பிஸ்கட்டும் தேநீரும் கிடைக்கவில்லை.

விடிந்தும் விடியாத காலைப் பொழுது கரும் சாம்பல் நிறத்திலான வானம் ஜன்னலின் வழியே தெரிந்தது. கண்கள் இரண்டும் எரிந்தன . மனைவி காந்திமதியின் தொடர் தொந்தரவான  எழுப்புதலால் எழ நேரிட்டது. நேற்று இரவு  மிக  காலதாமதமான உறக்கத்திற்கு சென்றார் கஜபதி.இன்று காலை மகனின் முதலாமாண்டு கல்லூரி இணைப்பும், அதன் கொண்டாட்டமும் . ஒன்பதரைக்குள் கல்லூரி வளாகத்தினுள் இருக்க வேண்டுமென்ற வேண்டுகோள் , தன்  கைப்பேசிக்கு வந்திருந்ததை ராம் காட்டியிருந்தான்.  கஜபதியும் ,காந்திமதியும் சீக்கிரமாகவே புறப்பட்டனர், எழு மணிக்கே தஞ்சை புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து திருச்சிக்கும் பெரம்பலூர், சென்னை பாதையில் ராம் படிக்கப்போகும் கல்லூரிக்குச் செல்வதாக முடிவு. தஞ்சையிலிருந்து திருச்சிக்கு செல்லும் இடைநில்லா பேருந்தில் ஏறி, புதியதாக திறக்கப்பட்ட திருச்சி , பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் செல்லாமல் , டிவிஎஸ் டோல் கேட்டில் இறங்கி மேம்பாலம் குறுக்கே கடந்து சென்னை,பெரம்பலூர் பஸ் நிறுத்தத்தையடைந்து , அப் பேருந்து நடத்துனரிகளின்  கருணை கிடைத்தால் அப்பேருந்தில் ஏறி கல்லூரியின் வாயிற்கருகே இறங்கிக் கொள்ளலாம் . இந்த முறை கஜபதிக்கு அதிர்ஷ்டமில்லை இரண்டு பேருந்தின் நடத்துனர்களும் அந்நிறுத்தத்தில் நிறுத்த அனுமதியில்லை என்று நிராகரித்து ஏற்ற மறுத்தனர் , கால தாமதம் ஆகிறதே என்ற படப்படப்புடன் கைகளை பிசைந்து தவித்தார். மனைவியிடம்

நாம சமயபுரம் டோல்கேட் போயி அங்கிருந்து   போயிடலாமா என கேட்டார். 

அது கொஞ்சம் கஷ்டம்க டோல் கேட்டுல இறங்கி பஸ் மாற ரெம்பதூரம் நடக்கனும், கொஞ்சம் பொறுங்க வேற பஸ் வருதான்னு பாப்போம். நாம இறங்கனும்னா டோல் பிளாசவுல இறங்கின உடனே ஆட்டோ பிடிச்சா கூட போயிடலாம்.

சரி எனக்கு கொஞ்சம் புரியல , நீ திருச்சியில் படிச்சதால ரூட்டு தெரியுது என்றார் கஜபதி. பத்து நிமிடம் கடந்ததும் பெரம்பலூர் செல்லும் பேருந்து வந்தது. டோல் பிளாசா நிற்குமென நடத்துனர் கூவியதால் ஏறி டோல் பிளாசாவுக்கு பதினைந்து நிமிடத்தில் வந்து சேர்ந்தனர். இறங்கியவுடனே பக்கத்தில் ஆட்டோ இருந்தது , விசாரித்ததில் நூறு போய் கேட்டார் கல்லூரிக்கு செல்ல. வேறு வழியின்றி கல்லுாரிக்கருகே  இறங்கி ஆட்டோவுக்கு நூறு ரூபாய் கொடுத்தார் கஜபதி. கல்லூரியின் பிரம்மாண்டமான பெரிய நுழைவாயிற்கருகே விளம்பர பாதகையில் இதயபூர்வமான வரவற்பை பார்த்து அதனருகில்  சென்றார். எளிய அலங்கரிக்கப்பட்ட நுழைவாயிலினருகே பத்து நபர்களுக்கும் மேல அடையாள அட்டை அணிந்தவர்கள் அவர்களை வரவற்றனர். இனிப்பும், தேனீரும் அருந்தும் படி  இனிய புன்னகையால் வேண்டிக் கொள்ளபட்டனர். கஜபதி இனிப்பை மட்டும் எடுத்தார். காந்திமதியும், ராமும் இனிப்பும் தேநீரும் எடுத்துக் கொண்டு  அவரை பார்த்து கண்ணடித்து ,காலை உணவு என்றனர், கஜபதி  தலையாட்டி மறுத்தார் . அரங்கினுள் நுழைந்தனர் மிகப் பிரம்மாண்டமான ,ஒரே நேரத்தில்  

  இரண்டாயிரம் பேர் அமரக்கூடிய இடமாக  அமைத்திருந்தனர். அரங்கு கிட்டதட்ட முழுமையாக நிறைந்திருந்தது , கடைசி இருக்கைக்கு இரண்டாவது இருக்கையில் பாதையின் அருகே இடம் கிடைத்தது எழுத்து போவதற்கு வசதியாக .கஜபதி மனதிற்குள் குதுகலித்தார்.அரங்கை  குளிர்சியூட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஏசிக்கள் மாட்டியிருந்தனர். இவ்வளவு மக்கள் கூடியும் ஏசியினால் வெக்கையோ வியேர்வையோ இல்லை. மேடைக்கு செல்ல நடுவில் பத்தடி பாதை விடப்பட்டு இருபுறமும் என்சிசி மாணவ மாணவியர் மேடை அருகே வரைக்கும் நிறுத்தியும் , மேடைமேல் இரு புறமும் நான்கு பேர்களை நிற்க வைத்திருந்தனர். மாணவர்களை தனியேயும், பெற்றோர்களை தனியேயும் அமர வைக்க அறிவுறுத்தப்பட்டதால் ,அதன்படியே அவர்கள் செயல்பட்டு அங்கே குழப்பமின்றி சப்தமின்றி பிரித்து . அமைதியை உருவாக்கினர். என்சிசி மாணவர்களுக்கிடையே, மூன்றாமாண்டு நான்காமாண்டு மாணவமாணவியரும், தங்களின் அடையாள அட்டையை அணிந்து ஒழுங்கு படுத்துவதில் தங்களின் பங்கை செய்தனர். அவர்களில் ஒருவராக மாநிறமான  தூக்கலனா அழகுடன் ஒரு மாணவி துருதுருவென இருந்தார். கண்கள் பெரிதாக இரண்டும் இரண்டு பிரகாசமான ஒளியுடனும்,  ஆழமுடனும், ஈர்ப்புடனும் இருந்தது. தன் வசீகர புன்னகையால் வருவோரை ஈர்த்தார். நீல ஜீன்ஸ் பேண்ட்டும் , அந்நிறத்திற்கு ஏற்றாற் போல இலைவடிங்கள் கொண்ட டிசார்ட்டும் எளிய அழகை பண்மடங்கு உயர்த்தியது, தலைமுடி பின்னப்பட்டு பின்புறம் இடுப்பிற்கும் கீழே வரை தொங்கியது . அவர்தான் என்சிசி மாணவர்களை ஒழுங்குபடுத்தி அவ்வப்போது ஏதோ சொல்லி உற்சாகப் படுத்தியபடியே இருந்தார். அப்போது மேடையில் ஒரு அறிவிப்பு வந்தது.

இன்னும் சற்று நேரத்தில் முக்கிய விருத்தினர் வரும் போது அனைவரும் எழுந்து வரவேற்குமாறும்,அரங்கினுள் இருக்கும் அனைவரும்  தங்களின் கைபேசியை சைலண்ட் மோடில் வைக்குமாறும்  அறிவித்தனர்.

பதினைந்து நிமிடமாகியும் முக்கிய விருந்தினர்கள் வரவில்லை மணி பத்தை நெருங்கியது. கஜபதிக்கு பசி அதிகமானது குடித்த தேனீர் செரித்து பசியை அதிகமாக்கியது , மனைவியிடம் மெல்லிய குரவில் 

நா போய் கேண்டீன்ல சாப்டுட்டு வந்துரவா

கொஞ்ச நேரம் பொறுங்க அவங்க வந்துடுவாங்க .

கஜபதியும் ஏதோ வாய்க்குள் முனகியவாரே  வேண்டா வெறுப்பாக புன்னகையை வரவழைத்துக் கொண்டு மனைவியை பார்த்தார்.

புரியது உங்க நிலம கொஞ்சம் பொறுத்துக்குங்க போயிடலாம். என்றார் காந்திமதி

கஜபதி அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எதிர்புறமாக நின்றிருந்த என்சிசி மாணவி ஒருவர் மயங்கி விழுந்தார். பொறுப்பாளரான  பெண் உடனே செயல்பட்டு தாவி அப்பெண்னை தூக்கினார். கைதாங்கலாக அரங்கின் கடைசியிலிருந்த இருக்கையில் அமர வைத்து, அருகே இருந்த   பாட்டிலிலிருந்து தண்ணீரை தெளித்து கொஞ்சம் குடிக்க தண்ணீரை வாயில் உற்றினார். சற்று தெளிந்த மாணவிக்கு சூடான  தேனீரை உதவிக்கு வந்த மாணவரிடம் வாங்கி வரச் சொல்லி குடிக்க குடுத்தார். முக்கிய விருத்தினர் இன்னும் வரவில்லை, கடுப்பானார் கஜபதி, மனதிற்குள் கண்ணாபின்னாவென திட்ட ஆரம்பித்து மனைவியை பார்த்தார். கண்களில் அனல் பறந்தது. அதற்குள்ளாக இன்னாரு மாணவியும் மயங்கி விழுந்தார். அவரையும் தூக்கிய மாணவர்கள் அரங்கின் கடைசியிருக்கைக்கு கொண்டு சென்று முதலுதவி செய்தனர். அரங்கில் அமர்ந்திருந்த பெற்றோர்களிடம் பெரிய அளவில் எந்த சலனமும் இல்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதுடன் வேறு ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. காலையிலிருந்து சாப்பிடாததும் நீண்ட நேரம் நின்றதாலும் பலவீனமடைந்தும், பலமின்றியும் மயங்கி விழுந்தனர். பொறுப்பாளரான  பெண் வெளியே சென்று தனது ஆசிரியரோ, கல்லூரியின் முக்கிய பெறுப்பிலிருந்தவரையோ  அழைத்து வந்து  நடந்த சம்பவங்களையும் மயங்கி விழுந்த மாணவிகளையும்  சுட்டிகாட்டி ஏதோ பதட்டத்துடனும்,கோபமாகவும் செல்லிக் கொண்டிருந்தார். அவர் அப்பெண்ணிடம் மெதுவாக பேசும்படியும் ,பெரிதுபடுத்த வேண்டாமெனவும்  கண்டிப்புடன் சைகை செய்து அலட்சியப்படுத்தி மற்ற மாணவர்களிடம் ஏதா சொன்னார். மேடையிலிருந்து அறிவிப்பு வந்தது. முக்கிய விருந்தினர் வந்துவிட்டதால் அனைவரும் எழுந்து நின்று வறவேற்குமாறு சொன்னார்கள்.

மேடைக்கு செல்லும் பாதையில் நான்கைந்து பேர் கோட்டு சூட்டுடன் மெதுவாக நடந்து மேடையை நோக்கி நடந்து சென்றனர். கூட்டத்தில் சட்டென்று சலசலப்பு மற்றுமொரு பெண் மயங்கிவிழுந்ததால் முக்கிய விடுத்தினர்களில் ஒருவர் விழுந்தவரை  தூக்கி உதவிக்கு வந்தவர்களிடம் ஒப்படைத்தார். நடைபாதையில் நின்றிருந்த பொறுப்பாளரான அப் பெண் கோபமாக வெளியே சென்று விட்டார்.

என்சிசி மாணவிகளில் மூன்று பேர் மயங்கி விழுந்தததை மனைவியிடம் சொல்லி, காலையில ஒன்றும் சாப்பிடாம வந்துட்டங்க போல என்றார் கஜபதி , 

விருந்தினர் வந்துவிட்டதால் கூட்டம் ஆரம்பித்தது. கஜபதிக்கு இருப்பு கொள்ளவில்லை, பசியின் தாக்கம் அதிகமாகி தாம் மயங்கி விடுவது போல பயந்தார். மனைவியிடம் கைப் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி கொஞ்சம் தொண்டையையும் வயிற்றையும் நனைத்துக் கொண்டு பசியை தள்ளி போட்டார். வரவேற்பாளினி  முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும்   ,அது முடிந்ததும் முக்கிய விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார் , முக்கிய மூன்று விருந்தினர்கள் தலா எட்டு நிமிடங்களுக்கு மேல் பேசினார்கள். எல்லா விருந்தினர்களும் ஆங்கிலத்தில் பேசினார்கள் இடையே ஒரு சில வார்த்தைகள் மட்டும் தமிழில் பேசினர்.கல்லூரி  துவங்கியது , அதன் நோக்கங்கள், முதலாம் ஆண்டு படிக்கவந்திருக்கும் மாணவர்களை வரவேற்று வாழ்த்தி , அவர்கள் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் என்றனர். நான்காவதாக பேச வந்தவர் ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்த கல்லூரியின் தரத்தையும் தற்போது உள்ள வசதிகளையும் ஒப்பிட்டு பேசினார். இந்தியாவின்  இருபத்தியெட்டு மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் வந்து படிப்பதை வைத்து பல்கலை கழகமாக மாறியது பற்றியும் மகிழ்ச்சியுடனும் , பெருமையுடனும் பேசினார். அவர் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசிய போது மேடையின் வலது புறம் நின்றிருந்த என்சிசி மாணவர் ஒருவர் அப்படியே மயங்கி கீழே விழுந்தார்.  தூரத்தில் உட்கார்ந்திருந்து கவனித்த   கஜபதி இருப்பு கொள்ளாமல் தவித்தார் , ரத்த காயமாக இருக்கும் என நினைத்த போது யாரோ ஆம்புலன்ஸ் என கூப்பிடும் குரல் பெரிதாக கேட்டது.. நான்கைந்து மாணவர்கள் கீழே விழுந்தவரை தூக்கி வந்தனர் ,தலையை சுற்றியிருந்த துணி ரத்தமாக இருந்தது. சலசலப்போ, கூட்டம் கூடுதலோ இல்லை. வந்திருந்த பெற்றோர் அனைவரும் இருக்கைகளில் அமர்த்திருந்தவாரே இருந்தனர். வெளியே ஆம்புலன்ஸ் சப்தம் கேட்டது போல தெரிந்தது. பேச்சை முடித்துக் கொண்டதாக அறிவித்த , வரவேற்பாளினி மேடையிலிருந்து அறிவித்தார். 

புதியதாக வந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சாப்பிட  வெளியே தேனீரும் பிஸ்கட்டும்  இருக்கிறது , சாப்பிட்டு முடித்தவுடன் , பஸ்வசதி செய்திருக்கிறோம் அதில் ஏறி அட்மிஷன் டெஸ்க்டுக்கு வந்து விட்டால் , கல்லூரியில் படிப்பதற்கும், போக்குவரத்திற்கான பேருந்து கட்டணத்தையும் , ஹாஸ்ட்டலில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கான தொகையையும் கட்டிவிடலாம். நாளை  முதல் வழக்கம் போல  கல்லூரி செயல்படும் நன்றி , என்றார்.

கூட்டம் கலைந்து செல்ல துவங்கியது பெற்றோரும் மாணவர்களும் முந்திச்செல்ல முயன்று அரங்கின் வாயிற்படியில் கூட்டம் தேங்கி பிதுங்கியது , கடைசியாக வெளியேறிய கஜபதிக்கும் அவரது மனைவி காந்திமதிக்கும் மகன் ராமுக்கும் சாப்பிட பிஸ்கட்டும் , தேனீரும் கிடைக்கவில்லை. கல்லூரியில் சேர பணம் கட்டுவதற்கு நின்றிருந்த பேருந்தில் ஏறவும் போட்டி நடந்து கொண்டிருந்தது. கஜபதிக்கு பசியில் மயக்கம் வருவது போலிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *