“சும்மா நின்னுட்டு இருக்காம  வேலையை பாருங்க ”  என்று கத்தினான்  பாஸ்கர். பேச்சை முறித்து  வேலையில் ஈடுபட்டோம். இரண்டு நிமிடம் பேசவோ, நின்றிருக்கவோ  விட மாட்டான் ” சம்பளம் கேட்டு வாங்க தெரியுதுல்ல, வேலையை செய் ”  என்று கத்துவான். ஆம் ,அவனுக்கு பேச தெரியாது. கத்த மட்டுமே தெரியும்.

பனியன் துணிகளில்  அச்சு அடிக்கும் நிறுவனம் இது. நான் சேர்ந்து 10 வருடம் மேல் ஆகி விட்டது. ஒரு விபத்தாக  தற்காலிக தேவைகளை சரி செய்ய வேண்டி உள்ளே வந்து சேர்ந்தேன். இப்போது வரை தப்பிக்க இயல வில்லை. கடன் என்னை நிரந்தர  கைதியாக  இதில் சிக்க வைத்திருக்கிறது. எப்படியாவது கடன் அடைத்து  விட வேண்டும் என்று கூடுதல் நேரங்கள்  வேலைகள் செய்வேன். ஆனால் ஒவ்வொரு பிரச்சனையாக புதிது புதிதாக முளைக்கும், அல்லது நானே உருவாக்கி கொள்வேன், அதை சரிக்கட்ட  மேலும் மேலும் கடன் வாங்குவேன், இது ஒரு நிற்காத  சுழல் பாதை.

என் பணியும்  கூட சுழல் ஆச்சு எந்திரத்தில் செய்வதுதான், இந்த எந்திரம் ஒரு வகையில் காந்திய எந்திரம் என சொல்லலாம், ஒரு எந்திரத்தில் 12 கைகள் இருக்கும் அதன் மீது துணிகள்  வைப்பதற்கான தட்டுகள், அதன் மேலே 12 கைகள், அந்த கைகளில் அச்சு தட்டுகள் இருக்கும், இரண்டு 12 கைகளும் ஒரு அச்சில்  சுற்றுவன, ஒரே சமயத்தில் 12 தட்டுகளில் துணிகளை வைக்கலாம், ஒரு துணியில் 12 வண்ணங்கள் வரை கொண்டு வரலாம், எவ்வளவு வண்ணங்கள் தேவையோ, அவ்வளவு கைகள் அருகில் நின்றிருப்போம், சுழல  சுழல நாங்கள் துணி இருக்கும் தட்டின்  மீது அச்சு தட்டினை வைத்து வண்ணம் கொண்டு வந்திருப்போம், முடிவில் எல்லா வண்ணங்களும் இணைந்து உருவம் வந்து விடும் , கைகளால்தான்  சுற்றுவோம்  , எல்லோரும் ஒரே நேரத்தில்  அச்சினை வைத்து தேய்த்து  முடித்தவுடன் நகர்த்துவது என .

இந்த சுழல் எந்திரங்கள் இல்லாமல் நீள் டேபிள்கள்  வழியாகவும் அச்சு கோர்ப்பு  நடக்கும், டேபிள்கள்  சுற்றாது  என்பதால் நான் அதை சுற்றுவோம். எனக்கு டேபிள்களில் சுற்றுவதுதான்  பிடிக்கும் . சேர்ந்த போது இந்த அச்சு ஓவியங்களை, பெயர் வடிவங்களை  பார்த்து பிரமிப்பில்  ஆழ்வேன், அப்போதெல்லாம் பாஸ்கர் ” என்னடா  வேடிக்கை பார்த்துட்டு நின்னுட்டு இருக்கே”  கத்துவான். அதை கேட்டு கேட்டு வடிவங்களை பார்க்கும் ஆர்வமே  இல்லாமல் போய் விட்டது. எப்போதாவது  சில ஓவிய வடிவங்கள் நம்மை நின்று கவனிக்க வைக்கும். அது நாகரீக உடையும் தோரணையும்   கொண்ட ,தீ நிற கேசம் கொண்ட ஆங்கில சிறுமியாக இருப்பாள். அவற்றினை  பார்த்தால் எனக்கு என் மகள் ஞாபகம் வந்து விடும். அவளை கடைசியாக மூன்றதில் பார்த்தத, இப்போது பூப்பெய்திருப்பாள் .

என் சொந்த ஊர் கேரளத்தில் குருவாயூர்  செல்லும் வழியில் இருக்கும் ஒரு சிற்றூர். மனைவி மிக நல்லவள், மென்மையானவள், அவளை நினைக்கும் போதெல்லாம் தொட்டா சிணுங்கியும்  ஞாபகத்திற்கு  வரும், ஏனெனில் சின்ன சலனம்  கூட அவளை நிலை குழைத்து  விடும். கண்களில் நீர்கோர்த்து  உள்ளறைக்குள் போய் மூலையில் அமர்ந்து கொள்வாள். அதனாலேயே எந்த துன்பகரமான  விஷயங்களையும் சொல்லமாட்டேன்  , ஒரு வகையில் அதுதான் நான் செய்த பெரிய தவறும் கூட .

அப்போது நான் ஈரோட்டில் இருந்து லுங்கிகளை வர வைத்து ஊரில் இருந்த கடைகளுக்கும், சுற்று ஊர்களிலுள்ள  கடைகளுக்கும் அனுப்பி வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். பொது நோக்கில் இது சிறு வியாபாரம் என்றாலும் என் நோக்கில் அது மிக பெரிது. என் மொத்த சம்பாத்தியமும்  என் மனைவியின் ஆசை ஆசையான  சில நகைகளும்  அதில் தான் இருந்தது , பெரிய வருமானம் இல்லையென்றாலும்  அன்றாட செலவுக்கு கஷ்டம் வைக்காத  அளவிற்கு போய் கொண்டிருந்தது. முதல் அடி விழுந்தது சைலா துணி கடை மூடிய போது நிகழ்ந்தது. அவன் கடனாகி  ஓடி போய் விட்டான் என்று அதிகாலையில்  பாஸா போனில் அழைத்து சொன்னான் , பதறி அடித்து ஓடி பூட்டியிருந்த  கடை முன்னால் போய் நின்றேன். பிறகுதான் தெரிந்தது, அவன் மூன்று மாதமாக திட்டமிட்டு கடை பொருட்களை மாற்றி வெளியே விற்றுருக்கிறான், கடை நிர்மூலமாக கிடந்தது. ஆனால் அவன் ஏமாற்ற  கூடியவன் அல்ல.என் பணம் போனதை விட அவன் சூழல் என்னவோ  என நினைத்துதான்  வருந்தினேன், பிறகுதான் எனக்கு விழுந்த அடியை உணர்ந்தேன் , அது சிறு அடித்தான். ஆனால் அந்த ராசி  அதன் பிறகு நஷ்டமாகி  கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் இது வேண்டாம் என்று நிறுத்திய  போது எல்லாம் போய் கடனாளியாகி  நின்றிருந்தேன். அவள் வீட்டை காலி செய்து அம்மா வீட்டில் கொஞ்ச நாள் இருக்கலாம் என்றாள் .

எனக்கு மாமியாள் ரூபத்தில்  எதிரியை  உருவாக்கி வைத்திருக்கான் இறைவன் என்று அங்கு தங்கிய பிறகுதான் தெரிந்தது. திருமணம் ஆன சமயத்தில் அவள் என்னிடம் காட்டிய மரியாதையும் கவனிப்பும் அப்போதே உறுத்தியது , நான் வீழ்ந்து விட்டேன் என்பதை ஒவ்வொரு அசைவிலும்  அவள் ஞாபக படுத்தினாள் , வீட்டுக்கு வருவோரிடம், தன்னந்தனியாக  என புலம்பி கொண்டே இருப்பார், ஏதாவது மனநல சிக்கல் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இந்த புலம்பல்  குறைபாடுகளில்  அவளுக்கு ஆர்வம் இருப்பதை மெல்ல மெல்ல யூகித்தேன். அந்த சமயங்களில் எல்லாம் அவளில் இருந்த உற்சாகம் பீதியுற  செய்தது. மனைவி எது பேசினாலும் அழ ஆரம்பித்து விடுவாள். அவள் எப்போதும்  அழுவதற்காக காத்திருப்பதாக  தோன்றும். எனக்கு இருந்த பயம் அவளில் இருந்த துன்ப மனநிலை மகளிடமும் குடியேறுவதை  பார்த்துதான் , உற்சாகமாக எப்போதும் விளையாடி கொண்டிருந்தவள் இந்த வீடு வந்த பின்பு அதை முற்றிலுமாக  இழந்திருந்தாள் ,அவளை பார்க்கும் போதெல்லாம் கழுத்தில் கைவைத்து  காய்ச்சல் இருக்கிறதா என்று பார்ப்பேன் ,அப்போது மெலிதாக புன்னகைப்பாள் ,அப்படியே உயிர் போய்விடும் , என் மகள் அப்படியே என் அம்மா மாதிரி.

வெளியில் சென்றால் தெரிந்த  ஒவ்வொருவரும் தொழில் சார்ந்து கேட்கும் துக்க விசாரணைக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே  முடங்கி  கிடப்பேன். ஆனால் வீடு என்னை பைத்தியமாக்கி  விடும் என்று உணர்ந்தேன், தப்பிப்பதற்காக  வழி தேடி கொண்டிருந்தேன் . ஒருநாள் சாப்பாட்டை  மனைவி பரிமாறிக் கொண்டிருந்த போது மாமியார் சமயலறையில்  இருந்து கொண்டு செலவு அதிகமாகி கொண்டிருப்பதை  சொல்லி புலம்பினாள் , தட்டை தூக்கி வீசி எறிந்து, வெளியே வந்து எங்கே போவது என்றே தெரியாமல் திருப்பூர் வந்து சேர்ந்தேன் .

“சாப்பாட்டு  நேரம் உனக்கு இன்னும் முடியலையா”  என்று பாஸ்கர் கத்திய போது தன்னுணர்வு  பெற்று உள்ளே சென்றேன். சாந்தா  “ஏட்டா ,கனவுல மூழ்கியாச்சா”  என்று சிரித்தாள். அருகிலிருந்தவர்களும்  சிரித்தனர். இங்கு எல்லோருக்கும் நான் ஏட்டா தான். இவர்களிடம்தான்  நான் தமிழ் பேச கற்று கொண்டேன். இப்போது என்னால் தமிழில் வாசிக்கவும் எழுதவும் முடியும், என்னை மறக்க கிடைத்தவற்றில்  எல்லாம் ஈடுபட்டதால்  உருவான நல்ல விஷயங்களுள் இதுவும் ஒன்று .

சாந்தாவிற்கு அதிகம் போனால் 18 வயதுதான் இருக்கும். இங்கு அவள் சேர்ந்து 2 வருடம் ஆகிவிட்டது. மலர்ச்சியின்  ஊற்று இவள், இவள் இருக்கும் இடமே சிரிப்பாக  இருக்கும் இவள் எனக்கு குட்டி பூனையாக  தோன்றுவாள். இவள் நடப்பது எனக்கு அவள் தாவி கொண்டிருப்பது போல தோன்றும்.ஒரு  நிமிடத்திற்குள் பத்து முக பாவங்களை வெளிப்படுத்துவாள். அவளது இருநிறம்தான் அவளை ஜொலிக்க  வைக்கின்றது  என்று தோன்றும் ,வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில்  கேசத்தில்  மலர் அணிந்திருப்பாள். மெலிதான ஒரு கொலுசு அணிந்திருப்பாள். ஏதேனும் விசேஷ  நாள் என்றாள் சாரி அணிந்து வருவாள். சட்டென்று பெரிய பெண் ஆகிவிட்டாள் என்று தோன்றும் , அரிதாக தாவணி  அணிந்து வருவாள் , கன்னியாகுமரி  பகவதி இப்படித்தான் இருப்பாள் என்று நினைத்து கொள்வேன் .எப்போதாவது எனக்கு மதிய உணவு வீட்டில் இருந்து எடுத்து கொண்டு தருவாள், மற்றவர்கள் இதை பார்த்து கிண்டலடிப்பார்கள்  .

நான் வார சம்பளம் கிடைத்ததும் முதல் வேலையாக  ஓடிப் போய் ஏதாவது தின்பண்டம்  வாங்கி வந்து அவளுக்கு தருவேன். வேண்டாம் என சொல்லி பின் வெட்கப்பட்டு கொண்டே வாங்கி கொள்வாள். அருகில் யாரும்  இல்லையெனில் மெலிதாக எனக்கு மட்டும் கேட்கும் படி ‘ அப்பா ‘  என்று அழைப்பாள் .அதை உணர்ந்து அவளை திரும்பி நோக்கும் தருணமே  தரமாட்டாமல் நகர்ந்து சென்று விடுவாள் .

இவளை போலவே இங்குள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதத்தில் என்னையும்  அவர்களின் குடும்பத்தில் ஒருவராக  பார்த்தனர். இத்தனைக்கும் என் குடும்பம் பற்றி ,மகள் பற்றி , தொழில் நசிவு  பற்றி இங்கு எவரிடமும்  எதுவும் சொன்னதில்லை. பாஸ்கரை  தவிர .

வந்த சமயங்களில் இரவெல்லாம்  திரும்ப ஊருக்கு செல்ல திட்டமிடுவேன்  , காலை எழுந்தவுடன்  தூக்கத்துடன்  அதுவும் களைந்து போயிருக்கும் . ஊரில் எல்லோரும் தெரிந்தவர்கள் . நான் தப்பி வந்த சில நாட்களில் நான்தான்  அங்கு தலைப்பு செய்தியாக இருந்திருப்பேன். மீண்டும் அங்கு சென்று நாணி நிற்க மனம் வர வில்லை. மேலும் மாமியாள் ,அந்த துர்முகி  யை நினைத்தாலே  குமட்டல் வந்து விடும். மனைவியை நினைத்தாலே மனம் நடுங்கி விடும். எப்போதும் கருவறை விட்டு இறங்கி வராத தெய்வம் அவள் சிறுமிகளைக் காணநேரிடும்போதெல்லாம் அவர்களில்  என் மகளை தேடுவேன். சிறுமியாக, வளர்ந்து நிற்கும் பெண்ணாக, நாகரீக உடை உடுத்தியவளாக, காதலனுடன்  சிணுங்கிச் செல்பவளாக  என லட்சம் வகைகளில்  அவளை கற்பனை செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த வாழ்க்கை சுழல் விட்டு தப்பி வேறு எந்த உலகத்தில் அவளை காண வேண்டும் என்று ஏங்குவேன். அதற்காக ஒவ்வொருநாளும்  கடவுளிடம்  பிராதிப்பேன்.  அது நடக்காது என்று தெரிந்த  பின்பும்.

நேற்று இரவு என் ஊர்காரனை  டாஸ்மாக்கில்  பார்த்தேன். அவன்தான் என்னை அடையாளம் கண்டு வந்து பேசினான். நான்தான் என்று தெரிந்தவுடன்  கட்டிப்பிடித்து அழுதான். இப்போது வரையும் அவ்வப்போது ஊருக்கு போய் வருவதாக சொன்னான். அவனுக்கு குடும்பம் இல்லை , ஊரிலேயே  தனியாகதான்  இருந்தான். இங்கு திருமணமான பெண் ஒருவளுடன் உறவிருப்பதாக சொன்னான். அவன் மேலும் இரு விஷயங்களை சொன்னான்.

நான் ஊரை விட்டு ஓடி வந்த சில மாதங்களில் என் மனைவி நோயுற்று  இறந்து விட்டாள். சமீபத்தில் என் மகளுக்கு திருமணம் நிகழ்ந்தது.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *