மற்றவர்கள் பற்றி….

 

“புறணி பேசுவதை யாரும் விரும்புவதில்லை, ஆனால் எல்லோரும் அதை ரசிக்கிறார்கள்” என்றொரு பழைய பழமொழி உண்டு. இதில் நிறைவே உண்மை இருக்கிறது; புறணி பேசுபவர்கள் மற்றும் அதை வெறுப்பவர்கள் அல்லது புறணி பேசுவது பிடிக்காது என்று சொல்லுகிறவர்கள்  என எல்லோருக்கும் இது பொருந்தும். ஏனெனில், நாம் புறணி பேசியிருந்தாலோ அல்லது அதைக் கேட்டு ரசித்திருந்தாலோ, ஏதோ ஒரு வகையில் நாம் அதில் பங்கேற்றவர்களாகவே இருக்கிறோம். 

புறணி பல வார்த்தைகளிலும் – வதந்தி, கிசு கிசு, புறம் பேசுதல் என்றும் அழைக்கப்படுகிறது. புறங்கூறாமை என்று ஒரு அதிகாரமே திருக்குறளில் இருக்கிறது. இருந்தாலும், புறணி பேசாத மனிதர்களே இல்லை என்றே சொல்லலாம். எப்படி பொய் பேசாத மனிதர்கள் இல்லையே, புறணி பேசாத மனிதர்களே இல்லை என்று சொலலல்லாம். ‘பொய் பேசாத மனிதர்கள் இல்லை’ என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. பொய்பேசுவது எப்படி மனித இயல்போ, அதனைபோல் புறணி பேசுவதும் மனித  இயல்புதான். இதனை ஒரு மனித சிறப்பு அம்சம் என்று கூட சொல்லலாம். ஏனென்றால், எந்த விலங்குகளும் புறணி பேசுவதில்லை என்று நாம் நம்புகிறோம். மேலும் விலங்குகளுக்கு அந்த ஆறாவது அறிவு, அதாவது நாம் ஒரு விலங்கு என்று உணர்கிற அறிவு, நமக்கு எப்படி நாம் மனிதர்கள் என்று உணர்கிற அறிவு இருக்கிறதோ அதனைப்போல விலங்குகளுக்கு இல்லை. ஆகவே விலங்குகள் அந்த மனித குணமான பொய் பேசுவதையும் புறம் பேசுவதையும் செய்வதில்லை, செய்யமுடியாது.  

புறம் பேசுதலின் முக்கிய நோக்கங்கள் இரண்டு: ஒன்று, தாங்கள் பேசும் நபர் அல்லது விஷயம் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்வது, உறுதிப்படுத்துவது அல்லது சேகரிப்பது; மற்றொன்று, ஒரு நபர் அல்லது விஷயம் குறித்துத் தங்கள் கருத்து அல்லது எண்ணத்தைப் பரப்புவது. ‘விஷயங்களைப் பற்றி பேசுவதற்கும் ‘ ‘விஷயங்களைப் பற்றிப் பேசுவதற்கும்’ இடையே வித்தியாசம் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புறணி என்பது ‘விஷயங்களைப் பற்றி பேசுவது’ தான்.

வேலை செய்யும் விதம், பொறுப்புடன் ஒரு வேலையை செய்வது,  மனப்பான்மை அல்லது நடத்தை போன்ற காரணங்களுக்காக நான் பெரிதும் மதிக்கும் சில நல்ல நண்பர்கள், “என்ன விசேஷம்? என்ன நடக்கிறது?” என்று என்னிடம் கேட்கும்போது எனக்குச் சற்று சங்கடமாக இருக்கும். அந்தக் கேள்விகளுக்கு விரிவான பதில்களை நான் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் கேட்கிறார்கள் என்பதைத் தெளிவாக உணர முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எனது துறையில் ‘என்ன நடக்கிறது‘ என்பதைப் பற்றிய எனது கண்ணோட்டத்தையும் விளக்கத்தையும் நான் விவரிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த ‘செய்திகள்‘ அல்லது ‘நிகழ்வுகள்‘ என்பவை பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கும்: எனது 21 சக ஊழியர்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள், நம்பிக்கைகள் என்றால் அவர்கள் மற்றவர்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்; அவர்களது நடவடிக்கைகள்; யார் அடிக்கடி துறைத் தலைவரைச் சந்திக்கிறார்கள்; இயக்குனர் அல்லது செயலாளரின் நன்மதிப்பைப் பெற்றவர்கள் யார்; யார் பணி நிமித்தமான சுற்றுப்பயணங்கள் அல்லது வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்; யாருக்குப் பதவி உயர்வு மறுக்கப்பட்டது, அதற்கான காரணம் என்ன; யார் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்; யாருக்கும் யாருக்கும் இடையே சண்டை நடந்தது; யார் வேலை செய்கிறார்கள், யார் வேலை செய்வதில்லை; யார் யாரைக் காதலிக்கிறார்கள்; யாருக்கும் யாருக்கும் இடையே கள்ளத்தொடர்பு,  திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு இருக்கிறது; யார் போலியான மருத்துவ அல்லது பயணச் செலவுப் பட்டியல்களைச் சமர்ப்பிக்கிறார்கள்; யார் அலுவலக எழுதுபொருட்களைத் தங்கள் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள்; யார் அலுவலகத்திற்குத் தாமதமாக வருகிறார்கள்’ போன்றவைகள் அடங்கும்.

சில சமயங்களில், இது வெறும் புறணி அல்ல; உங்கள் நல்ல நண்பர் உங்களைப் பற்றி விசாரிக்கும்போது, ​​”என்ன விசேஷம்?” என்று கேட்பது உங்கள் நலன் கருதியே ஆகும். அதனால் நான், “எல்லாம் நலம். நீங்கள எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்கிறேன். ஆனால் அவரோ, “என்ன விசேஷம்?” என்று மீண்டும் கேட்கிறார். அவர் முகத்தைப் பார்க்காமல் வேறு பக்கம் திரும்ப வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. நான், “ எல்லாம் ஓகேதான். குறிப்பிடத்தக்கதாக எதுவும் இல்லை” என்கிறேன். இப்போது அவர் ‘நடப்பவை‘ பற்றிச் சொல்லுமாறு வற்புறுத்துகிறார். உண்மையில், ‘என்ன நடக்கிறது‘ என்று சொல்வதற்கும், ‘நடப்பவை குறித்து‘ சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. எல்லா மொழிகளிலும் சில அற்புதமான சொற்கள் உள்ளன. ‘About’ (பற்றி), ‘however’ (இருப்பினும்), ‘but’ (ஆனால்), ‘in the meanwhile’ (இதற்கிடையில்), ‘in spite of’ (இருந்தபோதிலும்) ஆகிய சொற்களை நான் அந்தப் பட்டியலின் முதல் பத்து இடங்களுக்குள் வைப்பேன்.

என் வாயிலிருந்து ஏதோ பெரிய விஷயத்தை எதிர்பார்க்கும் விதமாக அவர் என்னைப் பார்ப்பது, என்னை ஏதோ ஒன்றைச் சொல்லத் தூண்டுகிறது: “குறிப்பிடத்தக்கதாக எதுவும் இல்லை. சில சமயங்களில் ‘செய்தி ஏதும் இல்லை’ என்பதே நல்ல செய்திதான்.”

என் நண்பர் தொடர்ந்து, “உன் ப்ராஜெக்ட் எப்படிப போகிறது? எவ்வளவு வேலைகள் முடிந்திருக்கிறது?” என்று கேட்கிறார்.

“எப்படி முடியும்? இப்போதுதானே ஜூன் மாதம் நடக்கிறது? என்னிடம் மூன்று, ப்ராஜெக்ட் இருக்கு… அவற்றின் பணிகளைத் தொடங்கியிருக்கிறேன்.” 

பிறகு என் நண்பர் தனது உண்மையான நோக்கத்திற்குத் திரும்புகிறார்: “அவர், அதான், துறைத்தலைவர் எப்படி இருக்கிறார்?”

“அவரிடமே கேளுங்கள்” என்று என் நண்பரிடம் சொல்ல நினைத்தேன். ஆனால் நான், “அவர் நலமாக இருக்கிறார், அதே சமயம் எங்களுக்குத் தொல்லை கொடுக்கிறார்” என்றேன். நான் நினைக்காமலேயே அந்த கடைசி மூன்று வார்த்தைகள் இயல்பாகவே வெளிவந்துவிட்டன.

என் நண்பர் உடனே, “எப்படி? எப்படி? என்ன நடக்கிறது? அவர் யாருக்காவது மெமோ கொடுத்தாரா? அல்லது யாரையாவது பார்த்து கத்தினாரா? கருத்தரங்கு அல்லது டூர்  செல்ல அனுமதி மறுத்தாரா?” என்று கேட்கிறார்.

“அப்படி எதுவும் இல்லை. சும்மா அப்படிச் சொன்னேன். அவர் நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறார், வேறொன்றும் இல்லை.”

“சரி, சரி. நான் அதைக் கேட்க வரவில்லை. அவர் நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார், ஆனால் அவரோ எதையும் செய்வதில்லை.”

இப்போது, ​​விஷயங்களை அவரிடம் சொல்லாதது அல்லது வெளிப்படுத்தாதது குறித்து எனக்குள் ஒரு குற்ற உணர்வை அவர் ஏற்படுத்துகிறார். ஓரிரு நிமிடங்களுக்கு ஒருவித அமைதி நிலவுகிறது.

அந்த அமைதியை உடைத்து நான் கேட்கிறேன்: “எப்போது உங்க சொந்த ஊருக்குப் போகத் திட்டமிட்டுருக்கிறீங்க? எல்டிசியில் செல்வதாகச் சொன்னிங்களே? எல்டிசிக்கான புதிய விதிகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோமே?” என்கிறேன்

சிறிது நேரம் அவரிடமிருந்து பதில் இல்லை; பின்னர் மிகுந்த தயக்கத்துடன், “போக வேண்டும்… ஆனால் இன்னும் முடிவு செய்யவில்லை,” என்று கூறினார்.

என் நண்பரிடம் தெரிந்த அந்தத் தர்மசங்கடமான நிலையைப் பார்த்ததும், அந்த விஷயத்தைப் பற்றி மேலும் பேசுவதற்கு எனக்கு இடமில்லாமல் போனது.

மீண்டும் தீவிரமான பாவனையுடன், “மற்றபடி எல்லாம் எப்படிப் போகிறது?” என்று கேட்டார். நலன் விரும்பும் ஒருவர் கேட்கும் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று நான் யோசித்தேன்.

அற்புதமான சொற்களின் பட்டியலில் சேர்க்க இன்னொரு சொல் எனக்குக் கிடைத்துவிட்டதாக இப்போது நினைக்கிறேன்; அந்தச் சொல் ‘மற்றபடி‘ (otherwise) என்பதுதான்.

நான், “நன்றாக போகிறது,” என்றேன்.

“நன்றாக போகிறது என்றால்?” என்று அவர் கேட்டார்.

“‘நன்றாக போகிறது’ என்றால் ‘நன்றாக இருக்கிறது’ என்றுதான் அர்த்தம். அதாவது, எல்லாம் சரிதான், சரியாதான் நடக்குதுன்னு வைத்துக்கோங்க,” என்று சொல்லிக்கொண்டே, வேகமாக நடந்தபடி கீழே பார்த்தேன்.

“எல்லாமே சரிதானா? இல்ல, சரியாய் நடக்குதுனு வைச்சுக்கோனுமா?”

“அட போடா” என்று அவரை அப்படியா விட்டுட்டு திரும்பி நடந்து வேறு வழியில் போய்டலாமான்னு ஒரு தருணம் யோசித்தேன். “என்ன இருந்தாலும் நண்பர், ஒரே ப்ளாக்கில் வசிப்பவர்” என்று எதுவும் சொல்லாமல் நடந்தேன்.

என்னிடமிருந்து பெரிய தகவல்கள் எதுவும் கிடைக்காது என்பதை உணர்ந்த அவர், வேறு கோணத்தில் தாக்குதலைத் தொடங்கினார். ஒருவேளை அது ‘கீழ்த்தரமான‘ தாக்குதலாகக்கூட இருக்கலாம்.

“ஒரு துறை கூட்டத்தில் உங்கள் துறைத்தலைவரை மற்ற அனைவரும் கடுமையாக விமர்சித்தார்கள். நானும்  அந்த மீட்டிங்கில் இருந்தேன். அது கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது என்று நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

என்னை ஆத்திரமூட்டுவதிலோ அல்லது தன் வலையில் விழ வைப்பதிலோ அவர் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தார். நான் நிதானத்தைக் கடைப்பிடித்து, “பரவாயில்லை. இது கிட்டத்தட்ட தினமும் நடக்கிறதுதான். மக்கள் மற்றவர்களைக் கேலி செய்வதுண்டு,” என்றேன்.

“அதாவது மற்றவர்களைக் கிண்டல் செய்வதைச் சொல்கிறீர்களா?” என்று அவர் கேட்டார்.

“சரியாகச் சொல்லப்போனால்… இல்லை. ஆனால், ஆம். ஒரு வகையில் அது சரிதான்; ஒரு அலுவலகம் அல்லது நிறுவனத்தின் செயல்பாடுகளில் இது ஒரு பகுதியாக இருக்கத்தான் வேண்டும். ஏனென்றால், நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டியுள்ளது.”

அடிப்படையற்ற தகவல்களோ அல்லது வதந்திகளோ கிடைக்காத சூழலில், அவர் இப்போது விவாதிக்க வேறு ஒரு விஷயத்தைத் தேடினார்: “சுமித் ரஞ்சன் இங்கிலாந்துக்குச் செல்வதாகக் கேள்விப்பட்டேன். எந்த ப்ராஜெக்ட்டுக்ககாக    அவர் அனுப்பப்படுகிறார்? இல்ல, எதுவும் பேப்பர் ப்ரெசென்ட்டேஷனா?” 

“அப்படியா? அது நல்ல விஷயம். ஆனால் எனக்கு அது பற்றித் தெரியாது,” என்றேன்.

“என்ன நல்ல விஷயம்? அந்தத் துறையில் அவர் அப்படி என்னதான் சாதித்துவிட்டார்?” என்று கேட்டார் என் நண்பர்.

அடுத்த பத்து நிமிடங்கள் சுமித் மற்றும் அவரது பயணம் பற்றிய ‘விவாதத்தில்‘ கழிந்தன; அந்தப் பயணம் பற்றி அவருக்கும் எனக்கும் பெரிய அளவில் எதுவும் தெரியாது என்பதுதான் உண்மை. பின்னர், பேச்சு என் அண்டை வீட்டார் ஒருவரைப் பற்றிய வதந்திக்கு மாறியது; பலருக்கும் அவரது திருமண நிலை ஒரு மர்மமாகவே உள்ளது. அவர் எங்கள் சக ஊழியர்; யாரிடமும் அதிகம் பேசமாட்டார். தனக்கு முடிந்த வேலையைச் செய்துகொண்டு அமைதியாக இருப்பார். விசித்திரமான விஷயம் என்னவென்றால், அவர் என் நண்பனின் நேரடி சக ஊழியர்; ஒரு வகையில் பதவி உயர்வுக்கான அடுத்த இன்டெர்வியூயில்  இவருக்குப் போட்டியாளரும்கூட.

“அவள் கணவருக்கு என்ன ஆனது? அவள் அவருடன் வசிக்கிறாளா இல்லையா…?” என்று கேட்டார்.

“நீ ஒரு காரியம் செய். அவளை நேரில் சந்தித்து அவளிடமே கேட்டுப் பார்க்கலாமே? அவளை விட வேறு யாருக்குத் நல்ல தெரியும்?” என்றேன் நான்

அவன் முகத்தில் இப்போது லேசான கோபத்தை என்னால் காண முடிந்தது. ஆனாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியவில்லை.

சூழலை லேசானதாக்க நான் சிரித்துக்கொண்டே, “எனக்குத் தெரியாது,” என்றேன்.

பிறகு என் பக்கத்து வீட்டுக்காரியின் கணவரைப் பற்றிய பல தகவல்களை அவர் அடுக்கினார். அவளைப் பற்றியும் அவள் கணவரைப் பற்றியும் அவளுக்கே கூட இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருக்காது என்று தோன்றியது. கல்லூரி நாட்களில் அவர்கள் காதலித்தது, இறுதியில் வீட்டை விட்டு ஓடிப்போனது, முதல் குழந்தை பிறந்த பிறகு திரும்பியது, இரண்டாவது குழந்தை பிறக்கும் காலகட்டத்தில் ஏற்பட்ட கசப்பான மற்றும் கொந்தளிப்பான சூழல், கடைசியில் பிரிவும் அவன் கனடாவுக்குச் சென்றதும் என அனைத்தும். அவர்கள் இன்னும் விவாகரத்து செய்துகொள்ளவில்லை என்பது உள்பட.

“அவளுடைய வாழ்க்கை மற்றும் துயரங்கள் பற்றி உங்களுக்கு   எல்லாம் தெரிந்திருக்கும்போது, ​​ஏன் என்னிடம் கேட்கிறீர்?” என்று கேட்கத் தோன்றியது. ஆனால் எதுவும் சொல்லவில்லை நான். எனது மௌனத்தின் அர்த்தத்தை புரிந்துகொண்ட அவர்

“இல்லை, இல்லை. இவ்வளவும் ‘அவர்கள்’ பேசிக்கொள்கிறார்கள்  ‘அவர்கள்‘ சொல்வது இதுதான்,” என்று அந்த மோசமான வதந்திகளிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு அவர் மிக விரைவாகப் பதிலளித்தார்.

“‘அவர்கள்‘ என்றால் யார்?” – என் கேள்வி அவரைச் சற்று எரிச்சலடையச் செய்திருக்க வேண்டும்.

“மக்கள்!” என்று மிக விரைவாகப் பதில் வந்தது.

“‘மக்கள்‘ என்றால் யாரை வேண்டுமானாலும் குறிக்கும்,  ஏன் எல்லோரையும் குறிக்கும்.” என் அந்தப் பேச்சு எதிரியின் கூர்மையான அம்பு போல அவன் மீது பாய்ந்தது.

“அதை விடு. இது உண்மையா?” அவரது அக்கறை இன்னும் தொடர்ந்தது.

“எது?”

“உன் பக்கத்து வீட்டுக்காரி மற்றும் அவள் கணவரைப் பற்றிய அந்தச் செய்தி.”

“அவளைப் பற்றி நீங்கள் பல கதைகளைச் சொல்லியிருக்கிறீர்கள்; அவற்றை வைத்து ஒரு பாலிவுட் படமே எடுக்கலாம்,” என்றேன் நான்.

அவருக்கு உண்மையில் கோபம் வந்தது. ஆனால் அதனை  வெளியே காட்டிக்கொள்ளலாமல் ஒரு சிரி சிரித்தார். பொறுமை இழந்தாலும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

“எனக்குத் தெரியாது,” என்றேன் நான்.

“நீ இதைத்தான் சொல்வாய் என்று எனக்குத் தெரியும். சரி, விடு.” ஒரு சிறந்த கணித ஆசிரியர் தன் மாணவர்களிடமிருந்து சரியான பதிலை எதிர்பார்த்து, தவறான பதிலைப் பெற்றால் எப்படிச் சலிப்புடன் பேசுவாரோ, அப்படி அந்த வார்த்தைகள் வெளிப்பட்டன.

நான் பேச்சை மாற்ற விரும்பினேன். “இப்போதெல்லாம் நிறைய ஊழல் வழக்குகள் வெளிவருகின்றன. அது அன்றாட நிகழ்வாகிவிட்டது. அந்த ஊழல். இந்த ஊழல், கோவில் காணிக்கை பணத்தில் கூட ஊழல் நடந்திருக்கிறது. நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிகிறது,” என்றேன்.

அவர் அதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. “அரசியல் என்பது ஒரு சாக்கடை போன்றது. அதைப் பற்றிப் பேசாதே,” என்று மட்டும் சொன்னார்.

காலை நடைப்பயிற்சியின் போது நாங்கள் மேற்கொண்ட அந்த ‘நலன் விசாரிப்பு‘ உரையாடல் அல்லது புறணி அந்த இடத்திற்கு, ​​நாங்கள் வழக்கமாகப் பிரிந்து அவரவர் வீடுகளுக்குச் செல்லும் இடத்தை அடைந்தபோது முடிவுக்கு வரும் என்று நான் சிறிது சந்தோசப் பட்டேன். அவர், “சரி சார். அப்புறம் பார்க்கலாம். சுமித்தின் சுற்றுப்பயணம் பற்றி விசாரித்துச் சொல்,” என்றார். “சரி, போய் வருகிறேன்,” என்று சொல்லிவிட்டு நான் நடக்கத் தொடங்கினேன். நாங்கள் அவரவர் வழியில் சுமார் சில நிமிடங்கள் நடந்திருப்போம்; திடீரென்று அவர் என்னை அழைத்து, “இன்னொரு விஷயம், நான் மறந்துவிட்டேன்… சுர்ஜீத்தின் வழக்கு எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது? அவனது நீதிமன்ற உத்தரவுக்கு டிபார்ட்மென்ட் என்ன பதில் கொடுத்திருக்கு?” என்று கேட்டார். பதில் சொல்ல அவர் முகத்தைப் பார்த்தபோது என் செல்போன் ஒலித்தது. “என் மனைவி கூப்பிடுறாங்க, நான் கிளம்புகிறேன்,” என்றேன். “சரி, சரி, அதைப் பற்றி அப்புறம் பேசலாம். அவனிடம் கவலைப்பட வேண்டாம் என்று சொல்,” என்றார் அவர்.

___

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *