மெல்லிதாக காலையில் பெய்த மழையினால் தோன்றிய வசந்தம், நடுநாள் பொழுதில் உக்கிரமாக ஒளிரும் ஞாயிறின் கதிர்களால் புழுக்கத்திற்கு மாறியிருந்தது. நியூட்ரலிலிருந்து படிப்படியாக மூன்றாம் கியருக்கு முன்னேறி சில வினாடிகளில் வேகம் அதிகரித்து நான்காம் கியருக்கு மாறி சுதந்திரமாக வாகனத்தை ஓட்டிச் செல்லலாம் என நினைத்த அடுத்த கணமே, எதிர்பாரா நெரிசலில் சிக்கி மீண்டும் நியூட்ரலுக்குத் திரும்பி, பின்னர் முற்றிலும் நிலைக்கு வரச் செய்த சாலை நெரிசல். அரை சுதந்திர ஓட்டத்திற்கும் நிலைக்கும் மாறி மாறித் தாவியது நகர்வு. தத்துவம் சொன்னது: இலக்கு முக்கியம் அல்ல, பயணமே முக்கியமென்று. ஆனால் அந்தத் தத்துவம் அன்று முற்றிலும் தவறானது.
குளிர்சாதன வசதி இல்லாத பேருந்தின் உள்ளிருக்கைகள் ஓரளவுக்கே நிரம்பியிருந்த நிலையிலும், மாறி மாறி நிலைக்கும் ஓட்டத்திற்கும் மாறியதினால் மட்டுமின்றி பழைய இன்ஜினின் இரைச்சலினாலும், ஒவ்வொருமுறை ஓட்டத்திலிருந்து நிலைக்கு திடீரென மாறும்போது பிரேக்குகள் சக்கரத்தின் உலோக விளிம்புடன் உரசுகையில் ஏழும் கீச்சுச் சப்தம் செவித் திரைகளை கிழித்தது. ஆயிரம் பிறைகளை கண்ட வயோதிகர், ஆயிரத்தி ஒன்றாம் பிறையை பார்க்கும்போது அடையும் அக்கறையற்ற முகபாவனையுடன் வீதியை பார்த்துக்கொண்டிருந்தார் பேருந்து ஓட்டுநர். அவரோடு சேர்ந்து பேருந்தின் முதல் வரிசைகளில் அமர்ந்திருந்தவர்கள் ஓட்டுநரின் அதே முகபாவனையைப் பிரதிபலித்து, புழுதி இரைச்சலுக்கிடையே காலியாக இருந்த சில பின் இருக்கைகளுக்கு மாறாமல் அமர்ந்திருந்தனர்.
பயணிகள் ஓட்டுநருக்கு ஒத்த அதே மரத்த முகங்களுடன், விழித்த கண்களால் எதையோ பார்த்துக்கொண்டிருந்தனர். கைபேசியில் பொறுமை இல்லாமல், எதையும் உன்னிப்பாக கவனிக்காமல் கட்டைவிரலால் முகநூல் பக்கத்தை மேல் நோக்கித் தள்ளிக்கொண்டு இருந்தனர் சிலர். பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் ஒவ்வொருமுறை வேகத்தடையின் மேல் பிரேக் அடிக்காமல் பேருந்து ஏறி இறங்கும்போது பிருஷ்டம் அடி வங்கியும், காலியாக இருந்த சில முன் இருக்கைகளுக்கு மாறாமல் அங்கேயே உட்கார்ந்து, இருக்கையின் இரும்பு கைப்பிடியை கெட்டியாகப் பற்றிக்கொண்டு அடுத்த வேகத்தடைக்குத் தயாராகி கொண்டிருந்தார்கள். ஓர் பொருள் செயலாற்ற நிலையிலிருந்து செயல் நிலைக்கு மாற அதன் மேல் வெளியிலிருந்து விசை பாயவேண்டும் என்கிறது இயற்பியல். மனிதர்கள் தங்கள் செயலற்ற தன்மையை மாற்றிக்கொள்ள உள்ளிருந்து ஊந்துதல் வர வேண்டும். அந்த ஊந்துதல் இங்கு காணக் கிடைக்கவில்லை.
புகை, ஹார்ன் கூச்சலுக்கிடையே சாலையில் வேறு எந்த மனிதக் குரலும் இல்லை. சிந்தை மரத்து, வாகனங்களுக்கு இடையில் அவ்வப்போது கிடைத்த இடைவெளிகளைத் தங்கள் வாகனத்தால் நிரப்பி கொண்டிருந்தனர் ஓட்டுநர்கள். நகர்வுகள் அனைத்தும் மௌனமாக, ஒருவரை ஒருவர் பார்க்காமல், குரல் கொடுக்காமல், செய்கை செய்யாமல் தங்களுக்குத் தாங்களே வாகன முடிச்சு போட்டுக்கொண்டிருந்தார்கள்.
கருப்பு அரை ஹெல்மெட் தரித்து பழைய பஜாஜ் ஸ்கூட்டரில், கருத்த வட்ட விளிம்பு கண்ணாடி அணிந்திருந்த அந்த நபரின் கண்களில், அவருக்கு பின் பெரும் இரைச்சல் போட்டுக்கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கண்களுக்கு ஒத்த அதே சிமிட்டாத விழி இமைகள், அதே கருவிழி வட்டம், அதே முகபாவனை. இருவரும் ஓர் முழுமையின் சமமான இருமைகள். இருவரும் வாகன புகையை நுகர்ந்து நெரிசலுக்கு மத்தியில் சிறு இடைவெளி கிடைத்தால் கண் சிமிட்டாமல் பாயக் காத்திருந்தனர்.
பேருந்து ஓட்டுநர் தான் முதலில் பாய்ந்தார். எதற்கென்று அவருக்கே நினைவில்லை. ஒருவேளை முதல் கியரில் இருந்தபோது பிரேக்கிலிருந்து கால் தவறியிருக்கலாம். அந்தப் பாய்ச்சல் முன் நின்றிருந்த ஸ்கூட்டரின் மேல் லேசாகத்தான் பட்டது. ஆனால் அந்த ஓர் ஸ்பரிசம் போதுமானதாக இருந்தது கண்ணாடிக்காரருக்கு. ஓர் முறை, ஒரே முறை கண் சிமிட்டிவிட்டு மெதுவாக ஸ்கூட்டரை நடு ஸ்டாண்டில் நிறுத்தி, இன்ஜின் ஓடியபடியே இறங்கி பேருந்தின் முன் படி வழியாக ஏறி ஓட்டுநர் இருக்கையை அடைந்து, ஓட்டுநரின் முகத்தில் இடது கையால் ஓட்டுனரின் கன்னத்தில் ஓர் அரை விட்ட கையேடு எதுவும் பேசாமல், வந்த வழியே இறங்கிச் சென்று ஓடிக்கொண்டிருந்த ஸ்கூட்டரில் உட்கார்ந்து நடு ஸ்டாண்டை அகற்றி அதே இடத்தில் நின்றார்.
அதே வெறித்த கண்களுடன் முகத்தில் அரை விழுந்தது கூட தெரியாமல் மௌனமாய் நேர் திசையில் பார்த்துக்கொண்டிருந்தார் பேருந்து ஓட்டுநர். அவர் மட்டுமின்றி கரு வட்ட கண்ணாடிக்காரர் படியேறி ஓட்டுநரை அரைந்ததை பார்த்தும் பார்க்காமல், அந்த நிகழ்வுக்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்களோ அதையே தொடர்ந்து செய்து கொண்டிருந்தனர் பயணிகள்.
அப்போது நெரிசல் சிறிது விலகியது, ஸ்கூட்டருக்கு முன் சிறு இடைவெளி தோன்றியது. கரு வட்ட கண்ணாடிக்காரர் நிலையிலிருந்து முதல் கியருக்கு மாறி மெதுவாக முன்னே செல்ல முயற்சித்தபோது கைதவறி ஸ்கூட்டர் நின்று போனது. இறங்கி ஸ்கூட்டரை ஒரு பக்கமாக சாய்க்க முயற்சிக்கையில், பேருந்து ஓட்டுநர் எந்தவித முன் எச்சரிக்கையும் இன்றி ஓட்டுநர் கதவைத் திறந்து வெளியில் இறங்கி, கண் சிமிட்டாமல் வந்து ஸ்கூட்டரை உதைத்துக்கொண்டிருந்த கரு வட்ட கண்ணாடிக்காரரின் முகத்தில் இடது கையால் மூக்கின் மேல் முழு பலத்துடன் குத்து விட்டார்.
குத்து வாங்கியதில் கண்ணாடி சிதறி அதன் சிறு சிதறல்கள் தரையிலும் சில சிதறல்கள் கன்னத்திலும் கீறி ஒட்டிக்கொண்டதினால் கரு வட்ட கண்ணாடிக்காரரின் முகத்தில் சிறிது ரத்தம் வரத் தொடங்கியது. சுற்றம் நின்றிருந்த சக ஓட்டுநர்கள் இந்த நிகழ்வை கவனித்தது போல தெரியவில்லை. பேருந்து ஓட்டுநர் குத்து விட்ட கையேடு எதுவும் பேசாமல் பேருந்தின் கதவைத் திறந்து மீண்டும் தன் இருக்கையில் வந்து அதே வெறிச்சோடிய பார்வையோடு உட்கார்ந்தார்.
பெருங்கடலில் தூறல் விழுவதினால் மீன்கள் பாதிக்கப்படாது. மழைத்துளிகள் நீர்பரப்பின் மேல் விழும்போது சிறு மீன்கள் மட்டுமே ஆழம் பாய முடியாமல் மிரளும். எதுவும் நடக்காதது போல சிறு ரத்தக் கரையோடும், சிவந்த கன்னத்துடனும் மௌனம் காத்தனர் ஓட்டுநரும் கரு வட்ட கண்ணாடிக்காரரும். சிறு இடைவெளிக்கு பிறகு வாகனங்கள் மீண்டும் புறப்பட்டு முன் நகரத் தொடங்குகையில், வேகத்தடையின் மேல் முதலில் ஸ்கூட்டர் ஏறி இறங்கியது. பின் வந்த பேருந்து ஒரு பாதி மட்டும் ஏறி, அதற்கு முன் நகர இடமில்லாமல் பிரேக் அடித்து நின்றது. பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர், இதுவரை மௌனம் சாதித்தவர், திடீரென இருக்கையிலிருந்து எழுந்து பின் படிகளின் வழி இறங்கி பேருந்தின் முழு நீளம் கடந்து ஸ்கூட்டரின் மேல் உட்கார்ந்திருந்த கரு வட்ட கண்ணாடிக்காரரின் முதுகின் மேல் இரு கை விரல்களை முஷ்டிகளாக்கி எந்த எச்சரிக்கையுமின்றி சரமாரியாக குத்திவிட்டு முன் படிகளின் வழி மீண்டும் பேருந்தினுள் ஏறி அதே இருக்கைக்கு வந்து மௌனமாக உட்கார்ந்தார்.
முதுகில் குத்தப்பட்ட கரு வட்ட கண்ணாடிக்காரர் நிலை தடுமாறி ஸ்கூட்டருடன் தரையில் விழுந்து கையிலும் காலிலும் கீறிக்கொண்டு, அணிந்திருந்த சட்டை கிழிந்து உள்ளாடைகள் தெரிந்த நிலையில் மெதுவாக எழுந்து ஸ்கூட்டரை மீண்டும் சரி செய்து எதுவும் பேசாமல் அதன் மேல் உட்கார்ந்தார். அப்போது அவருக்கு மட்டுமின்றி அவர் பயணித்த ஸ்கூட்டரிலும் கீறல்கள் விழுந்திருந்தன.
தற்போது நெரிசல் மீண்டும் விலகி வாகனங்கள் நகரத் தொடங்கியதும், அரை குன்றின் மேல் நின்றிருந்த பேருந்தை மெதுவாக நகர்த்த முயன்று பிரேக்கை விடுவித்தபோது, பேருந்தின் எடையை நகர்த்த முடியாமல் இன்ஜின் நின்று, வேகத்தடையில் சறுக்கி பின்னோக்கி சரிந்தது பேருந்து. அதனை நிறுத்தி மீண்டும் வேகத்தடையைக் கடக்க முயல்கையில், முன் நின்றிருந்த இரு சக்கர வாகன ஓட்டுநர்களில் ஒருவர் பேருந்து பயணிக்கத் தடையாய் தன் வாகனத்தை நிறுத்தி, வாகன பெட்டியில் வைத்திருந்த ஒரு இரும்பு கட்டையை எடுத்துக்கொண்டு பேருந்தின் முன் படி வழியே ஏறி, பேருந்து ஓட்டுநரின் இருக்கையை அடைந்து, பேருந்து ஓட்டுநரின் மேல் இரும்பு தடியினால் சரமாரியாக அடித்துவிட்டு ஏறிய வழி இறங்கி மீண்டும் அவர் வாகனத்திற்குச் சென்று அதை இயக்கி முன்னே சென்றார்.
தடியடி வாங்கிய பேருந்து ஓட்டுநரின் தோள்கள் உடைந்து இரு கைகளிலும் பெருத்த காயமடைந்து அவற்றை இயக்க முடியாத நிலையிலும், மௌனமாய் பெரும் முயற்சி செய்து பேருந்தின் ஸ்டீயரிங்கின் மேல் கை வைத்து பிரேக்கிலிருந்து காலை அகற்றி பேருந்தை முன் நகரச் செய்தார். அதுவரை வெக்கை மிகுதியாக, புழுக்கம் தாங்க முடியாத நடுநாள் பொழுதில் சிறு தூறல்கள் விழத் தொடங்கின. முன் நின்ற இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் மழை அங்கி அணியாததினால் முழுக்க நனைந்து, மழை நீர், கண்களை மறைக்க மெதுவாக வாகனங்களை முன் செலுத்தினர்.
சிறிது தூரம் சென்றவுடன், பேருந்தின் இயக்கம் தடுமாறியது. இடமும் வலமும் தள்ளாடியது. நெரிசல் மீண்டும் துவங்கி பேருந்து நிலைக்கு வந்தபோது, முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த ஒருவர் எதுவும் பேசாமல் கைப் பையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து முன் படிகளின் வழி இறங்கி, ஸ்கூட்டரின் மேல் பெருத்த காயமடைந்து கைப்பிடியைத் தக்க வைத்துக்கொள்ள தவிக்கும் கரு வட்ட கண்ணாடிகாரரின் முதுகில் கத்தியால் சரமாரியாக தாக்கினார். அதனால் உயிர் இழந்த கரு வட்ட கண்ணாடிக்காரர் தரையில் விழுந்தார். மழை வலுத்து விழுந்திருந்த கரு வட்ட கண்ணாடிகாரரின் உடலிலிருந்து குருதி வழிந்து சாலையில் மழைநீருடன் கலந்து பெருகி ஓடியது. குத்தியவர் எதுவும் பேசாமல் கத்தியை கையில் பிடித்தவாறே முன் படியில் ஏறி மீண்டும் அதே இருக்கையில் வந்து அமர்ந்தார்.
மடிந்த கரு வட்ட கண்ணாடிகாரரின் உடல் ஸ்கூட்டரின் பக்கத்தில் விழுந்து கிடப்பதினால் வழி மறுக்கப்பட்டு நின்றிருந்த இன்னொரு இரு சக்கர ஓட்டுநர், மெதுவாக வாகனத்தை நிறுத்தி, வாகன பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பேருந்தின் முன் படி வழியாக ஏறி, ஏற்கனவே காயமடைந்து பேருந்தை இயக்க முடியாமல் மௌனமாய் தவிக்கும் ஓட்டுநரின் தலையில் துப்பாக்கியின் ஆறு குண்டுகளையும் இறக்கித் தலை சிதறச் செய்துவிட்டு, மீண்டும் தன் வாகனத்திற்கு வந்து முன்னே செல்ல வழி தெரியாமல் கடும் மழையில் நனைந்தவாறே மௌனமாய் உட்கார்ந்திருக்கையில், மீண்டும் நெரிசல் நீங்கி வாகனங்கள் நகரத் தொடங்கின.
