முன்கதை

திரேதா யுகத்திற்கும் துவாபர யுகத்திற்கும் இடையேயான கால இடைவெளியில் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான் ஆதிசேஷன். யுகங்களை முடுக்கும் பணி பரந்தாமனால் அவனுக்கு கட்டளையிடப் பட்டிருக்கிறதல்லவா? சுருண்டிருந்த தன் முடிவிலா உடலை மெதுவாக தளர்த்திக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்து சேர்ந்தாள் தங்கை வாசுகி. இப்படியான யுக இடைவெளிகளில் மட்டுமே இருவரும் சந்தித்து உரையாட முடிகிறது. முன்பை விட அவள் ப்ரகாசமாக பொலிந்து கொண்டிருந்தாள்.

“நலமா அண்ணா?”

“நாரணனுக்கே படுக்கையாகும் பேறு பெற்றேன். வேறு என்ன வேண்டும். குறையொன்றுமில்லை. நீ நலமா?”

“நலமே அண்ணா.பரமனின் கழுத்தில் பாக்யமே பாக்யம்”

“ஆமாம் உடலில் என்ன காயங்கள் அண்ணா?”

“அவை காயங்கள் அல்ல தங்கையே! யுக முடிவில்   பழைய உடுப்பு உரித்து புதிய உடைக்கு மாறுவேன். அதற்கான தடங்கள்”

“சரி. இந்த  துவாபர  யுகத்தில்  என்ன  சிறப்பு? “

“அது நாரணனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமல்லவா?நடக்கும்போது கவனிப்பது மட்டுமே நம் வேலை.”

“யுக யுகமாக  பாற்கடலிலேயே  கிடப்பது  சலிக்கவில்லையா  அண்ணா?”

“பரமாத்மாவுக்கு படுக்கையாகி அவனைச் சுமப்பதும், அவனுக்கே குடையாகி நிற்பதுவும்தானே எனது ஊழ். பேறு பெற்றேன் யான். என்றுமுளதான உவகை. அத்துணை லோகங்களிலும் கிடைத்தற்கரிய பணி. சலிப்பேது  தங்கையே?”

வாசுகி புன்னகைத்தாள். சிவனின்  கழுத்திலும்,  கங்கையின் பக்கவாட்டிலும், சந்திரனின் ஒளியிலும்,  கைலாயத்தின் குளிர்ச்சியிலும்  அவள்  இருப்பும்  அப்படித்தானே.

“சரி  அண்ணா. போய்  வருகிறேன்”.

“போய்  வா”

அவர்கள் உரையாடல் முடிந்ததும் ஆதிசேஷன் தன் முழு உடலையும் நீட்டி விட்டான். வாலின் முடிவை உணர முடிந்ததே தவிர காண முடியவில்லை. புன்முறுவலித்தான். துவாபரயுகம் தொடங்கியது.

திருப்பதிசாரம் கோபாலனுக்கு ஒரு வாரமாக உடலில் அனக்கமேயில்லை. படுக்கையிலேயே கிடந்தார். இளை யமகள் கோதை கவனித்துக் கொண்டிருந்தாள். அவ்வப்போது பால் புகட்டுவதும் உடலை சுத்தப்படுத்துவதும் நடந்து கொண்டிருந்தது. எப்போதாவது முனகுவார். அப்போதெல்லாம் கோதை அவர்  தலையை மென்மையாக வருடிக் கொடுப்பாள். திவ்ய பிரபந்தம் வாசித்துக் காட்டுவாள்.

நூற்றிரண்டை  நெருங்கும்   கோபாலனின்  பாதங்கள் மட்டும் மேலும் கீழுமாக ஆடிக்கொண்டிருந்தது.

ஓர்மைகள் பின்னுக்கிழுத்தன. மாடர்ன் டெய்லரிங் ஷோப். கோபாலனின் அப்பா அர்ச்சுனன். பக்கத்து நகரின் முதல் தலைமுறை தையற்கலைஞர். எட்டுப்பேர் உதவியாளர்களுடன் எந்நேரமும் கடகட ஒலியுடன் தையல் மெஷின்கள் ஓடிக் கொண்டேயிருக்கும். அந்தக் காலத்தைய நவயுக இளைஞர்கள், படித்தவர்கள், பணக்காரர்கள், அரசு ஊழியர்கள், திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரின் ஒரே தேர்வு மாடர்ன் டெய்லரிங் ஷோப். சுற்று வட்டாரங்களிலும் திருவனந்தபுரத்திலிருந்தும் கூட வாடிக்கையாளர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஒருமுறை என்.எஸ்.க்ருஷ்ணனைக் கூட கோபாலன் பார்த்திருக்கிறார். யார் வந்தாலும் அர்ச்சுனன்தான் அளவெடுப்பார். இந்த விஷயத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை. பதின்மூன்று வயதிலேயே கோபாலன் கடைக்கு வந்து விட்டார். அர்ச்சுனன் கண்டிப்புடன் தொழில் சொல்லிக் கொடுத்தார்.

“தையலுக்கு அளவுதான் முக்கியம்லே. ஒரு பாயிண்ட் கூடக் கொறய இருக்கபிடாது. தவறுச்சுன்னாக்க அவயங்க உப்பியோ தளந்தோ    தெரியுமாக்கும், சொக்கனுக்கு கெட்டி விட்ட மாரி”

“காலருக்கு   கெட்டித்துணி   இன்னொரு   லேயர்   வைலே,  ஆட்டுக்காது  மாரி்  தொங்யிது”

“கோட்டு  பட்டனுக்கு  பெரிய  ஊசி்  எடுத்துகணும்   மக்களே”

தொழில் நேர்த்தி அவரின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும். எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாலும் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாலும் எல்லோரின் மேலும் அவரது கவனம் இருந்து கொண்டே  இருக்கும்.

“ லே அய்யப்பா  மெஷினுக்கு  க்ரீஸ்  விடனும்”

“ கத்திரிக்கு   சாணபிடில    மாதவா, கிரிச்சுகிரிச்சுன்னு    துணிய     வம்பாக்கிடும்”

அப்பா பம்பாயில் தொழில் கற்றவர். இப்போதும் மெஷின்களில் ஏதாவது கோளாரென்றால் அவரே சரி செய்வார். நூல்கண்டு, பட்டன்கள், சேர்ப்புத்துணி, ஊசிகள் போன்ற அந்தந்த மாதத்துக்குத் தேவையானதை முன்னமே தபாலெழுதியோ அல்லது நேரிலோ மதராஸில் இருந்த ஸ்டூவர்ட் அன் கோவில்   வாங்குவார்.

கோபாலன் சிறு வயதிலிருந்தே எப்போதும் கனவு நிலையிலேயே இருப்பார். இரவும் பகலும் ஏன் வேலை நேரத்திலும் கூட கனவுகள் அவரை ஆட்கொள்ளும். வயது ஏற ஏற கனவுகளின் பிடி இறுகித்தான் போனது. அடிக்கடி தனக்குத் தானே சிரித்துக் கொள்வது அவரது பிரதான செயல்களில் ஒன்றாகி விட்டது.

“கோட்டி கீட்டி பிடிச்சிருச்சா இவனுக்கு? பெருமாளே” அர்ச்சுனன் வருத்தமடைந்தார்.

கோட்டாறு சீனிவாசன் தான் சொன்னார். “வயசுக்க மாயமாக்கும் இது. ஒரு கல்யாணம் செஞ்சு வய்யும் .கொழப்பந்தீரும்”

சீதையம்மாளை கரம் பிடித்து நான்கு பிள்ளைகள் பெற்ற பின்பும் கனவுகள் விடவில்லை. சீதையம்மாளுக்கோ எல்லாமே பழகிவிட்டது. அவரது கனவுகளால் அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கோபாலன் கனவு காண்பதை விடமுடியவில்லை என்பதை விட அதை ஒரு கடமையாக அனுபவித்து செய்து கொண்டிருந்தார்.

பழையாற்று வாய்க்காலில் முங்கிகுளிக்கும் போது தானும் ஒரு மீனாகி நீரின் போக்கில் நீந்துவதைக் கண்டார். எங்கிருந்து வந்தது இவ்வளவு வேகம்? நீரின் விசையா அல்லது இளம் மீனின் கொண்டாட்டமா? கலங்கிய நீரிலும் இவ்வளவு தெளிவான பார்வைச் சக்தியா? அதோ வாய்க்காலின் கரையெங்கும் நெடிந்து வளர்ந்திருக்கும் தென்னைகளின் ஒன்றிலிருந்து சிறுபூச்சி ஒன்று கீழ் நோக்கி விழுகிறது. தட்டென்று நீரின் போக்கிலேயே அதைக் கவ்விப் பிடித்து விழுங்கினார். என்ன ருசி. கதிரொளி நீரில் ஊடுருவி ஸ்வர்ணரேகைகளோடு அவரை தங்க மீனாக உருமாற்றியது.  வழியெங்கும் ஸ்நேகிதர்கள் மற்ற இன அண்ணன்மார்கள் தம்பிகள். பெரியகல் ஒன்று தட்டுப்பட அதை ஒட்டிக்கொண்டவாறு சற்று இளைப்பாறினார். கல் நகர ஆரம்பித்தது. அது கல்லல்ல ஆமை… சிரித்துக் கொண்டார். வயிறு இறுக்கி கழிவு வெளியேற்றினார். மீண்டும் கொண்டாட்டமாக நீந்தினார். மூன்றாம் நாளில் ஒரு வயலை வந்தடைந்தார். தாவரங்கள்….எவ்வளவு பச்சையம் .ஆஹா.!தண்ணீர் அளவு குறைய ஆரம்பிக்கவே திரும்பி நீந்தி வாய்க்கால் இருக்குமிடம் சேர்ந்து எதிர்த்திசையில் போராடி முண்டுக்குள் புகுந்து கோபாலனானார்.

பிறிதொரு சமயம் புத்தூரம் வீட்டில் ஆரோமல் சேகவரோடு களறிச்சண்டையில் தீவிரப்பட்டார். வாட்களும் கேடகங்களும் மோதி மோதி ஒலிக்க உயரே உயரே துள்ளிக் குதித்து ஆக்ரோஷமான ஒரு மோதல். ஒரு நுண்ணிய கணத்தில் விலாவில் வெட்டு விழ கோபாலன் துள்ளி விழுந்தார். ஆரோமல் சேகவர் ஓடி வந்து கைப்பிடித்து  தூக்கி   அவரை  அணைத்துக்கொண்டார்.

“நீ  சுத்தவீரன்”

சீதையம்மாள்  ஒரு  முறை   அவரிடம்   கேட்டாள்.

“உமக்கு  எந்த  மாரி  கினா   வருமோ”

“ஸ்வர்ணமும்  செல்வமும் கணக்கில்லா சக்கரமும் அரமணயும் பணிக்காரர்களும் இந்திரன் சாப்பிட்டிருக்காத போஜன வகயறாக்களும் கூடுதலான ஆயுளும் கொண்ட நிறைவாட்டு ஒரு வாழ்வு. பின்ன வெளிய சொல்ல முடியாத லட்சியக் கினாவு ஒன்னு  உண்டும்.”

“கொள்ளாம். தர்ம காரியங்க  ஏதும்   ஆகாதோ?”

“சக்கர மிருந்தா  தர்ம  காரியங்களும்  உண்டு தானே   பத்தினியே”

“என்னயவும்   பிள்ளகளயும்   கினாவில  நெனப்பீரோ”?

கோபாலன்  சிரித்துக்  கொண்டார்.

அப்பா அர்ச்சுனன் தோஷம் தந்தது. பணிகளும் தளர்ந்தது. கடைசியில் தரமும் தளர்ந்து வாடிக்கையார்களும் குறைய ஆரம்பித்தனர். போட்டிக்கு நான்கைந்து கடைகள் முளைத்து கிடைத்த வருமானமும் குறையத் தொடங்கியது. பணியாட்கள் ஒவ்வொருவராக வெளியேறினர். கோபாலனோடு மாதவன் மட்டும் கடைசி வரை இருந்தார்.

ஆனால்   கோபாலனின்   கனாக்களுக்கு  மட்டும்  குறைவில்லை.

பதின்ம வயதில் நெஞ்சத்தில் ஒளிந்திருந்த ரங்கநாயகியின் மடியில் கட்டுமஸ்தான உடலோடு பூப்படுக்கையில் கொஞ்சிக் கொண்டிருந்தார். குளிர்ச்சியான அவளது கைகள் அவரது தலையை வருடிக் கொண்டிருந்தன.அறையெங்கும்அகில் மணம்.அவர் சேயாகும் முனைப்பில் உளறிக் கொண்டிருந்தார்.

“எனக்கராணியில்ல”

ரங்கநாயகி சிரித்தாள்.ஆகாயத்தின் அத்தனை பறவைகளும் சந்தோஷித்தன.

படுக்கையில் கிடந்த பூ மொட்டுக்களை  அவள் மேல் அள்ளி அள்ளி எறிந்தார்.

இன்னொரு கினாவில் ஒரு நாயாக உருமாறி இலக்கில்லாமல் சுற்றித்திரிந்து புணர்ச்சிக்கான போட்டிகளில் ஜெயித்து குப்பைகளில் உணவுண்டு அந்நியபகுதி எதிரிகளிடம் கடிவாங்கி மனிதர்களின் கல்லெறிபட்டு உரோமங்கள் உதிர்ந்து வாயில் நீர்வடிய சாக்கடையில்  படுத்துக்கிடந்தார்.

பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி வேறு வேறு நகரங்களில் வேலைக்குப் போய்விட்டார்கள். அவர்களுக்கு திருமணம் செய்வித்து பேரப்பிள்ளைகளையும்  பார்த்தாயிற்று. கினாவுகள் நின்றபாடில்லை.

ஒரு மேலைநாட்டு கோமகனாக உடைதரித்து உயர்தர மது குடித்து சாக்ஸபோனின் இசை கேட்டபடி உறங்கி எழுந்து காலையில் குதிரையில் துப்பாக்கியோடு வேட்டைக்கு கிளம்பினார். தங்கமானை வேட்டையாடுவது அவ்வளவு சுலபமல்ல. அவரின் சகாக்கள் தோற்றதே அதிகம். அது ஒரு லட்சியம். காட்டில் மூன்று நாட்கள் தேடியலைந்து நான்காம் நாள் கண்ணில் பட்டது. மாலை சுடப்பட்ட தங்கமானை மடியில் கிடத்தி குதிரையில் வந்த அவரை நகரமே கொண்டாடியது.

அர்ச்சுனன் உயிரோடிருந்த வரையில் மாதாமாதம் திருவெட்டார் ஆதிகேசவ பெருமாள்கோயிலுக்கு இருவரும் செல்வார்கள்.

“பெருமாளக்கும்  பிட்டுக்கல”

ஒரு நெடிய சயன கோலத்தில் மூன்று வாயில்களும் ஆக்கிரமித்து படுத்திருக்கும் பெருமாளையும் ஆதிசேஷனையும் பார்த்துக் கொண்டேயிருப்பார்.

வீட்டில் அர்ச்சுனன் பாலனுக்கும் அது அன்றாட கடமைகளில் ஒன்றாக மாறிவிட்டது.

இப்போதெல்லாம் மாடர்ன் டெய்லரிங் ஷோப் பழைய கடையாகி விட்டது. எப்போதாவது பழைய வாடிக்கையாளர்கள் ஒன்றிரண்டு பேர் வருவதுண்டு. கோபாலன் மட்டுமே கடையின் ஒரே பணியாள்.கினாக்களுக்கு மத்தியிலும் கோபாலன் தொழில் பக்தியை விடவில்லை. அர்ச்சுனன் தேவைக்கும் மேலாகவே சேர்த்து வைத்துவிட்டு போயிருந்தார்.எனவே பொருளாதார பிரச்சினைகள் இல்லாமல் இருந்தது.

அன்றாட நிஜங்கள் எல்லாமே கனவுதானோ என்ற சந்தேகமும் அவருக்கு இருந்தது. அப்படியிருந்தால் தான் செய்வது எல்லாமே சரிதான் என்ற எண்ணம் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.

ஒரு கனவிற்கான முகாந்திரம் கிடைத்து எண்ணங்கள் பெருக்கெடுக்கும் தோறும் பரவசமாகி விடுவார்.

ஒரு முறை கருடனாக உருமாறி ஆகாய யாத்திரை கிளம்பினார். மற்ற பறவைகளை விட உயரம் கூடிகூடி பறந்தார். பட்சிராஜனல்லவா? விரட்டி வந்த காக்கைகளை சீந்தாமல் இன்னும் உயரம் கூட்டி பறந்தார்.காக்கைகள் தோற்று கீழிறங்கின. சிரித்தார். அவ்வளவு உயரத்திலும் எவ்வளவு தெளிவான பார்வை. வலிய இறக்கைகள். இரும்பான கால்கள். கத்திக்கூர்மை நகங்கள்பசித்தது. கொழுத்த முயல் ஒன்று கீழே ஓடுவதைப் பார்த்தார். சாய்வான ஒரு கோணத்தில் அசுரவேகத்தில் கீழே இறங்கினார். முயல் வளைந்து ஓடியது. குறிப்பான கணத்தில் கால்களால் முயலைப் பிடித்து வீழ்த்தினார். நகத்தால் கீறி அலகை பாய்ச்சிய போது இரத்த ருசி  கிறக்கியது.

கோபாலனுக்கு நண்பர் வட்டம் ஏதும் இல்லை. சீதையம்மாள் வழியில் மாப்பிள்ளை முறையான கோபால கிருஷ்ணன் மட்டுமே ஒரே நட்பு. கோபால கிருஷ்ணன் மகாராஜா கல்லூரியில் தத்துவப் பேராசிரியர்.

ஒரு முறை    கனவுகளைப்   பற்றிய   பேச்சு வந்த போது கோபாலகிருஷ்ணன்  சொன்னார்.

“மனசில  ஒளிஞ்சி  கெடக்கற  விருப்பு  வெருப்புதான்  கனவாட்டு  வருது”

“இல்ல எனக்க  சமாச்சாரமே  வேற”

“என்னவோய் லோகத்துல இல்லாத பொருளுக்க சொப்பனம்”

“ஒமக்கு புரியாது”

“அது செரி.  நூத்தம்பது வருசத்துக்கு மின்ன மே நாட்டுக்காரன் சொன்ன தத்துவமெல்லாம் இப்பத்தான் வெளங்குது, ஒம்ம சமாச்சாரம் ஆயிர வருசகாலம் எடுக்குமாக்கும், ப்ராய்டுன்னு ஒருத்தன் இதுக்கெல்லாம் ஆராச்சி பண்ணி சொல்லிருக்கான்”

கோபாலன் சமீபமாக ஒரு குற்று ஆலமரமாக பாறை இடுக்கில் முளைவிட்டு வளர்ந்திருந்தார். ஒரு பறவையின் எச்சம் என்ன மாயமெல்லாம் செய்கிறது. உறுதியாக நிலைத்து நூற்றாண்டுகளை கடந்திருந்தார்.

இடைக்கதை:

ஆதிசேஷன்  கலியுகத்தை முடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தான். வாசுகி வந்திருந்தாள்.வாசுகி இம்முறை கொஞ்சம் தளர்வாக தெரிந்தாள்.

“ அண்ணா  ஏன்  கலக்கமாக   இருக்கிறீர்கள்?”

“ அப்படியா?  எனக்கு  ஒன்றும்  தெரியவில்லை”

“இது கடைசி  யுகமில்லையா?

“இல்லை. இது முடிவிலியான  செயல். யுகங்கள்  மீண்டும்  தோன்றும்”

“ இந்நேரம் நீங்கள் புது உடுப்புக்கு  மாறியிருக்க  வேண்டுமே?”

“ என்னவோ தோன்றவில்லை”

“ சரி அண்ணா, வருகிறேன்”

“ போய் வா”

ஆதிசேஷன் உடலை நீட்டி விடுவித்தான். கலியுகம்  பிறந்தது.

சீதையம்மாள் இறந்து இருபது வருடங்களாகிறது. கோபாலனின் நடமாட்டம் மெல்ல மெல்ல குறைந்து வீட்டிலேயே முடங்கிப் போனார். தையல் மெஷினை நினைத்து அவ்வப்போது கால்கள் மேலும் கீழும் ஏறியிறங்கும்.

அது ஒரு கிருஷ்ண பட்சத்தின் நான்காம் நாள். கோபாலன் இப்போது வைகுண்டத்தில் இருப்பதாக உணர்ந்தார். கருடன் அவரை நாராயணனிடம் கூட்டிப் போனான். பரந்து விரிந்த  பாற்கடல் . தூய வெண்மை நிறத்தில்  அலைகள்.

ஆதிசேஷனில்  சயனித்திருக்கும் நாராயணனைக் கண்டதும் கண்ணீர் பெருக்கெடுக்க வணங்கினார். திருமால்  வாய்  மொழிந்தார்.

“ கோபாலனுக்கு    நல்வரவு”

“ மாலே   எனக்கு   இப்படி   ஒரு   பேறா?”

திருமால்   சிரித்தார். அந்தக்  குரல்   தெய்வங்களுக்கானது  என   கோபாலன்   உணர்ந்தார்.

“ வைகுண்டமும்   வந்து   விட்டேன். இனி   என்ன   சுவாமி”

“ உனக்கு   ஏதாவது   வேண்டு மென்றால்   கேட்கலாம்”

“ அது   நெறய   இருக்கு.”

“ கூறு”

“இங்கேயும்  நான்  கினாவுகளோடே  கெடந்து   வாழணும்”

“ஓ”

“கினாவுலகின்    அதிபதியாக    என்னை    நியமிக்க    வேணும்”

“நிச்சயமாக”

“ வை    தரணி    ஆத்தை     சுத்த மாக்கணும்”

“ சரி”

“இனி   ஒரு   அவதாரம்   நீங்கள்   பூமியில்   எடுக்கணும்”

“ ம்”

“ இந்த    ஆதிசேஷனுக்கு   நான்   ஒரு   சட்டை    தச்சுத்தரணும்.”

இப்போது   பெருமாளும்    கருடனும்    ஆதிசேஷனும்    சிரித்தார்கள்.

“ அப்படியே  ஆகட்டும். அதுவே   விதி”

காரியங்கள் விரைவாக நடந்தன. வானத்தை துணியாக்கி கோடி மடங்குகள் பெரிதாக்கப்பட்ட தையல் இயந்திரத்துடன் கோபாலன் அதற்கேற்ற உருவப் பெருக்குடன் ஒரு யுக கால கணக்குடன் ஆதி சேஷனுக்கு சட்டை தைக்கத் தொடங்கினார். கடகடகடகட.. .வானுலகெங்கும் அக்குரல் ஒலித்தது.

ஓம்   நமோ   நாராயணாய!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *