சறுக்கு மரம்

1.

அம்மா இறந்த பிறகு அக்காவின் போக்கே மாறிவிட்டது. எப்போதுமே ஒருவித பதற்றத்தோடு இருக்கிறாள். என் கண்களைப் பார்த்து பேசுவதும் குறைந்துவிட்டது. முன்பெல்லாம் நான் சாப்பிட அமர்ந்தால், முடிக்கும் வரை அவள் கவனம் என் மீதே இருக்கும். அக்கறையாக ஒவ்வொன்றையும் கேட்டுக் கேட்டு விளம்புவாள். இப்போதெல்லாம் தட்டில் வேண்டா வெறுப்பாக, சோற்றை அள்ளிப் போட்டுவிட்டு உடனே வெளியே கிளம்பி விடுகிறாள். அவள் ஆக்கும் சமையலும் சகித்துக்கொள்ள முடியாத தரத்தில்தான் இருக்கின்றது.

ஏதாவது முக்கியமான வேலை இருக்கும் போல என்று எண்ணினேன். அவள் அப்படிக் கிளம்பிச் செல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவள் சதா தெருவை வெறித்துக்கொண்டு நிற்பதை வாடிக்கையாக மாற்றினாள். சில நேரங்களில் அடைத்திருக்கும் ஜன்னலுக்கு முன் எதையோ ஒற்றறிவதைப்போல நின்று கொண்டிருந்தாள். சமீப காலமாக அக்காவைப் பார்க்கும்போது எனக்குள் இனம்புரியாத ஒரு அச்சம் தோன்றுகிறது. முன்பிருந்த அக்காவை எங்கோ தொலைத்து விட்டதைப் போல. அக்காவின் உடம்பில் வேறு யாரோ அந்நியப்பெண் வாழ்ந்து வருவதைப் போல. பிள்ளைகளிடம் கூட அவள் கட்டாக நடந்து கொள்கிறாள்.

வீடே மூளிப்பட்டு போனது. அக்காவின் இரண்டு பெண்குழந்தைகளும் ஓடியாடித் திரியும்போது வீடு நிறைய வெளிச்சமும், ஆட்டமும் பாட்டமும் இருக்கும். அவர்கள் பள்ளிகளுக்கு சென்றபின்னர், மத்தியான வெயிலில் கூட அறைகளில் ஒரு கப்பி இருட்டு வந்து ஒட்டிக்கொண்டு விடுகிறது. கெட்டித்த அமைதி. அக்கா கற்சிலையைப் போன்று இறுக்கமான முகத்தோடு வீட்டு வேலைகளைச் செய்கிறாள். அத்தான் இறந்து பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றது. அத்தான் இறந்த சில மாதங்கள் அக்கா உள்ளடங்கி இருந்தாள். இரண்டு ஆண்டுகளில் அவளிடம் பழைய இயல்புகள் திரும்பின. ஒரு தெளிச்சி பிறந்தது. தலையெழுத்து, முன்ஜென்ம விதி என்று எண்ணி ஆறுதலைக் கண்டு கொண்டாள். அத்தானின் இழப்பில் இருந்து அவள் மெல்ல மெல்ல மீண்டு வந்தாள். பிள்ளைகளுக்காக வாழ வேண்டி இருக்கிறதே என்று முன்பைவிட அதிக அக்கறையும் ஆவேசமும் கொண்டவளாக மாறிப்போனாள். பீடித்தட்டின் முன் எந்நேரமும் பேயைப்போல உக்கார்ந்து பீடி சுற்றத் தொடங்கினாள்.

நாங்கள் வசிப்பது தாத்தா காலத்தில் கட்டிய மட்டப்பா வீடு. நான்கு அறைகளும் ஒரு அங்கணமும் வாசலின் இருபுறமும் அகன்ற திண்ணைகளும் கொண்டது. இரண்டு தலைமுறைகள் வாழ்ந்து சென்ற நினைவுகளை வீட்டின் ஒவ்வொரு செங்கலிலும் காணலாம். அப்பா பஞ்சாயத்து தொடக்கப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தார். ஓய்வுபெறும்போது தலைமை ஆசிரியர். சொந்த தாய்மாமன் மகளைத் திருமணம் செய்துகொண்டார். பத்து ஆண்டுகளாக குழந்தைகள் பிறக்கவில்லை. கோவில் கோவிலாக அம்மா பிள்ளைப்பாக்கியத்திற்காக தவம் இருந்தாள். பதினோராவது ஆண்டில் அக்கா பிறந்தாள். அவள் பிறந்த மறுவருடமே நான்.

அடுத்த சில ஆண்டுகளில் அம்மாவிற்கு திடீர் திடீரென்று சாமி வந்தது. எப்போது சன்னதம் வந்து ஆடத்தொடங்குவாள் என்பதை அறிந்து கொள்ளவே முடியாது. கண்கள் மேலேறி, கருவிழிகள் அற்றுப்போகும். முந்தானை அக்கறையற்று தரையில் அலையும். மஞ்சள் துாள் கலந்த தண்ணீரை முகத்தில் அடித்து, சிறிது அருந்தக் கொடுக்க வேண்டும். அப்பாவிற்கு மட்டும் அம்மா சாமி வந்து ஆடப்போகிறாள் என்பது எப்படியோ முன்னரே தெரிந்துவிடும். அவள் பற்களைக் கடித்து, கால்கள் பின்ன நடக்க ஆரம்பிக்கும்போதே வாசலிற்கு ஓடிச் சென்று கதவுகளை அடைத்து விடுவார். நாங்கள் இருவரும் அப்பாவின் சாயலில் இல்லை என்று அப்பாவிற்கு பெரிய வருத்தம். அம்மா சாயலிலும் இல்லை என்பார். எங்களை ஒருநாளும் அவர் மடியில் துாக்கிவைத்து கொஞ்சியதே இல்லை. சிறிய தவறுகளுக்கு கூட மாட்டை அடிப்பதைப் போன்று, ஆத்திரத்தோடு பெல்டால் அடிப்பார். அப்போதெல்லாம் அம்மாவின் முகம் குரோதத்தில் உறைந்து அச்சமூட்டும் விதத்தில் இருக்கும்.

அப்பா தெருவில் பாதியை சல்லிசான விலைக்கு வாங்கிப் போட்டார். மகா உலோபி. கடைசி வரை ரேசன் அரிசி வாங்கியே சாப்பிட்டார். சாகும்போது எண்பெத்தெட்டாயிரம் சம்பளம். எட்டு வீடுகள். அவற்றில் இருந்து வந்த வாடகை வேறு. இன்றைய விலைக்கு பத்து கோடிக்கும் மேல் மதிப்பு பெறும். ராமையா நாயக்கரின் தொழுவமே பத்து செண்டு. இருபத்தைந்து மாடுகள் கட்டியிருந்த தொழு அது. என் சிறுவயதில் அந்தப்பக்கம் எந்நேரமும் மாடுகளின் கழுத்துமணிக் குலுங்கல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். காலையும் சாயந்தரமும் பால்கரக்கும் சீற்றம் தவறாமல் ஒலிக்கும். இரவுகளில் ஒன்றுக்கிருக்க எழுந்து வந்து சாக்கடையில் நீட்டிக்கொண்டு, தொழுவைப் பார்ப்பேன். பச்சை சுடர்ந்து அசையும் விழிகள் அடிவயிற்றில் பயத்தை உண்டு பண்ணும். ஓடிவந்து அம்மாவின் முந்தானையை எடுத்து முகத்தில் போர்த்தியபடி படுத்துக்கொள்வேன்.

நல்ல சொத்துள்ள மருமகன் வேண்டும் என்பதற்காக ஊரெல்லாம் வரன் தேடி அலைந்தார் அப்பா. அக்காவிற்கு மாப்பிள்ளை தேடும் படலமே எட்டாண்டுகள் நீடித்தது. ஐம்பதிற்கும் மேற்பட்ட வரன்களை பரிசீலனை செய்தார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வீட்டில் பெண்பார்க்கும் படலம் நிகழும். ஆரம்பத்தில் அக்காவிற்கு அதிலெல்லாம் அதிக உற்சாகம் இருந்தது. இரண்டு ஆண்டுகள் தாண்டிய பிறகு அக்கா சோர்வு தளும்பும் முகத்தோடே பலகாரத்தட்டினை எடுத்து பரிமாறத் தொடங்கினாள். மருமகன் ஒரே வாரிசாக இருக்க வேண்டும். தன்னிடம் இருப்பதை விட சொத்து அதிகம் வைத்திருக்க வேண்டும், நல்ல கவுரவம் கொண்ட குடும்பமாகவும் அமைய வேண்டும் என்பதை குறைந்தபட்சத் தகுதியாக அப்பா கருதிக்கொண்டார். அக்காவிற்கு திருமணம் ஆனபோது அவள் வயதிற்கு வந்து இருபத்தோரு ஆண்டுகள் ஆகியிருந்தது. எனக்கு முப்பத்து ஐந்து வயது. முன்நெற்றியில் வழுக்கை.

சன்னதித்தெருவில் ஜவுளிக்கடை வைத்திருந்தார் அத்தான். ஒரே மகன்தான். அம்மா மட்டும் உடன் இருந்து விவசாயத்தையும், ஓய்ந்த நேரத்தில் வியாபாரத்தையும் பார்த்துக்கொண்டார். திருமணம் ஆன போது அத்தானுக்கு “ஆளைக்காலி செய்யும் அளவில்” கடன்கள் இருந்ததற்கான அறிகுறிகளே தென்படவில்லை. அல்லது திருமணத்திற்கு பின்னர்தான் அந்தக்கடன்கள் எல்லாம் வந்ததோ என்னவோ, ஐந்தே வருடத்தில் அத்தான் சொத்துக்களை எல்லாம் இழந்தார். ஆரியங்காவில் எதோ ஒரு கேரளப் பெண்ணுடன் தொடுப்பு வைத்திருக்கிறார் என்று அக்கா அம்மாவிடம் சொல்லி கதறி அழுதாள். இரண்டாவது பெண் குழந்தை பிறந்த போது அத்தானுக்கு மாரடைப்பு வந்தது. அக்கா இரண்டு பெண் குழந்தைகளுடன் பிறந்த வீட்டிற்கு திரும்பி வந்தாள்.

அத்தானின் சொத்துக்களை விற்றும், அப்பாவிடம் இருந்து கொஞ்சம் வாங்கித்தான் கடன்களில் இருந்து மீள முடிந்தது. அப்பா இறந்துபோக அதுவே காரணம் என்றாயிற்று. அக்கா விதவையாகி வீடு வந்த பின்னர் எனக்குத் திருமணம் செய்துகொள்வதில் நாட்டம் இல்லாமல் போனது. அக்கா மகள்களை வளர்த்து ஆளாக்கினால் போதும் என்றிருந்து விட்டேன்.

நாளடைவில் தேரடித் தெரு சரோஜாவோடு எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. தேரோட்டத்தன்று அவளை ரோஸ் கலர் புடவையில் தலை நிறைய மல்லிகைப் பூக்களோடு பார்த்தேன். கூட்டத்தில் முண்டியடித்து அவள் பின்னால் அலைந்தேன். பெருங்கூட்டம் இயல்பாகவே இச்சை நிறைவேற்றத்திற்கான இசைவான சூழலாக அமைந்துவிடுகிறது. அன்று உடம்பெல்லாம் கசகசத்து, தாகம் மிகுந்தது. தனித்து அசைந்த அவளின் பின் பகுதி என்னைப் பைத்தியம் என்றாக்கிற்று. பெரிய சண்டியரைப் போல  துணிந்து தீண்டினேன்.

அம்மா காதிற்கு அந்த வைப்புச் சமாச்சாரம் சென்றடைய நீண்ட காலம் எடுத்தது. செய்தி தெரிந்ததும் அம்மா அவசரமாக எனக்குப் பெண் தேடினாள். தேரடித் தெருவில் சிக்கியவன் மண்ணாகிப் போவான் என்பதை அம்மா அறிவாள். மாவடிக்காலில் இருந்து சாந்தியை திருமணம் செய்து கொண்டு வரும்போது எனக்கு நாற்பத்தி மூன்று வயதாகி இருந்தது. வழுக்கை பாதி மண்டையைத்தாண்டி பயணித்திருந்தது. முன்தொந்தி வேறு வயதைக் கூட்டிக்காட்டியது. சாந்திக்கும் எனக்கும் இருபது ஆண்டுகள் இடைவெளி. இணையாக வெளியே செல்லும்போது ஆண்களின் பார்வை அவளை கிரக்கத்தோடு சுற்றிவருவதைக் கண்டு நடுங்கிப் போவேன். யாரெல்லாம் அவளையே பார்க்கிறார்கள் என்பதை நோட்டமிடுவதே என் இயல்பாயிற்று. அதற்குப் பயந்தே அவளை வெளியே எங்கேயும் அழைத்துச்செல்வதில்லை. அடுத்த சில மாதங்களில் சாந்தியை என் அம்மாவும் அக்காவும் மாவடிக்காலிற்கு சண்டையிட்டு விரட்டினார்கள். உண்மையில் அடித்து அடித்தே விரட்டினார்கள். மகளிர் காவல்நிலையம் வரை சென்றுவர வேண்டி இருந்தது. நாள்தோறும் சண்டை நடந்த நாட்கள். விடிவதே அம்மாவின் அழுகையோடுதான். சாந்திக்கு அடுப்படிப் பக்கம் செல்வதே அச்சம் தரக்கூடியதாக மாறியது. ஒரு பெண் மற்றொரு பெண் மீது இந்த அளவு இரக்கம் இன்றி நடந்துகொள்ள முடியுமா என்பதை அந்நாட்களில் அறிந்துகொண்டேன். அம்மாவிற்கும் அக்காவிற்கும் இப்படியும் முகங்களா என்ற அதிர்ச்சியில் வீட்டிற்கு மிகத் தாமதமாக திரும்பத் தொடங்கினேன். அம்மா இறந்த துஷ்டி வீட்ற்கு வந்த போது சாந்தியைக் கடைசியாகப் பார்த்தது. அன்றெல்லாம் அக்கா பூரானைக் கொத்திக்கிளறும் சேவலைப் போல பார்வையால் சாந்தியை விரட்டிக்கொண்டே இருந்தாள். நீர்மலை எடுத்து தெருத்திரும்பும்போது நான் சாந்தியைப் பார்த்து தலையை ஆட்டிச் சிரிக்க முயன்றேன். அந்தச்சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என்பது அவளுக்குப் புரியும் என்ற நம்பிக்கையில். அம்மா இறந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

2.

சாந்தி நல்ல சிவப்பு. போதுமான சத்தும் கூட. அவள் கரங்களை மடியில் தாங்கி பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். அவற்றின் பூனை மயிர்களை விரலால் நீவிக்கொண்டே இருப்பேன். அப்படி இருப்பது அவளுக்கும் பிடிக்கும். எங்கள் குடும்பத்தில் அத்தனைப்பேரும் அட்டைக்கரி நிறம். முகவெட்டையும், அட்டக்கரி நிறத்தையும் வைத்தே “தெக்குவீட்டு வளசலா?” என்று அடையாளம் கண்டு கொள்வார்கள். அப்பாவிடம் இருந்து உருகி வந்து கருப்பு. அம்மாவிற்கு அது ஒன்றே தீராத கொதிப்பை உண்டாக்கி இருக்க வேண்டும். சாந்தியின் நிறம் அவளை நிரந்தரமாக தொந்தரவு செய்தது. பெரிய துன்பங்களை குடும்பத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் என உறுதியாக நம்பினாள். மற்றொன்று அம்மா எதிர்பார்த்த சீர் வரிசை இல்லாமல் போனது. திருமணச் சீர்களில் மறுவீட்டுக்கு வந்த பலகாரங்களில் முருக்கு சொந்தக்காரர்களுக்கு கொடுக்க போதுமானதாக இல்லாமல், பற்றாக்குறையானது. அம்மா அன்றே முகத்தை துாக்கி வைத்துக்கொண்டாள். சண்டை வரும் என்ற எதிர்பார்த்தேன். அம்மா பெருந்தன்மையாக நடந்துகொண்டாள்.

சாந்தியைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. புரோக்கர் மாமாவிடம் இந்த சம்பந்தத்தை விட்டுவிடக் கூடாது என்று சொல்லிவைத்தேன். பெரிய அளவில் நகை போட வாய்ப்பில்லை என்று அவர் பதில் சொன்னார். “நான் பணம் தருகிறேன் அம்மா கேட்கும் பவுனை போடச் சொல்லுங்கள்” என்றேன்.  ரொக்கத்தையும் கொடுத்தேன். நிச்சயதார்த்த தட்டில் ரொக்கத்தை வைத்து சாந்தியின் தாய்மாமா சபையில் நீட்டியபோது எனக்குச் சிரிப்பு வந்தது.

புரோக்கர் மாமா ஒருவிதத்தில் அம்மாவின் துாரத்து உறவு. எனக்கு நானே சீர் செய்து கொண்டத் தகவல் அம்மாவிடம் சென்று சேர்ந்தது. அப்படி இருந்தும் ஒரு மாதம் வீட்டில் கொந்தளிப்பு ஏற்படவில்லை. நான் அப்படி ஏற்படாமல் பார்த்துக்கொண்டேன். பாதி நாள் வேலைக்கே போகாமல் அறைக்குள் அடைந்து கிடந்தேன். அக்கா என் அறையை கடந்து சென்று குலுக்கையில் இருந்து அரிசி எடுக்க வருவதற்கே தயங்கி நிற்பாள். மூடிய அறைக்கு முன் நின்று உற்றுக்கேட்பாள். கொலுசுகளின் சிணுங்கல் அறைக்குள் கேட்டுக்கொண்டே இருக்கும். அவள் முகம் அப்போது மகிழ்ச்சியில் பூரிக்கும். சாந்திக்கு என் மீது ஏமாற்றம் ஏற்பட நாற்பத்தெட்டு மணிகளே போதுமானதாக இருந்தது. ஆரம்ப தடுமாற்றம் என்று சமாளித்துப் பார்த்தேன். தொடக்கத்தில் காட்டிய உற்சாகத்தை அவள் மெதுவாக குறைக்கத் தொடங்கினாள். பெரும்பாலான நேரங்களில் சுனையின் ஊற்று வரண்டிருந்தது. அதிருப்தியில் சுருங்கிய முகத்தோடு எழுந்து கழிவறைக்குச் சென்றாள்.

சோற்றில் உப்புப் போட்டு வடிக்கிறாள் என்பதில்தான் முதல் சண்டை ஆரம்பித்தது. அடுக்கடுக்காக சண்டைகளுக்கான காரணங்களை அதைத் தொடர்ந்து அம்மா கண்டறிந்தாள். ”பலவற்றை…. செவத்த தோலைக்காட்டி எம்பிள்ளைய மயக்கிப்போட்டிருக்கியாடி” என்று அம்மா அங்கணத்தில் நின்று கத்திய இரவு சாந்தி துாங்கவே இல்லை. என்னிடமும் ஒருசொல் பேசவில்லை. எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தேன். விடிய விடிய அழுதுகொண்டிருந்தாள். மறுநாள் விடியும் முன்னரே மாவடிக்காலுக்குக் கிளம்பினாள். என்னிடம் சொல்லிக்கொள்ளவும் தோன்றவில்லை. காலில் விழுந்து கெஞ்சாத குறைதான். மறுபடியும் தேரடித் தெருவிற்கு செல்லக்கூடாது என்ற வைராக்கியத்தை நினைத்துக்கொண்டேன். சொந்த வீடு என்பது எல்லா விதத்திலும் ஆசுவாசமானது.

ஒரு மாதம் வரை சாந்தியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. வீம்பெடுத்து நானும் தேடிப் போகவில்லை. அம்மாவோ அக்காவோ சாந்தி கிளம்பிச் சென்றதை குடும்பத்திற்கு ஏற்பட்ட பெரிய அவமானமாகவே எடுத்துக்கொண்டார்கள். அவளை மீண்டும் வீட்டிற்கு கூட்டிவரும் எண்ணமே அவர்களிடம் இல்லை. நான்தான் தவித்துப்போனேன். சுரண்டை அக்கா “இந்தப் பாவம் செய்யாதீக…குமரு சாபம் சும்மா விடாது” என்று ஆத்திரப்பட்டார். முடிவற்று நாள்கள் நீண்டு செல்லவே, புரோக்கர் மாமாவைப் பார்த்து, சங்கதிகளை விளக்கிச் சொன்னேன்.

“எது…உங்க ஆத்தாளுக்கு கூறு காணாது..கேட்டியளா…உங்க அக்கா அவளுக்கு மேல துடியா நிக்கா..அவளுவோ பேச்சைக் கேட்டா நீ குடும்ப நடத்திக்கிட முடியாது பாத்துக்கோ..கைல பிடிச்சு ஆட்டிக்கிட்டே திரிய வேண்டியதான்” என்று சலித்துக்கொண்டார். சாந்தியின் அ்ப்பாவிடம் பேசுவதாகச் சொன்னார். அடுத்த நான்கு நாளில் சாந்தியை கூட்டிக்கொண்டு அவரே வீட்டிற்கு வந்தார். ஆனால் அம்மாவும் அக்காவும் அதை எதிர்பாக்கவில்லை. விரும்பவும் இல்லை. அவளை வீட்டிற்குள் நடையேற்றாமல், வாசலில் நிறுத்தி வைத்தே சண்டையிட்டார்கள். காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். ஊரே திரண்டு வந்து வேடிக்கை பார்த்தது. அக்காவைத் தனியாக அழைத்துச்சென்று பேசினேன். அக்கா அம்மாவை சமாதானம் செய்வாள் என்று எதிர்பார்த்தேன். மாறாக அக்காதான் அம்மாவை விட மிக அதிகமாக உணர்ச்சி வசப்பட்டாள். “களவாணிச் சிறுக்கி…என் தம்பிய ஏமாத்தி. எல்லாச் சொத்தையும் அமுக்கிட்டு போயிறலாம்னு வந்திருக்கியா..நான் உசிரோட இருக்கற வரைக்கும் அது மட்டும் நடக்கவே நடக்காது” என்று நெஞ்சில் அறைந்து அழுதாள். சாந்தி அந்த முறை சீர் கொண்டு வந்திருந்த சாமான்களையும் ஒரு வண்டி கொண்டுவந்து அள்ளிச் சென்றாள். சாந்தியின் அப்பா சமுதாயத் தலைவரோடு மல்லுக்கு நின்றார். அம்மா, அக்காவின் வாய்க்கு சமுதாயத்தலைவர் அஞ்சினார். “இது ஊர்க் கூட்டம் கூட்டி சரிபண்ண முடியாது..நீங்க போலிசுக்கு போய் பார்த்துக்கோங்க” என்று கைவிரித்தார்.

அந்தச் சம்பவத்திற்கு பின்னர் அம்மா உயிரோடு இருந்தவரை மறுபடியும் சாந்தியை திரும்ப அழைத்து வருவதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அம்மாவின் வருடத்திதி முடிந்த ஒருநாள் அக்காவிடம் “சாந்தியைக் கூட்டி வரட்டுமா?” என்று கேட்டேன். அக்கா ஒன்றுமே பதில் சொல்லவில்லை. சூரல் நாற்காலியில் சாய்ந்திருந்தாள். அவள் கால்கள் மட்டும் வெடுக்வெடுக்கென்று ஆடிக்கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *