரு கும்பிடு. லிங்கத்தின் பின்னால் சிவப்பு ஒளித்துணுக்கு மினுங்கி மினுங்கி எரிந்தது. துண்டினால் திண்ணையை உதறி சுத்தப்படுத்திவிட்டு அமர்ந்தார்.

பாலு அரளிக்கொட்டையை அரைத்துக் குடித்துவிட்டான் என்ற தகவல் அவரைச் சென்றடைந்தபோது அவர் நான்காவது நாய்க்குட்டியை பாழுங்கிணற்றில் வீசி முடித்திருந்தார். குருவையாத் தோப்பில் கருப்பி எட்டுக்குட்டிகளைப் ஈன்றிருந்தது. நான்கினை கோமுட்டிக்கோனார் கிடைக்கு ஆகும் என்று எடுத்துச் சென்றிருந்தார். மீதி நான்கும் பொட்டைக்குட்டிகள். பத்துநாட்கள் ஆகியிருந்தன. நீர்க்குண்டுகள் போல அவை மண்ணில் உருண்டு கொண்டிருந்தன. குட்டையான மாமரங்கள் நிறைந்த வெள்ளாற்றுக்கரையில் அமைந்த தோப்பு. அவர் வந்து பார்த்தபோது கருப்பியைக் காணவில்லை. இரையெடுக்க எங்காவது சென்றிருக்க வேண்டும். நான்கும் வளர்ந்து பெரிதானால் அவருக்குத்தான் இடைஞ்சல். செண்பகத்தை அவர் கமுக்கமாக கூட்டிக்கொண்டு வரமுடியாது. மந்தையில் இருந்து ஒற்றையடிப் பாதை வழியாக அவளை வரச்சொல்லி, மாடசாமி கோயில் மறைவிற்கு சைக்களில் ஏற்றி மிதித்து வந்ததும் தோதான இடமாக குருவையாவின் மாந்தோப்பிருந்தது. அதுக்கும் அவர்தான் காவல். குருவையா மாதத்திற்கு இரண்டொரு முறை வந்து எட்டிப்பார்ப்பதோடு சரி. கருப்பியை  தோப்புக்காவலுக்கு இருக்கட்டும் என்று ஏற்பாடு செய்திருந்தார். அது குருவையாவிற்கு மட்டுமே விசுவாசமாக இருந்தது. சுப்பையாவை எப்போதும் சந்தேகத்தோடு முறைத்தது. ஒற்றறிந்ததைப் போல செண்பகத்தை அழைத்துவரும் ஒவ்வொரு முறையும் குரைத்து விரட்டியது.

“ச்சீ..இந்தச்சனியன எங்காயவாது கொண்டு விட்டுட்டு வாருமே” என்று அவள்  சலித்துக் கொள்வாள். ஜம்பரின் ஊக்குகளை நெம்பி அவுக்கும் வெறியில் அவருக்கு நாயை அப்போதே கொன்றுவிடத் தோன்றும். வெண் தொடைகளை பற்களால் விட்டு விட்டு கவ்வுவார். மோட்டார் செட் மண் தரையில் சாக்கினை விரித்து அவளைக் கீழே தள்ளுவார். அடைத்த கதவிற்கு வெளியே கருப்பி ஓடி ஓடி குரைத்துக்கொண்டு இருக்கும்.

பாலுவுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியிருந்தன. புளியங்குடியில் பண்ணையார் வீட்டுச் சம்பந்தம். செல்வியைப் பார்த்த உடன் சுப்பையாவிற்கு பிடித்துப்போனது. மகனுக்கு தறிச்செட்டில் கங்காணி வேலையை ஏற்பாடு செய்து தரும் வாய்ப்பும் இருந்தது. இரண்டு பெண் மக்கள்.  எட்டுப்பத்து வீடுகளும் ஒரு ஜவுளிக்கடையும் சம்பந்தாருக்கு இருந்தன. நவாச்சாலையில் பத்து ஏக்கர் நஞ்சைவிதைப்பாடு. காந்தி பஜாரில் துப்பு விசாரித்தபோது எல்லாரும் நல்ல வரன் என்றார்கள். ஒழுக்கமான மாப்பிளையாக இருந்தால் போதும் என்பதுதான் பெண்வீட்டார் எதிர்பார்ப்பு. பாலு  சின்னப்பத்து முடித்திருந்தான். சேத்துாருக்கும் தளவாய்புரத்திற்கும் தறிநெய்ய சென்றுவந்தான். தீக்காகாரர்களோடு சேர்ந்து கொண்டு கருப்புச்சட்டை அணிந்து பெரியார் கூட்டங்களுக்குப் போனான். பெண் தெய்வங்களைப் பற்றி வாய்கூசாமல் அசிங்கமாக பேசினான்.

மாட்டுத் தொழுவத்தை ஒட்டிய தெருத்திண்ணையை நான்கு புறமும் மண்சுவர்கள் எழுப்பி மகனுக்கான குடிசையை உண்டாக்கினார் சுப்பையா. மருமகள்காரிக்கு மாட்டுத்தொழுவமும் சாணி அள்ளலும் உரக்குழுி குப்பைமேடும் ஒத்துக்கொள்ளவில்லை. நின்றுகொண்டு மோழும் மாடுகளைக் கண்டால்  அவளுக்குக் குமட்டியது. மட்டப்பா போட்ட வீட்டில் தனிக்குடித்தனம் போக ஆசைப்பட்டாள். வடக்குத் தெரு பூசாரி வீட்டை ஒத்திக்குப் பேசிமுடித்தாள்.  சம்மந்தாரிடம் இருந்து ஒத்திப் பணம் உடனே வந்து சேர்ந்தது. செய்தி கேள்விப்பட்ட முத்தம்மா வானத்திற்கும் பூமிக்கும் குதித்தாள். வந்த இரண்டே மாசத்தில்  மகனை தன்னிடமிருந்து பிரித்துக்கொண்டு தனிக்குடித்தனம் போகப்பார்க்கிறாள் என்ற முறைப்பாடு.

பாலுவினால் தனித்து முடிவெடுக்க முடியவில்லை. பின்னங்கால்கள் வரை செறிந்து தொங்கிய மனைவியின் கூந்தலில் அவன் சிக்கிக் கிடந்தான்.  மறுநாளே புதிய பண்ட பாத்திரங்கள் மாட்டு வண்டியில் வந்து இறங்கின. செல்வியின் அம்மா இரண்டு கைகளையும் பின்னால் கட்டியபடி நிமிர்ந்த நெஞ்சோடு தெருவில் கம்பீரமாக நடந்து சென்று புதுக்குடித்தன வேலைகளை மேற்பார்வை செய்தாள். காதில் தண்டட்டியும் கழுத்தில் வடச்செயின்களும் மொத்தமாக அணிந்திருந்தாள். பித்தளைப் பாத்திரங்களும் ட்ரெங்குப் பெட்டிகள் நிறைந்த புதுத்துணிகளும் இறக்கி வைக்கப்பட்டன. தனிக்குடித்தனம் தொடங்கிய நாளிலிருந்து ஓயாத சண்டை.

சுப்பையாவின் காதுகளுக்கு மாமியார் மருமகள் சண்டையைப் பற்றிய புரணிகள் அவ்வப்போது வந்தாலும் அவர் தெருவுக்குள் இருப்பது வாரத்தில் ஒருநாள்தான்.  செண்பகத்தை வெள்ளாற்றில் கண்டுகொண்ட நாட்கள் அவை. கள்ளச்சாராயம் விற்க வந்தவளோடு அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. ஒருமுறை சாராயம் குடிக்கச் சென்றார். சீனியாபிள்ளை வயல் வரப்பில் அவள் சாராயக் கேனை தரையில் இறக்கி கால்முட்டுவரை சேலை மேலேறி நிற்க குனிந்த நிலையில் கண்ணாடித் தம்ளரில் சாராயத்தை ஊற்றி நீட்டினாள். சேலை விலகித் தெரிந்த அவள் முலைப்பிதுங்கல்களைக் கண்டு சுப்பையா பதறிப் போனார். வெண் பாதங்களும், அதில் பரவி மினுங்கிய தங்க ரோமங்களும், கூர்ந்த நாசியும், கட்டுச்செட்டான முகவெட்டும் அவரை வியப்பில் ஆழ்த்தின. அவள் சாராயம் விற்க வரும் இடங்களை விசாரித்து தேடிச்சென்று வாடிக்கையை ஏற்படுத்திக் கொண்டார். அவரின் கிரக்கத்தை செண்பகமும் புரிந்துகொண்டாள். அவர் காவல் காக்கும் தோப்பிற்குள்  பாட்டில்களை மறைத்து வைக்க உதவினார். வெள்ளை பிளாஷ்டிக் கேன்களில் வாற்றுச்சாராயம் வந்து இறங்கியது. இடுப்பில் டயர்களைச் சுற்றிக்கட்டி மறைத்து கொண்டு வரப்பட்டன. ஒரு லிட்டர் கண்ணாடிப் பாட்டில்களில் பிரித்து சில்லறை விற்பனைக்காக தலைச்சுமையாக அவை வெளியே கொண்டு செல்லப்பட்டன.  செண்பகம் பத்து ஆண்களுக்குச் சமம். சொக்கம்பட்டி. தளவாய்புரம், சிவகிரி,சேத்துார் என்று நாலாபக்கமும் வியாபாரத்தை விரிவு படுத்தினாள். ஓட்டமும் நடையுந்தான் அவளின் இயல்பு. கனத்த முலைகளும் தனித்த பின்பகுதிகளும் அவளுக்கு ராஜநடையை உண்டாக்கின. முற்றிய போதையில் அவள் அவர் நெஞ்சில் அமர்ந்து இயங்கும்போது அவளிடமிருந்து வெளிப்படும் சீற்றங்கள் அச்சத்தை அளித்தன. இருட்டுக்குள் ஒத்துழைப்பு இன்றி வேண்டா வெறுப்பாக கூடிய முத்தம்மாவோடு ஒப்பிடும்போது செண்பகம்  அடங்காப்பிடாரிதான். வாய் வித்தைகளும் கை நுட்பங்களும் தெரிந்தவள். சுப்பையா தோப்பே கதியென்று கிடந்தார்.

பாலு இறந்த பின்னர் அவருக்கு நெஞ்சுப்பலம் இல்லாமல் ஆனது. தன் பெயர் சொல்ல இருந்த ஒரு ஆண் வாரிசும் தொலைந்து போனதில் கட்டுப்படுத்த முடியாத துக்கம். அப்போது ஒரு  உள்குறுகல் அவரின் மனோபாவத்தில் ஏற்பட்டது. அது நடையில் முதுகுக் கோணலாக வெளிப்பட்டது. மருமகளைப் பற்றி ஊருக்குள் வேறுவிதமான பேச்சுகள் அடிபட்டது. புருசன் செத்த பிறகும் உள்பாடி அணிகிறாள். இரண்டாம் ஆட்டம் சினிமாவிற்கு தலை நிறைய பூவைத்துச் செல்கிறாள்.  கைக்குழந்தையை பக்கத்து வீடுகளில் பார்த்திருக்கச் சொல்லிவிட்டு காணாமல் போகிறாள். அடிக்கடி அதிகாலைப் பஸ்சில் ஏறி எங்கோ போய் வருகிறாள் என்று தொட்டுத் தொட்டு ஆவலாதிகள். ஐந்தாறு இளந்தாரிப்பசங்கள் நிரந்தரமாக அவளைச் சுற்றிவந்தனர். பீடி சுற்றியபடி அவள் பகல் முழுக்க அனந்தம்மா வீட்டில் இருந்தாள். அங்கேயும் ஆர்ப்பாட்டமும் கும்மாளமுந்தான். சிலோன் ரேடியோ சினிமாப்பாட்டுக்களை கூடவே சேர்ந்து பாடினாள். செட்டியார் கடை மிக்சரும் அல்வாவும் பொட்டலம் பொட்டலமாக வாங்கி வந்தான் முருகேசன்.

இரவுகளில் அவள் வீட்டைச்சுற்றி வேட்டைநாய்களின் காத்திருப்பு. சாமத்தில் உடம்பில் ஒட்டுத்துணி இன்றி தலைக்குக் குளிக்கிறாள் என்றும் அதைப்பார்க்க ஆண்களுக்குள் ரகசியப் போட்டி என்றும் கேட்டபோதெல்லாம் அவர் நெஞ்சம் பதறியது. தெருவில் ஆள்நடமாட்டம் ஓய்ந்த பிறகு அவள் வீட்டை யார்யாரோ வந்து நோட்டமிட்டார்கள். நாய் குரைப்பும் ஆள்களின் தரை உரசும் நடைச்சத்தமும் விடிய விடிய கேட்டுக்கொண்டே இருந்தன. அண்ணன் மகன் சின்னச்சாமி வெளிப்படையாகவே அவரிடம் கேட்டுவிட்டான். “அவளோட விருப்பம் என்னன்னு தெரியாமா நான் என்னப்பா செய்யமுடியும்?” என்று தயங்கிச் சொன்னார். “கிழட்டுப்பயலுக்கு எழுந்து நிக்கத் தெம்பில்ல…வைப்பாட்டி கேக்குதோ?” என்று மருமகள் தெருச்சண்டையில் சின்னச்சாமியை சாடைமாடையாக ஏசிய பிறகு அவருக்கு ஆறுதல் ஏற்பட்டது. ஆனாலும் சின்னச்சாமி ஓய்ந்துவிடவில்லை செல்வியை அடையும் நோக்கோடு சுப்பையாவிற்கு பணிவிடைகள் செய்ய ஆரம்பித்தான். “சின்னையா..சின்னையா..” என்று பொழுதுசாய்ந்த பிறகு வீடு தேடி வரத் தொடங்கினான். முத்தம்மாவிற்கு ரேசன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்தான். தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை துண்டில் பொதிந்து கொண்டு வந்து கொட்டினான். பருப்பு வடையும் மண்டோலக் காப்பியும் அதிகாலையில் வீடு தேடி வந்தன. குடிசையின் வாசலில் குந்தியபடி  செல்வியின் போக்குவரத்தினை நோட்டமிடுவான்.

முத்தம்மாவிற்கு சின்னச்சாமியின் வருகை மருமகளை வதைப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது. அவனை தன்னுடைய மகனாகவே தத்து எடுத்துக்கொண்டாள். சுப்பையாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. “கூல் பானை உடைஞ்சா குருட்டு நாய்க்கெல்லாம் கொண்டாட்டம்” என்ற நிலை. தான் இருக்கும்போதே மருமகளுக்கு ஒரு வழியை உண்டு பண்ணி விடவேண்டும். அவளை பிறந்த வீட்டுக்கு அனுப்பி இரண்டாம் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம். முத்தம்மா மருமகளை ஊரை விட்டு விரட்டுவதிலேயே குறியாக இருந்தாள். மகனை தற்கொலை நோக்கி விரட்டியதில் மருமகளுக்கே முழுப்பழியும் சேரும் என்று நம்பினாள். பேத்தியை மட்டும் மடியில் போட்டுக் கொஞ்சினாள்.

எவ்வளவு நேரம் கோவில் திண்ணையில் அமர்ந்திருந்தார் என்று தெரியவில்லை. குளிர்ந்த காற்றோடு முதல் புலரி அவர் முன் துலங்கி வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *