“பொன்னுகுட்டி எழுந்திருடா , இன்னைக்கு அப்பா வரும் போது சுந்தரகுட்டியாயிட்டி நிக்கணுமில்ல, வா,  எழுந்திரு ” பெரியம்மா எவ்வளவு எழுப்பியும் குட்டன் உறக்கத்தில் இருந்து விடுபட விரும்பாமல் அப்படியே லயிக்க விரும்பினான். பிறகு அப்பா வரும் ஆர்வம் தொற்றவே எழுந்து அமர்ந்தான். அருகில் பழைய வெள்ளை முண்டுடன் பெரியம்மா அமர்ந்திருந்தாள். இவன் முகம் கண்டு சிரித்தாள். குட்டன் எழுந்து பெரியம்மாவை கட்டி கொண்டான். ” பெரியம்மா, நான் அப்பா கூட போகல, இங்கையே இருந்துக்கிறேன் ” என்றான். பெரியம்மா அவன் முதுகில் செல்லமாகத் தட்டி ” நேத்து கோயமுத்தூர் போகப் போறேன்னு ஊரெல்லாம் சொல்லிட்டிருந்தே ” என்று சொல்லி சிரித்தாள்.  பெரியம்மா எழுந்து அடுக்களை சென்றாள். குட்டன் எழுந்து முன்வாசல் பக்கம் வந்தான்.

வாசல் சுற்று திட்டில் 7-8 பேர் வெற்று மார்புடன் லுங்கி மட்டும் கட்டி அமர்ந்திருந்தனர், முற்றத்தில் கல்லடுக்கில் 3 பேர் இருந்தனர். குட்டன் சங்கரன் அண்ணனைத் தேடினான், அவர் ஆலையின் முற்றத்தில் அமர்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தார். அவனைப் பார்த்ததும் மலர்ந்து ” குட்டா, இங்க வா ” என்றார். ஓடிப்போய் அவர் அருகில் சென்று அமர்ந்திருந்த அவரின் மேல் போய் அமர்ந்து கொண்டான், அவர் இடுப்பில் லுங்கி சுருக்கத்தில் வைத்திருந்த ஒரு பொதியை எடுத்து பிரித்து அதில் இருந்த மிட்டாய்களை எடுத்து அவனுக்கு கொடுத்தார், அவன் வாங்கிய வேகத்தில் அதை வாயில் போட்டுக் கொண்டான். சங்கரன் சிரித்து ” குட்டன் இனி  எப்ப வரும் ” என்றார், குட்டன் ” நா போ மாட்டேன், இங்கயேதான் இருப்பேன் ” என்றான். சங்கரன் ஏதும் சொல்லாமல் அவனை அனைத்துக் கொண்டார்.

குட்டன் சுற்றி அமர்ந்திருப்பவர்களை பார்த்தான், எல்லோரும் இவர்களது பேச்சைத்தான் கவனித்து கொண்டிருந்தனர் என்பதை அறிந்து இன்பவெட்கம் கொண்டான். பிறகு ஒவ்வொருவரையாக பார்த்தான், ஒவ்வொருவரும் மலர்ந்த முகத்துடன் இவனைப் பார்த்தனர்.  பரமன் அண்ணாவை த் தேடினான், காண வில்லை.

உள்ளிருந்து ஒரு பாத்திரத்தில் பால் இல்லாத டீயுடன் பெரியம்மா வந்து முற்றத்தில் அமர்ந்தாள். நிறைய டம்ளர்கள் அருகில் இருந்தன, குட்டன் பெரியம்மா பக்கம்  வந்தான், டம்ளர்களை பிரித்துக் கொடுத்தான். பெரியம்மா ஒவ்வொரு டம்ளர்களாக ஊற்றி வைக்க ஒவ்வொருவரும் வந்து எடுத்துக் கொண்டனர், பெரியம்மா ஒவ்வொருவரிடமும் ஏதாவது பேசினாள், குட்டன் வருபவர்களையும் பெரியம்மாவையும் மாறிமாறி விழுங்கும் விழியுடன் பார்த்து கொண்டிருந்தான். பெரியம்மா குட்டனுக்கும் ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள், அவன் ” பெரியப்பாக்கு ” என்றான். சட்டென்று மவுனமானது போல முகம் மாறி பெரியம்மா ஒரு டம்ளரில் டீ ஊற்றி” கொடுத்துட்டு வா ” என்றாள். அவன் உற்சாகமாக அந்த டம்ளரை எடுத்து கொண்டு எதிரில் இருந்த ஓலை வேய்ந்த குட்டையான ஆலைக்குள் சென்று அங்கு துருட்டியால் அனலை மீட்டிக் கொண்டிருந்த பெரியப்பா அருகில் போய் காசு பெட்டியின் மீது வைத்தான்.

அனலுக்குள் இருந்த நான்கு பிக்காசுகளின் முனைகள் மஞ்சள் பூத்துக் கொண்டிருந்தன, பெரியப்பா எரிந்து கொண்டிருந்த கரிகட்டைகளை கிளறி விட்டுக் கொண்டிருந்தார், சூட்டில்  அவர் முகத்தில் வேர்வைத் துளிகள் பனி போல ஒட்டிக் கொண்டிருந்தது, முதுகிலும், மார்பிலும் வேர்வை நீர்த் துளிகள் படர்ந்திருந்தன. அவனுக்கும் காலைக்குளிரில் இந்த சூடு பிடித்திருந்தது, அனல் அருகில் போய் எட்டிப் பார்த்தான், பெரியப்பா ” டே ” உரும தொடங்கியதும் பயந்து வெளியே ஓடி வந்து பெரியம்மா அருகில் வந்து நின்றான். பெரியம்மா சிரித்து அவன் கையை பிடித்து இழுத்து மடியில் அமர வைத்தாள்.  அவன் காதுக்குள் ” கடுப்பனாக்கும் அது ” என்றாள், அவன் திரும்பி அவள் முகம் பார்த்து சிரித்தான்.

சட்டென்று எழுந்த இரும்போசை கேட்டு ஆலைப் பக்கம் நோக்கினான், பெரியப்பா இடது கையில் முனை வெந்த பிக்காசும் வலது கையில் சம்முட்டியுமாக இருந்து, பனக்கல்லில் பிக்காசை வைத்து அதன் முனையை சட்டுட்டியால் தட்டி முனை உடைந்த பகுதியை சரிசெய்து கொண்டிருந்தார். பிறகு அந்த பிக்காசை எடுத்து அனலுக்குள்ளேயே திரும்ப வைத்தார். பின் வேறொரு முனைவெந்த பிக்காசை எடுத்து தட்டி சீர் செய்தார். ஒவ்வொரு பிக்காசும் இப்படி மூன்றுமுறை எடுத்து போட்டு சரி செய்வதை குட்டன் அறிவான், கடைசி சரி செய்தலுக்கு பிறகு பெரியப்பா அதை நீரில் விடுவார், அதுவும் முனை பகுதியை மட்டும் விட்டு அப்போதே எடுத்து மீண்டும் விட்டு எடுத்து பின் கடைசி விடுதலில் நீரில் முழு பிக்காசையும் இறக்கி உள்ளே போட்டு விடுவார், சில நிமிடங்கள் கழிந்தபிறகு எடுத்து முனையை சற்று அரத்தால் ராவி பின் பிக்காசை அதைக் கொண்டு வந்தவனிடம் கொடுத்து பணம் வாங்குவார். சரி செய்து வாங்கிய ஒவ்வொருவரும் அதை தோளில் வைத்து இறங்கிச் செல்வார்கள்.

இப்போது நீரில் இறங்கிய பிக்காசு சங்கரன் அண்ணனுடையது, அவர் போய் பிக்காசு எடுத்து வெளியே வந்து ” குட்டா வரேன் ” என்றார். குட்டன் ஓடிப்போய் அவர் அருகில் நின்று கொண்டான், அவர் பிக்காசை கீழே வைத்து அவனை தூக்கி கொண்டார். ” டா, என்ன மறக்காத ” என்றார், சொல்லும் போது அவர் கண்களில் ஈரம் தெரிந்தது. குட்டன் அவரைக் கட்டிக் கொண்டான், பிறகு அவனை கீழே இறக்கி துண்டை தோளில் வைத்து அதன் மீது பிக்காசை வைத்து மெல்ல இறங்கி வெளியே நடந்தார், வெளி முற்றம் வந்ததும் திரும்பி அவனை பார்த்து கைக்காட்டினார், அவர் திரும்பி பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்த குட்டன் அவர் திரும்பியத்தைப் பார்த்ததும் மலர்ந்து வேகமாக கை ஆட்டினான்.

பின் மீண்டும் பெரியம்மா மடியில் போய் அமர்ந்து கொண்டான், மீண்டும் ஒவ்வொருவரையாக பார்த்தான், யாருக்கும் தொப்பை இல்லை, அப்பாவின் வீங்கிய வயிறு அவனுக்கு ஞாபகம் வந்தது. எல்லோரும் மின்னும் கருப்பு தோல் கொண்டவர்களாக இருந்தனர், குட்டனுக்கு இந்த நிறம் பிடிக்கும், அருகில் போய் அமர்ந்து நிறத்தையே பார்த்து கொண்டிருப்பான், எல்லோரிடமும் எதையாவது கேட்பான், எல்லோரும் இவனிடம் பேசி விளையாடுவார்கள். எல்லோரும் காலை நேர வேலைக்கு போக சரிசெய்ய வேண்டிய பிக்காசுக்காக காத்திருப்பார்கள். விடியற் காலையிலேயே வந்து விடுவார்கள். அவனுக்கு இந்த நீள் சதுர இருமுனை கொண்ட இரும்பு எதற்கானது என்று தெரியாது, பெரியம்மா சொல்லி தெரிந்து கொண்டான், ஒருமுறை பெரியம்மாவுடன் கோவிலுக்குச் செல்லும் போது குழியில் வெட்டி வெட்டி எடுக்கப்பட்ட வெட்டு செங்கல்லை பார்த்தான். வீட்டுச் சுவர்களாக, வெளிச்சுவர்களாக அவன் ஏற்கனவே எப்போதும் பார்த்து கொண்டிருந்த பொருள்தான் இது.

பெரியம்மா வீடு குட்டனுக்கு ரொம்ப பிடித்தது, கோயமுத்தூரில் நகரத்தில் நெரிசலான இடத்தில்இருந்த குட்டி ஓட்டு வீட்டை விட இங்கு விரிந்த வெளியில் இருந்த ஓலை வீடு அவனுக்கு பிடித்தது முன்பகுதி முற்றமும் திட்டும் பின்பக்கத்தில் இருந்த தொழுவமும் சம்மு பசுவும் அதன் கன்றுக்குட்டியும் அவனுக்கு மிக பிரியமாக இருந்தன. பெரியம்மா அவன் எது கேட்டாலும் செய்து கொடுப்பாள். உட்கார்த்து விறகடுப்பில் சமைத்துக் கொண்டிருக்கும் பெரியம்மாவை போய் பின் பக்கமாக கழுத்தை கட்டி பிடித்து கெஞ்ச ஆரம்பிப்பான். பெரியம்மா முதலில் அவனுக்கு ஏற்கனவே தயாராக எடுத்து வைத்திருக்கும் நெருப்பில் சுட்ட பலாக்குருவை எடுத்து தருவாள், அவன் அதை உடைத்து தின்பான், அது வாயிலிருந்து உள்ளே போவதற்கு முன்பே அடுத்த பலாகுருக்கு கை நீட்டுவான். தினமும் அவன் எழும்போதே உண்ணும் ஆவல் கொண்டிருப்பான், நேராக அடுக்களை புகுந்து என்ன இன்று என்று பார்ப்பான்.

“அப்பா மதியம் வந்துடுவாரு ” என்று அவன் காதுக்குள் கிசுக்கிசுத்தாள் பெரியம்மா, அவன் உடனே திரும்பி “நான் போ மாட்டேன் “என்றான், பெரியம்மா கண்கலங்கினாள், பின் மலர்ந்து ” அவனை நாய்க்குட்டி, நாயி, வாலெங்க ” என்றாள். அவன் சிரித்து பெரியம்மா நோக்கி ” நீதான் நாய்க்குட்டி, பெரிய நாய்க்குட்டி ” என்றான். பெரியம்மா சிரித்து அவனை இழுத்து கட்டிக் கொண்டாள்

ஒவ்வொருவராக வேலை முடித்து பிக்காசுடன் இறங்கி சென்று கொண்டிருந்தனர், கடைசி அண்ணாவும் பிக்காசுடன் வெளியே இறங்கி மறைந்தார். பெரியப்பா அனலின் மீது வெள்ளம் தொழித்து தீயை அணைத்தார், பின் துருத்தியால் கரிக்கட்டைகளை விலக்கி நல்ல கரிக்கட்டைகளை எடுத்து பிரித்து வைத்தார்.  காசுப் பெட்டி திறந்து காசுகளை எடுத்து சுருட்டி இடுப்பில் வைத்து கொண்டார், எழுந்து குனிந்து நடந்தவாரே ஆலையை விட்டு வெளியே வந்தார். முற்றத்தின் ஓரத்தில் இருந்த தொட்டியில் இருந்து நீர் எடுத்து முகம், முதுகு, மார்பு கை, கால்கள் கழுவினார். பின் தொடியில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு துண்டை எடுத்து தோளில் போட்டு வெளியே இறங்கப் போனார். அப்போது பெரியம்மா பெரியப்பா நோக்கி ” குட்டன் இன்னைக்கு போயிடுவான், அவனுக்கு ஏதாவது வாங்கிட்டு வாங்க ” என்றாள், அவர் ஒன்றும் சொல்லாதவராக வெளியே இறங்கி நடந்து மறைந்தார்.

பெரியம்மா அடுக்களை போன பிறகு குட்டன் யாருமில்லாத ஆலைக்குள் புகுந்தான். பெரியப்பா அமரும் இடத்தில் அமர்ந்தான். புலோயரை இயக்கும் அதன் பின்னிருந்த சைக்கிள் வீலை அதை இயக்க பயன்படுத்த படும் பெடலை நீள் கம்பி வைத்து பெரியப்பா சுற்றுவதை போல எடுத்து போட்டு சுற்றினான். புலோயரின் வாய் குழாய் வழியாக நெருப்பு பகுதியில் காற்று வந்தது. நெருப்பு எரிவதாக அவனே பாவித்து கொண்டு உள்ளே ஒரு இரும்பினை வைத்து எடுத்து பின் பனக்கல்லில் அதை சிறு சுத்தி கொண்டு தட்டி விளையாடினான். பின் அதை எடுத்து அருகில் இருந்த குழி வெட்டி தண்ணீர் ஊற்றப்பட்டிருந்த தொட்டிக்குள் முக்கி எடுத்தான். பெரியப்பா நீரில் பழுத்த இரும்பை பேடும்போது வரும் சத்தத்தை அவனே எழுப்பினான். பின் அதை அப்படியே போட்டு காசு பெட்டியை கையில் எடுத்தான். சிறு கைக்கு அடக்கமான மர பெட்டி அது, திறந்து பார்த்தான், ஒன்றும் இல்லை, அதை அப்படியே போட்டு அடுக்களை நோக்கி ஓடினான்.

பெரியம்மா அங்கு இல்லை, அவன் பின்வாசல் வழியாக கிணற்றுப் பக்கம் வந்து பார்த்தான், பெரியம்மா குளித்துக் கொண்டிருந்தாள், திரும்பி உள்ளே அடுக்களை பக்கம் வந்து ஏதாவது திங்க கிடைக்குமா என்று ஒவ்வொரு பாத்திரமாக திறந்து பார்த்தான். ஒன்றில் தேங்காய் துருவல்கள் இருந்தது, எடுத்து கொஞ்சம் வாயில் போட்டுக் கொண்டான், அப்போது வெளியே சாலையில் ஆட்டோ சத்தம் கேட்டது, குட்டன் வெளிவாசல் நோக்கி ஓடினான், அவன் எதிர்பார்த்ததை போல அப்பாதான் வந்திருந்தார்.

அப்பா அவனை தூக்கிய படி வீட்டிற்குள் வந்து முன்வாசலில் திட்டில் அமர்ந்தார், குட்டன் அருகில் அமர்ந்து கொண்டு அப்பா கொண்டு வந்திருந்த பொதிகளை பிரித்துப் பார்க்க முயன்றான், அப்பா அவன் கைகளை தட்டி விட்டார்.

சிறிது நேரத்தில் பெரியம்மா வந்து நின்றாள், முடியில் ஈரம் வழிந்தது. அப்பா எழுந்து பொதிகளை பெரியம்மாவிடம் கொடுத்து ” குட்டன் ரொம்ப தொல்லை கொடுத்தானா ” என்றார். பெரியம்மா சிரித்து ” இவன் போன பிறகு இங்க வெறிச்சோடிடும் ” என்றாள். ” இவன் சத்தம் இல்லாம, இவன் எப்பவும் இப்படி எங்க திரும்பினாலும் நிக்கறதை இனி பார்க்காம இருக்க போறதை நினைச்சு இராத்திரி தூக்கமே வரல ” என்று சொல்லி சிரித்தாள், கூடவே கண்களும் கலங்கத் தொடங்கி இருந்தன.

அப்பா ” அண்ணா எங்க காணோம் “என்றார். பெரியம்மா ” மனுஷன் வேற எங்க, அந்த சாராய கடைலதான் இருப்பார் “என்றாள். அப்பா முகத்தை சோகமானவர் போல வைத்துக் கொண்டார். பிறகு பெரியம்மா ” சரி, போய் தூங்குங்க, பஸ்ல வந்த களைப்புல இருப்பீங்க ” என்றார். அப்பா ” குளிச்சுட்டு படுத்துக்கறேன்“ என்று பின்வசால் பக்கம் போனார். குட்டன் அடுக்களை சென்ற பெரியம்மா பின்னாலேயே சென்றான்.

அப்பா தூங்கிக் கொண்டிருந்தார், பெரியம்மா சமையல் வேலை முடித்து, ஆலைப் பக்கம் வந்து இரண்டு கல்லுளியும் சின்ன சுத்தியலும் எடுத்து ஒரு பையில் போட்டு கொண்டாள், பின் குட்டனையும் அழைத்து வெளியே கிளம்பினாள். சில சாலைகள் தாண்டி பெரிய வீடு பக்கம் வந்து வாசலில் நின்று தேவகிமா என்று சத்தம் போட்டாள். உள்ளே இருந்து ஒரு வயதான பெண்மணி வந்தாள். பெரியம்மாவை நோக்கி ” வா சரஸ்வதி, இது யாரு கொழுந்தன் பையனா ” என்றாள். ஆமாம்மா என்று சொல்லியப்படி வீட்டிற்குள் சென்று அங்கிருந்த ஆட்டுகல்லை எடுத்து வெளியே வைத்து பையில் இருந்த உளியும் சுத்தியலும் எடுத்து கொத்த ஆரம்பித்தாள், வரிசையாக புள்ளிகள் விழுவதை குட்டன் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான். பெரியம்மா மொத்த ஆட்டுக்கல்லிலும் புள்ளிகள் வைத்தாள்,  ஆட்டுக்கல்லுக்குள் புள்ளிகளால் ஆன விரிப்பு உருவாகி இருந்தது, குட்டன் அதை விரல்களால் தடவிப் பார்த்தான். பெரியம்மா முடித்து விட்டு தேவகி அம்மா கொண்டு வந்து வைத்திருந்த வர டீ எடுத்து குட்டனுக்கும் கொடுத்து அவளும் பருகினாள். தேவகி அம்மா வந்து பெரியம்மாவிற்கு பணம் கொடுத்தாள். பெரியம்மா வாங்கி இடுப்பில் வைத்து கொண்டாள். பின் சுத்தியையும் உளியையும் பையில் போட்டு வெளியே வந்து நடந்தாள்.

தூரத்தில் மளிகைகடை தெரிந்த போதே குட்டன் ஆர்வமாகி விட்டான், பெரியம்மாவை இழுத்துக்கொண்டு போக முயன்றான். பெரியம்மா சிரித்து வேண்டுமென்றே மெதுவாக நடந்தாள். கடையில் அவன் கைக்காட்டிய தின்பண்டங்கள் எல்லாமே வாங்கி கொடுத்தாள். கடை தாத்தா ” இவன் இங்க இருந்தா நீ கடனாளி ஆகிடுவ ” என்று சொல்லிச் சிரித்தார். பெரியம்மா பதில் ஏதும் சொல்லாமல் புன்னகைத்தாள்.

 அப்பா இன்னும் தூங்கி கொண்டிருந்தார். பெரியம்மா அடுக்களை பக்கம் போகவும் குட்டன் முன்வாசலில் அமர்ந்து தின்பண்டங்கள் பிரித்து எடுத்து விழுங்கிக் கொண்டிருந்தான்.

பெரியப்பா வருவதை தூரத்தில் இருந்தே குட்டன் பார்த்து விட்டான். பாம்பு போல வளைந்து வளைந்து ஆனால் மிக மெதுவாக பெரியப்பா வருவதாக குட்டன் எண்ணினான். தலை தொங்கி ஆடியபடி பெரியப்பா கால்களை வைக்கும் இடங்களை பார்த்து பார்த்து உள்ளே வந்து கொண்டிருந்தார்.

உள்ளே வந்தவர் குட்டனை புதிதாக யாரையோ பார்ப்பதை போல பார்த்தார், பிறகு உணர்ந்து அருவருக்கும் பார்வையை வெளிப்படுத்தினார், குட்டன் பயந்து ஓடி அடுக்களை சென்று பெரியம்மா பக்கம் நின்று கொண்டான்.

பெரியம்மா ஒரு தட்டில் சோறு கலந்த கஞ்சியும், இன்னொரு சிறு தட்டில் தட்டபயிறு பொரியலும் கொண்டு வந்து பெரியப்பா அருகில் வைத்தார். பின் ஏதும் சொல்லாமல் உள்ளே போனாள். பெரியப்பா இரண்டு தட்டுக்களையும் எடுத்து வெளியே வீசினாள், “தேவடியா வந்துட்டா மினிக்கிட்டு ” என்றார். பின் மீண்டும் ” சனிய முண்ட வந்ததுல இருந்து பிடிச்சது கிரகம் ” என்றார். உள்ளே பெரியம்மா அழும் முகம் கொண்டு இருந்தாள், அவள் கூடவே வால் போல குட்டன் ஒட்டிநின்று கொண்டிருந்தான்.

குட்டனுக்கு பெரியப்பா பேசிய சொற்கள் எதுவும் புரியவில்லை, ஆனால் கோபத்தில் திட்டிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது. திடீரென மாடு கத்த ஆரம்பித்தது, பெரியம்மா ஓடி வந்தாள், கூட குட்டனும் ஓடினான். பெரியப்பா பசுவை கட்டையால் அடித்துக் கொண்டிருந்தார், பெரியம்மா அதை பிடுங்கி வெளியே வீசினாள். பெரியப்பா பெரியம்மாவை ” நாறத் தேவிடியா ” என்றார். பெரியம்மா முறைத்து பின் ஏதும் சொல்லாமல் அடுக்களை நோக்கி செல்லத் தொடங்கினாள், பெரியப்பா ” இப்ப கூட ஒரு குட்டி சாதானும் ” என்றார். பெரியம்மா சட்டென வெறிகொண்டு அருகில் இருந்த விறகு கட்டையை எடுத்து பெரியப்பா நோக்கி வீசினார். அது பெரியப்பா தலையில் விழுந்தது, பெரியப்பா அப்படியே சரிந்து விழுந்தார். பெரியம்மா ” கொன்னு பொதச்சுடுவேன் தாயோளி ” என்றாள். அப்போது அப்பா அறையில் இருந்து வெளியே வந்து நின்று பார்த்து கொண்டிருப்பதை குட்டன் பார்த்தான்.

பிறகு பெரியவனாவது வரை குட்டன் ஊருக்கு வந்து பெரியம்மாவை  பார்க்கவில்லை, அப்பாவும் அம்மாவும் யாருமே ஊர் பக்கமே போகவில்லை, கோயமுத்தூரில் நகரில் வளர்ந்த அவனுக்கு கனவு காலம் போலவே பெரியம்மாவுடன் இருந்த அந்த ஒரு மாதம் இருந்தது. பிறகு அவன் ஊருக்கு வந்தது பெரியப்பா மரணத்திற்கு, அது தற்கொலை என்றார்கள். ஊரில் பெரியம்மாவை துயர முகத்தில் பார்த்த போது அவனுக்கு வருத்தமாக இருந்தது. அவள் குட்டனை கண்டதும் கட்டி முகம் பொத்தி அழுதாள், அவன் கைகளால் பெரியம்மாவை கட்டிக் கொண்டான், அப்போது தள்ளி நின்றிருந்த அப்பா அவனைப் பார்த்து முறைப்பது போல இருந்தது. மூன்று நாட்கள் அங்கிருந்தவன் பிறகு ஊருக்கே போகவில்லை. அவன் வளர்ந்து தொழிலுக்காக புனேவில் இருந்த சமயத்தில் அப்பா பெரியம்மா இறந்து விட்டதாகவும், நீ வர வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னபோது பெரியம்மா உளியில் ஆட்டுக்கல் கொத்திகொண்டிருந்த காட்சிதான் குட்டனுக்கு ஞாபகம் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *