சென்னை புறநகர் பகுதியொன்றின் ஹம்சலேகா அபார்ட்மெண்ட்ஸ் . கே-6 குடியிருப்பில் இரவு ‌ஒன்பதரை மணிக்கு ஈசி சேரில் சாய்ந்து கொண்டு வடிவு அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டு அசை போட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.

முதல் முறை சென்னை வந்திருக்கிறாள் பேத்தி வள்ளி கருவுற்ற நான்காம் மாதத்தில். சென்னை மட்டுமல்ல. யவனத்தில் பணிக்கன் விளை‌ தவிர்த்து அவள் காலடி எங்கும் பட்டதில்லை. நேற்றுதான் முதல் புகை வண்டிப் பயணமும் எழுபது வயதில் சாத்தியமானது. இம்முறையும் வரமாட்டேனென்று சொன்னவள்தான்.

வீட்டோட மெட்ராசு போறோம். நாங்க திரும்ப வாரப்ப  சவமா கெடக்கப்போற கெழவி’ . மகன் செல்லக்கனி சொன்னதும், பேத்தி வள்ளி போனில் பேசியதும் அவளை அசைய வைத்தது.

வாடகைக்காரில் நாகர்கோவில் வந்தார்கள். மருமகள் மாசானம்  வடிவை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டாள். பேரன் தங்கராசும் செல்லக்கனியும் பொருட்களை எடுத்துக் கொண்டார்கள். செவியில் மட்டுமே கேள்விப்பட்ட நாகர் கோவில் ஜங்ஷனை முதல் முறை நேரில் பார்த்த போது சிரித்துக் கொண்டாள். பரமு ஆசான் இங்கனதான மாத்மா காந்திய பாத்தன்னு பீத்துவாரு. புதுத் தெரு விசாலாட்சி மக வடக்க வாக்கப்பட்டு போனதால அடிக்கடி ரயிலப்புடிக்க இங்க வருவா. கதகதயாச் சொல்லுவா. வள்ளி கலியாணம் முடிச்ச பெறகு செல்லக்கனியும் ஏழெட்டு தடவ மெட்ராசுக்கு போய் வந்துட்டான். வந்ததிலிருந்து ஒரு மாசத்துக்கு கத சொல்லுவான்.

வெள்ளம் குடிக்கியா கெளவிதங்கராசுவின் கேள்விக்கு சைகையிலேயே மறுப்பு தெரிவித்தவள் , “ றைலு எப்பலே வரும்என்றாள். எல்லோரும் சிரித்தார்கள். புரியாமல் வடிவும் சிரித்துக் கொண்டாள்

பயணத்துக்கு தேவையானதை மூன்று நாட்களாக பார்த்துப் பார்த்து சேகரித்திருந்தான் செல்லக்கனி. உடுமாத்த வள்ளிக்கு ஐந்து காட்டன் சேலைகள், மாசானம் அவளே வறுத்து ரைஸ்மில்லில் திரித்த மசாலா பொருட்கள், பிள்ளைத்தாய்ச்சிக்கு தேவையான கை மருந்துகள், பழங்கள், வீட்டில் செய்யப்பட்ட நொறுக்குத்தீனிகள், ஊறுகாய் வகையறா , ஒரு புதிய ஆப்பச்சட்டி , அவர்கள் தோப்பில் விளைந்த இருபதுக்கும் குறையாத தேங்காய்கள் மற்றும் இவர்கள் நால்வருக்கும் தேவையான உடைகள் மற்றும் இத்யாதிகள்

ஒலிபெருக்கி கரகரத்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சில நிமிடங்களில் ஒன்னாம் நம்பர் பிளாட்பார்ம் வந்து சேர்வதற்கான முஸ்தீபுகளை அறிவித்தது. “ தலேல கொஞ்சமாட்டு  பூ வச்சுக்கோட்டி மாசானம்”. 

 தங்கராசு கையில் சிறிய பொட்டலத்துடன் வந்தான். “  உள்ளி வட சாப்டுதயா கெளவி” . பிளாட்பாரத்தில் இப்போது கூட்டம் ஏறிவிட்டது. “ இம்புட்டு சனமும் மெட்ராசா போகுறது” 

ரயில் பிளாட்பாரத்தில் நுழைந்தது. மனிதனின் அந்த மகத்தான கண்டுபிடிப்பு தடதடத்து இவர்களை கடந்து பின் நின்றது. வடிவுக்கு கண்களை மூடவில்லை. பேச்சற்று நின்றாள் அல்லது அவள் பேசியது யாருக்கும் கேட்கவில்லை. தங்கராசு அவளைப் பிடித்து ஏற்றிவிட்டான். ரயில் கிளம்பும் வரை யாரிடமும் பேசவில்லை. சன்னலோரத்தில் வடிவு கடைகளை பார்த்துக் கொண்டிருக்கும் போதே ரயில் ஊர  ஆரம்பித்தது. காட்சிகள் பின்னகர வேகம் கூடியது. வடிவு மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்வீடு மாறில்ல இருக்கு”. வள்ளியூரில் வண்டி‌ நிற்கும்போது வெற்றிலைப் பொட்டலத்தைப் பிரித்து உடைக்கப்பட்ட கொட்டைப்பாக்கை வாயில் போட்டுக் கொண்டாள். அந்த நேரத்தில் ‌அது பூமிப்பந்தையே உடைத்து வாயில் போட்டுக் கொண்டதாகப் பட்டது. தான் அதுவரை கண்டிராத நிலக்காட்சிகள் அதன் பின்னர் ஆரம்பித்தது. எப்போது சாப்பிட்டாள் தூங்கினாள் தெரியாது.

பணிக்கன் விளை ரத்தின சாமி  பொன்னம்மாளுக்கு  மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தாள் வடிவு. அம்மாச்சி வடிவீஸ்வரியின் பெயரையே அவளுக்கும் வைத்தார்கள். பிறக்கும் போதே அதிக எடையும் கருத்த திருமேனியும் வாய்த்தது. குழந்தைக்கு அப்பாவின் சாயல். செல்ல மகளுக்கு தங்கக் காப்பிட்டு தங்கமாகவே வளர்த்தார். பசுமைத் தோல் போர்த்தப்பட்ட அதி செழிப்பான அந்த கிராமத்தில் வடிவும் செழித்து வளர்ந்தாள். அண்ணன்களுடன் ஓயாத விளையாட்டு. அண்ணன்களைவிட அபார உடற்கட்டு. சுருட்டை முடியுடன் பருத்த புட்டங்களுடன் திரண்ட சதையையும் கொண்ட சிறுமி வடிவு பார்ப்போர் யாரையும் ஒரு கணம் கொஞ்ச வைப்பாள். ஐந்து வயதுக்கெல்லாம் தெருவில் திரிந்து ஓடி தோழிகளோடு கதைக்க ஆரம்பித்து விட்டாள். பள்ளிக்கூடமெல்லாம் அப்போது ஊரில் கிடையாது. அதனால்  விளையாட்டு மட்டுமே வாழ்வாக ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை. மாறாத சிரிப்புடனே இருப்பாள். அதுவும் ஒரு ஆசீர்வாதம். பத்து வயதில் அண்ணன்களுடன் வயலுக்கு போவாள். மூத்த அண்ணன் பனையேறுவான். அவனோடு சென்றால் அக்கானிக்கும், நுங்குகளுக்கும் உத்தரவாதம். சிரித்துக் கொண்டே தின்பாள். தட்டான்களை விரட்டி ஓடுவாள்

பன்னிரண்டு வயதில் ஒருமுறை பூப்போட்ட பாவாடையுடன் நெய்யோடையில் தோழிகளுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது உழுவை மீன்கள் தொடையில் உரசிய கணம் சிலிர்ப்புடன் கொஞ்சம் மயக்கமும் வந்தது. சுயத்திலிருந்து ஏதோ வெளியேறுவது தெரிந்தது.

சிரித்துக் கொண்டே வீட்டுக்கு வந்த வடிவை பொன்னம்மாள் மீண்டும் ஒருமுறை மஞ்சள் தேய்த்து  குளிக்க வைத்து ஆடை மாற்றி கையில் ஒரு சிணுக்கு வேலி கொடுத்து பின்னறையில் உட்காரவைத்தாள்.வடிவு தின்பதற்கு நிறைய பண்டங்கள் கேட்டாள்.

நிறைய மாறினாள் வடிவு. துரிதமாகவே எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டாள். விளைவாக விடிந்ததிலிருந்து இரவு படுக்கும் வரை அத்தனை வேலைகளையும் விடாமல் செய்து முடிப்பாள். அவள் உடல் அசதியுறுவதே இல்லை. உடல் கட்டுக்கோப்பாகி பொலிந்தாள். குளிக்கும் போதெல்லாம் மார்புகளின் வளர்ச்சி கண்டு உவகை. செக்கிலாட்டிய தேங்காயெண்ணை ,கஸ்தூரி மஞ்சள், மருதாணி ,கடலைமாவு, தலைக்கு சிகைக்காய் இவ்வளவுதான் அழகு சாதனங்கள்.ஏழெட்டு தாவணி வைத்திருந்தாள். போக தீபாவளிக்கும் பொங்கலுக்கும் புதுசு வரும். சுதந்திரமாய் திரிந்தாலும் அப்பாவின் கண்டிப்பு மட்டும் அணை போடும்.

வாசப்படியில இரிக்காதட்டீ

தலய விரிச்சு போட்டு நடக்காதட்டீ

றேடியோ கேக்காதட்டீ

சம்மணம் போட்டு உக்காரதட்டீ

இன்னும் ஏகப்பட்ட தடைகள். முக்கியமாக வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. ஒரே விதிவிலக்கு ஆடி மாசம் குல தெய்வம் கோவிலுக்கு மட்டும் குடும்பத்தோடு போய் உறவுகளிடம் சஞ்சரிக்கலாம். என்ன மாறினாலும் அவளின் பிரத்யேக சிரிப்பை மட்டும் விடவில்லை.

வடிவுக்கு மாப்பிள்ளை தேடித்தேடி கடைசியில் செல்ல பெருமாளை நிச்சயித்தார்கள். செல்ல பெருமாள் மூத்தண்ணனின் கபடித்தோழன். நல்ல உயரம். சிறு பிராயத்தில் அவனை அண்ணன் என்று விழித்த ஞாபகம். முப்பொழுதும் வயலிலே சோலியாக இருப்பான். கடும் உழைப்பாளி. தோழிகளோடு அந்தப்பக்கம் போகும் போது ‘குட்டிகளா இங்க வாங்கட்டீ’ என்று விளித்து செவ்விளனி சீவிக்கொடுப்பான். எல்லோரும் உறவுமுறை தானே

எட்டு வயது வித்தியாசம். கல்யாணப்பந்தலில் வடிவு நுழையும் போது ஊர் சனம் முழுவதும் திரண்டிருந்தது. செல்ல பெருமாளை நேருக்கு நேர் பார்த்து சிரித்தாள். செல்ல பெருமாள் முதலில் அதிர்ந்தாலும் பின்பு சுதாரித்துக் கொண்டான்.

நல்ல தாம்பத்தியம்தான். வடிவின் பிழையில்லாத உடலமைப்பை மடியில் கிடத்தி ஒரு கம்பீர வீணை போலே மீட்டினான். வடிவு தான் அதிகம் பேசிக்கொண்டிருப்பாள். ஆனாலும் அடிக்கடி அவனிடம் அடைக்கலம் புகுவாள். பலனாக நான்கு பிள்ளைகள். இரண்டு பெண்.இரண்டு ஆண். குழந்தைகள் பிறந்த பிறகு வயலுக்கு போக ஆரம்பித்தாள். செல்ல பெருமாளுக்கும் இருபது ஏக்கர் போகம் இருந்தது.கூடவே வடிவுக்கு வந்த இரண்டு தென்னந்தோப்புகள்.இருவரும் கடுமையாக உழைத்து செல்வம் பெருக்கினார்கள்.  இடையில் செல்ல‌ பெருமாள் பெயர் தெரியாத நோயினால் செத்துப்போனான்.ஆண் பிள்ளைகள் இரண்டும் எட்டு வரை படித்தார்கள். அண்ணன் மகள்களையே மணமுடித்து வைத்தாள். செல்லக்கனி கடைக்குட்டி பையன்தான். பெண்பிள்ளைகளுக்கும் உள்ளூரிலேயே மாப்பிள்ளை. அண்ணன்மார் கடைசிவரை ஒத்தாசையாக இருந்தனர். இப்போதும் வடிவுக்கு சிரிப்புக்கு குறைவில்லை. பேரன்மார், பேத்தி மார் சகிதம் வாழ்வாங்கு வாழ்வு. யாரிடமும் அவள் ஒரு குறையும் கண்டதில்லை. ஊரிலும் ஓடோடி உதவுவதிலும், அரவணைப்பிலும் பிணைப்பாக இருந்தாள்

தன்னுடைய வம்சத்தொடர்ச்சி ஒன்று இப்படி தூரத்தில் மாட்டிக்கொண்டது ஒருவகையில் வருத்தம்தான். ஆனாலும் வள்ளி நிறைவாக இருப்பதைப் பார்த்து சந்தோஷம். மாப்பிள்ளை மாதவனுக்கு பொருத்தமான ஜோடி.

சென்னையில் இவர்கள் இறங்கி யதிலிருந்து நல்ல கவனிப்பு.அந்த அடுக்கக வாழ்வில் வடிவுக்கு எல்லாமே ஆச்சரியம். இப்படியும் சனங்கள் சீவனம் செய்வார்களா?. அறையினுள் வள்ளியும் மாசானமும் எதற்கோ சிரித்துக் கொண்டிருந்தார்கள்.‌ செல்லக்கனியும் தங்கராசும் அருகருகே படுத்து குறட்டை யொலியுடன் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ‘இப்பிடி சொகமாட்டு ஒறங்கி எத்தன வருசமாச்சு’. சிரித்துக் கொண்டாள்.

மறுநாள் மதியம் கறி சாப்பாடு முடித்து தங்கராசுவின் வேண்டுகோளுக்கிணங்க மாலை கடற்கரை செல்ல தயாரானார்கள். காரில் வரும் போது மிகஅகண்ட சாலைகளையும் மேம்பாலங்களையும் எண்ணிலடங்கா வாகனங்களையும் இடைவெளியே இல்லாத தொடர்  உயர்கட்டிடங்களையும் வடிவு லேசான பயத்துடன் எச்சில் விழுங்காமல் நிலைத்த பார்வையுடன் பார்த்துக் கொண்டே வந்தாள்.

மெரினா வந்ததும் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். எங்கும் மனிதக் கூட்டம். வயது பேதமின்றி அனைவரும் கூடியிருந்தனர். விதவிதமான ஒலிகள் குரல்கள் கடைகள்.வியாபாரிகள். மாதவனும் தங்கராசுவும் முன்னால் நடக்க வடிவை மாசானமும் வள்ளியும் பற்றிக் கொண்டார்கள். செல்லக்கனி பின்னால் நடந்தான்.  

ஹோ வென்ற இரைச்சலோடு கடல். வடிவு சிரித்துக் கொண்டாள். எத்தனையோமுறை பக்கத்திலேயே கன்னியாகுமரி செல்ல வாய்ப்பிருந்தும் அப்பாவால் மறுக்கப்பட்டு இந்த எழுபது வயதில் மெட்ராஸில் கடல்சிறிது நேரம் மணலில் அமர்ந்தார்கள்.மாதவன் எல்லாருக்குமாக பொறித்த நண்டு பஜ்ஜி வாங்கி வந்தான். வள்ளி அதை சாப்பிடாமல் வீட்டிலிருந்து கொண்டு வந்த சீடைகளை கடித்தாள். வடிவு கொடுக்கப்பட்ட எதையும் மறுத்துவிட்டாள். வெற்றிலைப் பொட்டலத்திலிருந்து ஒரு பாக்கை எடுத்து வாயில் போட்டாள். ஒரு வாலிபர் கும்பல் அந்தப்பக்கமாக கூச்சலிட்டு ஓடியது.‌ இவர்களுக்கு மிக அருகில் தொப்பி வைத்த ஒரு பெண் குதிரையில் சவாரி செய்து கொண்டு போனாள். தங்கராசு கடலில் கால் வைப்பதும் ஓடி வருவதுமாக இருந்தான்.

வள்ளிக்கா வாக்கா, கால் நனக்கலாம்

வேணால

சும்மா வாயேன்

தம்பியோடு விளையாண்ட நாட்கள் நினைவுக்கு வந்தன. இன்னும் சிறுபிள்ளையாகவே இருக்கிறான். கண்ணீர் எட்டிப்பார்த்தது.

வள்ளி போய் அவன் கைகளை பிடித்துக் கொண்டு கால் நனைத்து விட்டு வந்தாள். அனிச்சையாய் அனைவரும் போய் கால் நனைத்து விட்டு வந்தனர். வடிவு போகவில்லை. சிரித்துக் கொண்டே இருந்தாள்.

வா கெளவி கால நனக்கலாம்

வடிவு சைகையால் மறுத்தாள்.

இங்க வரக்கி வந்துட்டு கால நனக்காம போலாமா

வடிவு சிரித்துக் கொண்டே மறுத்தாள்.

தங்கராசு வடிவின் பக்கமாக வந்து அலேக்காக தூக்கினான். எல்லோரும் சிரித்தார்கள். உழைத்து உரமேறிய பயல். வடிவை ஒரு பூவைப் போல அள்ளிக் கொண்டான். கடலை நோக்கி நடந்தான். வடிவுக்கு சிரிப்பை நிறுத்த முடியவில்லை. கிழவியை பயமுறுத்துவதற்காக கொஞ்சம் உள்ளே நடந்து சென்று முழங்கால் அளவு நீரில் இறக்கி விட்டான். கடல் ஆடிக்கொண்டிருந்தது. சிலிர்ப்பு. வடிவின் சேலையெல்லாம் நனைந்து விட்டது.‌ கூடவே அவளது கழுத்துச் சங்கிலி தங்கராசுவின் தாயத்தோடு மாட்டிக்கொண்டது. அவன் விசிலடித்துக்கொண்டே அதைப் பிரிக்க முயல்கையில் ஒரு பேரலை சம்மட்டியால் பொறி உருண்டையை அடித்து சிதறடிப்பது போல இருவரையும் சிதறடித்தது. தங்கராசு மூக்கெல்லாம் தண்ணீர் ஏறி அதிர்ச்சியாக கிழவியைத் தேடினான். சற்று தூரத்தில் வடிவு தடுமாறுவது தெரிந்தது. கரைக்குப் போன அதே அலை அதே வேகத்துடன் வடிவை உள்ளிழுத்தது. இன்னும் இன்னும் உள்ளே போனாள் வடிவு. தெய்வங்கள் வகுத்த நெறியில் வழுவாமல் வாழ்வாங்கு வாழ்ந்த அந்த குமரி நில மூதன்னை ஆவேசத்துடன் மொத்தக் கடலையும் குடித்து தெற்கு நோக்கி நின்று கைகள் கூப்பி தெய்வமாய் உறைந்தாள். இந்த நிலம் மற்றுமொரு தீராப் பழியை சுமந்து கொண்டது. இன்றும் மெரினா வரும் குமரி நிலப் பெண்களை அந்த அம்மை ஆசீர்வதிக்கிறாள்.

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *