புதுமை அமர்வதற்கு ஓரிடம் கிடைத்தது. நின்று கொண்டிருந்தவன் கால்மாட்டிலும் தலைமாட்டிலுமாக திசைக்கொருவராக படுத்திருந்தவர்களைத் தாவிச் சென்று காலி இருக்கையில் அமர்ந்தான். தகடுகளைப் போன்ற இறக்கைகள் விரிந்த பிரமாண்டமான மின்விசிறி தலைக்குமேல் அச்சம் ஏற்படுத்தும் வண்ணம் மிக நிதானமாக சுழன்றது. சட்டைக்குள் புகுந்து அடிவயிறு வரைப் பாய்ந்தது மின்விசிறியின் வெக்கைக்காற்று. சுற்றிலும் காதுகளை அடைக்கும் நாராசம். இன்னதென்று இனம் பிரித்து அறிந்துகொள்ள முடியாத கார்வைகளின் சங்கமிப்பு. அவனுக்கு நேராக இடதும் வலதும் இரண்டு பெரிய திரைகளில் ரயில் வந்து சேரும், கிளம்பிச் செல்லும் விவரங்கள் ஒளிர்ந்தபடி நகர்ந்தன. அவன் தன்னுடைய 20265 எந்த நடைமேடையில் இருந்து எத்தனை மணிக்குக்கிளம்ப இருக்கிறது என்கிற தகவலைத் தவிப்புடன் தேடினான். இரவு பத்து முப்பதிற்கு கிளம்பக்கூடிய அதிவிரைவு ரயிலில் படுக்கையை முன்பதிவு செய்திருந்தான். கடைசி நேர பரபரப்பில் கிடைத்த இருக்கை அது. இரண்டு நாட்களுக்கு முன்னர் வரப்பெற்ற அழைப்பாணை. பெருநகரங்களுக்குச் சென்று திரும்புவது அவனுக்கு உற்சாகம் அளிக்கும் காரியம் அல்ல என்றாலும் அவன் பணிக்கப்பட்டான். சுய தேர்வு என்கிற வாய்ப்பு அவனுக்கு விதிக்கப்படவில்லை.
அதிகாலையில் பெருநகரத்தின் கட்டடங்களின் உருவெளித்தோற்றத்தை கண்ட முதல்கணம் அவனுக்கு வழக்கமாகத் தோன்றும் எண்ணந்தான் இன்றும். பெருநகரத்தில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். எனில் ஒவ்வொரு அதிகாலையிலும் அங்கு வந்து விழும் மலக்குவியலின் அளவினை எண்ணிப்பார்த்து மலைத்துப் போவான். நாள்தோறும் வெளியே பீச்சித்தள்ளப்படும் மலக்குவியலுக்கு மத்தியில் இத்தனைக் கோடிப்பேரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்து திகிலும் துயரமும் கொள்வான். மலப்பெருக்கில் வளைந்து நெளியும் புழுக்கள்.
மத்திய இரயில் நிலையத்திற்கு அவன் இரண்டாவது முறையாக வந்திருக்கிறான். அங்கே வருவதற்கான தேவைகளே அவனுடைய நாற்பத்தேழு வயது வரை ஏற்பட்டதில்லை. இருபதாண்டுகளுக்கு முன்னர் வடக்கு ரயில்வே கலாசித் தேர்வுக்காக ரயில் ஏற வந்திருக்கிறான். அப்போது அவனுக்கு இருபத்தேழு வயதிருக்கும். மனம் முழுக்க நம்பிக்கையும் கனவுகளும் தளும்பி நின்ற பருவம். வளமான எதிர்காலம் இதோ தொட்டுவிடும் தொலைவில் அவன் வருகைக்காக காத்திருக்கிறது என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை. அதன்பிறகு கடந்து சென்ற நாட்களில் அவன் எதிர்கொண்ட இழப்புகளில் ஈடு செய்ய முடியாதது என்றால் நம்பிக்கை இழப்புத்தான். இந்த வாழ்க்கை கணிக்க முடியாததாக, புரிந்துகொள்ள முடியாத தர்க்கங்களை அச்சாகக் கொண்டு சுற்றி அலைக்கழிப்பதாக அவன் முடிவு செய்தான். தான் திட்டமிட்ட கனவுகளில் ஒன்றைக்கூட அதுநாள் வரை நிறைவேற்றியிருக்கவில்லை என்பதை ஏக்கப் பெருமூச்சுகளோடு எண்ணிக்கொள்வான். கற்பனைக்கும் யதார்த்த வாழ்க்கைகுமான இடைவெளி இட்டு நிரப்ப முடியாத அளவு பெருகி நிற்கின்றது.
அவனைச் சுற்றி நுாற்றுக்கணக்கான பயணிகள். ஒரு இரவினை கழித்துச் செல்ல வந்திருப்பவர்களும் அங்கே உறங்கிக் கொண்டிருக்கக்கூடும். பெருநகரத்தின் சாலைகளும் வீதிகளும் தனிமை நிரம்பியவை. பாதுகாப்பற்றவை. பேய்களும் பூதங்களும் இசைக்கிகளும் வலம்வரும் சந்து பொந்துகள் கொண்டவை. இரவும் தனிமையும் தனித்த மனங்களை வெறிகொள்ளச் செய்துவிடுகின்றன. குற்றத்தின் நறுமணம் மொக்கவிழும் நிசிகள். மனிதர்களை மனிதர்கள் வெறிகொண்டு இம்சிக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கி்க்கொடுப்பவை. அதில் இருந்து தப்பித்து அத்தனைப் பேர் சூழ வெட்ட வெளிச்சத்தில் வந்து படுத்து உறங்குவது மனதிற்கு ஆறுதலாக அமையுந்தான். அருகில் இரத்தமும் சதையுமாக சக மனிதன் ஒருவன் படுத்திருக்கிறான். அவனின் மூச்சுக்காற்று மிக அருகில் கேட்கிறது. அவனால் தன் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படப்போவதில்லை என்ற நம்பிக்கையில் துயில் கொள்வது நிச்சயம் ஒரு வரந்தான்.
திரும்பிய பக்கமெல்லாம் மனிதத்தலைகள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நாய்கள் என்று கண்ணில் தட்டுப்பட்டுக்கொண்டே இருந்தார்கள். ஒரு பெருநகரத்தின் ஒரு ரயில் நிலையத்தில் மட்டும் ஒரு நாளுக்கு இத்தனைப் பேர்கள் பயணம் மேற்கொள்ளக் காத்திருக்கிறார்கள் என்றால் ஒட்டுமொத்த உலகத்திலும் எத்தனைக் கோடிக்கணக்கான பயணிகள் பயணத்தில் இருப்பார்கள் என்று கற்பனை செய்தான். அத்தனைப் பேருக்கும் பயணம் செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கான நகர்வு. எதன் எதன் பொருட்டோ ஆன புலம்பெயர்வு. “நாராய்.. நாராய்..செங்கால் நாராய்..பழம் படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய்”..என்று கையறுநிலையில் புலம்பிய தேசாந்திரியின் சொற்கள் அவனுக்கு அந்நேரத்திலும் நினைவிற்கு வந்தன. நோக்கமற்ற, இலக்கற்ற பயணம் ஒன்றே மகத்துவமானது. பயணத்திற்கான பயணம். பயண நதியின் ஆழ அகலங்களை அனுபவம் கொள்ளச் செய்யும் பயணம். லாப நட்டங்களை மனதில் கொண்டு திட்டமிடப்படும் பயணங்கள் எல்லாம் ஒருவித வரையறைக்குள் சிக்கிக்கொண்டிருப்பவை. அவை பயணம் அளிக்கும் எந்தவித பெறுமதிகளுக்கும் தகுதியில்லாதவை.
அவனும் அன்றைய பயணத்தை நினைத்து மிகவும் சோர்ந்து போனான். அலுவல் ரீதியாக அவனுக்கு கெட்ட பெயரைத்தான் அந்தப் பயணமும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. உயர் அலுவலர் முன் பயந்து நடுங்கியபடி அவன் நின்ற கணத்தை மறுபடியும் அவன் எண்ணிப்பார்த்தான். அவர் ஏன் பற்களைக் கடித்துக்கொண்டு தன்னிடம் அத்தனை ஆங்காரத்தைக் காட்டினார் என்றுதான் அவனுக்குப் புரியவில்லை. ஒரு பெருநகரத்தின் மையத்தில் மிகப்பெரிய அரசாங்க கட்டிடத்தின் குளிர் நடுக்கும் ஒரு அறைக்குள் அவன் ஒருவர் முன் கூனிக்குறுகி பயந்து நிற்க நேரிட்ட நிலையை எண்ணி மிகுந்த வேதனை அடைந்தான். பைத்தியம் போல வெறிகொண்டு படித்து, போட்டித் தேர்வில் வென்று பதவி உயர்விற்காக தவம் இருந்து கடைசியில் இப்படி யார் என்று தெரியாத தன்னைவிட பத்து வயது சிறிய ஒருவரின் முன் உச்சி முதல் உள்ளங்கால் வரை அச்சத்தில் உதற நிற்பதற்குத்தானா? லட்சியத்தின் கீழ்மை…லட்சியங்களின் மோசமான மனிதக்கீழ்மை. அதிகாரங்களின் போர்க்களத்தில் பழியாடுகள்தான் பரிதாபத்திற்குரியவை. அன்று அவன் ஒரு பலியாடு.
விடுதியில் இருந்து கிளம்பியதும் அவன் நேராக இரயில் நிலையத்தை வந்தடைந்தான். பெருநகரத்தில் ஆர்வமூட்டும் எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. அவன் எண்ணி ஏங்கிய மது விடுதிகள், ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், விபச்சார விடுதிகள், பெரிய மால்கள், புத்தக நிலையங்கள், உள் விளையாட்டு அரங்குகள், சினிமாத் தியேட்டர்கள், மஜாஜ் சென்டர்கள் (ஹேப்பி எண்டிங்..) , ஜவுளிக்கடைகள், இனிப்பகங்கள், குளிர்பானக் கடைகள், காலணி விற்பனையகங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அவனுக்குத்தான் அந்த இரவில் அலைந்து திரிவதில் விருப்பம் இல்லாமல் போனது. ஒரு பெரிய அவமானத்தின் முன் மனம் மிகச் சிறியதாகச் சிறுத்து விடுகிறது. கடும் உடல் உழைப்பிற்குப்பிறகும், கடுமையான மன நெருக்கடியின் போதும் பெண்ணுடலுக்கான தாபம் கட்டுக்கடங்காமல் பொங்கி பிரவகிப்பதை அவன் உணர்ந்திருக்கிறான். மேலும் பெருநகரத்தின் போக்குவரத்தை நம்பவும் முடியாது. அரைமணி நேரத்தில் சென்றடையக் கூடிய பயணம் சில நேரங்களில் இரண்டு மணி நேரத்திற்கு நீட்டித்துச் செல்லலாம். அது அளிக்கும் பதற்றம் அவனை நிம்மதிக்குலைவிற்கு இட்டுச்செல்லும். எனவே வேலை முடிந்ததும் பயந்து கொண்டு விடுதிக்குச் சென்று அறையைக் காலி செய்தான். அவன் விடுதி அறையை முதல் முதலில் திறந்து பார்க்கும்போதே நினைத்த –தனிமையில் அந்நிய படுக்கைகளில் அவன் விரும்பிச் செய்யும் –காரியத்தை செய்து முடித்து, கைகளை நன்றாகச் சுத்தம் செய்த பின்னர் விரைந்து கிளம்பினான். ஒவ்வொரு விடுதி அறையும் எத்தனை நிர்வாணங்களை, நிர்வாண உடல்களின் சதிராட்டத்தை அறிந்திருக்கும் என்கிற திகிலுாட்டும் வக்கிர எண்ணங்கள் அளித்த கொந்தளிப்போடு விடுதியில் இருந்து வெளியே ஓடி வந்தான். அவனுக்கு முன்னால் மிகப் பெரிய பின்பகுதி அசைவுகளோடு ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தாள். அத்தனை மனப்பதற்றத்திலும் அவனுக்கு அப்பெண்ணைப் பின்தொடர்ந்து செல்லும் ஆர்வம் ஏற்பட்டது. ஒயிலாகத் ததும்பிய பின்பகுதி அசைவுகளில் மனம் லயித்து அவன் –அப்பெண் மிக மெதுவாக நடந்து சென்ற போதும்- பின் தொடர்ந்தான். அவளிடம் தென்பட்ட மற்ற பாகங்கள் எதுவும் அவனை உற்சாகம் கொள்ளச் செய்யவில்லை. முகம் வாழ்க்கையின் நெருக்கடிகளால் பொலிவிழந்து வதங்கிப் போயிருந்தது. தனக்கு என்றுமே தீர்ந்து விடாத பரவசத்தை அளிப்பவர்களாக பெண்கள்தான் இருக்கிறார்கள் என்பதை மறுபடியும் உறுதி செய்துகொண்டான். பார்க்கும் ஒவ்வொரு பெண்ணையும் அக்கணமே துகிலுரிந்து, சல்லாபித்து, மனத்தால் கலவி செய்யும் பேராசை தனக்கு மட்டுந்தான் உள்ளதா? அல்லது உலகத்தில் உள்ள ஆண்கள் அத்தனைப் பேருக்கும் தோன்றக்கூடிய ஆழ்மன இச்சைதானா? என்றும் கேட்டுக்கொண்டான். நான் ஆணாக இருக்கிறேன். கடந்து செல்லும் ஒவ்வொரு பெண்ணும் என்னை வெறியேற்றத்தான் செய்கிறார்கள். இதில் என் தவறு என்ன? என் ஹார்மோன்கள் என்னை அப்படி வழிநடத்திச் செல்கின்றன. இயற்கையின் உந்துதல்கள். முலைகளும் பிருட்டங்களும் சதா என்னைச் சஞ்சலப்படுத்தும் பாகங்களாக இருக்கின்றன. அவன் அவற்றை மறந்துவிட முடியாதவனாக கள்ளக்கண்களோடு அலைந்து கொண்டிருந்தான். எந்த பெருநகரமும் அவன் நினைவில் முலைகளாகவும் புட்டங்களாகவும் மனக்குகையில் நிரந்தர அதிர்வுகளை ஊட்டிய பெண் முகங்களாகவும் மட்டுமே நிலைத்து நிற்கின்றன. நினைவில் வந்து போகின்றன. நினைத்து நினைத்து ஏங்கச் செய்கின்றன.
பிற மாநிலங்களோடு இணைப்புத் தடங்கள் உள்ள இரயில் நிலையம் என்பதால் அதன் அனுகூலங்கள் அவனுக்கு மகிழ்ச்சியளித்தன. எத்தனை விதவிதமான ஆண் பெண் உடல்கள். தோல்நிறங்கள், மூக்கு நுனிகள். முலை முகடுகள், பிருட்ட விரிவுகள், இடைவளைவுகள், புருவக் குவியல்கள், வியர்வை நாற்றங்கள், பாத வடிவுகள், விரல்களின் நீட்சிகள், கண்ணிமையின் பதற்றங்கள், உதடுகளின் நிறபேதங்கள், குரல் பேத ஒலிகள். முக பாவனைகள், அசிரத்தையின் பாவலாக்கள், ஒற்றறியும் விழிகள். சந்தேகிக்கும் சடுதிக் கண்ணோட்டங்கள். வாழ்விலே ஒரே ஒரு முறைதான். இதோ இக்கணம் இவர்களை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டு மனம் பேதலித்து அவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். சிலர் மீது காரணமற்ற பெரு விருப்பும், பலர் மீது தேவையற்ற சலிப்பும் தோன்றத்தான் செய்கிறது. ஒவ்வொரு பெண் முகமும் என்னைப் பைத்தியமாக்குகிறது. அவர்களிடம் என்னதான் இருக்கிறது? நாற்பத்தேழு வயதில் ஆண்டுக்கணக்கில் விதவிதமாக சுகித்திருந்தாலும் ஏன் ஏக்கம் மட்டும் தீர்ந்து போகமாட்டேன் என்கிறது. அணையாத கொடுநெருப்பாக அது என்னைக் கொதிப்படைந்த மனத்தளத்திலேயே நிரந்தரமாக வைத்திருக்கிறதே. பெண்கள்..பெண்கள்…பெண்கள்…என்று எத்தனை ஆர்ப்பாட்டம். அடுத்த கணத்தில் இவர்கள் யாரும் என் கண்களுக்கு கிடைப்பார்கள் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இங்கே இல்லை. இக்கணத்தில் இவர்களும் நானும் ஊடாடிக்கலக்கும் தருணம் நிகழ்ந்து கொண்டிருக்கிறதே இது வெறும் தற்செயல் மட்டுந்தானா? தற்செயல்களின் நெருக்கடிகளால் என் மனம் ஏன் இத்தனை உன்மத்தம் கொண்டு தட்டழிந்து பிதற்றம் கொள்கிறது. என்னை அறிந்து கொண்டவர்கள் யாரும் அருகில் இல்லை என்கிற விடுதலை அளிக்கும் தொந்தரவா என் பதற்றங்கள்? பால்யத்தில் அடக்கிவைக்கப்பட்ட பெண்ணுடல் மீதான இச்சை என்னை பெருநோயாளியாக்கி உள்ளதா? அல்லது ஆண் மனங்களின் இயல்பே இப்படிப்பட்டதுதானா? சொந்த மகள்களால் மட்டுமே அவன் யோக்கியவானாக வாழ்கிறான்.
நீண்ட இரயில் பயணங்களில் அவன் ஆர்வம் இழக்காதவன். ஐந்து நாட்கள் பத்து நாட்கள் தொடர்ந்து சன்னல்கள் வழியே கடந்து செல்லும் பலநுாறு நிலக்காட்சிகளின் மீது பெரும் பித்து உள்ளவன் அவன். பெண்களைத் தாண்டி அவனை வியப்பில் ஆழ்த்துபவை இயற்கையும் அதன் பல்வேறு கலாப்பூர்வ சாயைகளும்தான். மண்ணும் மரங்களும் பூதலித்த மலைகளும் மேகங்களின் அலைவும் இரவும் பகலும் அந்தியும் கொள்ளும் நிறமாற்றங்களும் , பகலும் இரவும் கொண்டிருக்கும் ஒளி ஓசைகளும் சன்னதம் அளிப்பவை. அவனால் சலிக்காமல் இயற்கையின் முன் மண்டியிட்டு காத்திருக்க முடியும். கடல் அலைகளைப் போல வயல்களில் நெளிந்தோடும் பச்சை அலைகளின் முன் உடல் புல்லரிக்க அவன் நின்றிருக்கிறான். குப்பைகள் அற்ற நுண்மணல் துகள் நிறைந்த கடற்கரைகளில் அவன் கண்ணீர் மல்க தொடுவானத்தை வெறித்தபடி காத்திருந்திருக்கிறான். காலாதீதமே கடல். காலாதீதத்தின் நுண்தொடுகையே அலைநீட்சி. காலாதீதத்தின் பேரன்பே கடலின் நீர்மை என்று அவன் புலம்பியிருக்கிறான். கடல் முன் நான் பல பிறவிகள் இப்படி வந்து நின்றிருக்கிறேன். பிறவிகள் தோறும் கடல் மீதான பித்து என்னை விட்டு விலகியதே இல்லை. கடலின் கருணையே நிலத்தில் மனித வாழ்வு. பெருநகரங்களில் கடல் கொண்டவை அவனை மிகவும் ஈர்ப்பவை. கடல் கொண்ட நகரங்களில் தொல்லெச்சங்கள் உறைந்திருக்கின்றன. பூதகணங்கள் நாற்சந்திகளிலும் காவல் காத்திருக்கின்றன. நிறைவேறாத ஆசைகளோடு முன்னோர்களின் தகித்த ஆவிகள் கடல்கொண்ட பெருநகரத்தின் வீதிகளில் சுற்றித்திரிகின்றன. கடல் கொண்ட பெருநகரங்கள் ஆதி மனிதனின் காலடித்தடங்கள் உறைந்தவை. காலம் அழித்தாலும் அபூதங்களின் பாதச்சுவடுகளாக என்றும் அவை அங்கே இருக்கின்றன. அவனால் அகக் கண்கள் கொண்டு அத்தடங்களை கண்டறிய முடியும். அவற்றைப் பின்தொடர்ந்து செல்லவும் முடியும். பெருங்கதையாடல்களின் நுான்முகங்களாக அக்காலடித்தடங்கள் இருக்கின்றன. ஒரு பாதச்சுவடின் அடியில் பல்லாயிரம் குலக்கதைகள் பீறிட்டு வழிவதை அவன் கற்பனித்து கடந்திருக்கிறான். காலமே உன் பெயர் என்ன ? மூதாதைகளின் தொல்குடி நினைவுத் தொகையா?
அவன் ஏற வேண்டிய வண்டி நான்காம் நடை மேடையில் வந்து நின்று இரைந்தது. பெரும் கும்பல் கலைந்து எழுந்து இரயில் பெட்டிகளை நோக்கி ஓடியது. அவன் அதுவரை தாகித்து வெறித்திருந்த பெண்களைப் பிரிய மனமில்லாமல் எழுந்து நின்று ஒரு கனவானைப் போல நடை நடந்து எச்.ஏ.1. என்கிற குளிரூட்டப்பட்ட பெட்டியைத் தேடிப்போனான். நாளைய விடியலில் அவன் ஒரு தளைக்குச்சியில் அறைந்து தளைப்படுத்தப்படுவான். அவனின் அகம் ஒரு அடிமையைப் போல உற்சாகம் இழந்து அன்றாடத்திற்கு திரும்பும். வீடு திரும்பியதும் அவன் மனைவியை ஆவேசம் கொண்டு அணைப்பான். அக்கணம் அளித்த உற்சாகத்தில் அவன் நடையை வேகப்படுத்தினான்.
ஒரு இரயில் பயணம் அவனை ஆவலோடு வரவேற்றது.
