“நீ வருவேன்னு மாமா சொல்லியிருந்தாரு, உட்காரு, பத்து நிமிசத்தில் ரெடி ஆகிடறேன் ” கவிதா அக்கா சொல்லிக்கொண்டே உள்ளறைக்குள் சென்றார். நான் அருகிலிருந்த பிளாஸ்டிக் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டேன், ரிதீஷ் தரையில் அமர்ந்து அம்மாவின் கைபேசியில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான். டி.வி ஓடிக்கொண்டிருந்தது , அதில் ஒரு பெண் கண்களை உருட்டி அருகிலிருந்த இன்னொரு பெண்ணை மிரட்டுவது போல ஏதோ பேசிக் கொண்டிருந்தாள், சற்று கவனித்தேன், டீ எடுத்து வரச் சொல்வதை அப்படி சொல்லிக்கொண்டிருக்கிறாள் ! வெறியாகி எழுந்து மேசையில் இருந்த ரிமோட் எடுத்து டிவியை ஊமையாக்கினேன். ரிதீஷ் சத்தம் நின்றதை உணர்ந்து நிமிர்ந்து என்னைப் பார்த்தான், டி.வி யில் இருந்த அந்த பெண்ணைக் காட்டி ” உங்கம்மாவே தேவலடா ” என்றேன். ரிதீஷ் ” அம்மா ” என்று கத்தினான். ” சும்மா சொன்னேன்டா ” என்று சொல்லி அவனை அமைதிப் படுத்தினேன். பிறகு, அவன் அருகில் சென்று ” உன்னையெல்லாம் வாயில மிதிச்சா தாண்டா சரி வருவ ” என்றேன், நான் அருகில் இருந்ததால் ஏதும் சொல்லாமல் என்னை வேடிக்கை பார்த்தான்.
சற்று நேரத்தில் வெளிச்செல்லும் உடையிலும் தோரணையிலும் கவிதா அக்கா வந்து நின்றாள். ” அழகா இருக்கீங்க ” என்றேன். சிரித்து பின் ரிதீஷிடம் சென்று ” வா போகலாம் ” என்றாள், அவனிடம் ” ஏன்டா உம்முனு இருக்கே, என்னாச்சு ” என்று கேட்டாள். அவன் என்னைப் பார்த்தான். நான் அவனிடம் சென்று ” வாடா ஐஸ்கிரீம் வாங்கி தரேன் ” என்று சொல்லி அழைத்து வெளியே கூட்டி வந்தேன். கவிதா அக்கா வெளியே வந்து வாசலைப் பூட்டினாள். நான் பைக்கை ஸ்டார்ட் செய்து ரிதீஷை முன்னால் உட்கார வைத்தேன். கவிதா அக்கா வந்து பின்இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
சந்துரு அண்ணா காலையில் அலைபேசியில் அழைத்து கவிதா அக்காவை கூட்டிப் போகச் சொன்ன போது கடுப்பாகி விட்டேன். நேராக அவர் கம்பெனிக்குதான் வண்டியை விட்டேன். உள்ளே டைலர்கள் யாரும் இல்லாமல் மிசின்கள் தூங்கி கொண்டிருந்தன. சந்துரு அண்ணா இருக்கும் அறை நோக்கிச் சென்றேன். அவர் சூழல் இருக்கையில் கிட்டத்தட்ட சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தார். அப்படி பார்த்தவுடனேயே இவரிடம் பேசி பிரயோஜனமில்லை என்று உணர்ந்தேன்.சோர்வாகி எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன். காரக் கடலை விரித்த பேப்பரில் சிதறி கடந்தது. ஒன்றிரண்டை எடுத்து வாயில் போட்டேன். சந்துரு அண்ணா மெதுவாக எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தார் . சட்டையை சரி செய்தார். தலைமுடியை விரல்களால் சரி செய்தார். மெல்லமெல்ல சமநிலைக்கு வந்தார். பின் என்னிடம் ” இன்னும் போலையாடா, போன்ல கூப்பிட்டே இருந்தா , அவளுக்கு பயந்து சுவிட்ச்ஆப் பண்ணி வச்சிருக்கேன், போடா தம்பி ” என்று கெஞ்சும் தொனியில் சொன்னார்
“ண்ணா, எப்பாவதுனா பரவால்ல, அடிக்கடி இப்படி போக சொல்லாதீங்க, நம்மனால இதெல்லாம் முடியாது ” என்றேன். உண்மையில் சந்துரு அண்ணா இப்படி ஆரம்ப காலங்களில் சொல்லும்போது, அவரிடம் வெளிப்பேச்சுக்கு மறுத்தாலும் உள்ளுக்குள் ஆர்வம் கொண்டு போவேன். கவிதா அக்காவிடம் பாக்கெட் மணி அடிக்க முடியும். பணம் இல்லை என்று இதுவரை சொல்லியதில்லை. நானும் பெட்ரோல் மற்றும் தினசரி செலவு அல்லது ஏதாவது புக் வாங்க என அளவாகவே வாங்கிக்கொள்வேன். அப்புறம் ஒரு பெண்ணை வெளியே அழைத்துச் சொல்கிறோம், பெண்ணுடன் சுற்றுகிறோம் எனும் விஷயமும் உள்ளுக்குள் இருந்தது. மேலும் அவரின் அருகாமையை விரும்பினேன். அதை கவிதா அக்காவும் அறிவாள். ஆனால் ஒருமுறை கூட அவள் பேச்சில் முகத்தில் அது வெளிப்பட்டதில்லை. ஆனால் அது நிகழும் ஒவ்வொரு முறையும் அதை தெளிவாக உணர்வேன். பிறகு இவை என் மன மயக்கமோ என்று கூட தோன்றும். நாளாக நாளாக இப்படி வெளியே கூட்டிச் செல்வதை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணங்கள் வந்துவிட்டது, ஒருமுறை இப்படி கூட்டிச் செல்லும்போது வழியில் அப்பா என்னைப் பார்த்தார் ! இனி இது போதும் என்றுஎண்ணி நிறுத்தவே சந்துரு அண்ணாவிடம் பேசி விட நேராக அவரைப் பார்க்க வந்தேன்.
” தம்பி, நான் போனா குடிச்சது கண்டுபிடிச்சுடுவா, அப்பறம் திட்டியே கொன்னுடுவா, ப்ளீஸ்டா, இந்த ஒருமுறை மட்டும் போ ” சந்துரு அண்ணா இப்படிச் சொல்ல, அவர் மேல் கடுப்புதான் வந்தது.
” காலைலயே ஏன்னா அடிக்கறீங்க, இப்படி அடிச்சு படுத்தா வேலை எப்படி உருப்படும், உண்மைல ரொம்ப வருத்தமா இருக்குண்ணா ” என்றேன். அவர் முகம் வாட்டம் கொண்டது, ” இல்லடா, விட்டுடலாம்னு தான் பாக்குறேன், காலைலயே எந்துருச்சா பிரச்சனைகதான் நினைவுக்கு வருது, இத குடிச்சாத்தான் கொஞ்சம் நிம்மதி, பாத்துக்கலாம் னு தோனுது, அடிக்கலைனா பயம் வந்துடுதுடா “
” அண்ணா, இப்படி தண்ணி போடறதுல ஒன்னும் முடியாது, எப்படி பிரச்னை இருக்கோ அப்படியேதான் இருக்கும், வேணும்னா அதிகமாகுமே தவிர கம்மியாகாது ” சொல்லிக் கொண்டிருக்கும் போதே இதெல்லாம் இவரிடம் சொல்வது வீண் என்று தோன்றியது. உண்மையில் காரணம் எல்லாம் சும்மாதான், காலையில் ஆறு மணியிலிருந்தே குடிக்கக் கூடியவர், போதை இறங்க இறங்க ஏற்றிக் கொண்டிருப்பார். அவர் கைக்கு வரும் எல்லாக் காசும் அவர் காசு என்று நினைத்து செலவழிப்பார். கிட்டத்தட்டகவிதா அக்காவின் முழு நகையையும் தொழிலுக்கு என்று சொல்லி வாங்கி இதில்தான் செலவழித்தார். காலையிலேயே வாக்கிங் என்ற பெயரில் என்னையும் இழுத்துக் கொண்டு டாஸ்மாக் போவார். டாஸ்மாக் மூடியிருக்குமே தவிர ஸ்னாக்ஸ் விற்கும் பாரில் விடியற் காலையிலேயே சரக்கு கிடைக்கும். 50 ரூபாய் அதிகம், ஆனால் முந்திய நாள் மீதியான கிழங்கு, கடலை, பழத் துண்டுகளை ஒன்றாக கலந்து பெரிய தட்டில் வைத்து விடுவார்கள். அருகில் தண்ணீர்கேன்னும். இரண்டும் இலவசம். அந்த 50 ரூபாய் இதில் நேராகி விடும். அப்போது ஆரம்பிப்பவர் இரவு வரை தொடர்வார். தனியாக, நண்பர்களுடன் என்று போய் கொண்டே இருக்கும், டவ்ன் பஸ் போல. கவிதா அக்காவிற்கு சந்துரு அண்ணன் குடிப்பார் என்று தெரியும், ஆனால் இந்த அளவு மூழ்கியது தெரியாது.
” சரிண்ணா, இதுதான் கடைசி, அடுத்த முறை கண்டிப்பா போ மாட்டேன் ” என்று சொல்லி அவர் பக்கம் வந்து மேல் பாக்கெட்டில் கைவிட்டு 200 ரூபாய் எடுத்துக் கொண்டேன். ஏதோ சொல்ல வந்தவர் பிறகு ஒன்னுமில்லை என்பது போல முகத்தில் காட்டினார். அவர் கேபின் விட்டு கிளம்பும் போது ” பாத்து பொறுமையா போடா ” என்றார். நான் வெளியே வந்து பைக்கை எடுத்தேன்.
கோவில் வாசலில் பைக்கை நிறுத்தினேன். கவிதா அக்கா இறங்கி கொண்டாள். ரிதீஷை தூக்கி கீழே இறக்கி விட்டேன். புடவையை ஒழுங்கு செய்தவள், வண்டியிலேயே அமர்ந்திருந்த என்னைப் பார்த்து ” நீயும் வாடா ” என்றாள். ” நான் வரல” என்றேன். ” சும்மா வாடா ” என்று சொல்லிய படி என் பதிலை எதிர்பார்க்காமல் நடந்தாள். நான் எழுந்து சென்று கூட நடந்தேன். அர்ச்சனைத் தட்டு வாங்கி கோவில் உள்ளே சென்றோம். கவிதா அக்கா “மாமாக்காக வேண்டியிருக்கேன், அவரு கஷ்டப்படறது என்னால பார்க்க முடியலடா ” என்றாள். அதைக் கேட்கக்கேட்க வெறுப்பு வந்தது. அக்கா தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.
” மாமா நல்லவருடா, கூட இருக்கற ஆளுங்கதான் அவரை கெடுக்கறாங்க, அந்த கணேசன், அவன்தான் இவரை குடிக்க வைக்கறது, ஆரம்பத்தில் எப்படி இருந்தாரு தெரியுமா ” பேசுவதை காதில் வாங்காதது போல கோவில் தூண்களைப் பார்த்தபடி, கூட நடந்து கொண்டிருந்தேன். தூண்கள், சிற்பங்கள் அக்காவின் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றியது. அப்படி தோன்றவும் திக்கென்று இருந்தது. சுற்றிப் பார்த்தேன். 20 பெண்கள் வரை இருந்தார்கள். வருகிற எல்லோரின் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்தது என்று தோன்றியது. அப்படியானால் தினமும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது, நடை சாத்தும் போதுதான் ஓய்வு கிடைக்கும், பாவம் இவைகள் என்றெண்ணினேன். இந்த எண்ணங்கள் தோன்றத்தோன்ற இன்னொரு பக்கம் இவை என் மன மயக்கங்கள் என்றும் தோன்றின. அக்கா பேசுவதை நிறுத்தவே வில்லை ” எங்க சொந்தத்திலேயே இவரை மாதிரி அமைதியானவர் யாரும் கிடையாது, தாசு பெரியப்பா , சின்னசாமி தாத்தா எல்லாம் மாமா மேல அவ்வளவு மதிப்பு வச்சுருந்தாங்க, சுத்த தங்கம் அவன்னு சொல்லுவாங்க, தொழில்ல விழுந்த அடி அவரை இப்படி ஆகிடுச்சு, போதாததுக்கு இந்த குடிகாரனுக சவகாசம் அவரையும் குடிக்க வச்சுடுச்சு “. ஒரு கட்டத்தில் பேசுவதை கேட்க முடியாமல் பொறுமை இழந்தேன். ” அக்கா, இப்ப சாமி கும்பிடுவோம், வெளில போய் பேசிக்கலாம். ” என்றேன். கோவிலின் கருவறையினுள் அம்மன் நீல ஆடை உடுத்தி இருந்தாள், முக அலங்காரம் குழந்தைக்கு வைத்து தீட்டுவது போல அப்பி வைத்திருந்தார்கள். அம்மன் புன்னகைப்பது போல தோன்றியது. அது தன்னையே எண்ணி நொந்த புன்னகையோ என்றெண்ணவே மனதினுள் சிரிப்பு வந்து விட்டது. அர்ச்சகர் ஒல்லியாக எலும்புகள் தெரிய இருந்தார், அம்மனிடம் காட்டிய தட்டுடன் வந்தார், நாங்களும் சிலரும் மட்டுமே நின்றிருந்தோம். அக்கா தட்டில் பணம் வைத்தாள் . அம்மனிடம் வேண்டுதலில் உருகி கொண்டிருந்தாள். தீபத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். திருநீறு பெற்றாள். நான் காசு போடலாமா வேண்டாமா என்று மனதிற்குள் குழம்பி கடைசியில் போடாமல் தீபம் மட்டும் ஒற்றி திருநீறுக்காக கைகளை நீட்டினேன்.
வெளியே வந்து விரிந்திருந்த அரசமரத்தின் கீழ் கல் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். சற்று தள்ளியிருந்த இன்னொரு அரச மரத்தடியில் பிள்ளையாரும் அவருடைய அர்ச்சகரும் அமர்ந்திருந்தார்கள். கோவிலினுள் இருந்த புழுக்கம் இங்கு இல்லாமல் காற்று வீசிக் கொண்டிருந்தது. பிரசாதம் வாங்கி மூவரும் பகிர்ந்து சாப்பிட்டோம். பூஜை தட்டில் இருந்த அரைத்தேங்காய்யை எடுத்து கல்லில் தட்டி, உடைத்து துண்டுகளாக்கி அதில் ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டேன். அக்கா மீண்டும் அதையே பேச ஆரம்பித்தாள்
” மாமா மட்டும் சரியாகிட்டார்னா, எல்லாமே சரியாகிடும் ” நான் கோவிலுக்குள் சொல்ல நினைத்ததை, சில நாட்களாக சொல்லிவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்ததை இப்போது சொன்னேன். ” அக்கா, நான் சில நாளா உங்ககிட்ட சொல்லணும்னு நினச்சேன் , உண்மை நிலவரத்தை நீங்க புரிஞ்சுக்கணும்கிறதுக்காக சொல்றேன் “, ” அண்ணனை யாரும் கெடுக்கல, அவரு ஆரம்பத்தில இருந்தே குடிகாரர்தான், சாதாரணமா இல்ல, முழு குடிகாரர், காலைல வாங்கிங் போறதே சரக்கடிக்கத்தான், அவருக்கு தொழில் ஆர்வம் எல்லாம் இல்லை, சும்மா கம்பனியை உருட்டிட்டு இருக்கார், அவ்வளவுதான், அவர் சரக்குல இருக்கறனாலதான், வெளிய இருக்கேன்னு சொல்லி என்னை அனுப்பறார் ” நான் சொல்லும்போது அக்காவின் முகம் பிரமை கொள்வது போல இருந்தது. கண்களில் நீர் வர ஆரம்பித்து விட்டது. ” அக்கா, அவரு திருந்தனம்னா அது அவர் கைலதான் இருக்கு, இது தெரியாம, அவரு நல்லவரு, நேரம் எங்களுக்கு இப்ப சரியில்லைனு சொல்லி கோயில் கோயிலா அலையறதில்லாம் ஒரு பிரயோஜனம் இல்ல ” அக்கா எதுவுமே பேச வில்லை, அழுது கொண்டிருந்தார். பிறகு கிளம்பினோம், வீடு வரும் வரை ஒரு சொல் கூட பேச வில்லை.
ஒரு வாரம் கடந்திருக்கும், சந்துரு அண்ணா அழைத்து ” வீட்டுக்கு வாடா, கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம் ” என்றார்,
ஹாலில் ரிதீஷ் இந்த முறை வேறு மூலையில் அமர்ந்து போன் நோண்டி கொண்டிருந்தான். இருக்கையில் அமர்ந்து கொண்டேன், அவனிடம் ” அப்பா எங்கடா ” என்றேன். என் பேச்சு குரல் கேட்டு உள் அறையில் இருந்து சந்துரு அண்ணன் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டார், அக்கா சமயலறையில் இருப்பதை சத்தங்கள் சொன்னது, ஆனால் அவள் வெளியே வரவே இல்லை. ரவி அண்ணன் ” சரி வா கிளம்புவோம் ” என்று எழுந்தார், வாசலில் இருந்த கார் நோக்கி சென்றோம், கார் திறக்கும் நேரத்தில் வாசலில் அக்கா குரல் திடீரென கேட்டது, நிமிர்ந்து பார்த்தேன், அக்கா என்னை பார்த்து தவிர்க்க விரும்பும் முகத்தோடு ” அவரை தொந்தரவு பண்ணாத ” என்று சொல்லி சட்டென முகம் திருப்பி ரவி அண்ணாவை நோக்கி ” ஏன் தனியா போக மாட்டீங்களா ” என்று சொல்லி பதிலுக்கு காத்திருக்காமல் உள்ளே வெடுக்கென சென்றாள். ரவி அண்ணா என்னிடம் ” ஏன்டா ஏதாவது சண்ட போட்டையா அவகிட்ட ” என்றார், நான் காரின் திறந்த கதவை அடைத்து அவரிடம் ஒன்றும் சொல்லாமல் என் பைக் எடுத்து கிளம்பினேன்.