அப்பாவின் நினைவிடம்

நீண்ட தேடலுக்குப் பின்னர் ஓரிடத்தை தேர்வு செய்து ஆட்டோவை நிறுத்தச் சொன்னாள் செண்பகம். சாலையின் இருபுறமும் கண்ணுக் எட்டிய துாரம் தரிசு நிலம். வெயில் பொட்டல்காட்டில் தளும்பி அலையடித்தது. ஆங்காங்கே சீமைக் கருவேல மரங்களின் கூடாரங்கள். விளிம்பு கட்டியதைப் போல ரயில்வே தண்டவாளம். செம்மண் தடம் ஒன்று வடக்கு நோக்கு முடிவில்லாமல் நீண்டு கிடந்தது. பாதையில்லா பயணத்திற்கு அவள் தன்னைத் தயார் செய்துகொண்டாள். பத்தாண்டுகளுக்கு முன்னர் அங்கு வந்திருந்தாள். அப்பாவை அமர்ந்த நிலையில் அமரர் ஊர்தியில் கொண்டு வந்திருந்தார்கள் அவரின் சீடப்பிள்ளைகள். ஆசிரமம் வந்ததும் பூசாரியை ஏற்றிக்கொண்டு சமாதி செய்வதற்கு தோண்டியிருந்த இடத்திற்கு வண்டியைக் கொண்டு வந்துவிட்டார்கள். அன்றும் செண்பகம் அவளின் உறவினர்களோடு நான்கு ஆட்டோக்களில் வந்திருந்தாள். சித்தப்பா துண்டை உதறியபடி அப்பாவை வழிநெடுக திட்டிக்கொண்டே வந்தார். குத்தாலம் மாமா “அத்தன காசையும் ஆசிரமத்துக்கு எழுதிக்கொடுத்திட்டாரு கூறுகெட்டவரு..” என்று புலம்பித்தள்ளினார். அம்மா இறந்த பத்து மாதங்களில் அப்பாவும் இறந்துவிட்டார்.

அப்பா பலமுறை சொல்லியிருந்தார். “நான் இறந்தால் என்னை ஆசிரமத்தில் கொண்டு போய் புதைத்துவிட வேண்டும். வீட்டில் எந்தவித மதச் சடங்குகளும் செய்துவிடக் கூடாது. குறிப்பாக யாரும் ஒப்பாரி வைத்து அழக்கூடாது. இறுதிக் காரியங்கள் அனைத்தும் என்னுடைய சீடர்கள் பார்த்துக்கொள்வார்கள்”

அப்பா தனது டைரியில் எழுதியிருந்த பல போன் நம்பர்களில் ஒன்றை எழுதிக்கொள்ளச் சொன்னார். செண்பகம் பென்சிலால் சுவரில் குறித்துக்கொண்டாள். சுவரில் ஏற்கனவே பல நம்பர்கள் அதைப் போல அவளால் குறித்து வைக்கப்பட்டிருந்தன. அப்பாவின் நினைவிடம் என்று எழுதி வட்டமிட்டுக்கொண்டாள்.

அப்பாவும் அம்மமாவும் பேசிக்கொள்வதில்லை. செண்பகத்தைக் கோவில்பட்டிக்குக் கட்டிக்கொடுத்த பின்னர்தான் அப்பாவின் நடை உடை பாவனைகளில் பெரிய மாற்றம் வந்தது. இடுப்பில் மட்டும் நான்குமுழு கதர்  வேட்டி.  மேலே கதர் துண்டால் போர்த்திக்கொள்வார். நீண்ட தாடியும் அடர்ந்த மீசையும் சுத்தமான பராமரிப்பில். கூந்தல் முதுகைத் தாண்டி எண்ணெய் மினுமினுப்புடன் விரிந்து கிடக்கும். குற்றாலம் ஐந்தருவியில் ஏதோ ஒரு ஆசிரமத்தில்  சேர்ந்து விட்டார் என்றாள் அம்மா.

அப்பா நீண்ட நாட்கள் மௌன விரதம் இருந்தார். சைகையில்தான் பேசிக்கொள்வார். சுத்த சைவத்திற்கு மாறினார். பன்னீர்பாட்டில்கள் தயாரித்து தெரிந்த பலசரக்குக்கடைகளில் விற்பனைக்குக் கொடுப்பார். தலைவலித்தைலம், சைக்கிள் ஊதுபத்திகள், புணுகு டப்பாக்கள், பினாயில் பாட்டில்கள் என்று நிறைய கைத்தொழில்கள் அவருக்குத் தெரியும். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இடையே பேச்சு நின்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒருவரை ஒருவர் நேரில்கூட பார்த்துக்கொள்வதில்லை. ஆனாலும் ஒரே வீட்டிற்குள்தான் வசித்தார்கள். அப்பா அங்கணத்திற்கு அருகே காலியாக கிடந்த இடத்தில் பத்திற்கு பத்தில் ஒரு அறையை எழுப்பிக்கொண்டார். அங்கேதான் எப்போதும் தங்கியிருந்தார். அம்மா மூன்று வேளைச் சாப்பாட்டையும் சரியான நேரத்திற்கு  தயார் செய்து வாசலில் வைத்துவிடுவாள். அவர்களுக்குள் ஒருமாதிரியான புரிதல் இருந்தது.

அக்காக்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள். செண்பகத்திற்கு இரண்டு குழந்தைகள். ஆறு பேரப்பிள்ளைகளில் யாராவது ஒருவர் நிரந்தரமாக அப்பாவின் வீட்டில் வளர்ந்து வந்தார்கள்.  பேரப்பிள்ளைகளில் ஒருவரின் அருகாமையில் அம்மா அப்பாவோடு வாழ்ந்து வந்தாள். தகவல் பரிமாற்றம் முழுக்க பேரப்பிள்ளைகளின் வழியாக. “ஆச்சி..அரிசி கேட்டா.. ஆச்சிக்கு துவரம் பருப்பு வேணுமாம்…தேங்கா காலியாயிருச்சி..ஆச்சி வாங்கிட்டு வரச் சொன்னா..” என்று பேரப்பிள்ளை வந்து வாசலில் நிற்பான்.

காந்தி பஜாரில் அப்பாவிற்கு கடன் கொடுக்கக்கூடிய ஒரு செட்டியார் பலசரக்குக்கடை இருந்தது. தினசரி சந்தையில் நாடார் காய்கறிக்கடையிலும் கணக்கு உண்டு. தேவையானவற்றை தாத்தாவின் பெயரைச் சொல்லி பேரன்கள் சென்று வாங்கிக்கொள்ள வேண்டியதுதான்.

கடைசி மூன்று மாதங்கள் அப்பா செண்பத்தின் வீட்டில் தங்கியருந்தார். அவருக்கு செண்பத்தின் மீதுதான் கூடுதல் அன்பிருந்தது. அக்காக்கள் இருவரும் அப்பாவை மதிப்பதில்லை. அம்மாவோடு சேர்ந்து கொண்டு உதாசீனம் செய்தார்கள். குடும்பத்தை சீரழித்ததில் அப்பாவின் பொறுப்பின்மையே முதல்காரணம் என்பதை அவர்களும் நம்பினார்கள். மூத்த அத்தான் அப்பா ஏற்படுத்திக்கொடுத்த பலசரக்குக்கடையை ஓழுங்காக கவனிக்கவில்லை. சுவர்முட்டி, கஷாயம் என்று குடித்தே பாழாக்கினார். புளியரையில் சேட்டத்தி டீக்கடையே கதியென்று கிடந்தார். வீட்டிற்கும் ஒழுங்காக வருவதில்லை. கள்ள நோட்டு பரிமாற்றத்தில் தொடர்பில் இருந்தார் என்று போலிஸ் கைது  செய்து கூட்டிக்கொண்டு போனபோது பலசரக்குக்கடை காணாமல் போனது. அக்கா வீட்டில் இட்லி அவித்து தெருத் தெருவாகக் கொண்டு சென்று விற்றுப் பிழைத்தாள். காலனிகளில் அவளுடைய இட்லிகளை நம்பிக் குடும்பங்கள் இருந்தன. செவத்தம்மா இட்லிக்கு ரசிகர்கள் உருவாகியிருந்தனர். பிள்ளைகள் இருவரும் அருகில் இருந்த அரசுப்பள்ளியில் சேர்ந்து படித்தார்கள். கருத்தப்பாண்டி பத்து வயதிலேயே வீட்டை விட்டு ஓடிப்போனான்.

இரண்டாவது அக்காவை சிவகிரியில் கட்டிக்கொடுத்திருந்தது. சின்ன அத்தானுக்கு தறி  நெய்யும் வேலை. நல்ல குணமுள்ளவர். நெடுநெடு வளர்த்தி. சின்ன அக்கா அத்தானின் இடுப்பிற்குதான் இருப்பாள். அத்தானுக்கு தொட்டாற்சிணுங்கி மனசு. மாமியார் மருமகள் சண்டையினை பெரிதாக எடுத்துக்கொண்டு அரளி விதையை அரைத்துக்குடித்து தற்கொலை செய்துகொண்டார். இரண்டு பிள்ளைகளுடன் சின்ன அக்கா சிவகிரியில் தனியாக வாழ்ந்து வந்தாள்.  பீடி சுற்றினாள் என்றாலும் அம்மா வீட்டை விற்று அவளைக் கவனிக்க வாரந்தோறும் சென்று வந்தாள். இரண்டு பைகளில் அரசி, பருப்பு, காய்கறிகளோடு பிள்ளைகளுக்குத் தின்பண்டமும் வாங்கிக்கொண்டு செல்வாள்.

செண்பகத்தை புதுக்கிராமத்தில் மைனர் என்று பெயர் எடுத்திருந்தவருக்கு திருணம் செய்து வைத்தார் அப்பா. வீடு, வாசல், தீப்பட்டி ஆபிசு என்று அப்பாவை ஈர்த்த விஷயங்கள் எதுவும்  செண்பத்திற்குப் பிடிக்கவில்லை. மைனருக்கு ஏற்கனவே இரண்டு மூன்று பெண் தொடர்புகள் இருந்தன. மறுத்துப்பேசும் பழக்கம் இல்லாத காரணத்தால் அவள் புதுக்கிராமத்திற்கு குடித்தனம் செய்ய வந்தாள்.  பத்தாண்டுகள் கழித்தே முதல் மகன் பிறந்தான். அடுத்த ஆண்டில் செல்வி. கிடுகிடுவென்று இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன.

2.

அப்பா சொல்லியபடியே அவருடைய சீடர்கள் வந்துவிட்டனர்.

“அண்ணே…அப்பா சாயந்திரம் ஆறுமணிக்கு இறந்துட்டாங்க” என்று போனில் தகவல் சொன்னாள் செண்பகம். எதிர் முனையில் இருந்து பதில் வந்தது.

“ ஆசான சம்மணமிட்டு அமர வையுங்க. குளிக்க வைக்க வேண்டாம். நாங்க சாமதிக்கு வேண்டியத ஏற்பாடு பண்ணிட்டு அதிகாலையில வந்து எடுத்துக்கெறோம்”

செண்பகத்திற்கு இரவெல்லாம் துாக்கமில்லை. அழுதுகொண்டே இருந்தாள். அக்காக்கள் இருவரும் காலையில்தான் வந்தார்கள். தெருவில் அப்பா  இறந்த செய்தி பரவியது. உறவினர்கள் வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போனார்கள். ஊர்த்தலைவர் மரியாதைக்காக கேட்டார்.

“ஏம்ப்பா..இறுதிக்காரியங்களுக்கு என்ன ஏற்பாடு?”

செண்பகம் அப்பாவின் விருப்பத்தைச் அவருக்கு விளக்கிச் சொன்னாள். அப்பா செந்தட்டி ஆசிரமத்தில் சமாதியாக இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை அவர் ஏற்கனவே செய்துவிட்டார். அதிகாலையில் அவருடைய சீடர்கள் வந்து அவரை எடுத்துக்கொண்டு சென்று புதைத்துவிடுவார்கள். அப்பா அவருடைய இடத்திற்கும் சமாதி கட்டுமானத்திற்கும் ஆகும் செலவை முன்கூட்டியே ஆசிரமத்திற்கு வழங்கிவிட்டார்.

சம்பிரதாயங்கள் எதையும் அப்பா மறுத்துவிட்டார். அது ஒருவிதத்தில் செண்பகத்திற்கு ஆறுதலாகவும் இருந்தது. துட்டி கேட்க வந்தவர்கள் யாரும் அழுது ஒப்பாரி வைக்க அனுமதிக்கப்பட வில்லை. விடிய விடிய பிணத்தின் அருகே அமர்ந்து பழங்கதைகள் பேச வேண்டிய தேவையில்லாமல் போனது. ஊர் ஊராக துட்டி சொல்லிவிட ஆள் அனுப்பவில்லை.  நீர்மலை, காடாத்து, பதினாறு முப்பது விசேசம், ஆண்டுத் திதி என்று எந்தவித நீத்தார் சடங்குகளும் பின்பற்ற வேண்டியதில்லை. அப்பா இறப்பிற்காக அவள் குடும்பத்தார் ஐந்து பைசாவைக் கூட செலவு செய்யவில்லை.

ஓராள் ஆழமுள்ள குழி. செம்மண் கிடங்கு. திருநீறு, கற்புரம் என சமாதிக்கு தேவையான இடுபொருட்கள். அப்பாவை சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் குழுிக்குள் இறக்கி மண்ணள்ளிப் போட்டார்கள். அப்பாவின் சமாதிக்கு மேலே ஆசிரமத்தின் செலவில் கட்டுமானம் ஒன்று எழுப்பப்படும். அவரின் நினைவிடம் மிகச் சிறந்தமுறையில் பராமரிக்கப்படும். ஆண்டுதோறும் அவர் இறந்த தினத்தன்று குருபூஜை செய்யப்படும் என்று ஆசிரமத்தில் உறுதி அளித்தார்கள். அப்பாவை புதைத்துவிட்டு ஆசிரமத்தில் தயார் செய்திருந்த சாம்பார் சாதத்தை சாப்பிட்டுவிட்டு உறவினர்கள் கிளம்பினார்கள். செண்பகத்திற்கு அன்றெல்லாம் எதுவுமே சந்தேகமாகத் தோன்றவில்லை. அப்பா இதோ மிக அருகே இருக்கிறார். ரயில்வே தண்டவாளத்தை தாண்டினால் அவரின் நினைவிடம் இருக்கும். எப்போது வந்தாலும் அவரை வணங்கிச் செல்லலாம்.

செண்பகமும் அவளின் உறவினர்களும் மிக விரைவாக அப்பாவை மறந்து போனார்கள். அக்காக்களோ பேரப்பிள்ளைகளோ அவரின் சமாதியைச் சென்று பார்த்து வணங்கி வர வேண்டும் என்று எண்ணியதே இல்லை. செண்பகத்திற்கும் கோவில்பட்டியில் இருந்து நான்கு பஸ் ஏறி அப்பாவின் சமாதியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியதில்லை. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அப்பா கனவில் வந்தார். “ எல்லாரும் என்னை மறந்துட்டீங்களே..” என்று அழுதவாறு வாசலில் நின்று கொண்டார். எத்தனைக் கெஞ்சிக்கேட்டும் வீட்டிற்குள் வர மறுத்துவிட்டார்.செண்பகத்திற்கு அப்பாவின் நினைவிடத்திற்குச் சென்று வணங்கிவிட்டு வரத் தோன்றியது. அவளால் அழாமல் இருக்க முடியவில்லை. பத்தாண்டுகள் கடந்துவிட்டாலும் நேற்று நடந்தது போலத்தான் எல்லாம் நினைவில் இருந்தன.

3.

சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்திருந்தன. சிமிண்ட் திண்டுகள் சிதலமடைந்து, குப்பைகள் அப்பிக்கிடந்தன. இரண்டு பீர் போத்தல்கள், ஐந்தாறு பாலித்தீன் கவர்கள், அழுக்குத் துணிகள், காலியான சிகரட் டப்பாக்கள், புதையுண்ட நிலையில் ஒரு துணிக்கடை பிளாஷ்டிக் பை. ஆங்காங்கே ஐந்தாறு நிரோத் உறைகள்.

அப்பாவின் சமாதிதானா என்ற சந்தேகம் செண்பகத்திற்கு தோன்றிற்று. ரோட்டில் இருந்து உள்ளே நீண்ட தொலைவிற்கு வந்திருந்தாள். அவளை ஏற்றிவந்த ஆட்டோ தொடுவானத்தை ஒட்டி ரோட்டில் நிற்பது போலிருந்தது. அப்பாவை சமாதி செய்ய வந்திருந்த போது இவ்வளவு தொலைவு உள்ளே வந்ததாக நினைவில் இல்லை. கண்ணுக்கு எட்டிய வரை வேறு சமாதிகள் ஏதும் தென்படவும் இல்லை. அவளுக்கு அழுகையும் ஆத்திரமும் கலந்து வந்தது.

ஆவேசம் வந்தவளைப் போல சமாதியை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். கைப் பையில் கொண்டு வந்திருந்த பூஜைப் பொருட்களை வெளியே எடுத்து வைத்தாள்.  ஊதுபத்தி, கற்பூரவில்லைகள், கம்யூட்டர் சாம்பிராணி வில்லைகள், ஒரு மாலை, கதர் துண்டும் நான்கு முழ  வேட்டியும், அப்பா விரும்பிச் சாப்பிடும் உளுந்த வடை, பாசிப்பயறு, உளுந்தக் களி உருண்டை ஒன்று. நாட்டு வாழைப்பழம் இரண்டு. சர்வோதயா பார் சோப்பு.

கரட்டாண்டி ஒன்று குடுகுடுவென்று சமாதியின் குறுக்காக ஓடிச் சென்று ஒளிந்து கொண்டது. அவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. “அப்பா…அப்பா..உங்க நிலைமை இப்படி ஆயிடிச்சே..அப்பா…என்னை மன்னிச்சிருங்க அப்பா..இனி வருஷா வருஷம் உங்களத் தேடி வந்து வணங்குவேன் அப்பா..மனசு குளிந்து நீங்க நிம்மதியா இருங்க அப்பா..” என்று அழுது புலம்பினாள்.

வாழையிலையை விரித்து படையலிட்டாள். ஊதுபத்தியின் புகை காற்றில் கரைந்து பரவியதும் மெல்லியதாக ஒரு அச்சம் அவளைத் தொற்றிக்கொண்டது. சாம்பிராணியை நெருப்பில் பற்ற வைப்பதற்கு பெரும்பாடு பட்டாள். நான்காவது முறையாக நெருப்புக்குச்சியை உரசிய பின்னர்தான் கற்பூரம் பற்றிக்கொண்டது.

நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினாள். தீபத்தை கண்களில் ஒற்றிக்கொண்டாள். ஆள் அரவத்தை அறிந்து கொண்டு இரண்டொரு காகங்கள் அவளின் அருகே தத்தி வந்து நின்றன. தீபம் எறிந்து முடியும் வரை அங்கே நின்றாள். கடைசியாக சமாதியை வணங்கி மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டாள்.  கண்ணுக்கு எட்டிய வரை ஒருவரும் தென்படவில்லை.

செண்பம் ரோட்டில் நின்ற ஆட்டோவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வழி நெடுக சீமைக்கருவேல மரத்தின் கிளைகள் மறித்து நின்றன. அப்பாவைத் தேடும் வேகத்தில் உள்ளே வந்தவளுக்கு அவை அப்போது இடைஞ்சலாகத் தெரியவில்லை. திரும்பும்போதுதான் அவளுக்கு நடுக்கம் உண்டாயிற்று. வழியில் நீண்ட பாம்புச் சட்டை ஒன்று கிடந்ததைப் பார்த்ததும் துள்ளிக்குதித்து ஓட்டம் பிடித்தாள்.

ஆட்டோ ஓட்டுநர் பீடி பிடித்துக்கொண்டிருந்தார். ஆட்டோ அருகிலே ஒருவர் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. செண்பகம் ஆட்டோவை நெருங்கியதும் கைலியும் துண்டும் அணிந்திருந்த அவர் செண்பத்தைப் பார்த்து “ ஏம்மா..நாய்ச்சாமியார் உங்களுக்கு சொந்தமா?” என்று கேட்டார்.

செண்பகத்திற்கு அவர் என்ன  கேட்கிறார் என்பது புரியவில்லை.

“நீங்க இப்ப போய் சாமிகும்பிட்டு வர்றீங்களே அந்த சமாதி நாய்ச்சாமியாரோடது. உங்களுக்கு அவரைத் தெரியுமா?” என்று அவர் மறுபடியும் கேட்டார்.

செண்பகத்திற்கு துாக்கிவாரிப் போட்டது.

” நாய்ச் சாமியாரெல்லாம் கிடையாது….அது எங்க அப்பாவோட சமாதி?” என்றாள் கண்ணீர் மல்க.

“இல்லம்மா..நீங்க இப்ப போய் வணங்கிட்டு வர்றது..என்னோட நிலந்தான்…அதுல நான்தான் நாய்ச்சாமியை சமாதி எழுப்பினேன்..அவரு என்னோட தாய்மாமா…….உங்க அப்பா ஆசிரமத்த சேந்தவரா…ஆசிரமத்து இடமெல்லாம் கோர்ட் கேசுனு தாவா நடந்து இப்ப வேறொரு பார்ட்டிக்கு தீர்ப்பாயிடுச்சு்.. அந்த இடத்தில அஞ்சாறு சமாதிக இருந்திச்சு…அதையெல்லாம் மண்ணை மூடி மறைச்சிட்டாங்க…அதோ பாருங்க..? என்று அவர் வேறிடத்தைச் சுட்டிக்காட்டினார். அவர் விரல் நீட்டிய இடம் ரோட்டிற்கு வெகு அருகில் இருந்தது. ஐந்தாறு திண்டுகள் அங்கே இருந்தன. ஆனால் அவையெல்லாம் மண் குன்றுகளைப் போல மேடுதட்டி நின்றன. அவற்றின் கீழ் சமாதிகள் இருக்கின்றன என்று யாருக்கும் தோன்றாத நிலையில் அவை முள் மரங்களால் அடர்ந்திருந்தன.

“செண்பகம்…“ஐயோ..அப்பா…நீங்க எங்கதான் இருக்கீங்க” என்று பெருங்குரலில் அழ ஆரம்பித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *