பணியாட்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று கொண்டிருந்தனர். வாசலில் வாசல் காப்பாளர் உள்ளே வரும் ஒவ்வொருவரையும் முகம்பார்த்து நின்று கொண்டிருந்தார்.  அதே கிழவர்தான், தலைமுடி மற்றும் மீசையை கருப்பு மைக்குள் முக்கி நடுவயது ஆளாக வேடமணிந்து அதை அனுபவித்து நடித்து கொண்டிருந்தார். மேலும் இவருக்கு இந்த வாட்ச்மன் சீருடை கொஞ்சம் கம்பீரத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. என்னை முன்பே பார்த்து விட்டார். ஆனால் நான் ஜாக்கிரதையாக வாசல் அருகில் வராமல் கொஞ்சம் தள்ளி இருசக்கர வாகனத்தை நிறுத்தி நிறுவனத்திற்கு சம்பந்தம் இல்லாதவன் போல சாலையில் வரும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை போல பாவனை செய்து கொண்டிருந்தேன்.

ஒரு வயதான குண்டுப்பெண்மணி நடந்து செல்வதை போல காலம் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.  செல்பேசி எடுப்பதும் பார்ப்பதும் வைப்பதுமாக நேரத்தை நகர்த்த முயன்று கொண்டிருந்தேன். ஒரு வழியாக நேரம் 10 மணியை எட்டியதும் மனதினில் தெம்பினை வரவழைத்துக் கொண்டு நிறுவனத்தின் வாசல் நோக்கி வந்தேன். அந்த கிழக் காவலன் ஆச்சிரியமாக ஏதும் எதிர்மறையாக பேசாமல் வருகை பதிவேட்டில் எழுதி கையெழுத்து வாங்கினான். பிறகு “எம்.டி இன்னும் வரல” என்றான்.

“பரவாலைங்க, அவர் வர வரைக்கும் வெயிட் பண்றேன்” என்று சொல்லி மறுமொழியை
சொல்வதற்கு வாய்பளிக்காமலேயே ரிசப்ஷன் அறை நோக்கி நடந்தேன்.

நான் இந்த பனியன் கம்பெனி நிறுவனத்திற்கு பனியன் தயாரிப்பிற்கு பயன்படும் பிரின்டிங் ஸ்டிக்கர்களை அனுப்பித்தரும் சிறு நிறுவனத்தை நடத்தி வருபவன். என் நிறுவனத்தை நிறுவனம் என்று கூட சொல்ல முடியாது. என்னோடு சேர்த்து 4 பேர்தான் மொத்த பணியாளர்கள். என் தனிப்பட்ட வேலைப்பளுவின் அளவை வைத்து பார்த்தோமானால் என் நிறுவனத்தில் 7 பேர் பணி புரிகின்றனர் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்தது என் நிறுவனம், என் நிறுவனத்தின் முக்கிய வருவாயே இந்த பாழாய்ப்போன பனியன் கம்பெனிதான்.  தொடக்கத்தில் இந்த நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கல் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.  யாரும் எதிர்பாராமல் சட்டெனெ பரவும் காட்டுத்தீ போல, சுதாகரித்துக் கொள்வதற்கு முன்பாக பிரச்னை வளர்ந்து நின்றுவிட்டது. மொத்தம் 3லட்சம் வரை இந்த நிறுவனம் எனக்கு பாக்கி வைத்து விட்டது.  சேர்த்து ஒன்றாக கைக்கு வந்து விடும் என்று எண்ணி காத்திருந்து ஏமாந்து சோர்ந்து விட்டேன்.  இப்போதும் தராமல் அலைக்கழிக்கிறார்கள். கடந்த 4 நாட்களாக நாள்முழுதும் இங்கேயேதான் இருக்கிறேன்.

 காண வேண்டிய நபரை, அந்த எம்.டி எனும் மூல தெய்வ தரிசனத்தை இன்னும் காண
முடிய வில்லை.

வரவேற்பு அறையில் இருந்த பெண் முகமலர்வின் வழியாக என்னை வரவேற்றாள்.

“இன்னைக்கு எம்.டி வந்துடுவாருனு நினைக்கிறேன்” என்று சொன்னாள்.  மனதில் இருந்த பாரம் குறைவதை போல உணர்ந்தேன். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக இங்கு வந்து செல்பவன் நான்,  இந்த பெண்ணும் நான் வந்த புதிதில் இருந்தே இருந்து வரும் பெண்தான்,  முன்பெல்லாம் 5 நிமிடம் கூட இங்கு நிற்க மாட்டேன்,  இப்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

யோசிப்பதை விடுத்து அறையை வெறுமனே சுற்றி நோட்டமிட்டேன், பிறகு அறையில் வலது மூலைக்குச் சென்று நீர் குடித்து அதன் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டேன். வரவேற்பு மேசையில் பிரிக்காமல் கிடந்த அன்றைய தினமலரை எடுத்து
பிரித்து பார்த்தேன்.  படிப்பது போரடித்து . நாளிதழை முன்பு இருந்ததை போலவே மடித்து வைத்தேன். ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருக்க, மனதிற்குள் மீண்டும் வரவேண்டிய பணம், அது பெற்றுதள்ளிய பிரச்சனைகள் எல்லாம் ஞாபகத்தில் வந்து நின்று பேருரு ஆனது.

அந்த பெண் எப்போதும் போல தன் முன்பு இருந்த கணினிக்குள் மூழ்கி விட்டிருந்தாள்,  பேன் சுற்றும் சத்தம் மட்டும் கேட்டு கொண்டிருந்தது. நான் எம்.டி யின் வருகையை எதிர்பார்த்து வாசலையும் சுவரிலிருந்த கடிக்காரத்தையும் மாறிமாறி பார்த்து கொண்டிருந்தேன். செல்பேசியை பாக்கெட்டிலிருந்து எடுக்க கூடாது என்று வரும் முன்னயே சபதம் செய்து வந்திருந்தேன். அதை எடுத்து நோண்ட ஆரம்பித்து விட்டால் பிறகு இந்த சிக்கலை பற்றிய அழுத்தத்தை தற்காலிகமாக மறந்து விடுவேன். அது திரும்பவும் ஞாபகம் வந்து இரண்டு மடங்காக மாறி கழுத்தில் கால்வைத்து மிரட்டும் பூதம் போல பயமுறுத்தி கொண்டிருக்கும்.

வெளியில் வரும் வாகனங்களில் சத்தங்கள்,  எனக்கு எம்.டி ஆடி காரின் சத்தத்தை தனியாக உய்த்து உணர முடியும். அன்னையின் வருகை பார்த்து காத்திருக்கும் குஞ்சுப்பறவையை போல!

எம்.டி அறை மற்றும் அக்கௌன்ட்ஸ் அறை எல்லாமே இந்த வரவேற்பு அறைக்குள் உள் சென்று போகும்படியாகத்தான் அமைத்திருந்தது.  அக்கௌன்ட்ஸ் அறைக்கு செல்பவர்கள் ஒவ்வொருவரும் என்னை திரும்பி பார்த்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது ஒருவித அசௌகர்யத்தை எனக்களித்தது. ஆனால் பாக்கித்தொகையினை மட்டும் ஞாபகத்தில் வைத்து கொண்டால் போதும், எந்த அவமானமும் ஒரு பொருட்டாக தோன்றாது. இன்று எம்.டி யிடம் குறைந்தபட்சம் என்று உறுதியாக பணம் கிடைக்கும் என்ற உத்திரவாதத்தையாவது பெற்று விட வேண்டும் என எனக்குள் சபதம் செய்து கொண்டேன். கூடவே சொட்டானிகரை சகோதரபகவதிகளின் இருவர் முகமும், மார்பும் ஞாபகம் வந்தது, எல்லாம் நல்லப்படியாக நடந்து முடியவேண்டும் என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டேன்.

நேரம் கடிகாரம் பார்க்கும்  சமயங்களில் நின்று கொண்டிருக்கும் குதிரை போலவும், பார்க்காத சமயங்களில் பறக்கும் குதிரை போலவும் போய் கொண்டிருந்தது.  நேரம் ஆக ஆக எனக்கு பதட்டம் கூடி கொண்டிருந்தது. அந்த பெண்ணிடம் ” இன்னும் சார் வரலீங்களா ” என்றேன்,  அவள் வரவில்லை என்பதை சிறு தலையாட்டல் வழியாக சொன்னாள் .

நல்ல கலையான கறுப்பழகி,  எப்போதும் சாந்தமாகவே இருக்கும் இவள் முகத்தை பார்த்து கொண்டிருந்தால் போதும், கோபம் கொள்ளும் மனநிலையே நமக்கு வராது, அந்த தலையாட்டலுக்கு பின் லேசாக சிரித்தாள், கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் என்பதை சொல்லி வேண்டிக்கொள்ளும் புன்னகை அது.  சற்று நேரம் எல்லாம் மறந்து அவளை ரசித்து கொண்டிருந்தேன், மூக்கு, வாய், கழுத்து, என. நான் பார்த்து கொண்டிருந்ததை காணாமலேயே உணர்ந்து விட்டாலோ என்னவோ சற்றென்று திரும்பி என்னை பார்த்தாள். நான் நாணி சட்டெனெ தலைதிருப்பி வேறு எங்கோ பார்ப்பது போல பாவனை செய்தேன். அங்கு கம்பெனி லோகோ சுவரில் வரைய பட்டிருந்தது. அதை பார்க்க திரும்பவும் பாக்கிப்பணம் அதன் பிள்ளைகளான அதனால் உருவாகி நிற்கும் சிக்கல்கள் எல்லாம் தலை விரித்து நிற்கும் பாம்பு போல ஞாபகத்தில் வர பதட்டத்தின் மடியில் போய் அமர்ந்து கொண்டேன். இவ்வளவு பதட்டதிலும் அவள் நல்ல அழகி என்ற எண்ணமும் கூடவே வந்து கொண்டிருந்தது!

வாசலில் வேகமாக வந்து நிற்கும் வண்டிகளின் சத்தம் கேட்டது.  எழுந்து சென்று வெளியே போய் பார்த்தேன். இரு பெரிய கார்கள்,  ஏலெட்டு பேர் இறங்கிகொண்டிருந்தனர்.  அதில் பாதிக்கும் கடைநிலை அரசியல்வாதிகள் என்பது அவர்களின் தோற்றங்களிலேயே தெரிந்தது. கூட்டத்திற்கு முன்னால் வந்து கொண்டிருந்த ஒரு முகத்தை மட்டும் அடையாளம் காண முடிந்தது, அவரும் என்னை போன்ற ஒரு சப்ளையர்தான்,  பனியனுக்கு முன்பக்கத்தில் வரும் வண்ண அச்சுக்களை
அடித்து தருபவர்,  இவரது அச்சு நிறுவனம் பெரியது, 60 பேர் வரைக்கும் வேலை செய்வார்கள்,  இவருக்கும் பாக்கி தொகை இருக்கும் போல, அதுதான் வந்திருக்கிறார்,  இவர் உள்ளூரில் இருக்கும் வலுவான சாதி பின்னணியை கொண்டவர்,  அதுதான் இப்படி அரசியல் குண்டர்களை உடன் கூட்டி வந்திருக்கிறார்,  அப்போது என்னை யோசித்து கொண்டேன், நான் வேறு மாநில பின்னணி கொண்டவன்,  அதுவும் தாண்டி இங்கு நான் பழகி கொண்டிருக்கும் ஆட்கள்’ பிரச்னை கூட வா ‘என்று அழைத்தால் போதும் அந்த நொடியிலேயே மாயமாகி விடுவார்கள்,  என் மிரட்டல் அஸ்திரம் என்பதெல்லாம் அழுது கண்ணீர்விட்டு கெஞ்சும் வகைதான். 

வந்தவர்கள் அறைக்குள் வந்து நிறைத்து நின்றிருந்தனர்,  அந்த பெண் பயத்தில்
எழுந்து நின்று கொண்டிருந்தாள்,  அச்சு நிறுவன ஆள் மிரட்டல் தொனியில் ”எம்.டி
எங்க ” என்று கேட்டு கொண்டிருந்தான்.  பின் எதேச்சையான ஒரு கணத்தில் நான் இருப்பதை உணர்ந்து திரும்பி என்னை ஒரு புழுவை பார்ப்பதை போல பார்த்தான். 

அவருடன் வந்தவர்கள் உரத்த குரலில் கத்தி கொண்டிருந்தனர்,  வந்திருந்த கூட்டத்தில் இருந்த ஒரு தடியன் இருக்கை ஒன்றை காலால் மிதித்து கீழே தள்ளினான், அது ஓசையை எழுப்பி விழுந்தது,  அந்த அச்சு நிறுவன ஆள் அவனிடம் வேண்டாம் என்பதை போல சைகை காட்டினான், சரியாக அந்த நேரத்தில் வெளியில் ஒரு கார் வரும் சத்தம் கேட்டது, என்  மனம் உடனே உணர்ந்து கொண்டு விட்டது, அது எம்.டி யின் கார்தான், அப்போது   அவர் இந்நேரம் வராமல் இருந்திருக்கலாமே என்று எண்ணிக்கொண்டேன்.

எப்போதும் எங்கும் இப்படியான தனக்கு தானே ஆப்பை பிடுங்கி கொள்ளும் நிகழ்வுகள் மட்டும் மிக சரியான விதத்தில் மிக சரியான தருணத்தில் நடந்து விடும், இப்போது இந்த எம்.டி க்கான துர்நேரம், அவரே வந்து சிக்கி கொண்டுவிட்டார், உள்ளே வந்த எம்.டி யின் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது 

அச்சு நிறுவன நபரை நோக்கி எம். டி ” அதான் பணம் செட்டில் பண்ணிடுவேன் னு
சொன்னேன்ல,  எதுக்கு இப்படி ஆட்களை கூட்டிட்டு வந்து ரவுடிசம் பண்றீங்க, என்ன
மிரட்டறீங்களா? ” என்றார்.  அச்சு நிறுவன ஆள் மிக நிதானமான குரலில் ” ஆறு மாசம்
அலைஞ்ச பிறகுதான் இப்படி ஆட்களை கூட்டிட்டு வந்து நிக்கறேன்” என்றான்,  எம்.டி
பலவீனமான குரலில் ” எனக்கு டைம் கொடுங்க,  நானும் பணத்துக்குத்தான் அலைஞ்சுட்டு இருக்கேன் ” என்றான்.  அச்சு நிறுவன ஆள் ” உங்களை இனிமேலும் நம்பறதா இல்ல” என்றான், பின் அவனே கொஞ்சம் தணிந்து “சரி எனக்கு ப்ளாங்க் செக் கொடுங்க,  நீங்க பணம் தந்த பிறகு திருப்பி கொடுத்துடறேன், அதும் ஒரு  சத்துக்குள்ள கொடுக்கறதா இருந்தா ” என்றான்,  எம்.டி சில நொடிகள் சோகத்துடன் யோசித்தவர் பின் ஒரு வேகத்துடன் தன் அறை நோக்கி நடந்து சென்று இரு நிமிடம் கழிந்து வந்து நின்று செக்கினை அச்சு நிறுவன ஆளிடம் கையில் கொடுத்தார், அதை வாங்கிய அச்சு நிறுவன நபர் ” கடைசியா ஒரு முறை உங்களை நம்பறேன்” என்று சொல்லி வெளியேறினார்,  அவரோடு அவர் கூட வந்த கூட்டமும் அவரோடு வெளியேறியது,  இப்போது நானும் அந்த பெண்ணும் எம்.டி யும் மட்டும் வரவேற்பு அறையில் நின்று கொண்டிருந்தோம். எம்.டி பலவீனமான குரலில் ஏதோ சொல்லவந்தார். நான் அவர் சொல்லும் முன்பே மறித்து”பரவால்ல , எனக்கு மெதுவா கொடுங்க சார் ” என்று சொல்லி பதிலை எதிர்பார்க்காமலேயே திரும்பி வெளி வாசல் நோக்கி நடக்க துவங்கினேன்.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *